படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 5
முனைவர் ச. சுப்பிரமணியன்
‘நீ’தான் கவிதை!
(துரை. வசந்தராசனின் கவிதைகளில் உத்தியால் சிறக்கும் உள்ளடக்கம்)
முன்னுரை
காட்டு மூலிகைபோல் கண்டெடுக்க முடியாமல் ஓட்டைக் குடிசைகளில் உயிர்வாழும் நடைப்பிணங்கள்” என்னும் ஓர் வரி நா.காமராசன் எழுதிய ‘கறுப்புமலர்கள்’ என்ற நூலில் வரும். மலைவாழ் பனியர் குல மக்களின் அவலத்தைப் பாடிய அந்த வரிகளை நான் படிக்கிறபோது வெளி உலகத்துக்குத் தெரியாமல் இருக்கும் கவிதை வல்லாளர்கள் சிலர் என் நினைவுக்கு வருவார்கள். தமிழ்நாட்டில் மருந்துக்கடைகள்போல் கவிஞர் இலட்சக்கணக்கில் இருந்தாலும் கவிதைகள் கோவாக்சின் மருந்துபோலக் குறைவாகத்தான் கிடைக்கின்றன என்பது புகார் இல்லாமலேயே புலப்பட்ட உண்மை. அந்தக் கோவாக்சின் துளிகளில் ஒரு துளியாக முகநூலில் தன் முகம் காட்டுபவர் தம்பி வசந்தராசன்!. ‘பண்ணைக் கவிக்கோ என எல்லார் எண்ணத்திலும் இனிப்பவர் அவர்.! அமர்ந்து படிக்க வேண்டிய அன்னாரது கவிதைகளைப் பலரும் நடந்து கொண்டே படித்து வீடு வந்து சேருமுன் ‘விரலாலே’யே விமர்சனமும் செய்து முடித்துவிடுகிறார்கள். அது அவர்கள் உரிமை. கவிதை என்றால் செறிவு, அழகு, எளிமை, உறுதியான கட்டுமானம் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும் இந்த எழுபத்தாறு வயது முதியவன் காலங்கடந்து கண்டெடுத்த என் தம்பி வசந்தனின் கவிதைளைப் பல்லில்லாமலேயே படித்துச் சுவைக்கிறேன். சுவைத்ததைப் பந்தி வைக்கிறேன்.! இது எனக்குப் பிடித்த பந்தி! உங்களுக்கும் பிடித்தால் பெருமை எனக்கன்று, வசந்தனுக்கு! பந்தியில் பரிமாறியவன் மட்டுமே நான். நெஞ்சத்து மடப்பள்ளியில் சீர் அரிசியை கவிதைப் பிரசாதமாக்கியவன் அவன் என்பதால்!
கவிதைக் கட்டுமானம் என்றால் என்ன?
வீடுகள் பலவகையான கட்டுமானங்களைக் கொண்டவை. ஒவ்வொரு வீட்டின் கட்டுமானமும் தனித்தன்மை உடையன. குடிசைக்கு ஒரு கட்டுமானம். தொகுப்பு வீட்டுக்கு ஒரு கட்டுமானம். தேவைக்கு ஒரு கட்டுமானம் அடக்கத்திற்கு ஒரு கட்டுமானம். ஆடம்பரத்திற்கு ஒரு கட்டுமானம். அவரவர் பொருளாதார வலிமைக்கு ஏற்பவும் இக்கட்டுமானம் மாறுபடுவதுண்டு. வாடகைக்கு விடுகிற வீடுகள் என்றால் அந்தக் கட்டுமானமே தனி!. புதுக்கவிதை உள்ளிட்ட அத்தனைக் கவிதைகளுக்கும் இது பொருந்தும். வீடுகளில் ஒரு கட்டுமானத்தை மற்றொரு கட்டுமானத்தோடு ஒப்பிடுவது அறியாமை. காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வலுவான பொருளாதார மற்றும் ரசனையாகிய காரணிகளின் பின்னால் வடிவமைக்கப்படுகிறது. கவிதையிலும் ஒன்றினை மற்றொன்றோடு ஒபபிட்டு மதிப்பிடுவது நெறியன்று. சங்கச் சான்றோர்கள் அவர்தம் வெளிப்பாட்டுக்குப் பெரும்பாலும் ஆசிரியப்பாவையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். காரணம் பாடுபொருள் அகம் புறம் என்னும் இரண்டு மட்டுமே ஆனதால். இளங்கோ தன் கதைக்குத் தேர்ந்தேடுத்துக் கொண்ட வடிவம் ஆசிரியப்பா. அதன் வடிவம் பல இடங்களில் கற்பாருக்குச் சோர்வு தரும் எனக்கருதியோ என்னவோ வரிப்பாடல்களையும் குரவைப் பாடல்களையும் இணைத்துக் கொள்கிறார். இந்த நெறியைப் பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதியும் வீரத்தாய் காவியத்தில் பாவேந்தரும் பின்பற்றுகின்றனர் பொருண்மைக்கேற்ற வடிவம் என்பதுதான் தமழ்க்கவிதைகளின் வடிவக்கோட்பாடு. இதில் இன்னொரு நுண்ணியமும் இருக்கிறது. அண்ணாமலை ரெட்டியார் எழுதித் தற்போது அச்சில் வந்திருக்கும் காவடிச்சிந்து இருபத்து மூன்று பாடல்களும் இருபத்து மூன்று தனித்தனிச் சந்தத்தைத் தமக்கென கொண்டவை. எழுத்து வடிவம் சிந்தாக இருந்தாலும் இசைவடிவம் இன்னும் நுண்ணியமாகிறது என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். கம்பராமாயணத்தை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தாலோ சீவகசிந்தாமணியை வெண்பாவில் எழுதியிருந்தாலோ அவ்விலக்கியங்கள் இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் தம்பி வசந்தராசன் எழுதியிருக்கும் ஒரு கவிதையின் உள்ளடக்கமும் கட்டுமானமும் எப்படி இரண்டறக் கலந்து நிற்கிறது என்பதை இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முனைகிறது.
முன்னிலைப் பரவல் என்றால் என்ன?
இறைவனையோ பாட்டுடைத் தலைவரையோ, தலைவியையோ இயற்கைப் பொருள்களையோ படர்க்கையில் வைத்துப் பாடுவதே பெருவழக்கு. சில நேர்வுகளில் வெளிப்பாட்டின் வேகம் குறைந்துவிடுகிறது என்றோ, உள்ளத்துக் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் சரியான முறையில் படர்க்கை நிலை வெளிப்பாட்டில் முழுமையாக கொண்டுவரவியலவில்லை என்று நினைத்தாலோ படைப்பாளனின் எண்ணவோட்டத்தினாலோ அவறறையெல்லாம் முன்னிலையிலேயே வைததுப் பாடி விடுவது என்பது ஓர் இலக்கிய வெளிப்பாடடு மரபு. அல்லது இலக்கிய வெளிப்பாட்டு உத்தி.
கவிதைகள் சிறப்பது உத்திகளால்.
முல்லைக்குத் தேரளித்த பாரியை இப்படிப் பாடுகிறார் புலவர் ஒருவர்.
“பூத்தலை அறாஅப் புனைக்கொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கென கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்”
என்னும் வரிகளில் முல்லையின் பாட இயலாமை படர்க்கையில் பாடப்பட்டிருப்பது காண்க. பாடுபவர்க்கே பரிசளித்துப் பழக்கப்பட்ட மரபில் பாடுதற்கு நாக்கில்லா முல்லைக்குத் தேர்கொடுத்ததே வள்ளன்மைக்குப் பெருமை என்பதுதான் பாட்டின் சாரம். இன்னொரு புலவர் பாடுகிறார். ‘கொய்வார் இன்றி முல்லை வாடுகிறது’ என்பதைக் கருத்திற் கொண்டு அதனை முன்னிலையாக்கிப் பாடுகிறார்
“இளையோர் கொய்யார்! வளையோர் சூடார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி
பாணன் சூடான், பாணினி அணியாள்.
வல்வேல் சாத்தன் மாயந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே!”
“முல்லையே நீ இப்போது பூத்து என்ன பயன்? வலிமை வாய்ந்த வேலையுடைய சாத்தன் மறைந்து போனான். அதனால் அமங்கலம் நிலவுகிறது நாடடில்! உன்னை இளையவர்கள பறிக்க மாட்டார்கள். வளைசூடிய இளம்பெண்களும் அணிய மாட்;டார்கள். யாழின் வளைவுகொண்டு ஒருபகுதியால் உனனை பாணனும் கொய்ய மாடடான். அதனால் பாணினியும் அணியமாட்டாள்! இந்த நிலையில் ஒல்லையூர் நாட்டில் நீ பூத்தனையோ? எனபதுதான் உள்ளடக்கம். உள்ளத்து எண்ணங்களைப் படர்க்கையில் சொன்னவர், முல்லையை நோக்கிய வினாவையும் ‘முல்லையும் பூத்ததே! எனப் படர்க்கையில் சொல்லியிருக்கலாம். அவர் அதனை விரும்பாமல் ‘முல்லையும் பூத்தியோ?’ என முன்னிலையில் விளித்துச் சொன்னது காண்க. முன்னிலைப் பரவலாகிய இந்த நெறி காலங்காலமாகத் தமிழ் இலக்கியப் படைப்புலகில் அதாவது கவிதையுலகில் படிந்துவருகிறது..
மெல்லிசைப் பாடல்களில் முன்னிலை உத்தி!
“நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்பதும் ஒரு முன்னிலைப் பரவல். ‘நீயல்லால் தெய்வமில்லை’ என்பதும் ஒரு முன்னிலைப் பரவல். ‘கற்பனை எனறாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்பதும் ஒரு முன்னிலைப் பரவலே! இன்னொரு வகையான முன்னிலைப் பரவல் இப்படி அமைந்திருப்பதை அனைவரும் அறிந்திருக்கலாம். ‘ காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ! வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித்திருமகன் நீ’ “அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னைவடிவம் நீ ….காமதேனு கற்பகம் நீயே! கோதையர் வணங்கும் குலமகள் நீயே!” ‘காலையும் நீயே மாலையும் நீயே! காற்றும் நீயே! கடலும் நீயே! ஆலய மணிவாய் ஓசையும் நீயே! அருள் வடிவாகும் தெய்வமும் நீயே! “அமிழ்தாய் ஆழ்ந்த விதானம் நீ! அழகே நாயகி! விஷ்ணுவின் மோகினி அண்ட சராசர நிழல் நீ! வைகுண்ட நிவாஸினி என் தமிழ் நீ! என்பன போன்ற மெல்லிசைப் பாடல்களிலும் ‘நீ’ உததியால் பாடல்கள் சிறந்தன என்பது வரலாறு.
புறத்திணையுள் பாடாண் திணை
தொல்காப்பியப் புறத்திணை பெரும்பாலும் மனித மதிப்புக்களையே தனது கருத்திற் கொண்டு அமைந்திருக்கிறது. போர்பற்றிப் பாட வேண்டிய புறத்திணை, புகழுக்கான காரணங்களைப் பாடுவதையும் அதன் பகுதிகளுள் ஒன்றாக்கியிருக்கிறது. அத்தகைய புறவொழுக்கத்தைத்தான் ‘பாடாண் பகுதி’ எனக் குறித்தனர்;. இப்பாடாண்திணைப் பாடல்கள் முன்னிலையிலும் படர்க்கையிலும் அமையும். இதற்கான சான்றுகள் சங்க இலக்கியத்துள் பல உண்டு. எடுத்துக்காட்டாக,
“கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின்
அசைவில் நோன்தாள் நசைவளன் ஏத்தி
நாள்தொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து,
கூடுவிளங்குவியன்நகா;, பரிசில் முற்றளிப்ப
பீடில் மன்னா; புகழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே”
‘கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி!’ என வன்பரணா;, கண்டீரக் கோப்பெரு நள்ளியை முன்னிலைப்படுத்திப் பாடியிருக்கிறார் இதனைப் போன்றே கோவூர்க் கிழார் ,
“குணதிசை நின்று குடமுதல் செலினும்
குடதிசை நின்று குணமுதல் செலினும்
வடதிசை நின்று தென்வயின் செலினும்
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டும் நிற்க, வள்ளி., யாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே”
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை,‘யாம்; வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே’ எனப் படர்க்கையில் வைத்துப் பாடியிருக்கிறார்.
“விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும்,
நிலனும், நீடிய இமயமும் நீ!.
என்னும்; பரிபாடலில் திருமாலின் இலக்கணங்களாகிய அறமும் அளியும் மறனும் அணங்கும் திங்களு; ஞாயிறும் அரனும அயனும் அவர் செய்தொழிலும் விசும்பு முதலிய பூதமுமாகிய எல்லாப் பொருளும அவனே என்னும் கருத்தினை முன்னிலையாக்கிக் கூறுதல் காண்க.
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; (பரிபாடல்)
என்னும் கடுவன் இளவெயினனார் பாடலிலும் இயற்கையாற்றல்கள் அத்தனையும் ‘நீ’ என்னும் ஒரு சொல்லால் குறித்திருப்பது காணலாம்.
வாலி தொடங்கி பாரதி வரை
வசந்தராசன் கவிதைகளில் உத்தியால் சிறக்கும் உள்ளடக்கம் பற்றி ஆராயும் இந்தக் கட்டுரையில் அது தொடர்பான முன்னுரை சற்று நீண்டிருப்பது போல் தோன்றக்கூடும். காரணம் நீட்சி என்பது மரபின் தொடர்ச்சி. இந்த வீடு இன்றைக்கு என் வீடு, நேற்றைக்குத் தந்தை வீடு, அதற்கு முன் பாட்டன் வீடு, அவருக்கு முன் பூட்டன் வீடு என்று சொன்னால்தானே தற்கால வீட்டின் வழிவழி வந்த பழம்பெருமை புலப்படும்? வசந்தராசன் சிந்தனையில் வந்த மரபு அவரையும் அறியாது வந்து விழுந்த மரபு என்பதுதான் கட்டுரையின் சாரம். அந்த மரபே உத்தியாகி உள்ளடக்கத்தை மேலும் சிறக்க வைக்கிறது என்பதுதான் கட்டுரை சொல்ல வந்த சேதி!.
“ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவிபோம் வேளைவாய் அறிவு தந்து அருளினாய்!
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ” (கம்ப 4063)
என்று வாலி இராமனைப் போற்றுவதற்கும்
“அப்பன் நீ, அம்மை நீ, ஐய னும் நீ,
அன்பு உடைய மாமனும் மாமி யும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,
இறைவன் நீ ஏறுஊர்ந்த செல்வன் நீயே.
என்று அப்பர் தாணடகம் பாடுதற்கும்
“மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.
என்று சிவவாக்கியர் தம் தத்துவத்தைப் பதிவு செய்வதற்கும்
அறிவு நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்பு நீ நெஞ்சத்து அன்பு நீ
ஆலயந் தோறும் அணி பெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே!
என்று மகாகவி தன் சக்தியை வழிபடுதற்கும் இந்த ‘நீ’ என்னும் முன்னிலை உத்திதான் பயன்பட்டிருக்கிறது. அதனால் உள்ளடக்கம் சிறந்திருக்கிறது. ‘இதனால்தான் உள்ளடக்கம் சிறந்திருக்கிறது’ என்பதன்று. இந்த உத்தியினால் உள்ளடக்கச் சிறப்பு கூடியிருக்கிறது என்பதாம். இந்தப் பின்புலத்தில்தான் தம்பி வசந்தராசன் கலைஞரைப் பற்றிய கவிதை ஆராயப்படுகிறது, பாடாணில் தொடங்கிக் கையறுநிலையில் முடிந்திருக்கும் இந்தக் கவிதையை நான் படிக்கவில்லை. ஊரோடு வந்த உறவுபோல் விருத்தங்களின் சீரோடு பழகினேன்! சிலிர்த்துப் போனேன்!
வாராக்கடனை வசூலித்தவன் நீ!
பல்வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களில் ஒன்று ‘காய் காய் மா மா’ என்னும் அரையடி அமைப்பு. கொண்டது. கவிஞர் பலரும் இறுதி இரண்டு சீர்களை ‘மா மா’ எனக் கொள்வதால் தனித்தனி மாச்சீர்களுக்காக திக்குத் தெரியாமல் அலைந்து திரிகிறார்கள். அவர்கள் தேமாந்தண்பூவும் புளிமாந்தண்பூவும் கூவிளம் தண்பூவும் மா மா என்னும் இரண்டு இருசீர்களுக்குரியன என்பதை மறந்து விடுகிறார்கள். மேலும் மூவசைச்சீர்களை இரண்டு ஈரசைச்சீர்களாக ஆக்கலாம் என்னும் வித்தையும் தெரிவதில்லை. காரணம் முனைப்பு! சொற்கள் சீராகும். சீர்கள் வாய்பாட்டுக்குள் அடங்கும். அடங்க வேண்டும். இது மாறி, வாய்பாட்டைச் சீர்களுக்குள் அடக்கம் செய்து சீர்களைச் சொற்களுக்குள் தேடும் முயற்சிதான் இன்றைக்கு எண்சீர் விருத்தம் சவலை தட்டிப் போனதற்குக் காரணம். கவிஞன் எதனை எண்ணுகிறானோ அதனை அப்படியே கவித்துவம் பிசகாமல் கொட்டிவிட வேண்டும். பிறகு களையெடுக்க வேண்டும். களையே இல்லாமல் பயிர் செய்ய நினைத்தால் கவிதைப்பயிர் எப்படி வரும்? வளரும்? வசந்தராசன் கவிதைகளில் யாப்பமைதி என்பது தனித்த ஆய்வுக்குரியது. கலைஞரைப் பற்றி இந்த எண்சீர் விருத்தங்களில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய இடங்களைத் தவிர பிற அரையடிக்கான மூன்று மற்றும் நான்காம் சீர்களில் முழுமையான சொற்கள் இல்லை என்பதை நோக்குதல் வேண்டும். இது இயல்பாக அமைவது. இட்டுக்கட்டுவது அன்று. உணர்ச்சியும் உணர்வும் மொழிக்கட்டமைப்புக்குள் வரும்போது யாப்பு தானாக அமைந்துவிடும் என்பதற்கு வசந்தனின் கவிதைகள் போதுமான சான்றாகும்.
பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத் தாய்நீ !
பாவலரைக் கூர்தீட்டும் உலைக்க ளம்நீ !
வேர்த்திருந்தால் சிறகுகளால் விசிறு வாய்நீ !
வேர்க்கருணை நீர்சுரக்கும் ஊற்றுக் கண்நீ !
கார்திகைக்கும் வானம்நீ ! கதிர வன்நீ !
கண்மலரில் கருணைத்தேன் தேக்கி வைத்துச்
சேர்த்தூட்டும் காவலன்நீ ! சேயும் நீதான் !
செத்துதினம் பிழைப்போர்க்கோ கடவு ளும்நீ !
திராவிடத்தின் தேர்க்கால்நீ ! தன்மா னம்நீ !
திராவிடத்துப் பண்பாட்டை மீட்டெ டுத்த
வராக்கடனை வசூலித்த வங்கி யும்நீ !
வரலாற்றைத் திருத்தவந்த வாலி பம்நீ !
இராசராச சோழன்நீ ! ராப்ப கல்நீ !
இரகசியமே இல்லாத வள்ளு வம்நீ !
திராணிகளின் திகைப்பும்நீ ! திருத்த மும்நீ |
தெம்புதரும் நெஞ்சுக்கு நீதி யும்நீ !
தமிழகத்தின் வரைபடம்நீ ! தமிழர்க் கெல்லாம்
தாதுபுஷ்டி லேகியம்நீ ! உண்மை சொன்னால்
உமர்கய்யாம் போதைநீ ! கரக ரத்த
உடன்பிறப்பால் உயிர்சுண்ட திசைகள் எட்டைக்
கவர்ந்திழுத்த காந்தம்நீ ! உன்போல் யாரோ
கைவிரலில் போதிமரக் காட்டைச் செய்தார் ?
உவந்திருக்கத் தன்மானக் கோட்டை தந்தார்?
உயிர்த்திருக்கும் தன்மான உருவம் நீ !ஆம் !
ஒவ்வொரு அசையாக நோக்கிச் சுவைக்க வேண்டிய நிலையில் வசந்தனின் பாட்டு அமைந்திருக்கிறது. எனனை அவர் அறியார். அவரை நான் அறியேன். முகநூற் வயல் வரப்பில் நின்று ஒரு கவிதை கிட்டுமா என நாற்றிசையிலும் என் பார்வை அலைந்தபோது நான் ஒரு கவிதைக் காடடுக்குள் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் காட்டுக்குச் சொந்தமானவர் வசந்தன் என்பது எனக்கு தாமதமாக வந்த செய்தி!.
‘பார்ப்பு’ என்னும் தொடக்கமே இவர் ஒரு மரபுக காவலர் என்பதைக் காட்டிவிடுகிறது. ‘பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத் தாய்நீ !என்னும் தொடரில் பறவைகளின் குஞ்சுகளுக்குப் பார்ப்பு என்பது பெயர் என்னும் மரபியல் நூற்பாவை நினைவுபடுத்திவிடுகிறார். யாப்பினை முறையாகக் கற்கும் வாய்ப்பின்றித் தன்னுடைய இறுதிக்காலம் வரை தான் முறையாகத் தமிழ் கற்கவில்லையே என்னும் ஏக்கத்தோடு மறைந்தவர் கலைஞர். ஆனால் தமிழகத்துக் கவிதைச் சிற்பிகள் எல்லாம் அவருடைய கவிதைவரிகளைக் கண்டு தம்மைச் செப்பம் செய்து கொண்டார்கள், செதுக்கிக் கொணடார்கள் என்பது மேடைக்கவிதை வரலாறு எழுதிவைத்துள்ள பின்குறிப்பு. ‘பாவலரைக் கூர்தீட்டும் உலைக்களம் நீ! என்னும் வரிகளின் உண்மைப் பொருளை உணர்ந்து சுவைக்க வேண்டுமானால் அக்காலத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கவியரங்குகளை இணையத்தில் காணவேண்டும்!. கார் மழையாகுமே தவிர வானம் மழையாகாது. ‘வான்சிறப்பு’ என்றால் வானத்தின் சிறப்பன்று மழையின் சிறப்பு. ‘கார்’ என்பது கலைஞரால் கூர் தீட்டப் பெற்ற கவிஞர் கூட்டத்திற்கான உருவகம் என்றால் கலைஞர் வானமாகிறார். வானம் கறுக்காது. பெய்யாது. ஆனால் கலைஞராகிய வானம் கொட்டுகிறது கவிதை மழையை! பெய்தும் வெளுக்காத கார், நீல வானத்தைக் கண்டு திகைக்கிறது என்கிறார். ‘கார் திகைக்கும் வானம்’ கலைஞராம்! தண்ணீருக்கே தாகம்! காற்றுக்கே வேர்வை! என்று கூன்விழுந்த புதுக்கவிதைக் கூறுகளைக் கண்டே களைத்துப் போன எனக்குக் ‘கார் திகைக்கும் வானம் கலைஞர்’ என்னும் தொடர் மருந்தால் கலைக்க முடியாத மயக்கததைத் தந்திருக்கிறது. இனி கார்த்திகைக்கும் வானம்’ என்று கார்த்திகையைத் மழைத்திங்களாகக் கொண்டால் ‘கவிஞர் அனைவர்க்கும் கலைஞர் பேராசிரியர்’ என்பது விளங்கிக் கொள்ளலாம். ஏனைய திங்கள்களுக்கு மட்டுமன்று கார்த்திகைக்கும் கலைஞர்தான் வானம் என்பது நயம். பிரிமொழிச் சிலேடையை இப்படித்தான் கையாள வேண்டும்!
வாராக்கடனை வசூலிக்க முடியாமல் அரசு திணறுகிறது என்பது தினச்செய்தி. பணத்தை வசூலிக்கத் திணறும் ஒரு கட்டமைப்பில் இனத்தை அதன் பணபாட்டை மீட்டெடுக்கும் பணியைக் கலைஞர் செய்திருக்கிறார். திராவிட இன மீட்பு என்பது கொள்ளையக்கப்பட்ட கட்டித் தங்கத்தை ஏழை தனியொருவனாக நின்று மீட்பது போன்றது.. பெரியார், அண்ணா என்னும் பெரியோர்கள் வழி நின்று திராவிடப் பண்பாடு என்னும் வாராக் கடனை மீட்டெடுத்த இனப்போராளி கலைஞர். இநத உருவகப் பாடடில் இனனொரு சேதியையும் இலாவகமாகச் சொல்லுகிறார் வசந்தன். அது திருக்குறள் பற்றியது. திருக்குறளில் எல்லாருக்கும் எல்லாம் தெரியும். புரியும். ஆனால் துறவறவியல் புரியாது. அதனால் அது மந்தணத்தை (இரகசியம்) உள்ளடக்கியது. ஆனால் கலைஞரின் கவிதையும் எழுத்தும் பேச்சும் திறந்த புத்தகம். உப்பைப் போல் எல்லாருக்கும் உரியது, எவருக்கும் புரிவது!. ‘ரகசியமே இல்லாத வள்ளுவம் நீ!’ என்று இவர் பாடுவது குறளோவியத்தை உள்ளடக்கியும் என்பது அந்நூலைப் படித்தார்ககுப் புலனாம்.!
தமிழகத்தின் பூகோளத்தைத் தம்முடைய ‘கால்களால்’ வரைந்தவர்கள் இருவர். ஒருவர் பெருந்தலைவர் காமராசர். மற்றொருவர் கலைஞர். ‘பூகோளம்’ என்பது ஆயிரத்துத் தொள்ளாயிர்த்து அறுபத்து ஏழுக்கு முன்பாகத் தமிழகப் பள்ளிகளில் புவியியல் பாடத்திற்கு வைக்கப்படடிருந்த பெயர். உண்மையில் அதற்குப் ‘பூமியாகிய கோளம்’ என்பதுதான் பொருள். ஆனால் புவியியல் என்பது ஆகுபெயராக அப்பாடத்தை உணர்த்தியதாம். பூகோளத்தில் ஆகுபெயரை அறிந்தவர்கள் நாம். காமராசரும் கலைஞரும் தமிழகத்துச் சாலைகளை வரைபடம் பார்த்து அறிந்தவர்கள் அல்லர். தலைச்சாலையிலிருந்து பிரியும் கிளைச்சாலை எந்த ஊருக்குப் போகும் என்பதை அவர்கள சென்னையிலிருந்தே சொல்லிவிடுவார்கள். மதகுகளின் எண்ணிக்கை அவர்களுக்குத் தெரியாது. ஆனால் தடுப்பணை எந்தெந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அதிகாரிகளுக்கு வகுப்பெடுப்பார்கள். எந்த மாவட்டத்தில் எத்தனை ஏக்கரில் என்ன பயிர் விளையும் என்பது வேளாண் கல்லூரிக்குப் போகாத அந்தப் பெருமக்கள் விளக்கமளிப்பார்கள். இந்த இரு தலைவர்களும் செல்லாத ஊரில்லை. ஊர்களை மட்டுமன்று அந்த ஊர்களில் உள்ள தம் நண்பர்களை எப்போது சென்றாலும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அளப்பரிய நினைவாற்றல் கொண்டவர்கள். ‘தமிழகத்தின் வரைபடமே! என்னும் தொடர் கலைஞரின் பொதுவாழ்வுப் பயணத்தைச் சித்திரிக்கும் ஆத்திசூடி! அருமை! கவிதை சுருக்கமானது! இது சுருக்கத்திலும் சுருக்கம்!
உணர்வுகளுக்குப் பெருந்தமனி நீ!
யாப்பமைக் கவிதைகளை எழுதுவார்க்கு முதல் எதுகையிலேயே தெரிந்து விடும் ‘இந்தப் பாட்டு என்ன கதிக்கு ஆளாகும்?’ என்று! கருத்துக்களும் சீர்களும் ஓரளவு புலப்பட்ட நிலையில் கைக்குக் கிட்டிவிடும் எதுகையால் கவிஞன் மகிழ்கிறானோ இல்லையோ கவிதைக்கு அன்றைக்குத் தீபாவளி! எண்சீர் விருத்தங்களில் எதுகையால் வெற்றி பெற்ற ஒரே கவிஞர் பாவேந்தரே!. ‘விருத்தத்தில் வெற்றிபெற்றார் பாவேந்தர்’ என்று சுரதா பாடியதற்குக் காரணம் பாவேந்தரின் எண்சீர் விருத்தங்களே. இந்த விருத்த வித்தையின் அனைத்து வேடிக்கைகளையும் செய்து காட்டியிருக்கிறார் வசந்தன். புதிதாக விருத்தம் எழுதுகிற அலலது எழுத விரும்புகிற அன்பர்கள் குறைந்த அளவு ஒரு நூறு விருத்தங்களையாவது மனப்பாடம் செய்திருக்க வேண்டும். கவிதை ஓட்டம் அப்போதுதான கைகூடும். சீர்கள் இறவாணத்தில் இல்லை என்பதையும் கவிஞர் பிறரின் படைப்புக்களில் இருக்கின்றன என்பதையும் படைப்பாளர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ‘விழிப்புரை’ என்னும் சொல்லை இரண்டாவது சீரில் வைத்த வசந்தன் அதற்கான எதுகையை அடுத்த சீரில் ‘பொழிப்புரை’ என்று எழுதுவதும், பரப்புரை, இடித்துரை, படித்துறை என இயைபு நோக்கி எதுகை அமைப்பதும் கவிதை வலலாளர்களுக்கன்றிப் பிறரக்குக் கிட்டாத வரமாம். அதனால் இவர் வரம்பெற்ற வசந்தன்!
“பெரியாரின் விழிப்புரைநீ !அண்ணா எங்கள்
பேரறிஞர் பொழிப்புரைநீ ! திரைப்ப டத்தின்
சரியான பரப்புரைநீ !சனாத னத்துச்
சழக்கர்களின் இடித்துரைநீ ! சமூகத் திற்காய்
விரிந்தமடி படித்துறைநீ ! வீணர் கட்கும்
விளையாட்டுக் கடிந்துரைநீ ! வெற்றி யே நீ !
புரிந்தவர்க்கோ புன்னகைநீ !புரியா தார்க்கோ
புதிர்தான்நீ ! ஆனாலும் புதையல் நீதான் !
அகரத்தைச் சிகரமாக்கும் அற்பு தம்நீ!
அருந்தொண்டர் தோள்சுமக்கும் பெருந்தொண் டன்நீ !
தகரத்தைத் தங்கமாக்கும் ரசவா தம்நீ !
தமிழ்நிலத்தின் உயிர்முகம்நீ ! நிகழ்கா லத்தின்
நிகரற்ற இலக்கியம்நீ ! நிலைத்து வாழும்
நெஞ்சுக்கு நீதியும் நீ !என்போன் றோர்க்கு
உகந்துவரும் உயிரெழுத்தே நீதான் !எங்கள்
உணர்வுகளின் பெருந்தமனி நீயே தானே !
பெரியார் தட்டி எழுப்பிய பிறகுதான் தமிழினம் தான் தூங்கிவிட்டதை அறிந்தது. கற்றவர்களுக்கு மடல் எழுதினார் அண்ணா! பெரியாரின் மூலத்திற்குப் பதவுரையை அண்ணா எழுத அந்தப் பதவுரைக்குப் பொழிப்புரை எழுதி உடன்பிறப்புக்களைச் சிந்திக்க வைத்தவர் கலைஞர். கலைஞரின் எதிரிகள் யாராக இருந்தாலும் கோபாலபுரம் வீட்டில் ஒரு முறை அவரை நேரில் சந்தித்துவிட்டு வெளியே வருகிறபோது இதயத்தைச் ‘சுகமாகத் தொலைத்து’விட்டுத் திரும்புவார்கள் என்பது அந்த வீட்டில் இன்னும் வைக்கப்படாத கல்வெட்டுச் செய்தி!. கலைஞரின் மனத்தை அறிவது அவ்வளவு எளிதன்று. அவர் அணிந்திருந்த கண்ணாடி கறுப்பாயினும் பிறரை எளிதில் படம்பிடித்துவிடும் ஆற்றல் வாய்ந்தது. அதனால்தான வசந்தன் அவரைப் புதிராகவும் பார்க்கிறார். புதையலாகவும் கண்டெடுக்கிறார்.
‘அருந்தொண்டன் தோள் சுமக்கும்’ என்னும் இரட்டுற மொழிதல் மிகச் சிறப்பான வரிகள். தொண்டன் அவரைச் சுமக்கின்றான். தொண்டனை அவர் சுமக்கின்றார். முன்னதற்கு விளக்கம் தேவையில்லை. பின்னது பலராலும் அறியப்படாத செய்தி. கலைஞருக்குப பெருஞ்செல்வமே அவரது நினைவாற்றல்தான். முன்பே சொன்னதுபோல் எந்தச் சிற்றூருக்குச் சென்றாலும் அங்கேயிருக்கும் கடைசித் தொண்டனையும் அடையாளம் கண்டு பெயர் சொல்லி அழைக்கும் அசுர நினைவாற்றல் உடையவர் கலைஞர். ஒரு தலைவனைச் சுமக்கின்றவன தொண்டனாகிறான். தொண்டர்கள் அனைவரையும் சுமக்கின்றவன் பெருந்தொண்டனாகிறான். ‘பெருமை’ என்பதற்கு என்னால் இப்படித்தான் பொருள்படுத்திக் கொள்ள முடிகிறது.
எழுப்பியவனும் நீ! இழுத்து வந்தவனும் நீ!
பாடப்படுபவன் பெருமை சொல்வதோடு அமைந்துவிடக் கூடாது ஒரு பாடாண்திணைப் பாட்டு! அழுது புலம்புவதோடு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுவிடக் கூடாது ஒரு கையறுநிலைப் பாட்டு. பரணர் பாட்டுப் போல் வரலாறு சொல்ல வேண்டும். வாழ்க்கை நெறி சொல்ல வேண்டும். அரசியல் சொல்ல வேண்டும். அக்காலச் சமுதாயம் சொல்ல வேண்டும். அனைத்தும் சொல்ல வேண்டும். வசந்தன் பாடல் அத்தனையும் மொத்தமாகச் சொல்கிற அற்புதக் களஞ்சியம். கலைஞரின் தொண்டைக்குரலைப் பாடியவர் பலர். அவர் அரசியல் தொண்டினைச் சுவைகுன்றாப் பாடலில் பதிவு செய்திருப்பவர் ஒரு சிலரே. அச்சிலருள் வசந்தனும் ஒருவர்.
“குடிசைகளின் கோபுரம்நீ ! பாதை யோரக்
கும்பிகளின் கூழும்நீ ! தனியு டைமைக்(குக்)
கடிவாளக் கயிறும்நீ !பொதுவு டைமைக்
கனவுகளின் மெய்ப்பொருள்நீ !சமூக நீதி
வடிவமைப்பின் விடியல்நீ ! வரலாற் றுக்கோ
வள்ளுவரின் கோட்டம்நீ ! கண்துஞ் சாது
விடியலுக்காய்க் கதிரவனை எழுப்பி வைத்த
வீரியம்நீ ! வீரன்நீ !வெற்றி யும்நீ !”
குடிசைகளைப் பாடியவர்கள் இருந்தார்கள். ஆனால் குடிசைகளை வீடாக மாற்றும் சிந்தனையை ‘அரசியல் கவிஞர்’ கலைஞர்தான் முன்னெடுத்தார். குடிசைமாற்று வாரியத்தை அமைத்து நாடடுக்கே வழிகாட்டியானார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து நாளில் போக்குவரத்துக் கழகங்களை நாடடுடைமையாக்கினார் கலைஞர். பொதுவுடைமைக் கனவுகளின் மெய்ப்பொருள் ஆனார்!, இன்றைக்கு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் அன்றைக்கு அனைத்துச் சாதியினரையும் ஒரே குடியிருப்பில் வைக்க பெரியார் சமத்துவபுரம் கண்ட பெரியார் கலைஞர். அந்த வரலாற்றைப் பாடிய நம் காலத்துப் பரணர் வசந்தன்!
“நெருக்கடிக்கே நெருக்கடியைத் தந்த வன்நீ !
நிமிர்ந்திருக்கத் தன்மானம் நெய்த வன்நீ !
துருப்பிடிக்காத் தொண்டுள்ளத் தூய வன்நீ !
தொலையாத எழுத்துக்குச் சொந்த மும்நீ !
கருக்கரிவாள் கூர்ச்சொல்லின் கருப்பை நீ!வான்
கார்மேகக் கருணைநீ ! கடலும் நீதான் !
விருப்புற்று வந்தோர்க்கு நிதியும் நீதான் !
விழுதுகளைத் தாங்குகின்ற வேரும் நீதான் !
ஒருவருக்குப் பல வாரிசுகள் இருக்கலாம். ஆனால் கலைஞர் பலருக்கும் வாரிசாகத் திகழ்கிறார் என்பதுதான் கவிதை சொல்ல வரும் சேதி! கவிதை சொல்லப்படும் பொருளில் இல்லை. சொல்லப்படும் முறையில் இருக்கிறது. நெருக்கடிநிலை அமலில் இருந்த காலததில் அனைத்துவகையான ஊடகங்களும் தணிக்கைக்கு ஆளானபோது தணிக்கைக் குழுவின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவிய மந்திரக்காரன் கருணாநிதி! ‘வெங்காயம் உடல்நலததிற்கு நல்லது’ என்பது அன்றைய முரசொலி தலைப்புச் செய்தி!. தலைப்பை மட்டும் தணிக்கைக் குழு பாரத்தது. உள்ளடக்கத்தைக் கழகத் தொண்டன் புரிந்து கொணடான். நெருக்கடிக்கு நெருக்கடியைக் கலைஞர் தந்தது இப்படித்தான்!
“இழிவகற்றி இருள்தின்ன பேனா வுக்குள்
ஈரோட்டு மைபோட்ட செங்க திர்நீ !
பழித்தவனைத் தாய்தடுத்தும் விடேன் என்ற
பாவேந்தர் வழிநின்று வளர்ந்த வன்நீ !
விழித்திருந்து விழித்திருந்து விடிய லையே
இழுத்துவந்த அண்ணாவின் இதயம் நீ !உன்
கழுத்துவரை அழுத்தங்கள் இருந்த போதும்
கலங்காது தரைநடந்த கதிர வன்நீ !
‘இழிவகற்றி இருள் தின்ன’ என்பதை ‘இருள் இழிவு அகற்றி’ என மாற்றியுரைக்க. சமுதாயத்தின் பன்முக இழிவு இருளாக உருவகம் செய்யப்பட்டது. இழிவாகிய இருளை அகற்ற ஈரோட்டு மைபோடப்பட்டது என்பதாம். ஈரோட்டு மை போடப்பட்டது கலைஞரின் பேனாவில் என்பதால், எழுதியே அகற்றியவர் என்பது பெறப்பட்டது. ‘கூவி வைப்போம விடியும் போது விடியட்டும்’ என்று திண்ணைக் கதை பேசியவர் அல்லர் கலைஞர். ‘தீ அணையாதா? தென்றல் வீசாதா? என்று விடியலுக்குக் காத்திருந்தவர் அவர். தமிழ்ச்சமுதாயத்தின் ஒவ்வொரு சிக்கலின் ஆழத்தையும் நன்கு புரிந்து கொண்டவர் அது தீர்கிறவரை மெய்வருத்தம் பாரார், கண்துஞ்சார். அதனால்தான் ‘விழித்திருந்து விழித்திருந்து விடியலையே இழுத்துவந்த அண்ணாவின் இதயம் நீ!’ என்கிறார் வசந்தன். ‘விடியலுக்காய்க் கதிரவனை எழுப்பி வைத்த வீரன்’ என்று முதற்பாட்டில் சொன்னவர், அவரை அங்கேயே அப்படியே விட்டுவிடாமல் கதிரவனோடு விடியலையும் கையோடு கொண்டுவந்தவர் என்று கவிதை பாடுகிறார். ‘தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்த வனததிற்குள் நடந்து போனதாக’ வைரமுத்து எழுதுவார். விடியலின் கையை வலியப் பிடித்து இழுத்து வந்ததாக வசந்தன் கற்பனை செய்கிறார். வைரமுத்தின் கற்பனை அழகியல். வசந்தனின் கற்பனை நடப்பியல்!
சுருக்குப்பை நிறைக்கவந்த உழவர் சந்தை நீ
ஏசி அறையில் அமர்ந்து, கவிதை மாதிரி எழுதிக்கொண்டு பிறரைத் தொல்லைக்கு ஆளாக்குபவர் பலர். பட்டுக்கோட்டையைப் போல, கம்பதாசனைப் போல, தோழர் ஜீவா அவர்களைப் போல கே.சி.எஸ் அருணாசலத்தைப் போல மக்களில் ஒருவனாக இருந்து கொண்டு பாடுபவர் சிலர். ‘உழவர் சந்தை’ என்பது கலைஞரின் சிந்தனையில் பூத்த ஒரு சமுதாயத் திட்டம். நீண்ட சணல் சாக்கை விரித்து வைத்துப் பகல் முழுவதும் நடக்கின்ற விற்பனையில் நொண்டிக் கிழவியின் சுருக்குப்பையில் காசு விழும் சத்தம் பைக்கே கேட்காது. ஆனால் உழவர் சந்தை வந்தபிறகு கிழவியின் சுருக்குப்பை பேரப்பிள்ளைகளுக்கு அமுதசுரபியானது. இதனைச் சிந்திக்கிறார் வசந்தன்.
“சுருக்குப்பை நிறைக்கவந்த உழவர் சந்தை !
சுடர்விளக்காய் வீட்டுக்கோர் ஒளிவி ளக்கு!
பொதுநன்மைக்கான மக்கள்நலத் திடட்மானாலும் ஒவ்வொரு தனிமனிதனும் மகிழ்ச்சிக்கு அது உதவினால்தான் முழுமையடையும். உழவர் சந்தை என்னும் பொதுநன்மை சார்ந்த திட்டம் இங்கே கிழவியின் சுருக்குப்பையை நிறைக்கிறது. “வெட்டவெளி உழவர் சந்தை வீட்டுக்கோர் விளக்கு!” அருமை! எழுபதுகளிலேயே மனிதனை மனிதன் வைத்து இழுக்கும் கொடுமைக்கு முடிவு கட்டிக் காலால் மிதிக்கின்ற ரிக்ஷாக்களை அரசுத் திட்டமாகச் செயல்படுத்தியும் மகளிர்க்கு இந்தியாவிலேயே முதன் முதலாகச் சொத்துரிமைக்குச் சட்டம் செய்தவரும் கலைஞரே!
“இருப்பவனை இல்லாதோன் கையி ரண்டால்
இழுத்துவந்த இழிநிலைக்குப் புதிய மாற்று ;
பெருமையுடன் பெண்ணுக்கும் சமமாய்ப் பங்கு ;
பெறுங்கல்வி இலவசம் முதல் தலை முறைக்கு !
அருமையுடன் திட்டங்கள் செயல்ப டுத்தி
ஆண்டவனும் நீதானே ! தமிழ்நாட் டுக்கு !
என்று பாடுகிறார் வசந்தன். பொருளிருப்பவன் அமர்ந்திருக்கிறான். இல்லாத பொருளுக்காக, இருக்கின்ற கைகளால் இழுக்கிறானாம்!. இதில் என்ன சிறப்பு? பாடாண் திணை என்பது மன்னனின் தனிச்சிறப்புக்களைப் பாடுவது. நம்முடைய கவிஞர்கள் என்ன பாடுவார்கள் என்பதைக் கலைஞரைப் பற்றிய கவிதைகளைப் படித்தவர்கள் தெரிந்து கொள்ளலாம். அவருடைய நேர்வகிடு பற்றிப் பாடுவார்கள். கரகரத்த குரலைப் பற்றிப் பாடுவார்கள். அவர் தோளில் போடும் நீண்ட துண்டு பற்றிப் பாடுவார்கள். பராசக்தி பற்றிப் பாடுவார்கள். மனோகராவை அவர்கள் மறப்பதே இல்லை. அவர் செய்த இவையெல்லாம் கவிதையில் இனிக்கும். ஆனால் அவருடைய சமுதாயப் பணிகளை எதிர்காலத்திற்கு அறிமுகப்படுத்தும் கவிதைகளில் செய்திகள் இருக்கும். கவிதை இருக்காது. இனிக்காது. செய்திகளின் தொகுப்பு கவிதையாகாது. தகவல்களின் தொகுப்பு கவிதையாகாது. செய்தியைக் கவிதையாக்க முடியுமா? முடியும்? எப்படி? இப்படி! ‘சுருக்குப்பை நிறைக்க வந்த உழவர் சந்தை’ என்பதும் ஒரு செய்திதான்!. ஆனால் ஒரு மூதாட்டியைத் தோன்றா எழுவாயாக்கிச் செய்தியைக் கவிதையாக்குகிற வித்தை வசந்தனுக்கு கைவந்திருக்கிறது!.
செயலகம் நீ!
சமுதாய அக்கறையை, செய்ய வேண்டிய சமுதாயத் தொண்டுகளை அரசு பதவிகொண்டு நிறைவேற்றிய கலைஞரின் சாதனைகளைப் பாடிய வசந்தன் தொடர்ந்து கலைஞருடைய பண்பாடு மற்றும் கலாச்சார மீட்புப் பணிகளையும் பாதுகாப்புப் பணிகளைப் பட்டியலிடுகிறார்.
“குமரியிலே வள்ளுவன்நீ ! புகழே என்றும்
குன்றாத பூம்புகார்நீ ! தந்தை தந்த
திமிர்ந்தஞானப் பகுத்தறிவுச் செருக்கி ருந்தும்
திருவாரூர்த் தேராய்நீ ! தேச மெங்கும்
நிமிர்ந்திருக்கும் பாலமாய்நீ ! நெஞ்சைக் காக்கும்
நூற்றாண்டு நூலகம்நீ ! அறிவின் ஆசான்
அமர்ந்திருக்கும் சிலைமுன்னே செயல கம்நீ !
அடடாவோ அத்தனையும் நீதான் !நீதான் !
இந்தப் பட்டியலில் தன் நெஞ்சுக்கு நெருக்கமான பெரியாரையும் அண்ணாவையும் மறக்காமல் கலைஞர் செய்திருக்கும் பணிகளை நிரல்படுத்துகிறார். சில முரண்களைச் சாதுரியமாகச் சுட்டுகிறார். குறளோவியம் எழுதிக் குமரியில் வள்ளுவனுக்குச் சிலை வைத்த கலைஞர் திருவாரூர் தேரை ஒடச் செய்தார். “ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கிக் கிடக்கையிலே தேரோட்டம் உனக்கெதற்கு தியாகராசா? என்னும் கொள்கையுடையவர் பெரியார். அவருடைய ‘திமிர்ந்த ஞானச செருக்கு’ கலைஞரின் நெஞ்சுக்குள் இருந்தும் ஊர்ப்பணி கருதி தேர்ப்பணி செய்தார். “செந்தமிழ்ச செல்வி சிலப்பதிகாரத் தலைவி, வீரத் தமிழகத்தின் விடிவிளக்கு வெற்றிக் காவியத்தின் பேசும் பெண்தெய்வம்” என்று கலைஞராலேயே புகழப்பெற்ற கண்ணகி வாழ்ந்த பூம்புகாரை மீட்டுருவாக்கம் செய்தது, அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தது ஆகிய செய்திகளை ‘நீ’ என்னும் முன்னிலையால் அடக்கிக் காட்டுகிறார். அறிவாளி அண்ணா நூலகம் அமைத்ததும் நோயாளிகளுக்காக அதனை மருத்துவமனையாக்கியதும் வரலாறு!
உரசல்கள் இல்லாத உயிரெழுதது நீ!
‘தமிழகத்தின் வரைபடமே!’ என்று பாடியவர் பரிணாமத்தால் ‘திராவிடத்தின் வரைபடமே’ என்கிறார். கால்டுவெல்லைப் படிக்காதவர்களுக்கு இந்தக் கருத்து அவ்வளவாகப் புரிய வாய்ப்பில்லை. அவசர நிலைக்காலத்தில் அவர் முரசொலியில் எழுதிய ஒவ்வொரு உடன்பிறப்புக்கான மடலும் ஒவ்வொரு முனைவர்ப் பட்ட கருதுகோளாகலாம்!.
“திராவிடத்தின் வரைபடமுன்கையெ ழுத்து!
……………………………………………………………|
மிசாவுக்கோ நீமட்டும் ஆய்தெ ழுத்து !
உரசல்க ளில்லாத உயிரெ ழுத்தே!
உண்மையில்நீ தமிழ்நிலத்தின்பொன்னெ ழுத்து !”
என்னும் வரிகளில் ‘உரசல்கள் இல்லாத உயிரெழுத்து’ என்பதுதான் கவிதை. தமிழெழுத்துக்களின் பிறப்புக்களை ஆராயும் தொல்காப்பியம் முதலில் உயிரெழுத்துக்களின் பிறப்புக்களை ஆராய்ந்து சொல்கிற முடிவு இதுதான். “உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் வாய்திறத்தல், நாவின் விளிம்பு நிலை, இதழ்குவித்தல் என்னும் முத்திறத்துக்குள அடங்கும்.” உச்சரரிப்பில் எத்தகைய இடர்ப்பாடும் இல்லாத பிறப்புக்குரியன உயிரெழுத்து என்பதை ‘தத்தம் திரிபே சிறிய என்ப’ என்னும் விதிக்குள் அடக்கிக் காட்டுவார். கலைஞரின் பொதுவாழ்க்கையும் தமிழின் உயிரெழுத்துக்களின் உச்சரிப்பைப் போல் உரசல் இலலாதது. எவரையும் பகைத்துக் கொள்ளும் அல்லது உறழ்ந்து நோக்கும் போக்கு அவரிடம் காணாதது. காண முடியாதது. தன்னைக் கட்டமைப்பதிலும் தன் திறமையை, வளர்த்துக் கொள்வதிலும் தன்னைத் தானே பக்குவப்படுததிக் கொள்வதிலுமே முழுக்கவனத்தையும் செலுத்தியவர். வசந்தனின் பாடுபொருளில் நாம் கருணாநிதியைக் காணவில்லை. கலைஞரைத்தான் காணுகிறோம் தனக்குத்தானே புடம்போட்டுக் கொண்ட தங்கம் கலைஞர் என்பதைத்தான் தமிழகத்தின் பொன்னெழுத்து என்கிறார் வசந்தன்!
வாய்மை வரைந்து கொணட ஓவியம் நீ!
உயர்வு நவிற்சி அணி என்று ஒன்று உண்டு. இதனை மிகைக் கற்பனை என்றும் சொல்வார்கள் இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் சிறந்திருக்கும் இது பொதுவாக இலக்கியங்களில் சிறப்பதில்லை.
“வைரத்தால் புள்ளிவைத்துத் தன்னைத் தானே
வாய்மையே வரைந்துகொண்ட ஓவி யம்நீ !”
வசந்தன் எழுதுகிறார் இப்படி. வாய்மை வினைமுதல்! அது ஒரு ஓவியம் வரைகிறது. புள்ளி வைக்கிறது. வஞ்சி கோலமிட கோலமாவு போதும். வாய்மையென்னும் சத்தியவதி கோலமிட்டால் கோலமாவு போதுமா? எனவே வைரத்தைக் கொண்டு புள்ளிவைக்கிறாளாம். எந்தத் திறனாய்வு அளவுகோலாலும் அளக்க முடியாத கற்பனை!. ‘தெள்ளுதமிழ் பாடம் எழுதப் பள்ளியில் சேர்க்க வரும் மாமனை’ப் பற்றிக் காமாட்சி சுந்தரம் எழுதினார் அன்று ‘வெள்ளியினால் செய்த ஏட்டில் நல்ல வைர எழுத்தாணி கொண்டு’ என்று! ஏடு வெள்ளி! எழுதியவன் கல்யாணியின் மகன்! எழுதுகோல் வைரம்! மொழி தெள்ளுதமிழ்! அனைத்தும் ஒரே அலைவரிசை! இதுதான் கவிதை! வைரத்தைத் தங்கத்திலே வைத்தால் மதிப்பா? தகரத்தில் வைத்தால் மதிப்பா?
பாடாண் திணைக்குள் ஒரு கையறு நிலை!
இந்தப் பாடலை ‘நீ’ என்னும் முன்னிலையில் தொடங்கிப் பாடிய வசந்தன் பல நுண்ணியங்களைப் பதிவு செய்திருப்பதை என்னால் உணர முடிகிறது. உணர்ந்து சுவைக்க முடிகிறது. பாட்டுடைத் தலைவனை நிகழ்காலத்தில் பாடினால் அது பாடாண் இழந்த நிலையில் இறந்த காலத்தில் பாடினால் அது கையறு நிலை!. கையறு நிலைக்குள் பாடாண் அடக்கம். ஆனால் பாடாணுக்குள் கையறு நிலை அடங்காது. முதல் பன்னிரண்டு விருத்தங்களில் பாடாண் குறிப்புடன் பாடிய வசந்தனால் இறுதி விருத்தததை அவ்வாறு பாட முடியவில்லை. ‘கலைஞர் இல்லை’ என்னும் உண்மை அவரைப் பிழிகிறது. அவரையும் அறியாமல் கொட்டுகிறார்.
“நீரின்றி நிழலின்றிக் காற்று மின்றி
நிலைகுலைந்து குடைசாய்ந்தே கிடக்க எங்கள்
வேர்சாய்ந்து வான்பார்த்தால் என்ன செய்வோம் ?
வெறுங்கையைப் பிசைந்துள்ளோம் !
பாட்டுடைத் தலைவன் மறைவையும் அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் வெற்றிடத்தையும் ஏழு எச்சங்களால் அடுக்கிக் காட்டுகிறார். “நீரின்றி நிழலின்றிக் காற்றுமின்றி நிலைகுலைந்து குடைசாய்ந்தே கிடக்க ….. வேர்சாய்ந்து” என்னும் எச்சங்கள் எல்லாம் கலைஞரைப் பற்றிய எதிர்மறை உருவகங்கள். ‘எல்லாமாக இருந்த நீ போய்விட்டதால் ஏதுமற்ற ஏழையானோம்’ என்பதை ‘வெறுங்கையைப் பிசைந்துள்ளோம்’ என்னும் மரபுத் தொடரால் புரிய வைக்கிறார்.
வாழ்கிற காலத்தில் எவரையும் உரிமையோடு பேசலாம் என்பதால் இதுவரை ‘நீ’ என்று பாடி வந்தவர், ‘கலைஞர் இனி இல்லை’ என்னும் உண்மை உறுத்த, இறுதி விருத்தத்தில்
“………………………………………………………………………நீங்கள் வந்தால்
தேர்வந்த தெருவாக மகிழ்ந்தி ருப்போம் !
தென்னிமயம் கண்டுயிர்த்து களித்தி ருப்போம் !
என்று ‘நீங்கள்’ என்று அழைப்பது காண்க. இதில் என்ன நயம் இருக்கிறது? எனச் சிலர் வினவக்கூடும். மகாகவி பாடிய ‘நந்தலாலா’வைக் கவனித்தவர்களுக்கு இந்த நுண்ணியம் புரியும். அந்தப் பாடடில் உள்ள நான்கு கண்ணிகளில் முதலிரண்டு கண்ணிகளில் ‘தோன்றுதையே!’ என்று விளித்த பாரதி, அடுத்த இரண்டு கண்ணிகளில் ‘தோன்றுதடா’ என்று விளிப்பார். இறைவன் எட்ட நிற்கிறபோது ‘ஐயே’ என்று வணங்கியும் அருகில் வந்து இனிக்கிறபோது ‘அடா’ என்ற உரிமையோடும் அழைப்பது கவித்துவ நுண்ணியம். அது வசந்தன் பாட்டில் இடம் மாறியிருக்கிறது. கலைஞர் உயிரோடு இருக்கிறபோது உரிமையுடன் ‘நீ’ என்றவர், அவர் திரும்பாத இடத்திற்குச் சென்றுவிட்டார் என்று கைபிசைந்து நிற்கிறபோது ‘நீங்கள்’ என வணங்கி மதிப்பளித்துப் பாடுகிறார் என்பதாம். இது இச்சை வெளிப்பாடு அன்று. அனிச்சை வெளிப்பாடு!
“சீர்கொண்டு வரும்சிரிப்பே ! வா! பி றந்து !
சிறுநகையில் உயிர்மீட்பாய் ! சீக்கி ரம்வா !”
உணர்ச்சியின் உச்சம் கவிதை என்பதை ‘பிறந்து வா என்பதை ‘வா பிறந்து என்னும் பிறழ்ச்சியில் உணர்க. பிறப்பு தாய்க்கு மகிழ்ச்சி. வருவது சமுதாயத்திற்குப் பயன். போய் வா! சென்று வா! வென்று வா! ஆடி வா! பாடி வா! என எச்சத்தை முன்னாக்கி ஏவலைப் பின்னாக்குவதுதான் பொதுமை. ‘இன்று போய் நின் தானையொடு நாளை வா!” என்பது கம்பன் தமிழ்! இந்தப் பொதுமையில் பழகியவர்க்கு ‘வா! பிறந்து! என்பது மாற்றுச் சுவையைத் தரககூடும்!.
நிறைவுரை
இயற்கையைப் பாடலாம்! இறைவனைப பாடலாம்! தமிழைப் பாடலாம்! தத்துவத்தைப் பாடலாம்! ஆனால் தனிமனிதச் சிறப்புக்களைப் பாடுபொருளாக்கிக் கவிதைத் தொழில் செய்வது அவ்வளவு எளிதானதன்று. காரணம் பாட்டுடைத் தலைவனின் பண்புகளும் செயல்களுமே முன்னிற்பதால் கற்பனை குறைந்த அந்தச் சூழலில், அவற்றைக் கவிதையில் கொண்டுவருவது மிகமிகக் கடினம். ‘அன்பு மக்கள் கடலின் மீதில் அறிவுத் தேக்கம் தங்கத்தேரில்! என்று தந்தை பெரியாரைப் பாவேந்தரால் பாட முடிகிறது என்றால் அவர் பாவேந்தர்! அதனால் முடிகிறது! ’சாவே! உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ?” என்ற கையறுநிலையில் நேருவைப் பாடவந்த கண்ணதாசன் சாவை நோக்கி ஏசுவது காண்க! “நான் வருகிறபோது மீண்டும் உன் (அண்ணாவின்) இதயத்தைக் கொண்டு வந்து அவர் கால் மலரில் வைப்பேன்” என்னும் கற்பனையைக் கையறு நிலையில் கொண்டுவருவது கலைஞருக்கு எளிது! எல்லாருக்கும் எளிதன்று. பாடாண் மற்றும் கையறு நிலையில் நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பே இடம் பெறும். இத்தகைய இத்தகைய சிக்கலான துறையில் ‘நீ’ என்னும் முன்னிலையை உத்தியாக்கிக் கற்பனை கலந்து கவிதைத் தொழில் செய்து களவெற்றிக் கண்டிருக்கிறார் வசந்தராசன். மீள் பார்வை செய்யாததாலும், அவசரம் காரணமாகவும் எளிதாகத் தவிரத்திருக்க வேண்டிய யாப்புக் குறைகள் உட்பட சில குறைகள் ஆங்காங்கே தென்படுகின்றன. இந்த ஆய்வு கொழுக்கட்டைச் சுவைபற்றியதாதலின் பானையின் ஓட்டையைப் பொருட்படுத்தவில்லை! தம்பி வசந்தராசனின் உள்ளங்கை விரல்களுக்கு ஒரு குருணி வாழ்த்துக்கள்!
(தொடரும்)
வணக்கம்! வல்லமைக்கு வாழ்த்துகள்! இதழ் தொடங்குவது ஓர் இலட்சியப் பணி! அதற்கான பொருளாதாரப் பின்புலத்தைப் பெருக்கி நிலைப்படுத்துவது அரிய பணி. இவற்றிடையே நடைபெறும் மற்றொரு பணிதான் படைப்புக்களை வெளியிடுவது, இவற்றையல்லாது இன்னொரு பணியையும் பூ மலர்வதுபோலச் சத்தமிலலாமல் வல்லமை செய்து வருகிறது. அந்தப் பணிதான் புதிய துறைகளையும் அதனைக் கையாண்டு புதிய படைப்புக்களைத் தரும் புதிய படைப்பாளர்களையும் அறிமுகம் செய்கின்ற பணி. ‘சாம்பார் பொடி தயாரிப்பில் இருந்து’ சங்கத் தமிழ் வரை வல்லமை பந்தி வைக்கிற விருந்துகளின் எண்ணிக்கை ஏராளம்! ஏராளம்! அந்த வகையில் என்னையும் இணைத்துப் பெருமைப்படுத்தியிருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி! கட்டற்ற களிப்பு! அளவற்ற ஆனந்தம்! இந்த எழுபத்தாறு அகவை நிரம்பிய முதியவனின் ‘படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! என்னும் கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வெளியிட்டு என்னையும் படைப்பாளர்களையும் ஊக்கப்படுத்துவதற்கும் கட்டுரைகளுக்குத் தேவையான புகைப்படங்களைத் தேடிக் கண்டெடுத்துச் செப்பம் செய்து வெளியிடுவதற்கும் ஓர் அன்னை உள்ளம் வேண்டும். அர்ப்பணிப்பு மனப்பான்மை வேண்டும்! நிர்வாகத் திறன் மட்டும் அதற்குப் போதாது. அன்புத்தம்பி அண்ணா கண்ணன் அவர்களுக்கும் வல்லமை நிர்வாகக் குழுவினருக்கும் தமிழ்த்தாய் சார்பில் என் நெஞ்சார்நத வாழ்த்துகள்! அவர்தம் தொண்டு தொடரட்டும்! தூய உள்ளம் நிலைக்கட்டும்! நன்றி!