கம்பராமாயணத்தில் மூவகை கற்பு நிலை

1

முனைவர்  க. மங்கையர்க்கரசி                                                   
உதவிப்பேராசிரியர்
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி                                              
மீனம்பாக்கம், சென்னை – 600 114.

முன்னுரை:

கணவனை இழந்த மகளிர் நிலை மிகவும் இரங்கத்தக்கதாகவே இருந்தது. கணவனின் இறப்பு மனைவிக்கு நிரந்தரமான பிரிவு. ‘இறந்த கணவன் இறந்த வேலினால் தன்னையும் மாய்த்துக்கொண்ட ஆஞ்சிக்காஞ்சியும், இறந்த கணவன் தலையொடு தன் முகத்தையும் மார்பையும் சேர்த்துக் கொண்டோளும் மாய்ந்த முதுகாஞ்சியும், கணவனை இழந்த தாபதநிலைக்காஞ்சியும், மனைவி இறந்த கணவனோடு ஈமம் ஏறிப் பெருந்தீயில் புகும்போது இடைப்பட்டோருக்குக் கூறும் பாலைக்காஞ்சியும்     என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். பிரிவாற்றாமையினால் கணவனுடன் உயிர்த்துறத்தல், உடன்கட்டை ஏறுதல், கைம்மைநோன்பு நோற்று   தம் இறுதிக் காலத்தைக் கடத்தியுள்ளனர். ‘தலைக்கற்பு’ ‘இடைக்கற்பு’, கடைக்கற்பு’ என்ற மூவகைக் கற்பு நிலைகளும் கம்பராமாயணத்தில் அமைந்துள்ளதைக் காண்போம்.

கணவனுடன் உயிர்விடுதல்:

கணவனுடன் உயிர்விடும் நிலை தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கில் இருந்தது. தொல்காப்பியர் கணவர் இறந்த பின்னர் மனைவியின் நிலையினை இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். அவை

  1. கணவனோடு உடன் உயிர்விடுதல்.
  2. கணவன் இறந்தபின் தவ வாழ்வை மேற்கொள்ளல்.

 இது ‘தாபதநிலை’ என்ற பெயரில் சுட்டப்படுகிறது.

கணவனுடன் உயிர்விடும் மனைவியர் நிலைக் குறித்துத் தொல்காப்பியர்

“நீத்த கணவன் தீர்த்த வேலின்
பேஎத்த மனைவி ஆஞ்சியானும்” (தொல்காப்பியம்- புறத்திணையியல் நூ22)

என்று இறந்த கணவன் விட்ட வேலினாலே தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனைவி தலையோடு, மார்பையும், முகத்தையும் சேர்த்து இறக்கும் மனைவி ‘ மூதானந்தம்’ என்று சிறப்பித்துக் கூறுவர்.(உயிரைமாய்த்துக் கொள்வது,) போரில் அன்றி வேறு காரணத்தினாலோ தன்  கணவன் இறந்தபோது, ‘அவனின்றி பிறர் தனக்குத் துணையாகார்’ என்று கணவனின் மார்பைப் பொருந்தியோ, இணையடி தொழுதோ  உயிர் துறப்பவர் புகழப்படுவர்.

உடன்கட்டை ஏறி தீயில் உயிர்விடுதல் (சதி)

கணவனது சிதைத்தீயில் மனைவி வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளுதலை ‘உடன்கட்டை ஏறுதல்’ (சதி) என்ற சொல்லாட்சி குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் இதனை

                    “நல்லோள் கணவனோடு நனியழல் புகீஇச்
சொல்லிடை இட்ட பாலைநிலையும்” (தொல்காப்பியம்பொருளதிகாரம்- புறத்திணையியல்-நூ22)

என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார், .இந்நூற்பா உடன்கட்டை ஏறுதலை ‘அழல் புகுதல்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

புறப்பொருள்வெண்பாமாலையில் ஐயனாரிதனார், தொல்காப்பியர் கூறிய கருத்தையே உடன் கொண்டு உடன்கட்டை ஏறுதலைக் குறிப்பிடுவார் என்பதை,

                                  “காதற்கணவனொடு கனையெரி மூழ்கும்
மாதற் மெல்லியல் மலிபுரைத்தன்று” (புறப்பொருள்வெண்பாமாலை காஞ்சி 22)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

                          “பெருங்கோட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்.
நுமக் கரி தாடுகதில்ல வெடிக்கெம்
பெருஞ் தோட்கணவன் மாய்ந்தென வரும்பற
வள்ளி தழுவித்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோரற்றே” (புறநானூறு 246)

என்று கூறுவதன் மூலம் தீஉண்டாக்குதல், தீப்பாயும் இடம், தீப்பாயும் பெண்களின் நிலை, தீப்பாயும் தன்மைப் போன்ற செய்திகளால் தெரிகின்றன.

உடன்கட்டை ஏறுதலை வடமொழியில் ‘ஸதி’ (சதி) என்ற சொல்லால் குறித்தனர். இவ் வடமொழி சொல்லிற்கு ‘நற்குணமுடைய மனைவி’ என்பது பொருளாகும். என்றாலும் இச்சொல் கைம்பெண் கணவனோடு மரித்ததற்குத் ‘தற்கொலை செய்து கோடல்’ என்று மருவி பொருள்படுவதாயிற்று.

நாயகனுடன் மரணமடைந்த கற்புடையாள் தங்கள் தேகத்தில் உரோமவரிசைகள் எவ்வளவு உண்டோ அவ்வளவு காலம் சொர்க்கத்து  உறைவர் என்கிறது ‘அபிதான சிந்தாமணி’  என்று ‘சங்க இலக்கியம் கருத்தியல் வளம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

இறப்பிற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை உண்டென என்னும் பெண்களுக்கு மேலுலக வாழ்க்கை சொர்க்கமாக அமையும் என்று ஆசையூட்டி, உடன்கட்டை ஏறுவதில் தவறில்லை என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டனர். கல்வியறிவற்ற, கணவர்மீது அன்பும், அக்கறையும் கொண்ட பெண்கள், கணவனுக்காக என்று கூறினால், எந்தக் கட்டுக்கதைளையும் நம்பிவிடுவர் என்றே எண்ணினர். இறந்த கணவனோடு சொர்க்கம் உறைவதும், உடன்கட்டை ஏறினால் சாத்தியமாகும் என்று வலியுறித்தினர். பெண்களும் அதை அப்படியே நம்பினர்.

கைம்மைநிலை:

கைம்மைநோன்பு மிக்க கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தது. கைம்பெண்கள் அணிகளைக் களைந்து, கூந்தலை நீக்கி, தம்மை அழகற்றவர்களாக ஆக்கிக் கொண்டனர். காம   உணர்வுகளை தூண்டும் உணவு வகைகளை நீக்கிவிட்டு, உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுகளைமட்டுமே உண்ணவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இவற்றுக்கு மேலாக இளம்பெண்கள் இயற்கை உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டி யிருந்தது. கணவன் இறந்த நிலையில் காமுறுதல், காமுறப்படல் ஆகியவற்றிற்கான உணர்வுகள் தம்பால் தோன்றாமைக்கு உதவும் வகையில் மனைவியர் மேற்கொண்ட செயல்களே கைம்மைநோன்பின் நிகழ்ச்சிகள் ஆயின.

கணவனை இழந்த பெண்கள் கணவனின் நினைவாக நோன்பு நோற்று வாழ்வதனை ‘கைம்மைநோன்பு’ என்று குறிப்பிடுவர். இலக்கியங்களில் நோன்பு நிற்கும் பெண்களை ‘உயவற்பெண்டிர், கழிகலமகளிர்’ என்று குறிப்பிடுகிறது.

கைம்மைமுறைகளை

1. கூந்தல் களைதல்

2. அணிகலன்கள் களைதல்

3. தரையில் பாயின்றி படுத்துறங்குதல்

4. உணவில் கட்டுப்பாடு

5. கணவனுக்குப் பிண்டமளித்தல்

6. குளிர்ந்த நீரில் மூழ்குதல்

என்று 6 வகைகள் கூறப்படுகின்றன..

தலைக்கற்பு:

தலைவன் இறந்த செய்தியைக் கேட்ட அளவில் தலைவியும் உடன்  உயிர்த்துறத்தல் ‘தலைக்கற்பு’ எனப்பட்டது.

இடைக்கற்பு:

தலைவன் இறந்தபின் அவன் பிரிவுத்துன்பம் தாழாமல் அவனை எரிக்கும் சிதையிலேயே வீழ்ந்து உயிர் விடுதல் ‘இடைக்கற்பு’ எனப்பட்டது.  கடைக்கற்பு:

கணவனை இழந்த பெண்கள் கணவனின் நினைவாக நோன்பு நோற்று வாழ்தல்   ‘கடைக்கற்பு’ எனப்பட்டது.

கம்பராமாயணத்தில் தலைக்கற்பு:

இராவணன் இறந்துகிடக்க அவன் மனைவி மண்டோதரி “கொடியவளான எனக்கு நேர்ந்திருப்பது பெருந்துயரம். நான் அரக்கர் தலைவனான என்னுடைய கணவன் இறந்த பின்பா இறப்பது? அவருக்கு முன்னால் இறக்க வேண்டும் என்ற கருத்தையும் பெற்றவள் ஆகவில்லை” என்று பலப்பல புலம்பி அழைத்தவளாய் ஏக்கம் கொண்டு எழுந்து பொன் அணிகலன்களால் பொருந்தியிருக்கும் அந்த இராவணனின் ஒப்பில்லாத மார்பினைத் தன்னுடைய தளிர் போன்ற கைகளால் தழுவி தனித்தன்மையுடன் நின்று உரத்தக் குரலினால் அழைத்துப் பெருமூச்சுவிட்டாள் உயிர் நீங்கினாள் என்பதை

                         “என்று அழைத்தனள் அங்கு எழுந்து அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவித் தனி
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர்நீங்கினாள்” (யுத்தகாண்டம்-இராவணன் வதைபடலம் 3885)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

மழையைப் போல நீரைப் பெருக்கும்   விழிகளை உடையவரான அரக்க மகளிர், தம் கணவருடைய வயிரம் போல வலிமையான உடல்களைத்தேடிப் போர்க்களத்தில் புகுந்தனர். அம்மகளிர் பிணங்களாகிய பெரிய மலைகளில் தம் கணவன் உடலிலிருந்து பிறந்த ரத்த ஆற்றினில் மூழ்கியவராய்  இனிய உயிரை விட்டனர் என்பதை

“மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்தம்வயிரப்
போர் யாக்கைகள் நாடி அப்பொருகளம் புகுந்தார்” (யுத்தகாண்டம் – படைத்தலைவர் வதைப்படலம்  2310)

மூலம் அறியமுடிகிறது.

போரில் இழந்த தம் கணவருடைய உருவத்தைத் தெரிந்து கொள்ள முடியாத அரக்கமகளிர் அவ்வுடல்களை நெருங்கி, தம் வசம் இழந்தவராகி பிறகு அவ்வுடலில் கவசத்தை நீக்கிவிட்டு, தோள்களின் மேலே கொடிகள் போன்ற தம் கூர்மையான நகத்தால் செய்த பெருங்குறி இருப்பதைப் பார்த்துத் தங்கள் அரிய உயிரை நீக்கினர் என்பதை,

“துவசம் அன்ன தம்கூர் உகிர்ப் பெருங்குறி தோள்மேல்
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார்”  (யுத்தகாண்டம் – படைத்தலைவர் வதைப்படலம் 2309)

மூலம் அறியமுடிகிறது.

கம்பராமாயணத்தில் இடை க்கற்பு:

அயோத்தியாகாண்டம் தைலமாட்டுப் படலத்தில் , தசரதன் இறந்தவுடன் அவனது அறுபதினாயிரம் மனைவியரும், இறந்துவிட்டவனான தம் உயிர் போன்ற கணவனைக் கண்டு கலங்கினர்.  தசரதனை வானுலகத்திலும் பின் தொடர மன உறுதி மேற்கொண்டனர். சத்ருக்கணன் ஈமச்சடங்குகளைச் செய்தபோது தசரதன் மனைவியர் அறுபதினாயிரம் பேரும் தாம்அணிந்த  மாலைகளும், மற்றுள்ள அணிகலன்களும் தம்முடைய இடைகளும் விளங்கித் தோன்ற   இலையில்லாத தாமரை மலர்கள் நிறைந்த பூக்காட்டிலே  மலைக் குகையில் வாழும் மயில்கள் போல ஈமத்தீயில்  இறங்கிமூழ்கினர். தாம் கணவனுடன் உயிர் விடுவதால் கற்புடை மகளிர் செல்லும் சொர்க்கலோகத்தை தீக்குளித்த தேவியர் அனைவரும் அடைந்தனர் என்பதை

                                 “இழையும் ஆரமும் இடையில் மின்னிட
குழையும் மா மலர் க் கொம்பு அனார்கள் தாம்
தழை இல் முண்டகம் தழுவு கானிடை
மொழியில் மஞ்ஞைபோல் எரியில் மூழ்கினர்” (அயோத்தியாகாண்டம் – பள்ளியடைப்படலம் 926)

மூலம் அறியமுடிகிறது.

கம்பராமாயணத்தில் கடைக்கற்பு:  (கைம்மைநிலை)

அணிகலன்கள் களைதல் மற்றும்  திலகம் இழத்தல் தன்னுடைய அழகுத்தன்மையைக் குறைத்தல் என்பது கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. கூந்தலில் மலர்கள் சூடுவதில்லை.

வாலியின் மனைவியான தாரை, வாலி இறந்துவிட்டதால் கைம்மைநிலை வாழ்வை வாழ்ந்தாள். கார்காலம் முடிந்தபிறகு சீதையைத் தேடலாம் அதுவரை அரண்மணையில் இரு என்று இராமன் கூறினான். மாதங்கள் முடிந்தும் சுக்ரீவன் வராததால் கோபம் கொண்ட இராமன் இலட்சுமணனை அனுப்பினார். கோபத்துடன் சென்ற இலட்சுமணனை அனுமன் ஆலோசனைபடி தாரை எதிரில் வந்து பேசினாள். அவளுடைய சொல்லைக்கேட்ட அளவில் பேசியவர் யார் என்பதை அறிய இலட்சுமணன் விளங்கும் வெண்மையான முழுமதி பகற்பொழுதிலேயே பூமியில் வந்த தோற்றத்தைப் போன்ற ஒளி விளங்கும் குன்றிய அழகு விளங்கும் முகத்தையுடையவளான, தாரையின் முகத்தைப் பார்த்தான். திருமாங்கல்யத்தை ஒழித்து மணிகள் பதித்துச் செய்யப்பெற்ற மற்ற அணிகலன்களையும், அணியாமல் நீக்கி, நறுமணம் உள்ளதும், மலர் மாலையையும் அணியாது விலக்கிக் குங்குமப்பூவின் குழம்பையும், சந்தனக்குழம்பையும் பூசிக் கொள்ளாத பருத்தக்கொங்கைகள், பாக்குமரம் போன்ற கழுத்துடன் மறையும்படி மேலாடையில் நன்கு போர்த்துள்ள   மகளிரில் சிறந்தவளான இந்தத் தாரைப் பார்த்த இலக்குமணன்  இரங்கத்தக்க அத்தோற்றத்தைக் கண்டதாலும் தன் தாயரை நினைத்ததாலும்   கண்களில் நீர் வர வருத்தம் அடைந்தான்.  என்னைப் பெற்ற தாயர் இருவரும் இத்தகைய   கைம்மைக் கோலம் கொண்டுதானே இருப்பர் என்று உள்ளம் கொதிந்தான் என்பதை,

                          “மங்கல அணியை நீக்கி மணி அணி்துறந்து வாசக்
கொங்கலர் கோதைமாற்றி க் குங்குமம் சாநரதம் கேட்டுப்
பொங்கு வில் முலைகள் பூசக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தீன்”

(கிட்கிந்தா காண்டம்- கிட்கிந்தைப் படலம் 612) பாடலடி மூலம்  அறியமுடிகிறது. கணவனை இழந்த தாரை  கைம்மையாக அணிகலன்களை நீக்கி, பூ அணியாமல்  கழுத்துமறையும்படியான ஆடையை உடுத்தியிருந்தாள் என்பதும், அவளைக் கண்டபோது இலட்சுமணன் தன்னுடைய தாயரும் இப்படித்தானே இருப்பர் என்று நினைக்கிறான் என்பதும்  புலப்படுகிறது.

முடிவுரை:

கணவன் இறந்தவுடன் மனைவியும் இறந்த தலைக்கற்பும், கணவனுடைய சிதைத் தீயில் மனைவியும் விழுந்து இறத்தல் இடைக்கற்பாகவும், கணவன் இறந்தபின் கைம்மைநோன்பு நோற்று வாழும் கடைக்கற்பு என்ற மூவகைக் கற்பு நிலைகளும் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்

1. இராமசுப்பிரமணியன், வ.த. புறப்பொருள் வெண்பா மாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.

2. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்  லிமிடெட் சென்னை, 1953.

3. பாலசுப்பிரமணியன்.கு.வை (உரை.ஆ) புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட்    சென்னை, 2004

4. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கம்பராமாயணத்தில் மூவகை கற்பு நிலை

  1. கட்டுரையாளர்க்கு வாழ்த்துக்கள்!
    1. புறத்திணை இலக்கணத்தில் யானை மறம், குதிரை மறம், தேர் மறம் தானை மறம் எனத் தனித்தனியாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்த அடிபபடையில் ‘கலிங்கத்துப் பரணியில் நால் வகை மறம்’ என்பது போலப் பகுத்து ஆராய இடமுண்டு. வாய்ப்பும் உண்டு.

    2. ‘தாபத நிலை’ என்பது கையறுநிலைத் துறையின் பல வடிவங்களுள் ஒன்று என்பதைத் தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலையும் தெளிவுபடுத்துகின்றன.. இவற்றுள் இன்னவாறு இறந்தால் தலைக்கற்பு, இன்னவாறு சகித்துக் கொண்டால் இடைநிலைக் கற்பு, இன்னவாறு ‘இருந்து வாழ்ந்தால்’ கடைநலைக் கற்பு என்னும் பகுப்பு எந்த நூலிலாவது சுட்டப்பட்டுள்ளதா?

    3. ‘கற்பு’ என்னும் உயயொழுக்க நெறிக்குத் தரவரிசை உண்டா? தரவரிசை பிரிப்புக்கு அது உள்ளாகுமா? உண்டாயின் எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?

    4. இந்தக் கட்டுரையில் கற்பு என்பது பெண்மை சார்ந்த உயிர் ஒழுக்கமாகக் கருதாமல், ஆணைச் சார்ந்த பெண்ணின் நடப்பியல் நெறியாகவே சுட்டப்பட்டுள்ளது என்பதைக் கட்டுரையாளர் உணர்கிறாரா? ஆணோடு உடன் இறந்தால் தலை, அவரைப் பிரிந்த வாழ இயலாமையால் சற்று தாமதித்து எரிமூழ்கினால் அது இடை, அவன் நினைவாக கைம்மை நோன்பு நோற்றால் அது கடை என்றால் அத்தனை ஒழுக்கமும் ஆணைச் சார்ந்தே அமைநதிருப்பதைக் காண முடியவில்லையா?

    5. தலை, இடை, கடை என்னும் அடைமொழிகளால் மாணாக்கர்களைப் பவணந்தியார் தரம் பிரிப்பதுபோல் கட்டுரையாளர் எந்த அளவுகோல் கொண்டு பிரித்திருக்கிறார்? அல்லது மூவகைக் கற்புக்கும் (QUALITY) உவமம் கூறி விளக்க முடியுமா?

    6. மரபு சார்ந்து, பகுப்புக்கு ஆளாகாத, ஆளாக முடியாத பெண்மையின் மீயுயர் ஒழுக்க நெறி பற்றிய ஆய்வில் இன்றைய போலி நாகரிகமும் போலிப்பண்பாடும் பற்றிய சிந்தனை வருவதே கூடாது என்பது என் பணிவான கருத்து.

    கருத்துரை அல்லது பின்னூட்டம் என்பது பொருண்மையின் தெளிவு நோககியது என்பதாதலின் தயக்கத்திற்கு இடமில்லை. கட்டுரையாளர் விளக்கம் எதுவாயினும் வரவேற்கப்படுகிறது. வாழ்த்துக்கள்! நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.