நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (1)

3

இன்னம்பூரான்

 

ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாகும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.  அந்த வகையில் நாம் நம் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை செலுத்துகிறோமோ அதை வைத்துத்தான் நம் வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் நிலைத்திருக்கும் என்பதும் நிதர்சனம். பல வகையான மருத்துவ முறைகள், அதற்கேற்றார் போல பல வகையான ,புதிது புதிதான வாயில் நுழையாத பெயர்களுடனான நோய்களும் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன. எல்லா வியாதிகளுக்கும்,  மருந்து, மாத்திரைகள் மட்டுமே தீர்வாகவும் முடிவதில்லை. பல நேரங்களில் வருமுன் காப்பதும் விவேகமான செயலாகவும் இருக்கிறது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வருபவரும், ‘நம் வல்லமை’ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவருமான திரு. இன்னம்பூரான் , தம்முடைய பல்லாண்டுக்கால அனுபவத்தின் பேரில், தம் குடும்பத்திலும், சுற்றத்திலும், நண்பர் வட்டாரங்களிலும் தாம் கண்ட பற்பல நோய்களின் தன்மையையும், நிவாரணத்தையும் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்ள விழைகிறார். நீரிழிவு நோயினால் ஆரோக்கியம் குன்றிய நிலையிலும் , தம் சிறுநீரகம் ஒன்றை, தானம் அளித்தவர். ஆலோசனை மையங்களிலும் தன்னார்வப் பணி புரிந்தவர். அத்துறையில் பட்டமும் பெற்றவர்.

இங்கிலாந்தில் மக்களுக்குப் புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைப்பதாகச் சொல்லும் இவர், அவற்றையும், தம் அனுபவத்தையும் ‘வல்லமை’ வாசகர்களுடன்,நோயாளியின் அணுகுமுறையை முன்னிறுத்தி, பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளார். இன்றைய தினம், நீரிழிவு நோயைப் பற்றி, ஒரு சிறிய அறிமுகக் கட்டுரையையும் பகிர்ந்துள்ளார். அதனைப் பிரசுரிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

ஆசிரியர்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1

சீரகச்சம்பாவும், சிட்டுக்குருவியும், சிங்கக் குட்டியும், நம்மைப்போல் டாக்டரிடம் ஓடுவதில்லை. ஆனால், மனித நாகரீகம் அவற்றையும் மருத்துவரிடம் எடுத்துச் செல்கிறது. விவேகம் இங்கு கை கொடுக்கிறது. தனக்கென்று வரும்போது, மனமும், உடலும்,‘அவரும் இவரும் சொன்னதும்’ ஒன்றையொன்று குழப்பி, திசை மாற்றி, உரியகாலத்தில் தக்கதொரு நிவாரணம் தேடுவதில் சிக்கல்கள் விளைவிக்கக்கூடும். இது என் அனுபவம். எனக்கு ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ ஆசான், ரத்னவேலு சுப்ரமண்யம் என்ற அக்காலத்து பிரபல மருத்துவர். என் தந்தை ஒரு தீராத பிணியினால் பீடிக்கப்பட்டிருந்தார்.

டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் அவரிடம் ” நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் ”,என்றார். அதைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டேன். நாம் எல்லோரும் அறிந்த விஷயம்: டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரைச் சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும்.  இந்தப் பின்னணியில், இன்றைய தின விழிப்புணர்ச்சியை அணுகுவோமாக.

உலகெங்கும் நவம்பர் 14 அன்று ‘நீரிழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஊடகங்கள் எல்லாம் 522/346 மில்லியன் டயபிட்டீஸ் நோயாளிகள் என்று புள்ளி விவரங்கள் தருகின்றன. இது என்ன 2ஜி ஆடிட் சமாச்சாரமா என்ன? இரண்டு மதிப்பீடுகள் கொடுத்து, நம்மை அதட்ட?  ஆனால், இது மட்டும் தெளிவு. தனி மனிதரும், மருத்துவத் துறையும், சமுதாயமும், அரசும் கூடி ஆவன செய்யாவிடின், வெள்ளம் தலைக்கு மேல். நாமே நம்மையும், வரும் தலைமுறைகளையும் வஞ்சித்தவர்களாவோம்.

நீரழியா வேதம்:

பிறந்த குழவி முதல் தொண்டுக் கிழவி வரை எல்லோரும் மிதமான உணவு, சத்துக்கள் குறையாத பதார்த்தங்கள் ஒவ்வொரு வேளையும் உண்பது, விரைவு உணவு  தவிர்ப்பது என்று இருக்கவேண்டும்.

தினந்தோறும், தவறாமல் தேகப்பயிற்சி செய்யவேண்டும். உடல் நிலையைப் பொறுத்து, மருத்துவ ஆலோசனை உசிதம்;நீரிழிவு போராட்டம் ஒரு கலை. எல்லாம் மிதமாகவே என்பது தத்துவம். உரியகாலத்தில் உணவும், நேரம் தவறாத மருந்தும் வாழ்நெறி. எச்சரிக்கையாக இருப்பது விவேகம்.

‘கரணம். தப்பினால் மரணம்’ என்பார்கள். உஷாராக இருந்தால் குஷி தான். இல்லையென்றால், ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, கண் பார்வை மங்கல், சிறுநீரகக் கோளாறு. எல்லாம் மிஞ்சினால், அகால மரணம்.

என்னுடைய கணிப்பில் நீரழிவு ஒரு ஆரோக்கியம் குன்றிய நிலை, வியாதி என்பதை விட. நிச்சயமாக, அத்துடன், நீண்ட நாட்கள் வாழமுடியும். போக்கடிக்கமுடியாதது, இன்றைய மருத்துவம் அறிந்த வரை. போக்கடிப்பேன் என்று சூளுரைப்பவர்களை தவிர்ப்பது விவேகம்.

சிறார்களை , அனாவசியமாக பருமன் ஆக்காதீர்கள். எடை குறைத்தால், உடை சோபிக்கும். உப்பு குறைத்தால், நீங்களே சோபிப்பீர்கள்.

நீரிழிவு வம்ச பரம்பரை சொத்து. ஆகவே, முன்னோர்களைப் பொறுத்து, சந்ததியினர் இன்னல் படக்கூடும். இதையெல்லாம் பார்த்து இல்லறம் அமைப்பது எளிதல்ல. சாத்தியம். ஆனால், பிறக்கும் குழந்தைகளை விழிப்புணர்ச்சியுடன் வளர்க்கும் கடமை உளது.

இன்றைய மருத்துவ ஆலோசனைப்படி, வம்ச ஆஸ்திக்காரர்கள் கூட நீரிழிவு நிலை வருவதை கணிசமாகத் தள்ளிப்போட முடியும்.

உலக சுகாதார மையத்தின் டயபிட்டீஸ் துறை தலைவர், டா. ரோக்லிக், “கணிசமான அளவுக்கு நீரிழிவு நோய் வருவதைத் தடுக்க முடியும். ஆனால், நாம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லையானால், தீவிரமானதும், உடல் நலத்தைக் குலைப்பதும், உயிரையேக் குடிப்பதுமான இந்த வியாதி நிலை, உலகை மிகவும் பாதிக்கும்.

மேலும் சொல்ல இருக்கிறதா? என்ற எதிரொலி கேட்கிறது. ஆம். இருக்கிறது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (1)

  1. நன்றி. திரு லோகேஷ்வரன்.
    அதுவும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தும் சொல்லொயிருக்கிறீர்கள். தவறு என்னுடையது தான். எதிரொலி மங்கி விட்டது என்று நினைத்தேன். ஆனால், 1200 தடவை வாசகர்கள் பார்வையிட்டுள்ளனர். (இன்று 36 பேர்.)
    விரைவில் தொடரில் அடுத்த கட்டுரை இடுகிறேன்.
    பிறகு பார்க்கலாம்.
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *