நான் என்றால் அது அவனும் நானும்

9
திவாகர்

அவள் ஆவலோடு கொடுத்த அக்கடிதத்தைச் சற்று அதிர்ச்சியுடன் தான் படித்தேன். அதிர்ச்சியோடு என் முகத்தில் காணப்பட்ட சோகமும் அவளை இன்னமும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோ என்னவோ, அந்த மகிழ்ச்சி அவள் குரலில் நன்றாகவே தெரிந்தது.

“ஆனு எப்படியெல்லாம் யோசிக்கறார் பாரு ராம்!.. அதனாலதான் எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சுருக்கு.. பாரேன்.. ஒரு பெண்ணோட குறையைக் கூட பெரிசா எடுத்துக்காம அது நீங்கணுமேன்னு ஆறுதல் சொல்றது எத்தனை பேருக்கு மனசு வரும்.. அதுவும் தான் விரும்புற பெண்ணுக்கே ஒரு குறைன்னு தெரிஞ்சவுடனே அத மனசார ஏத்துக்கறது எவ்வளோ பெரிய விஷயம்.. ஆனு ரியல்லி க்ரேட் இல்லையா ராம்!  ஆமாம்..நீ ஏன் இப்படி டல்லடிச்சுப் போயிட்டே”

“அது சரி ராதா! இந்த விஷயத்தை ஏன் முன்னமே சொல்லலே?”

“எந்த விஷயம்.. ஆனு விஷயமா?”

“விளையாடாதே.. ஆனு உன்னைக் காதலிக்கற விஷயமும் அவர் கடிதங்களும் வாரா வாரம் காமிக்கறயே.. அது இல்லை.. நான் சொல்ல வந்தது உனக்கு ஆஸ்த்துமா வந்ததைப் பத்தி”

ராதா சிரித்தாள். ”இதுல என்ன இருக்கு ராம்! இது எங்கப்பாவோட பரிசு எனக்கு..” என்றவள் மறுபடியும் கலகலவெனச் சிரித்தாள். இவள் சிரிப்பைப் பார்த்து மயங்காதவன் இனிமேல்தான் உலகத்தில் பிறக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

ராதா இந்த நகர வாழ்க்கைக்கு சமீப காலமாகத்தான் அறிமுகமானவள் என்பது எனக்குத் தெரியும். ஈரோட்டுக்கருகே ஒரு டவுனில் படித்துப் பட்டம் பெற்று எங்கள் கம்பெனியில் நல்ல உத்தியோகம் கிடைத்து பெண்கள் விடுதியில் தங்கிக் கொண்டு இரண்டு வருடங்களாக என்னோடு பணி புரிபவள்.

நான் அவளோடு பக்கத்திலேயே பணி புரிகிறேன் என்ற ஒரு காரணத்துக்காகவோ அல்லது பெண்களோடு பழகும் என் பொல்லாத சங்கோஜம் சற்று விசித்திரமாக அவளுக்குப் பட்டதோ இப்போதெல்லாம் நான் அவளுக்கு ஒரு நெருங்கிய தோழனாகத் தெரிகிறேன். இயற்கையாகவே எந்தப் பெண்களிடமும் பழக எனக்குக் கூச்சம் என்பதை அவள் அடிக்கடி கேலி செய்வாள். “நகரத்திலேயே இருக்கின்ற உங்களுக்கு இப்படி கூச்சம் இருக்கறது எனக்கு ஆச்சரியம்தான்.. கிராமத்துக்காரி எனக்கில்லே இப்படி இருக்கணும்?” என்று ஆரம்பித்த எங்கள் சிநேகம் போகப்போக ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்குச் சென்று விட்டது. இத்தனைக்கும் என் சக நண்பர்கள் கூட என்னை அதிர்ஷ்டக்காரன் என்று சொல்லவாரம்பித்து விட்டார்கள். அழகான பெண் சற்றுத் தாராளமாக என்னிடம் பழகுவது அவர்களுக்கு சற்றுப் பொறாமையாக இருப்பது கூட சகஜம்தான்.

ராதா ஏனையோரிடம் அப்படிப் பழகாதற்கு காரணம் சாதாரணமானதுதான். அவள் அதிகம் பேசாதவள் என்பது ஒன்று. அதே சமயத்தில் தனியாக வசிக்கும், ஒரு கல்யாணம் ஆகாத பெண்ணுக்கே உரிய இயற்கையான பாதுகாப்பு சுபாவமும் அவளை மற்ற ஆண்களிடம் அதிகம் பேசமுடியாமல் செய்திருக்கலாம், அப்படித்தான் நான் நினைத்துக் கொள்வேன். ஆனாலும் என்ன, பெண்களிடம் உள்ள என் கூச்ச சுபாவத்தை தாராள மயமாக்கிய புண்ணியம் ராதாவுக்கேப் போய்ச் சேரும் என்பது கூட உண்மைதானே.

அலுவலகத்தில் நண்பர்களில் ஒருவன் ஒருமுறை கிண்டலாகக் கேட்டான். “ராதா உங்கிட்டே மயங்கிட்டாடா.. லக்கி ஃபெலோ” என்றதும் நான் சீரியஸாக முதலில் எடுத்துக் கொண்டது வாஸ்தவம்தான். அப்போதுதான் திடீரென்று அன்று மதியம் காண்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு இன்லாண்ட் கடிதத்தை என்னிடம் நீட்டினாள். அது ஒரு காதல் கடிதம்.

“ராம்! இவர் எனக்குத் தெரிந்தவர்தான்.. அதாவது எங்க குடும்பத்துக்குத் தெரிஞ்சவர்.. ஆனால் பழக்கம் இல்லை. நான் படிக்கும்போது காலேஜ் பக்கத்தில் என்னை அடிக்கடிப் பார்ப்பாராம்.. பேர் ஆனந்த நடராஜமூர்த்தி.. இது மூணாவது கடிதம்..என்ன பண்றதுன்னு தெரியலே..”

முதலில் எனக்குக் கொஞ்சம் ஷாக்’தான்.. என்னிடம் இவள் மயங்கியெல்லாம் பழகவில்லையென்பது தெரிந்து விட்டது. அவள் என்னைப் பார்த்து மயங்கும் அளவு நான் இல்லை என்ற தெளிவும் அந்த மத்தியான நேரத்தில் அந்த அலுவலக காண்டீனில்  பிறந்து என்னை வாட்டிய வேதனையையும் இப்போதே சொல்லி விடுவது நல்லதுதான்.. மனதுக்குள் ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்ளத்தான் முடிந்தது யார் இவன்.. அது சரி, இவள் அழகுக்கு ஆயிரம் பேர் காதலிக்கலாம், தப்பில்லைதான்.. இவள் அவனைக் காதலிக்கிறாளோ.. அதைச் சொல்லப் போகிறாளோ..

நான் நினைத்தது சரிதான்.. இவளுக்கு அவன் பேரில் உடனடியாக அப்படியெல்லாம் காதல் பிறக்கவில்லை ‘என்றாலும்’ இவன் எழுதிய கடிதங்கள் அவளை என்னவோ செய்கிறதாம்.. ”சரியா தூங்கவே முடியறதில்லே ராம்.. ஏன் இப்படி?” என்று கேட்டாள் அவள். நான் உள்ளுக்குள் எரிச்சலுடன் வெளியே கிண்டலாகப் பதில் சொன்னேன்.

“இதுக்குப் பேர்தான் காதல்”

என் கிண்டலை அவள் ரசித்தாளோ என்னவோ.. “ஓஹோ.. உனக்கு இது எல்லாம் தெரியுமோ”

“எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது.. ஓரளவு ஊகிக்க முடியும்”

“ஓஹோ”

“ஆமாம்.. உனனை அவன், இல்லேயில்லே, அந்த அவர், எழுத்து மூலமாவே கவர்ந்துட்டார்.. அதான் உனக்கு மனசு கிடந்து தவிக்குது.. அதனால் தூக்கம் போயிடறது.. இதெல்லாம் காதல்ல சகஜம்”

“ஓஹோ.. இவ்வளோ தெளிவா காதலைப் பத்திப் பேசறே.. உனக்கும் காதல் கீதல் ஏதாவது உண்டா”

“ராதா.. இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் ஏற்கனவே அனுபவப்பட்டுதான் சொல்லணும்’னு அவசியம் இல்லே.. சாதாரண மடையன் கூட சொல்லலாம்.. சரி என்னை விடு., இந்த ஆனந்த நடராஜமூர்த்தியை நீ கடைசில எப்போ பார்த்தே.. போன மாசம் ஊருக்குப் போனியே.. அப்பப் பார்த்தியா?”

“இல்லே.. அப்ப நான் பார்க்கலே.. ஆனா ஆனு பார்த்திருக்கார்”

“ஆனு?”

”அதான் அவர் ஆனந்த நடராஜமூர்த்தி.. அவரை ஆனுதான்னு எல்லாரும் கூப்பிடுவாங்களாம்..”

கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் புன்னகைத்துக் கொண்டே சொன்னவளைப் பார்த்ததும் எரிச்சல்தான் வந்தது. ஆனந்த நடராஜமூர்த்தியை ஆனந்த் என சுருக்கிக் கூப்பிடலாம்.. ஆனால் இது என்ன ஆனு.. இப்படியும் ஒரு நெருக்கமாகப் போகும் அளவுக்கு இவள் காதல் போய் விட்டதோ..

“தப்பா நினைச்சுக்காதே ராதா.. நீ அவருக்கு அதான் ஆனுவுக்குப் பதில் கடிதம் போடுவியா.. போட்டிருக்காயா?”

அவள் மறுபடியும் சிரித்தாள். மயக்கம்தான் வந்தது. ஆனால் இவள் சிரிப்புக்கு ரசிகன், சொந்தக் காரன் வேறு எவனோ.. ”ராம்.. இந்த எஸ்.எம்.எஸ் காலத்துல காதல் கடிதமா.. அதுவும் நானா.. சேச்சே.. ஆனா காதல் கடிதம் படிக்கறதுக்கு இன்பமா இருந்திச்சு.. அதத்தான் உங்கிட்டே சொன்னேன்.. இதோ பார்.. நான் இன்னமும் ஆனுகிட்டே பேசினது கூடக் கிடையாது. மூணாவது லெட்டர் ஆச்சே.. இப்ப என்ன பண்ணலாம்’னு உங்கிட்டே யோசனை கேக்கறதுக்குதான் இந்த லட்டரைக் காண்பிச்சேன்..”

இவள் சொல்வதைப் பார்த்தால் இவளுக்கும் அவன் மேல் ஆசை உள்ளுக்குள் உள்ளதோ என்னவோ. இவளைக் கடிதம் மூலம் கவர்ந்து விட நினைத்து பாதி வெற்றி பெற்று விட்டான் அந்தப் பாழாய்ப் போன ஆனு.

”ராதா.. நான் என்னன்னு சொல்வேன்.. ஆல் தி பெஸ்ட்.. அவ்வளவுதான் சொல்ல முடியும்.. எனக்கும் இதுலல்லாம் அவ்வளவாப் பழக்கம் இல்லே.. உன் மனசுக்குப் பட்டதைச் செய்”

நான் சுரத்தில்லாமல் பேசியதைக் காதில் அவள் வாங்கிக் கொள்ளவே இல்லை. அது மட்டுமல்ல.. வாரா வாரம் இவளுக்குத் தப்பாமல் வரும் கடிதத்தையும் அவளும் தப்பாமல் எனக்குக் காண்பித்து வருகின்றாள்.. ஒரு பக்க அளவுதான் இருக்கும். நிறுத்தி நிதானமாக எழுதுவான்.. காதல் வர்ணனை அவ்வளவாக இல்லாவிட்டாலும் நிறைய கவிதைகள் இருக்கும். சூட்சுமப் பொருள் வெளிப்படும்போது அவன் கற்பனாசக்தி என்னையும் வியக்க வைக்கும். குடிப்பழக்கம் ஆண்களுக்கு அதுவும் மணமான ஆண்களுக்குக் கூடவே கூடாது என்பதை வெகு நாசூக்காக ஒரு கடிதத்தில் கவிதையாக எழுதினான்.

அவன் குடிக்கக் குடிக்க

அவள் பொட்டு

சிறிது சிறிதாய்

கரைந்து போனதே..

ஓ.. இவள் ஏன் அவனுக்கு விழுந்து விட்டாள் என்ற காரணமும் புரிந்தது. நமக்கெல்லாம் இந்தச் சாமர்த்தியம் தெரியவில்லைதான். சமய சந்தர்ப்பம் பார்த்துச் சரியாக தேர்ந்தெடுத்த கவிதையால் இவளைக் கவர்ந்து வருவது இவளுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. யாருக்குதான் பிடிக்காது.. இப்படியெல்லாம் தம் கணவன் இருக்க வேண்டும் என்றுதானே ஒவ்வொரு பெண்ணுக்கும் தோன்றும்..

ஆறு மாதமாக இதே கதைதான். நடுவில் இரண்டு முறை தன் ஊருக்குக் கூடப் போய் வந்தாள் ராதா. “ஆனுவைப் பார்த்தாயா” என்று இரு முறையும் கேட்டதற்கு ‘இல்லை’ என்று மறுத்தாள். இந்த முறை சென்ற போது ஒரு வாரம் தங்கிவிட்டு வந்தாயே’ என்று கூட கேட்டேன்.

“வீட்டிலே இங்கே இருப்பதைப் போல சுதந்திரமாக இருக்க முடியாது ராம். அங்கே போனால் ஏதோ எனக்காகவே ஏகப்பட்ட வேலைகள் காத்திருப்பது போல இருக்கும்.. அத்தோடு அப்பாவுக்கு ஆனுவின் குடும்பம் அவ்வளவாகப் பிடிக்காது. போகும் வரை போகட்டும் என்றுதான் இருந்து விடுகிறேன்.. பார்ப்போம்…” ஏதோ தனக்கு விருப்பம் அவ்வளவாக இதில் இல்லாதது போலப் பேசியதாகப் பட்டது.

அவள் ஊரிலிருந்து வந்தவுடனே ஆனு கடிதம் எழுதி விட்டான். இவள் எப்போது ஊருக்குப் போவாள் என்று காத்திருந்தான் போலும்..இதோ இந்த வாரம் ராதாவுக்கு ஆஸ்த்துமா இருப்பதைப் பற்றி ஆறுதலாக எழுதினான். அதைத்தான் இப்போது எனக்குக் காண்பித்து ஆனுவை ‘ஆஹா ஓஹோ’ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் புகழப் புகழ நான் அவளைப் பரிதாபமாகத்தான் பார்த்தேன்.

காரணம் அந்தக் கடிதத்தில் இவள் ஆஸ்த்துமாவை எமனாகவும் இவளை எமனையே எதிர்த்து வென்ற சாவித்திரியாகவும் கற்பனை செய்து கவிதை படைத்திருந்தான். நான் அந்தக் கடிதத்தை அவளிடமே கொடுத்து விட்டேன், கவலை அதிகமாக இருந்தது. இந்தச் சின்னப்பெண்ணுக்கு இப்படியெல்லாம் ஏன் வர வேண்டும். ஆஸ்த்துமா என்றால் பெரிய கிழ வயதில் ஏதோ லொக்கு லொக்கென இருமுவார்கள்.. மருந்து சாப்பிடுவார்கள்.. இதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இத்தனை நாளில் இவளுக்கு ஜுரம் வந்ததைக் கூட நான் பார்த்ததில்லை. அப்படியே வந்தாலும் அவள் அதைப் பெரிது படுத்தியிருக்கவில்லை. எனக்குத் தெரிந்து இவள் அதிகமாக இருமியது கூட இல்லை. சமீபகாலமாக ஜாஸ்தியாகப் போய் விட்டதோ என்னவோ.. என்னிடம் சொல்லாமல் கூட இருக்கலாம். சொன்னால் நான் வருத்தப்படுவேன் என்று நிச்சயம் இவளுக்குத் தெரியும்.. அது சரி, ஆனுவுக்கு மட்டும் இதெல்லாம் எப்படித் தெரியும்..

அவளையே கேட்டேன். சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னாள். இந்த முறை ஊருக்குச் சென்றபோது இரண்டு நாள் படுக்கையில் கிடந்து மூச்சு சரியாக வராமல் அவஸ்தைப் பட்டதையும், டாக்டர் மறக்காமல் மாத்திரையைத் தொடரும்படிக் கூறியதையும் எடுத்துச் சொன்னாள். ”ஆனுவுக்கும் விஷயம் போயிருக்கும்” என்றும் பெருமையாகச் சொல்லியதும் நான் கோபப்பட்டேன்.

“இதை என்னிடம் ஏன் அப்போதே சொல்லவில்லை? பார்த்தாயா ராதா.. உனக்கு சந்தோஷ விஷயத்தில்தான் இந்த ராம் துணை வேண்டும், இல்லையா.. உன் கஷ்டத்தில் நான் பங்கெடுக்கக் கூடாது.. அதானே”

”ராம்.. பிளீஸ்.. அதல்லாம் ஒண்ணும் இல்லே.. எனக்கு இப்படி வர்றது சாதாரணம்தான்.. என்ன.. இங்கே இருக்கறச்சே பாத்துக்கறதுக்கு ஆள் யாருமே இல்லையேன்னு கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதையோடு மாத்திரை மருந்து ஒழுங்கா சாப்பிடுவேன்.. ஊரிலே கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கறசே இப்படி ஆயிடுச்சு.. ஆனா ஒரு வேடிக்கை பார்த்தியா.. எப்படியோ ஆனுக்கு விஷயம் தெரிஞ்சுபோய் கவிதையே எழுதறார்னா பார்த்துக்கோயேன்..”

எனக்கு என்னவோ போல ஆயிற்று. அடிக்கடி ஆனு ஆனு’ன்னு பேசுவது ஏகப்பட்ட எரிச்சலையும் கூட்டியது,

“சரி ராதா.. நீ இனிமே ஆனு விஷயத்தை கொஞ்சம் மறந்து போ.. எது எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்.. அதனால உன் ஆரோக்கிய விஷயத்துல கவனம் செலுத்து.. எனக்கு உன் மேலே கவலை ஜாஸ்தியாயிடுத்து. தனியா வேறே இருக்கியா.. ஜாக்கிரதையா இருக்கணுமே”

ராதா சற்று எட்டி என் கையைப் பிடித்தாள். அழுத்தி விட்டு இழுத்துக் கொண்டாள். சில்லென இருந்தது. அவள் முகத்தைப் பார்த்தேன்.. மலர்ந்த பூ போல புன்னகை செய்தாள். மயக்கம்தான் வந்தது. ”இவ்வளோ அன்பு செலுத்தற இந்த ராம் பக்கத்துல  இருக்கும்போது எனக்கு எதுவும் வராது.. டோண்ட் வொர்ரி..”

அடுத்த சில தினங்களுக்கு நான் இந்த ஆஸ்த்துமாவைப் பற்றித் தெரிந்து கொள்ள சில டாக்டர்களைப் பார்த்தேன்.. இதற்காக ஒரு வாரம் ஆபிசுக்கு லீவு கூடப் போட்டு விட்டேன். ராதாவிடமிருந்து போன்கள் வரும் போதெல்லாம் ஏதோ நில விஷயமாக அலைவதாக வேண்டுமென்றே பொய் சொன்னேன். முடிந்தவரை அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை உறுதியாக அவளுக்குத் தெரியப் படுத்தத்தான் வேண்டுமா என்ன.. ஆனால் இந்த நிலையில் ஆனு செய்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. கவிதையும் கத்திரிக்காயும் எப்போது தேவையோ அப்போதுதான் ரசிக்கலாம். மடையன்.. ஆஸ்த்துமா எமனாம், இவள் சாவித்திரியாம். இனியும் அப்படித்தான் எழுதி மேலும் அவளை பலவீனப்படுத்துவான். இந்தப் பைத்தியமும் உருகிப் போய் மேலும் மேலும் இளைக்கும்.. இதை விட இந்தக் கஷ்டங்கள் தீர என்ன வழி என்று முயற்சி எடுத்தால்தான் என்ன..

பல டாக்டர்கள் ஆஸ்த்துமாவைப் பற்றி பயமுறுத்தாமல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயமாகச் சொன்னார்கள். ‘மாத்திரைகளும் யோகாப் பயிற்சியும் சரியான விதத்தில் பயன்படும்போது முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்படும் நோய்தான் இது’ என்று ஆறுதல் சொன்னார்கள். ஒரு யோகா மாஸ்டரிடம் போய்க் கேட்டேன். அதற்கான பயிற்சியை அவர் செய்து காண்பித்தார். ஆனால் என்னால் செய்ய முடியவில்லை. அவரை ஒரு மாதத்துக்குப் பயிற்சி கொடுக்க என் இருப்பிடத்துக்கே வர முடியுமா என்று கேட்டேன்.. ஒரு தொகைக்கு ஒப்புக் கொண்டு அடுத்த நாள் அழைத்துச் செல்வதாக அட்வான்ஸும் கொடுத்தேன்.

எனக்கு என்னவோ நான் செய்தது ஒரு மனத்திருப்தியைத் தந்தது. என்னிடம் வாத்சல்யமாகப் பழகிய ஒரு பெண்ணுக்கு இந்த சின்ன உதவியாவது செய்ய ஒரு வாய்ப்புதான் இது.. அந்த ஆனு இப்படியெல்லாம் செய்வானோ.. தெரியாது.. ஆனால் ஒருவேளை ஆனு இவளைக் கல்யாணம் செய்து கொண்டால் இப்படித்தான் பிராக்டிகலாக செய்ய வேண்டும்.. கவிதை எழுதி எழுதியே கன்னியைப் பிடித்தால் மட்டும் போதாது. அவளுக்குப் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.. போகட்டும்.. நம்மால் செய்ய வேண்டியதை செய்து விடுவோம்.

அடுத்தநாள் யோகா மாஸ்டருடன் ஒரு திடீர் விஸிட் அவள் வீட்டுக்கு. அவள் அதிர்ச்சியோடு ஆச்சரியமாகவும் நின்று எங்களை வரவேற்றாள். அவளிடம் நேரடியாகவே விஷயத்தைச் சொன்னேன். டாக்டர்கள் சொன்னதையெலாம் எடுத்துச் சொன்னேன். அந்த யோகா மாஸ்டர் கண்டிப்பாக ஒரு மாதம் அவள் இருப்பிடத்துக்கே வருவார் என்றும் அவளும் கண்டிப்பாக செய்தே தீரவேண்டுமென தீர்மானமாக அவளிடம் கூறி விட்டேன். அவளால் மௌனமாக நான் சொன்னதைத்தான் செய்ய முடிந்தது.

அவள் யோகா செய்து கொண்டிருக்கையில் நான் அந்த வீட்டை சற்று கண்ணோட்டமிட்டேன். சின்ன வீடுதான். அழகாக வைத்திருந்தாள். அவள் மேஜையின் மீது அந்த இன்லாண்ட் காதல் கடிதங்கள் பரவிக் கிடந்தன. இவள் நிஜமாகவே காதல் பைத்தியமாகி விட்டாள். இந்தக் காதல் பைத்தியம் பிடித்தவர்கள் இப்படித்தான் அடிக்கடி காதலன் கடிதங்களையே படித்துக் கொண்டும், கனாக் கண்டு கொண்டும் இருப்பார்களோ என்னவோ.. கடவுளே! என் பார்வையில் மறுபடி பட வேண்டுமா?

எனக்கு எரிச்சல் சற்றுத் தாராளமாகவே இருந்தது. என்றும் சொல்லி விடுகிறேன்.. அவளைப் பார்த்தேன். அவள் சீரியஸ்ஸாக யோகா பயிற்சியில் கண்ணை மூடிக் கொண்டு மாஸ்டர் சொல்லியபடி பிரணாயாமம் செய்து கொண்டிருந்தாள். நான் அவள் மேஜை அருகே சென்றேன். ஆனு கடிதங்கள்தான். எத்தனையானாலும் முத்து முத்தாக அவன் கையெழுத்து நன்றாகவே இருந்ததுதான். இந்த காலத்தில் இன்னமும் கடிதம் எழுத எப்படித்தான் இவர்கள் முன் வருகிறார்களோ.. ஒரு மெயில் அல்லது மொபைல் அல்லது எஸ் எம் எஸ் என்கிற காலத்தில் மெனக்கெட்டு போஸ்டாபீஸ் போய் இன்லாண்ட் வாங்கி கஷ்டப்பட்டுக் கையால் எழுதும் இவனைப் போன்றோர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும். ஆனாலும் இவன் கஷ்டத்துக்குப் பலன் இல்லாமல் இல்லை.. இந்தக் கடிதங்களைப் படித்துத்தானே இதோ அந்தப் பைத்தியம் டமால்’ என அவனிடம் விழுந்து விட்டதே..

பின்னால் அவள் நின்றது சட்டென உணர்ந்ததால் நானும் திரும்பினேன். யோகா மாஸ்டர் தன் வேலை முடிந்ததும் போய் விட்டார் போலும்.

அவள் மேஜை மீது பரவியிருந்த அத்தனைக் கடிதங்களையும் எடுத்து ஒருசேர வைத்து மேஜை ட்ராயருக்குள் வைத்து, அங்கிருந்து வேறு சில இன்லாண்ட் லெட்டர்களை எடுத்தாள்.

“இது என்னது ராதா”

அவள் என்னை உற்றுப் பார்த்தாள். “இதெல்லாம் வெற்று இன்லாண்ட் லெட்டர்கள்.. இனி இவற்றுக்கு வேலை இல்லை ராம்!” அவள் குரல் ஒரு மாதிரியாக எனக்கு விழுந்தது.

“என்ன சொல்கிறாய் ராதா?”

“ராம்.. ஒரு உண்மையைச் சொல்லட்டுமா.. இந்த ஆனு என்கிற ஆனந்த நடராஜமூர்த்தி என்ற மனிதரே எனக்குத் தெரியாது. இவர் என் கற்பனையில் உதித்தவர்.” தட்டுத் தடுமாறி வந்தது அவள் குரல்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த என்னை, என் கைகளைப் பிடித்தாள். “நீ என்னை மன்னிப்பாய் என்றால் சொல்கிறேன்.. இல்லைனா இதுதான் நம் கடைசி சந்திப்பு என்று இருந்து விடுகிறேன்..”

நான் ஒன்றும் பேசவில்லை.. அவளே பேசினாள். ஏதோ கனவுலகில் இருப்பது போன்ற நிலையில் இருந்ததால் சரியாக அவள் பேச்சு என் காதில் விழவில்லைதான். ஆனு என்கிற கற்பனைப் பேரில் தனக்குத் தானே எழுதிக் கொண்டதாகவும், அவைகளை எனக்கு மட்டுமே காண்பித்து என் மனதில் ஏதாவது சலனம் தெரிகிறதா.. தெரிந்தால் முதலில் அந்தக் கடித விவரத்தை தூக்கிப் போட்டு விட்டு விடலாம் என்று முடிவு எடுத்ததாகவும் இப்படியாக ஏதோ சொல்லிக் கொண்டே போனாள்.

“என்ன.. நான் சொல்லிக் கொண்டே போகிறேன்.. காதில் கேட்டுக் கொள்கிறாயா இல்லையா?” கோபமாக அவள் பேசிய போதுதான் எனக்கு முழு உணர்வு வந்தது.

“நிஜமாகவே அந்த ஆனு இல்லையா?”

”இல்லை ராம்! எனக்கு உன் மீதுதான் ஒரு இது.. இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலே.. ஆனால் நீ என்ன சொல்வாயோ என்று பயந்து போய்தான் முதலில் இப்படி செய்தேன்.. ஆனால் நீ பிடி கொடுக்கவே இல்லையா.. மறுபடியும் மறுபடியும் இப்படி எழுத வேண்டியதாயிற்று.. சொல்றதுதான் சொல்றோம், எனக்கு ஆஸ்த்துமா இருக்குங்கறதையும் சொல்லிடலாமேன்னுதான் ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தினேன்.. ஆனா நீ பண்ண உதவி..

கடகடவெனப் பேசியதால் சற்று மூச்சு வாங்கியது அவளுக்கு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினாள். அவள் கண்ணில் ஒரு துளி நீர் கூட வெளிப்பட்டதுதான்.

”எனக்கு ஆனு’ன்னு நிஜமாவே ஒரு காதலன் இருக்கிறான்னு நினைச்சுண்டாலும் எந்த நேரத்திலே எந்த உதவி தேவையோ அந்த உதவியைப் பண்றியே.. அதுவும் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு.. எனக்காக இப்படி ஒருத்தன் இருக்கான்கிற்தே.. எனக்கு எவ்வளோ பெரிய பெருமை தெரியுமா.. இதை விட எனக்கு என்ன வேணும்.. நிஜமாவே ஜெண்டில்மேன்’னு பேர் உனக்குதான் சொந்தம் ராம்!”.

நான் பிரமை பிடித்தவன் போலத்தான் அப்போது இருந்தேன். எனக்கு இன்னமும் புரியவில்லை.. அவள் சிரித்துக் கொண்டே என் கையைப் பிடித்து அழுத்தினாள். அந்தச் சிரிப்பு கூட அதே மயக்கச் சிரிப்புதான்.. அவளும் அவளேதான்.. ஆனு இல்லை என்பதும் சிறிது சிறிதாக அந்த மயக்கத்திலும் உணர முடிந்தது..

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “நான் என்றால் அது அவனும் நானும்

  1. கவிதை நடையில் ஒரு அழகான காதல் ஓவியம். கவர்ச்சி ஒன்றுக்கே அடிமையாகும் இக்கால “காதல் உலகில்” இது போன்ற “மன அழகுக்கு” அடிமையாகும் இந்த “காதல் கீதம்” அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் படைப்பாளிக்கு. வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள் வல்லமை குழுவினர்களுக்கு….!

  2. நல்ல நடை. ஒரு பெண் வலிய வந்து தன் காதலை வெளிப்படுத்துவது என்பது எவ்வளவு கஷ்டம், என்பதை உணர்த்துகின்றது. (உன் வாழ்க்கையில் நடந்த கதை இல்லை என்று நினைக்கிறேன்).
    நண்பா! எழுதிக்கொண்டே இரு. நாங்கள் படித்துக்கொண்டே இருக்கிரோம்.

  3. திருவாளர் ,திவாகர் அவர்களுக்கு ,”நான் என்றால் அது அவனும் ”படித்தேன் என்பதை விட ரசித்தேன் என்பது சரியான வார்த்தை
    , , குடிக்க ,குடிக்க ,

    போட்டு ,சிறுது,சிறிதாக ,

    அழிந்து ,கொண்டே வருகிறது

    அருமையான வரிகள் ,அந்த புகைப்படம் ,இரண்டு கைகள் பிணைந்து இருக்கும் காட்சி,சபாஷ் ஒரே குறை ,கை பார்த்த கண்கள் முகம் பார்க்கவில்லையே’

    திவாகர் ,ரகசியமாக சொல்லுங்கள் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்,அது உங்கள் கைகள் தானே ?,நீங்கள் நிறைய உண்மை கதைகள் ஏழதுபவர் என்பதால் அப்படி கேட்டேன் ,****

  4. அன்உ திவாகர்ஜி இந்தக்காதலின் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது 
    தன் உணர்ச்சிகளை வித்தியாசமாக எடுத்துரைத்த ராதா புத்திசாலிதான்.
    தெளிந்த நீரோடைப்போல் கதையின் ஓட்டம் .  வாழ்த்துகள் 

  5. At the outset, female expression of love towards male is really a difficult one. So here the heroin took a different way that is acceptable one. But I give credit to Hero too, because he was kept in difficult situation of understanding his girl friend as she hinted her wishes towards some one.

    Sir, love la iththanai mudichu pottaa eppadi? nallakaalam, ellam nallapadiya mudinchuthu.

  6. It is very good. I am sorry, I read it now only.The way of expression is very nice.
    Another short story from our friend. one story: one week?????.

  7. நண்பா! எழுதிக்கொண்டே இரு. நாங்கள் படித்துக்கொண்டே இருக்கிரோம்……..

    Another short story from our friend. one story: one week?????.

    EXCELLENT Story Mr Dhivakar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.