அருள்தரும் வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயில்

0

முனைவர்  வே. விக்னேசு,
தமிழ்  உதவிப்பேராசிரியர்,
பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் 641014.
9597203214.

“ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!”
                                                                   – பாரதியார்

தோற்றுவாய் 

பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமான இறைவன், தம்மை நாடிவரும் அடியார்கட்கும் பக்தர்கட்கும் அருள்புரியும் நிலைகளாக விளங்குபவையே திருக்கோயில்களாம். அவ்வகையில், தம்மை உள்ளன்புடன் வணங்கும் பக்தர்கட்கு அருள் செய்து காக்கும் வண்ணம் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் தம் அருவநிலையிலிருந்து திரிந்து பல்வேறு உருவத் திருமேனிகளை ஏற்றக்கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பலவாம். அவற்றுள் எல்லாம் வல்ல சக்தியாக, வேண்டியார்க்கு வேண்டியாங்கு அருள்வழங்கும் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயிலும் ஒன்றாம். அக்காள் தங்கை வடிவினில் அம்மை அருள்பாலிக்கும் இத்திருக்கோயிலின் வரலாற்றையும் வழிபாடுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்குகிறது.

திறவுச் சொற்கள்வனபத்ரகாளியம்மன், பேச்சியம்மன், காளி, திருக்கோயில், கோயம்புத்தூர்

திருக்கோயில் அமைவிடம் 

“யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் நின்றன் செயல்களன்றில்லை”

என்று மகாகவி பாரதியாரால் போற்றப்பட்ட காளி அன்னை, கொங்கு மண்டலத்தில் கோவையம்பதியில் உக்கடம் பகுதியில் ராஜு செட்டியார் வீதியில், கன்னட நாயக்கர் வாலிபர் சங்கத் திருமண மண்டபத்தின் பின்புறம் கோழிப்பண்ணை என்னுமிடத்தில் “அருள்மிகு வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயில்” என்னும் தலத்தில் வீற்றிருந்து அருள்வழங்கி வருகின்றனள்.

ஆதிமூலத்தானம் 

ஓங்காரத் தலைவியான வனபத்ரகாளியம்மன் பல்லாண்டுகட்கு முன்னர், கோயம்புத்தூரின் மேற்கே வெள்ளியங்கிரி செல்லும் வழியில், கரடிமடை என்னும் ஊரினில், அய்யாசாமி மலை எனப்படும் கருமலையில் கரும்பாறை அருகிலுள்ள கன்னிமார் சுனையின் அருகில் வனக்காளி என்னும் திருப்பெயருடன் சுயம்பு வடிவில் அருள்புரிந்து வந்தனள். 1930-ஆம் ஆண்டளவில் பொன்னம்மாள் என்னும் பெண்மணி அவ்விடத்திற்கு விறகு சேகரிக்கச் சென்றபொழுது, அன்னை வனக்காளி, அந்தப் பெண்மணியின் மேல் இறங்கிவிடுகின்றனள். பின்னர் அந்தப் பெண்மணியின் மேலுற்ற வனக்காளி, கரும்புக்கடை என்னும் பகுதியில் நொய்யலாற்றங்கரையில், சுடுகாட்டின் அருகில் தான் வீற்றிருப்பதை ஊரார்க்கு உணர்த்தினள்.

வனக்காளியின் அருள்வாக்கின்படி நாகப்பச்செட்டியார், மருதாசல செட்டியார், முருகேசன், காரமடைநாயக்கர் என்னும் அன்பர்களின் உறுதுணையுடன் பொன்னம்மாளும், நஞ்சுண்ட நாயக்கர் பூசாரியும் இணைந்து, அம்மன் தான் வீற்றிருப்பதாக உணர்த்திய அவ்விடத்தில் சுயம்பு வடிவில் வனக்காளியையும், பேச்சியம்மன்னையும் பிரதிட்டை செய்தனர். அழகிய எழில் சூழ்ந்த நொய்யலாற்றங்கரையில்; வெற்றிலைக்கொடிக்கால் தோட்டம் அருகில்; கரும்புகள் அடர்ந்த காட்டினில் எளிய மேடையின் மீது வனக்காளியும் பேச்சியம்மனும் வீற்றிருந்து தம்மை நாடிவரும் பக்தர்கட்கு அருள் சுரக்கலாயினர். இங்ஙனம் அருள்வழங்கும் அன்னை வனக்காளி மற்றும் பேச்சியம்மனின் ஆதிமூலத்தானம் கருமலையிலுள்ள கன்னிமார் சுனைப் பகுதியேயாம்.

திருக்கோயில் இடமாற்றம் 

வனக்காளியும் பேச்சியம்மனும் அக்காள் தங்கையாக வீற்றிருந்து அருள்புரிந்து வர, அம்மனால் நலன் பெற்றோர் பலரும் ஒன்றிணைந்து அம்மன் வீற்றிருக்கும் தலத்தினை விரிவுபடுத்த எண்ணினர். அதன்படி, மட்டைசாலையின் மீது நாணல் புல் வேயப்பட்டிருந்த அமைப்பினை மாற்றி, ஓடுகளால் வேய்ந்தனர். பின்னர் மக்களின் வரவு அதிகரித்தமையானும், இடப்பற்றாக் குறையினானும் கோயிலை மாற்றி அமைக்க வேறிடம் பார்க்க வேண்டியதாயிற்று.

தற்போது அம்மனின் திருக்கோயில் அமைந்துள்ள இடம் தெரிவு செய்யப்பெற்றது. இவ்விடம் பொன்னம்மாளின் தங்கை ருக்மணி அம்மாளுக்குரியதாம். ஆகலின், அவ்வம்மையாரிடம் இடம் கேட்கப்பட்டது. அவ்வம்மையார் நிலத்தைக் கொடுக்கத் தயங்கினாராம். அன்று இரவே, அவ்வம்மையாரின் கனவில் வனக்காளி நெருப்பின் மீது வீற்றிருப்பதாகக் காட்சியளித்தனள். நடுக்குற்ற அவ்வம்மையார், மறுநாளே அவ்விடத்தினைத் திருக்கோயிலுக்கே வழங்கிவிடுகிறார்.

இங்ஙனம் தெரிவு செய்யப்பெற்ற அவ்விடத்திற்கு வனக்காளி, பேச்சியம்மன் இடமாற்றம் செய்யப்பட்டனர். சுற்றிலும் மண்சுவர் அமைத்து ஓலையால் வேய்ந்து, அதனுள் வனக்காளியையும் பேச்சியம்மனையும் பிரதிட்டை செய்தனர். ஊருக்குள் இடமாற்றம் செய்யப்பெற்றமையின் வனக்காளியை வனபத்ரகாளி என்று அழைக்கலாயினர். பொன்னம்மாள் அம்மையாரும், நஞ்சுண்ட நாயக்கர் பூசாரியும் திருக்கோயில் பூசைகளைச் செய்து வந்தனர். இவ்விருவரின் மறைவுக்குப்பின் பொன்னம்மாளின் வளர்ப்பு மகன் காளப்பன் அவர்களே தலைமைப் பூசாரியானார்.

கற்சிலை வடித்தல் 

கருமலையினை மூலத்தானமாகக் கொண்ட அன்னை வனபத்ரகாளிக்கும் பேச்சியம்மனுக்கும் கற்சிலை வடிவமைக்க எண்ணிய பூசாரி காளப்பன் அவர்களும் அன்பர்களும், கோவை அவினாசிக்குச் சென்று பலசிற்பசாலைகளைக் கண்டு, தாங்கள் எண்ணியாங்கு, அஃதாவது எட்டுக்கரங்களுடன், அமர்ந்த கோலத்தில், முகத்தினில் அமைதிதவழும் வண்ணம் உள்ள காளிசிலையைத் தேடினர்.

ஆயினும் எச்சிற்பச் சாலையிலும் அவர்கள் எண்ணியாங்கு சிலை தென்பட்டிலது. ஆகலின், அவினாசியப்பரை வழிபட்டு வேண்டி நின்றனர். அங்ஙனம் வழிபட்டுக் கோயிலை விட்டு வெளியே வரும் பொழுது மயில் ஒன்று அவர்களின் தலையினை ஒட்டிப்பறந்து சென்று, கோயில் எதிர்புறம் உள்ள சிற்ப சாலையின் மேலுள்ள மூங்கில் கம்பின் மீது அமர்ந்து அகவியதாம். இதனைக்கண்ட இவர்கள், இந்நிகழ்வினை அம்மன் அருளாசியாகவே எண்ணி, அந்தச் சிற்பச்சாலையை அடைந்து தாங்கள் எண்ணிவந்த காளியின் சிலை உள்ளதா என வினவினர்.

அச்சிற்பச்சாலையின் உரிமையாளரும் சிறந்த சிற்பியுமான செல்வராஜ் சிற்பி என்பவர் ஒரு சிலையைச்சுட்டி, இச்சிலை கல்கத்தா கொண்டு செல்வதற்காக இரண்டாண்டுகட்கு முன்பு ஒருவரால் முன்பணம் கொடுத்து, சிலை வடிவமைக்கத் தொடங்கப்பட்டது. ஆயின், அவர் வராமையின் சிலைவடிமைக்கும் பணி இடை நிறுத்தப்பட்டது. தங்களுக்கு வேண்டுமாயின், இச்சிலையை முழுமைசெய்து தருவேன். தவிர, தாங்கள் எண்ணி வந்தவாரே இச்சிலையும் எட்டுக்கரங்களுடன் அமைக்கத் தொடங்கப்பட்டது என்று கூறுகிறார். இதனைக்கேட்ட பூசாரி காளப்பன் அவர்களும் அன்பர்களும் அம்மையின் திருவருளை நினைந்து அகமகிழ்ந்து முன்பணமாக ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து ஒப்புதல் அளித்துவிட்டு மகிழ்வோடு திரும்பினர். அங்ஙனமே, கையில் குழந்தையுடன் பேச்சியம்மன் சிறபம் ஒன்றையும் வடிவமைக்கக் கூறினர்.

சிலை எடுத்து வரும் நிகழ்வு

சிலை வடிவமைக்கக் கூறிய பின்னர் அன்பர்கள் உதவியால் வாராவாரம் ஐந்நூறு ரூபாயைக் கொண்டு சென்று சிற்பியிடம் கொடுத்தனர். மூன்று மாதத்திற்குப் பிறகு நான்காயிரம் ரூபாய் கொடுத்து சிலையை எடுத்துவரத் திட்டமிட்டனர். அதன்படி,ஒரு நன்னாளில் பூசாரி காளப்பன், அவரின் மனைவி நாகலட்சுமி, அன்பர்கள் என முப்பதின்மர் அவினாசி சிற்பச்சாலை சென்றடைந்தனர்.

சிலையை எடுத்து வருவதற்கு முன்னர் செல்வராஜ் சிற்பி சிலைகளுக்குப் பூசை செய்யத் தொடங்கினார். ஆயின், அவரால் பூசை செய்ய இயலவில்லை. ஆகலின், பூசாரி காளப்பன் அவர்களையே பூசை செய்யும் படிக்கூற, அவரும் பூசை செய்தார். பூசை முடிந்த வேளையில், மஞ்சள் பட்டணிந்து, கழுத்தில் அழகிய மாலையுடன் அம்மன் ஆகாயத்திலிருந்து சிலைக்குள் இறங்கியதாக அரிய தெய்வீகக் காட்சி அங்குக் குழுமியிருந்தவர் ஐவரின் கண்களுக்குக் கிட்டியது. இக்காட்சியைக்கண்ட ஐவரும் அம்மையின் அருட்திறத்தை எண்ணி வியந்து தாம்கண்ட அரிய காட்சியைத் தம்முள் பரிமாறிக் கொண்டனர்.

சிற்பியின் கூற்று

பூசை முடிந்தபின் செல்வராஜ் சிற்பி தான் வடிவமைத்த காளி சிற்பத்தின் சாத்திரங்களைக் கூறினார். அதன்படி, இச்சிலையைக் கொண்டு சென்று கோபுரம், விமானம் கொண்ட கோயிலில் நீங்கள் பிரதிட்டை செய்திடினும் ஐந்தாண்டுகட்கு பின்னர் மீண்டும் கோயிலைப் புதுப்பித்து, மறுபிரதிட்டை செய்வீர்கள். தவிர, நூறு ஆண்டுகள் வரை இச்சிற்பத்திற்கு சக்தி இருக்கும். இவ்அம்மனைத் தரிசிக்க வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருவர் என்பது இச்சிற்ப சாத்திரப்படித் தெரிகிறது என்பது சிற்பியின் கூற்றாகும்.

சிலைப் பிரதிட்டை

அவினாசியிலிருந்து வடிவமைத்துக் கொண்டு வரப்பெற்ற வனபத்ரகாளியம்மன், பேச்சியம்மன் சிற்பங்களை சுற்றிலும் செங்கல் சுவரும் ஓடுகளால் வேயப்பட்ட கட்டடத்தினுள் அந்தணர்களைக் கொண்டு உரிய பூசைகளைச் செய்து பிரதிட்டை செய்தனர். முன்பிருந்த சுயம்புகளையும் இச்சிலைகளின் கீழே பிரதிட்டை செய்தனர். இங்ஙனம் பிரதிட்டை செய்யப்பெற்ற அம்மைக்கு மூன்று வேளை பூசைகள் சிறப்பாக நடத்தப் பெற்று வரலானது. பக்தர்களும் அதிக அளவில் வந்து அம்மையின் அருள் பெற்றனர். சிற்பியின் கூற்றுப்படி, டெல்லி, பெங்களூர், மைசூர், சென்னை போன்ற இடங்களிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்து அம்மையின் அருள் வேண்டி நன்மைகளடைந்தனர்.

அம்மன் நினைவூட்டுதல்

வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் சிலைகள் பிரதிட்டை செய்யப்பெற்று ஐந்தாண்டுகள் நிறைவடைந்த வேளையில், வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் இருவர் சிலைகளின் கண்களினின்றும் நீர் வரத்தொடங்கிற்று. இக்காட்சியைக் கண்ட பூசாரி காளப்பன் அவர்களும் அன்பர்களும் பக்தர்களும் ஏதோ தீயது நிகழ்ந்து விட்டதோ என அஞ்சி நடுக்குற்று, அம்மனிடம் அருள் வாக்குக்கேட்டு இதற்குத் தீர்வு வேண்டி நின்ற பொழுது, அம்மன் தன் அருள்வாக்கில், “இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. மறுபிரதிட்டை செய்தாக வேண்டும். பணியைத் தொடங்குங்கள்; மக்களை யான் திரட்டித் தருவேன்” என்று உரைத்தனள். தன் பிள்ளைகள் மறந்தாலும் உரிய நேரத்தில் நினைவூட்டிய அன்னையின் திருவருட் கருணையை நினைந்துருகிய அன்பர்கள் அன்னையின் அருள்வாக்கின்படி திருக்கோயிலைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கினர்.

குடமுழுக்கு

தடுத்தாட்கொண்ட அம்மையின் அருட்செல்வத்தை நினைந்து நினைந்து உருகும் அடியார் பலரும் ஒன்று கூடி, திருக்கோயிலைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கலாயினர். அதன்படி, வாம்டெக்ஸ் வெங்கடாசலம், பெரியசாமி, வக்கீல் அசோகன், இராமசாமி, சங்கர் என்னும் அன்பர்களின் பெருமுயற்சியால் கருவறையும் விமானமும் முன்மண்டபமும் கட்டி நிறைவு செய்யப்பெற்றன. இக்கட்டுமானப் பணியில், திருக்கோயில் பூசாரிகாளப்பன், அவரின் துணைவியார் நாகலட்சுமி, அவர்தம் மக்கள் கனகராஜ், கார்த்திகேயன் ஆகியோர் கல்லும் மண்ணும் சுமந்து அல்லும் பகலும் ஓய்வு ஒழிவின்றி உழைத்தனர். இப்பணியில் அவர்களின் உழைப்பு பெரிது; மிகப்பெரிது.

இங்ஙனம் இவர்களின் உழைப்பாலும் பல அன்பர்களின் முயற்சியாலும் கட்டப்பெற்ற அருள்மிகு வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயிலின் குடமுழுக்கு ஸ்ரீமுகவருடம் பங்குனிமாதம் 14-ஆம் தேதி (27.03.1974) ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதியும், உத்திர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் குன்றாச் சிறப்புடன் இனிதே நடைபெற்றது. இக்குடமுழுக்கின் பொழுது விநாயகர், பாலமுருகன், ஓங்காரேசுவரர், துர்க்கை, மாரியம்மன், மாகாளியம்மன், கன்னிமார், நவநாயகர் ஆகிய உபதெய்வங்களும் பிரதிட்டை செய்யப்பெற்றன. தவிர, இக்குடமுழுக்குப் பெருவிழா கௌமார மடாலய சுந்தரசுவாமிகளின் தலைமையில், சந்திரசேகர சிவாச்சாரியார் அவர்களால் வேள்விச்சாலை பூசனைகள் செய்யப்பெற்ற சிறப்பினதாம். இத்திருக்கோயில் கட்டுமானத்தில் அஃதாவது, விமானம், கருவறை, மகாமண்டபம், மடப்பள்ளி என்பன கட்டப்பட்டதில் வாம்டெக்ஸ் திரு.யு. வெங்கடாசலம் அவர்களின் சீரிய முயற்சி அறிந்து போற்றத்தக்கதாம்.

இத்திருக்கோயிலின் இரண்டாம் குடமுழுக்குப் பெருவிழா 20.01.2007-ஆம் நாள், கௌமார மடாலய குமரகுருபர சுவாமிகள் மற்றும் ராஜராஜேஸ்வரி மடாலய விஜயராகவ சுவாமிகளின் தலைமையில், ராஜசர்மா அவர்கள் வேள்விச்சாலைப் பூசனைகள் செய்ய இனிதே நடைபெற்றது.

தெய்வ அமைப்பு

வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் அமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்வதும் இன்றியமையாததாம்.

வனபத்ரகாளியம்மன்

திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள வனபத்ரகாளியம்மனின் சிலை ஆதாரபீடத்துடன் சேர்;ந்து ஆறேமுக்கால் அடி உயரமும், ஆதார பீடமின்றி, சிலை மட்டும் நான்கரை அடி உயரமுடையதாம். சிற்ப சாத்திரத்தின்படி, வனபத்ரகாளியானவள் எட்டுக்கரங்களுடனும் திரிசூலத்தை உயர்த்திப்பிடித்துக் கீழ்நோக்கிப் பிரயோகிக்கும் நிலையிலும், வலக்காலை பீடத்தின் மேல் உயர்த்தி வைத்தும், இடக்காலைத் தொங்க விட்டநிலையிலும் கோரைப் பற்களுடனும் உக்கிர நிலையில் இருப்பள். ஆயின், இத்திருக்கோயில் மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளமையின் சிலை வடிவமைக்கும் பொழுதே அம்மையின் வடிவம் எட்டுக்கரங்களுடன் இருப்பினும் அமைதியான நிலையில் அமைந்திருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கிணங்க, வனபத்ரகாளியின் சிலை அமைதி தவழும்படி வடிக்கப்பட்டுள்ளது.

அன்னை வனபத்ரகாளி எட்டுக்கரங்களுடன் வலக்காலைப் பீடத்தின் மேல் மடித்து வைத்தும் இடக்காலைத் தொங்கவிட்ட நிலையிலும் கோரைப்பற்களின்றி அமைதியே உருவாய்க் காட்சி தருகின்றனள். அன்னையின் தலைக்குப்பின் அக்கினிச்சுடரும், காதுகளில் மகரகுண்டலங்களும் அணி செய்கின்றன. எண்கரங்களுள் வலப்பக்கக் கரங்களில் திரிசூலம், உடுக்கை, சிறுகத்தி, அசுரனின் தலை ஆகியனவும், இடப்பக்கக் கரங்களில் அக்கினிச்சட்டி, கேடயம், மணி, கபாலம் என்பனவும் விளங்குகின்றன. எட்டுக்கரங்களிலுமுள்ள ஆயுதங்கள் யாவும் இயல்பாகப் பிடித்த நிலையிலேயே உள்ளன. குறிப்பாக, திரிசூலம் பிரயோகிக்கும் நிலையின்றி, இயல்புநிலையில் பிடித்தவாறே உள்ளமை குறிப்பிடத்தக்கதாம்.

அன்னை தன்னுடைய இடக்காலை அசுரனின் தலைமீது ஊன்றியுள்ளனள். எட்டுக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியவளாக அன்னை விளங்கிடினும், அவளுடைய கண்கள் அன்பைப் பொழிவனவாய்க் கண்டாரை ஈர்க்க வல்லனவாய் இலங்குகின்றன. அங்ஙனமே, அன்னையின் முகம் அமைதியே உருவாய்; பெண்மையின் பொலிவுகாட்டுவதாய்; மெல்லிய புன்னகையுடன் எழிழுடையதாய் விளங்குகிறது.

அன்னை வனபத்ரகாளியம்மன், பிறவுயிர்க்குத் துன்பம் விளைவிப்பவரை அழிப்பவளாகவும், உள்ளன்போடு நினைந்துருகும் அடியார்க்கு அருளையும் அன்பையும் வாரிவழங்குபவளாகவும் திகழ்கின்றனள் என்பதையே அன்னையின் இத்திருவடிவம் நமக்குணர்த்துகிறது என்பதில் ஐயமில்லை. தவிர, நொய்யலாற்றங்கரையில் கரும்புக்காட்டினில் பிரதிட்டை செய்யப் பெற்றிருந்த சுயம்பும் அன்னை வனபத்ரகாளியின் கீழே பிரதிட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் அறியத்தக்கதாம்.

பேச்சியம்மன்

பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு மக்கட் செல்வத்தை வழங்குபவளான பேச்சியம்மன் சிலை, ஆதாரபீடத்துடன் சேர்ந்து நான்கே முக்கால் அடி உயரம் உடையது. அன்னை பேச்சியம்மன் இடது காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்ட நிலையில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றனள். அன்னையின் மேல்வலது திருக்கரம் திரிசூலத்தையும் மேல்இடது திருக்கரம் உடுக்கையையும் பிடித்துள்ளது. கீழ்வலது திருக்கரம் எலுமிச்சைப் பழத்தைப் பிடித்த வகையிலும் அமைந்துள்ளது. அன்னை தன்னுடைய இடக்காலின் தொடைப் பகுதியின் மீது சிறிய குழந்தையை அமர்த்தித் தன்னுடைய கீழ் இடது திருக்கரத்தால் அக்குழந்தையைப் பிடித்துள்ளனள்.

அங்ஙனமே, அன்னை தன்னுடைய வலக்காலைத் தாமரை மலரின் மீது ஊன்றியுள்ளனள். அன்னை தன் கூந்தலை முடிந்து வலப்பக்கம் கொண்டையிட்ட அமைப்புடன் அன்பே உருவாய் அமைதி கொஞ்சும் வடிவுடன் திகழ்கிறாள்.

சகஸ்ரலிங்கேசுவரர்

இத்திருக்கோயிலின் குடமுழுக்கின் பொழுது சிவபெருமானை ஓங்காரேசுவரர் என்னும் திருப்பெயரில் இலிங்க வடிவில் பிரதிட்டை செய்தனர். இரண்டாம் குடமுழுக்கின் பொழுது, இந்த இலிங்கத்தை மாற்றி, சகஸ்ரலிங்கேசுவரர் என்னும் இலிங்கத்தைப் பிரதிட்டை செய்தனர். இந்த  இலிங்கம் மூன்றடி உயரத்திலும், இலங்கபானத்தில் ஆயிரம் சிறிய இலிங்கங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இங்ஙனமே, விநாயகர், பாலமுருகன், மாரியம்மன், மாகாளியம்மன், கன்னிமார், விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை, பைரவர், தென்முகக்கடவுள், நவநாயகர் ஆகிய பரிவார மூர்த்தங்களும் சிற்பசாத்திரத்தின் படியே வடிவமைக்கப்பட்டுள்ளன.

உற்சவ மூர்த்திகள் 

இத்திருக்கோயிலில் வனபத்ரகாளியம்மன், பேச்சியம்மன், விநாயகர், முருகன், பிரதோசநாயகர், லலிதாம்பிகை, மகிசாசுரமர்த்தினி என்னும் உற்சவ மூர்த்திகள் (பஞ்சலோக சிலைகள்) உள்ளன.

அவற்றுள் வனபத்ரகாளியம்மன் உற்சவர் நின்ற திருக்கோலத்தின் நான்கு திருக்கரங்களுடன், மேலிரு திருக்கரங்களில் உடுக்கை, அக்கினி என்பனவும், கீழிரு திருக்கரங்களில் திரிசூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி அமைந்துள்ளது.

பேச்சிம்மன் உற்சவர் நின்ற நிலையில் பன்னிரு திருக்கரங்களுடன் அமைந்துள்ளது. கரங்களில் முறையே உடுக்கை, அங்குசம், அக்கினி, கதாயுதம், கத்தி, அபயக்கரம், சூலம், பாசக்கயிறு, தண்டம், கேடயம், கபாலம், எலுமிச்சை என்பவை உள்ளன. அன்னையின் திருப்பாதங்களின் முன்பு, குழந்தை ஒன்று நின்ற நிலையில் உள்ளது.

திருவிழாக்கள் 

வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயிலின் ஆண்டுத்திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுவதுடன், ஒவ்வொரு மாதமும் சிறப்பான நாட்களில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தவிர, அன்றாட பூசை, வாரம், மாதம் எனப் பல்வேறு பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அவற்றையெல்லாம் ஒருங்கே தருவதாயின் இக்கட்டுரை வரைகடந்து செல்லும் என்பதால், இன்றியமையாத சிலவற்றை மட்டும் இங்குக் காண்பது சாலும்.

வருடாந்திரத் திருவிழா 

இத்திருக்கோயிலின் வருடாந்திரத்திருவிழா ஒவ்வோராண்டும் ஆனிமாதத்தில் கொண்டாடப்படுகிறது. திருக்கோயில் கரும்புக்காட்டில் அமைந்திருந்த பொழுது வருடத்திருவிழா (நோம்பி) மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்படி, முதல்நாள் திருப்பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலின் அருகேயுள்ள நொய்யலாற்றிலிருந்து திருமஞ்சனத்தீர்த்தம் எடுக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது வைத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அப்புனித நீரால் அபிடேகம் செய்து தீபாராதனை செய்வர். இரண்டாம் நாள் ருத்ரபாராயணம் செய்து அம்மனுக்கு அபிடேக ஆராதனை செய்வர். மூன்றாம் நாள் மூன்று திருக்கரகங்கள் அலங்கரித்து ஊர்வலமாகக் கொண்டுவந்து அபிடேக ஆராதனை செய்வதுடன் விழா நிறைவடையும். இங்ஙனம் இத்திருக்கோயிலின் முதலாண்டுத் திருவிழா 1948-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

திருக்கோயில் கோவை உக்கடம் தொறையர் வீதியில் தற்போது அமைந்துள்ள இடத்திற்கு மாற்றப்பட்டவுடன், அன்பர்களின் வருகை அதிகரிப்பினாலும், பக்தர்களின் உறுதுணையாலும் மூன்றுநாள் திருவிழா எட்டுநாள் விழாவாக விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, முதல்நாள் கணபதி ஹோமம் செய்து, அன்றுமாலை பேரூர் நொய்யலாற்றிலிருந்து திருமஞ்சனத்தீர்த்தம் கொண்டு வந்து இரவு திருக்கொடியேற்றுதல். இரண்டாம் நாள் வனபத்ரகாளியம்மனுக்கு சுத்தஹோமம் செய்து விசேட அபிடேகமும் அன்னாபிடேகமும் செய்தல். மூன்றாம் நாள் இரவு அம்மனுக்கு சக்திக்கரகம் (சக்தி விஞ்ஜை) அழைத்து வருதல், நான்காம் நாள் திருவிளக்கு வழிபாடும், ஐந்தாம் நாள் இரட்டைக்கரகம் பூவோடு (அக்கினிச்சட்டி) எடுத்து ஊர்வலமாக வந்துத் திருக்கோயிலை அடைதல், ஆறாம் நாள் மஞ்சள் நீராடி திருக்கொடியிறக்குதல். ஏழாம் நாள் அம்மன் திருவீதியுலாவும், இறுதிநாள் பேச்சிம்மனுக்கு அபிடேக ஆராதனை செய்து மறுபூஜை செய்து அன்னதானம் வழங்குவதுடன் விழா நிறைவடைகிறது. இங்ஙனம் இத்திருக்கோயிலின் வருடத்திருவிழா ஊரார்போற்றும் விதத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு சடங்குகள் 

வருடாந்திரத்திருவிழா சிறப்பான முறையில் நடத்தப்பெறுவதுடன் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சிறப்பு வேள்வி செய்து அம்மன் அருள் வாக்குக் கூறப்படுகிறது. இவ்வேளையில் எலுமிச்சை, நெய்த்தேங்காய் ஆகியவற்றைச் சுற்றி இட்டால் கண்ணேறு கழியும் என்கின்றனர்.

இவைதவிர, வாரந்தோறும் வரும் செவ்வாய், வெள்ளி தினங்களில் மதியம் உச்சிக்காலப் பூசை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பூசை முடிந்தபின் அம்மன் அருள்வாக்கும் உண்டு. அங்ஙனமே பிரதோச காலத்தில் சகஸ்ரலிங்கேசுவரருக்கும் நந்திதேவருக்கும் அபிடேக ஆராதனை நடைபெறுகிறது. தவிர, விநாயகப் பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தி, முருகப்பெருமானுக்கு சஷ்டி, கிருத்திகை விரதங்களிலும் அபிடேக திபாராதனை நடைபெறுகிறது. இவ்வாறே, விஷ்ணு துர்க்கைக்கு ராகுகாலத்தில் வழிபாடும் நடைபெறுகிறது.

ஆடல்வல்லானான நடராசப் பெருமானுக்கு வருடத்தில் மூன்று திருமஞ்சனங்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. மேலும் சுவர்ண ஆகர்சன பைரவருக்குத் தேய்பிறை அட்டமி நாளில் சிறப்பு அபிடேக ஆராதனை செய்யப்படுகிறது. இங்ஙனமே, ஒவ்வொரு நாளும் மூன்று வேளை பூசைகள் தவறாது நடைபெறுகின்றன.

இவ்வாறு இத்திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்களும் சடங்குகளும் உரியமுறையில் நடைபெற்று வருகின்றன என்பது குறிக்கத்தகுந்த சிறப்பினதாம்.

நம்பிக்கைகள்; வழிபாடுகள் 

வனபத்ரகாளியம்மன் பேச்சியம்மன் திருக்கோயிலில் நம்பிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

பிள்ளைப்பேறு; மருத்துவச்சிக் கூலி

மக்கட்பேறு இல்லாதோர், வனபத்ரகாளியம்மனையும் பேச்சியம்மனையும் வேண்டி வழிபடுகின்றனர். ஒன்பது வாரம் அம்மனுக்குச் செவ்வரளி மாலை சூட்டி நம்பிக்கையுடன் வழிபட்டவர் உறுதியாக நன்மக்கட் பேறு பெறுவர். இங்ஙனம் பிள்ளைப்பேறு பெற்றவர்கள் இன்றும் பலருண்டு. அங்ஙனம் பிறந்த குழந்தைகள் காளியின் வரத்தில் பிறந்த குழந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். அக்குழந்தைகட்கு அருள்வாக்கின் பொழுது அம்மனே பெயர் சூட்டுகிறாள்.

கருவுற்றிருக்கும் பெண்டிர் தங்களுக்கு நன்முறையில் சுகப்பிரசவம் ஆக வேண்டுமென்பதற்காக அம்மையை உளமுருக வேண்டிக்கொள்கின்றனர். அதன்படி சுகப்பிரசவம் ஆன பெண்டிர், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதத்தில், பேச்சியம்மனுக்கு ஐந்துபடி அரிசி, ஐந்து அச்சு கருப்பட்டி, உப்பு, மிளகு இன்னோரன்ன பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இப்பொருட் தொகுதிக்கு மருத்துவச்சிக் கூலி எனப்பெயர் வழங்கப்படுகிறது.

திருமணத்தடை நீக்கம்

திருமணத்தடையுள்ளவர்கள் இருபத்தியொரு வாரம் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடின் அத்தடை நீங்கி நல்ல வாழ்க்கைத்துணை பெறுவர்.

பேயோட்டுதல்

காற்று, கருப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்டோர் பதினொரு வெள்ளிக்கிழமை இத்திருக்கோயில் வந்து அம்மனை வழிபடின் தீயசக்திகள் நீங்கப் பெறுவர். அங்ஙனம் நீங்க நற்பலன் அடைந்தோர் இன்றும் பலருளர்.

அடியவர்கள்

இவற்றுக்கெல்லாம் மேலாக இத்திருக்கோயிலையே; அன்னை வனபத்ரகாளியம்மன், பேச்சியம்மன்னையே தன் விருப்ப தெய்வங்களாகப் போற்றிவரும் அன்பர்; அடியவர் பலராவர். அவர்கள் யாவரும் அன்னையின் அருள்வாக்கின்படியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர்; அன்னையின் ஆணைப்படியே அனைத்தையும் செய்து வருகின்றனரென்பதும் சிறப்பாகச் சுட்டத்தக்கதாம்.

அம்மனின் திருப்பெயர்

வனபத்ரகாளியம்மன் மலையடிவாரத்தில் சுனையருகில் வீற்றிருந்தமையின் வனக்காளி என்றே அழைக்கப்பட்டனள். பின்னர் திருக்கோயில் ஊருக்குள் மாற்றி அமைக்கப்பட்டமையின் வனக்காளி என்னும் திருப்பெயரை வனபத்ரகாளி என்று மாற்றினர். ஆயினும், பக்தர்கள் அனைவரும் அன்;னையைக் ‘காளி’ என்றே உளமுருக அழைத்து மகிழ்கின்றனர். இங்ஙனமே, பேச்சியம்மனைப் ‘பேச்சி’ என்றே அன்புடன் அழைக்கின்றனர்.

இறுவாய்    

கொங்குமண்டலமாம் கோவையம்பதியில் உக்கடம் ராஜுசெட்டியார் வீதியில் வீற்றிருந்து அருள்புரியும் அருள்மிகு வனபத்ரகாளியம்மனும் பேச்சியம்மனும் தம்மை உள்ளன்போடு நினைந்து வேண்டுபவர்க்கு வேண்டிய வரங்களைத் தந்தருள் செய்யும் தெய்வங்களாகவும் தம்மை, நேயமோடு காளி என்றும் பேச்சி என்றும் வாயினிக்க அழைத்துக் கசிந்துருகும் அன்பர்கட்கு ஒரு தீங்கும் நேராது காக்கும் ஒப்பற்ற சக்திகளாகவுந் திகழ்கின்றனரென்பதை, இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர் நன்குணர்வர் என்பதில் எட்டுணையும் ஐயமில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *