பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா – நேரடி வருணனை

வருணனை : ‘புதுவை எழில்’


கம்பன் கழகம் – பிரான்சு :

எத்தனை வேதனைகள்! எத்தனை வாதனைகள்!! எவ்வளவு இடுக்கண்கள்!  எவ்வளவு துன்பங்கள்!

அத்தனையையும் தாண்டிப் பத்தாம் ஆண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.சொந்தப் பணத்தைத் தொட்டுப் பந்தக் கால் நட்டு இந்தக் கம்பன் கழகத்தைத் தொடங்கியவர் கவிஞர் கி. பாரதிதாசன். தோழர்கள் நாங்கள் தோள் கொடுத்தோம். ஐரோப்பாவில் முதல் முதலாகக் கம்பனுக்கு விழா எடுத்தோம்.


ஆண்டு தோறும் – துண்டு விழுந்தாலும் துவண்டு விழாமல் உழைத்தோம்!கம்பனில் தோய்ந்தவர்களையும் ஆய்ந்தவர்களையும் அழைத்தோம்!ஆண்டுகொரு முறை விழா கொண்டாடிவிட்டுக் கும்பகர்ணனாக மாறிமீண்டும் மீண்டும் கொட்டாவி விடவில்லை நாங்கள் !திங்கள் தோறும் இறுதி ஞாயிறு அன்று ஒருங்குக் கூடி நெருங்கினோம்கம்பன் காவியத்தின் சுவை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினோம்-  முற்றோதல் என்ற பெயரில்!
முற்றோதல் முற்றுப்பெற்றாலும் கற்றோர்க்குக் களிப்பருளும் களிப்பாம் திருக்குறளை ஓதத் தலைப்பட்டோம் மாதந்தோறும் ஓதி வருகின்றோம் ; காலப் போக்கில்,கம்பன் மகளிரணி உருவானது ; கம்பன் இளையோரணி கருவானது!இந்த இரண்டு அணியினரும் எங்களோடு கைகோர்க்க விழா இனிதே நடைபெற்றது!

விழா வருணனை :

முதல் நாள் நிகழ்வுகள் : சனிக் கிழமை 12 .11 .2011 .பிற்பகல் 3 மணி.
மங்கல விளக்குகளுக்கு ஒளியூட்டியபின்,  கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலர் பேரா. பெஞ்சமின் லெபோ, பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் ஆகிய மூவரும் கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் கம்பன் வாழ்த்தை முழங்கினர்.

ஆறு காண்டங்களின் கடவுள் வணக்கப் பாடல்களையும் அழகாகப் பாடினார் மகளிரணி உறுப்பினர் கவிஞர் சரோசா தேவராசு.பாடிடும் பச்சைக் கிளிகளைப் போலப் பச்சைப் புடவை அணிந்து நீடிய அரங்கேறிய மகளிரணி உறுப்பினர்கள்,’வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்று பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளில் தமிழ்த் தாயை வாழ்த்திப் பாடினர்.(இப்பாடல்தான் புதுவை அரசு ஒப்புதல் அளித்த தமிழ்த்தாய்ப் பாடலாகும்)

நாட்டியகலாசோதி செல்வி சாரநாயகி கோபாலகிருட்டிணன் அளித்த பரத நடன விருந்துடன் விழா சிறப்பாகத்தொடங்கியது.பின்னொருமுறை பாரதியாரின் ,’ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்தார், அனைவர் நெஞ்சிலும் இடம் பிடித்தார் இவர்.

பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி பாரதிதாசன் நகையும் சுவையுமாக வரவேற்புரை வழங்கினார்.புதுச்சேரி அரசில் சமூகத் துறை, சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராசவேலு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.

புதுவையில் இருந்து வந்திருந்த முதுபெரும் புலவர் (அகவை 92!)  தமிழ் மாமணி, பாவலர்மணி சித்தன் ஐயா (பல்மருத்துவர் இராதாகிருட்டிணன்) வழங்கிய வாழ்த்தில் கம்பன் கழகம் குளிர்ந்தது ; தமிழ் ஒளிர்ந்தது!

பத்தாம் ஆண்டுக் கம்பன் மலரை, புதுவைக் கம்பன் கழக இணைச் செயலர், நல்லாசிரியர் கி. கலியாணசுந்தரம் வெளியிட்டார். வண்ண வண்ணப் படங்களுடன் திண்ணமான கட்டுரைகள் கவிதைகளுடன் மலர் பொலிந்தது. பாவலர் மு.பாலசுப்பிரமணியன் படைப்பான ‘சிட்டு குருவி’ என்ற சிறுவர் இலக்கியத்தை வெளியிட்டவர் : புதுவையின் சாதனைச் சிகரம் வே. பொ. சிவக்கொழுந்து அவர்கள்.

அடுத்துச் சிறப்புரை தொடர்ந்தது.உருகிவரும் பனிமலை அருவி எனத் தமிழ் மழை பொழிய எழுந்தார் திருமிகு தமிழருவி மணியன் அவர்கள்.
தலைப்பு : ‘கம்பனில் பண்பாடு.’ ‘பண்பாடு’ என்ற சொல்லைப் பண்போடு உருவாக்கித் தந்த ரசிக மணி டி.கே சியைப் பாங்காக நினவு கூர்ந்த அவர், பண்பாடு என்ன என்பதை அழகாக விளக்கினர் ; தமிழ்ப் பண்பாடுகளை எல்லாம் கம்பன் எப்படித் தன் காவியத்தில் பதிந்து வைத்திருக்கிறான், பொதிந்து வைத்திருக்கிறான் எனப் பல எடுத்துக்காட்டுகளைக் காட்டிக் கொடுத்த விளக்கத்தில் மக்கள் தம்மை மறந்தனர்.‘அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் ..’ என்று இராமனுக்கு ஆயிரம் அடைமொழி கொடுத்து வருணித்த கம்பன் ‘அவளும்’ என்ற ஒரே சொல்லுக்குள் சீதையை அடக்கி விடுகிறான்.  ஏன் தெரியுமா? இதனைச் சொல்பவன் ‘குகன்’ – காட்டு வாசி. இராமனைக் கண்டவுடன் காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கி’அவன் அழகை எல்லாம் அள்ளிப் பருகியவன்.அவன்,  இராமனை வருணித்துச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை.  ஆனால், அவன் அப்படிச் சீதையை வருணிக்கலாமா ? வருணிக்க விடுவானா கம்பன்! அதனால்தான் ‘அவளும்’ என்ற ஒரு சொல்லுக்குள் தமிழ்ப் பண்பாட்டை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தான்,  ‘சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கி வைத்த புலவன்’ கம்பன் எனத் தமிழருவி மணியன் உணர்ச்சியோடு உரைத்தபோது மக்களின் கரவொலி எப்பக்கமும் எதிரொலித்தது. ஈழத் தமிழர்களின் இன்னல், தமிழர்களின் தமிழுணர்வு இன்மை… போன்றவற்றையும் அவர் தம் பேச்சில் குறிப்பிடத் தவறவில்லை.

இடையே -தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகத்தின் சார்பில், அதன் இணைச் செயலர் நல்லாசிரியர் கி.கலியாணசுந்தரம் அவர்கள் வழக்கம் போல், பிரான்சு கம்பன் கழகச் செயற்குழு உறுப்பினர்களுக்கும் மகளிரணி செயற்குழு உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள். புதுவையில் இருந்து வந்திருந்த கவிஞர் வே. முத்தையன், பிரான்சு கம்பன் கழகத்தைச் சேர்ந்த கவிஞர் திருமதி சரோசா தேவராசு இருவரும் ,’கம்பனுக்குப் பாமாலை’ என்ற தலைப்பில் கவி மலர் அளித்தார்கள்.

பங்குகொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு, கழகப் பெயர் அச்சிட்ட துவாலைத் துண்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன.  மாலை ஐந்தரை மணி அளவில், இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் அவர்கள் தம் உரையைத் தொடங்கினார்.தலைப்பு : ‘தெய்வக் கவியில் தெய்வப் புலவன்’. தெய்வமாக் கவி கம்பனின் காவியத்தில் திருவள்ளுவரின் குறளமுதம் எப்படி எல்லாம் நிறைந்துள்ளது, எங்கெல்லாம் கரைந்துள்ளது, எவ்வாறெல்லாம் மறைந்துள்ளது எனக் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையோடு அவர் ஆற்றிய உரையில் அனைவரும் உறைந்து போனார்கள்.(குளிரும் ஒரு காரணம். வெப்பம் தரு எந்திரம் – heating system -கப்பென்று நின்று போனதால் வந்த வினை!இங்கே குளிர் தொடங்கிவிட்டதே!).

தொடர்ந்து , நகைச்சுவைத் தென்றல் திருவாரூர் இரே. சண்முகவடிவேல் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் தொடங்கியது.

தலைப்பு : ‘இன்றைய வாழ்வுக்குப் பெரிதும் வழிகாட்டுபவன்… கும்பகருணனா ? வீடணனா?’வீடணன்தான் என்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா. துபாயில் , ‘தமிழ்ப் புயல்’  என்று பட்டம் வாங்கி வந்த இப்புயல் இங்கே,  பிரான்சில் மையம் கொண்டது.கம்பனே கூட வீடணனுக்காக அப்படி வாதாடி இருப்பானா என்பது ஐயமே! புயலாகச் சுழன்றடித்துப் பூகம்பமாய் அதிர்ந்து தம் வாதங்களை முன் வைத்தார் பேராசிரியர் பர்வீன் சுல்தானா.


புயலுக்குப் பின் அமைதிதானே! அந்த அமைதியின் வடிவாகத் தென்றலாகத் தவழ்ந்து வந்தார் திருமதி லூசியா லெபோ.காட்டிக் கொடுத்த கயவன் வீடணனை விட ஊட்டிக் கொடுத்த உணவுக்காகத் தன் உயிரையே கொடுத்த தியாகி கும்பகருணனே இன்றைய வாழ்வுக்கு வழி காட்டக் கூடியவன் என்று தொடங்கித் தன் தரப்பு வாதங்களை,  அதிராமல், பதறாமல், அழகாக அடுக்கித் தந்தார் அவர்.

பின் கவிஞர் பாரீசு பார்த்தசாரதி, திருமதி சுகுணா சமரசம் இருவரும் அறத்தின் பக்கம் நின்றவன் வீடணன்தான் என்று வாதாடினர். திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால், கவிஞர் அருணா செல்வம் இருவரும் கும்பகருணனைத் தாங்கிப் பிடித்தனர்.நகைச் சுவையையே தன் பலமாகவும் ஆயுதமாகவும் கொண்ட நகைச்சுவைத் தென்றல், சிரிப்பு வெடிகள் சிலவற்றைக் கொளுத்திப் போட்ட பிறகு, ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வினாலும் தருமம் மறுபடி வெல்லும்’.அந்தத் தருமத்தின் முழு வடிவே இராமன்தான். அவன் பக்கம் சென்றவன், அவனைச் சேர்ந்தவன் வீடணனே!இந்த அதரும உலகில் நாம் தருமத்தின் பக்கமே நிற்கவேண்டும்,  தருமத்தின் வழியில்தான் செல்லவேண்டும் என்று இன்றைய வாழ்வுக்கு நல்ல வழி காட்டுபவன் வீடணனே எனத்திருமிகு இரெ .சண்முகவடிவேல் அவர்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்க பட்டிமன்றம் இனிதாக நிறைவு உற்றது.முதல் நாள் விழாவும் முடிவு பெற்றது.

பொதிய மலைத் தென்றலாய்த் தமிழ் மணங்கமழ எதுகையும் மோனையுமாய்த் தமிழமுதை அள்ளி வழங்கி நிகழ்ச்சிகளை நகையும் சுவையுமாகத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, ‘இன்று போய் நாளை வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார் ;மக்கள் உணவுப் பக்கம் படை எடுத்தார் (கள்).

 

(இரண்டாம் நாள் வருணனை நாளை மலரும்.)

 

நன்றி : வருணனை :புதுவை எழில்’படங்கள் : திருமதி லூசியா லெபோ, செல்வன் பால்ராசு தேவராசு.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா – நேரடி வருணனை

 1. அழகான தொகுப்பு. தொடரவும். இம்முறை வர நினைத்தேன். இயலவில்லை. அடுத்த ஆண்டு முயலவேண்டும்.
  ’சீதையை வர்ணிப்பதில் கம்பனை விஞ்ச முடியாதென்றஞ்சியே குகன் அடக்கி வாசித்தானென்றல்லவா நினைத்திருந்தேன். :-))
  பிலிப்

 2. விழாவை நேரில் பார்த்ததைப் போலவே எழுதியுள்ளீர்கள். நாளை வரை காத்திருக்கிறோம். 

 3. பின்னூட்டம் இட்ட அன்பு நண்பர்களுக்கு
  நன்றிகள்.

 4. பிரான்ஸ் கம்பன் கழக நிகழ்சிகள் அருமை. எல்லை ஒன்று இன்மை
  என்னும் தத்துவத்தைச் சொன்ன கம்பனுக்கு எல்லை கடந்து நம்மவர்கள்
  விழா எடுப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. கல்வியில் பெரியவன்
  கம்பன் என்பதை பிரான்சிலும் நம்மவர்கள் நிலைநாட்டியது சிறப்பு.
  ரசிகமணி டி கே சி அவர்கள் ஒரு முறை ரயிலில் பயணம் செய்யும் போது
  கைகேசி சூழ்வினைப் படலத்தைப் படித்துக் கொண்டு செல்லும் போது
  இறங்க வேண்டிய ஸ்டேஷனில் இறங்க மறந்து விட்டார். அந்த ஸ்டேஷனிலிருந்து
  ரயில் புறப்பட்டதும், இவர் தற்செயலாக வெளியே பார்த்ததும் ” நாம் இறங்க வேண்டிய
  ஸ்டேஷன் அல்லவா!” என்று தெரிந்ததும் ஓடி வந்து ரயிலிலிருந்து கீழே குதித்துள்ளார்.
  அதன் பிறகு அவர் சொன்ன வாசகம், ” அன்று முதல் இரண்டு ஸ்டேஷனுக்கு முன்னமேயே
  கம்ப ராமாயணத்தை மூடி வைத்து விடுவேன்! அப்படிப் பொல்லாதவர் கம்பர்.” எனவே
  இப்படி ஒரு புகழாரத்தை கம்பனுக்கு யார் சூட்டமுடியும்?
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

 5. வணக்கம்..,
  பிரான்சு கம்பன் கழகத்தின் பத்தாம் ஆண்டு விழா நடைப்பெற்ற நிகழுகளை “வல்லமை” இதழில் எழுத்துகளின் மூலமும், புகைப்படங்களின் மூலமும் பார்க்கும் போது நான் பெருமிதம் அடைகின்றேன். நேரில் பார்த்தது போல் வல்லமையில் வந்திருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்வகளையும், கம்பனைப்பற்றிய பல தலைப்புகளில் பேசிய அறிஞர்களின் உரைகளையும் கொடுத்து இருப்பது எனக்கு நல்ல அனுபவமாக இருக்கிறது. கம்பன் கழக அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *