குறளின் கதிர்களாய்…(380)

செண்பக ஜெகதீசன்

கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு.

– திருக்குறள் – 631 (அமைச்சு)

புதுக் கவிதையில்

செயல் செய்யுங்கால்
அதற்கான கருவிகள்,
செயல்பட ஏற்ற காலம்,
செயல்படும் வழிமுறைகள்,
அருஞ்செயல் ஆகியவற்றைக்
கண்டறிந்து அதன்படி
செயலாற்ற வல்லவனே
சிறந்த அமைச்சன்…!

குறும்பாவில்

காலம் கருவி செயல்வகை
அருஞ்செயல் கண்டறிந்து செயல்பட வல்லவனே
அரசுக்கு நல்ல அமைச்சனாவான்…!

மரபுக் கவிதையில்

செயலைச் செய்ய உரிய கருவி
செயலுக் கேற்ற கால மறிந்து,
செயலின் வகையை நன்றா யுணர்ந்தே
செய்யும்  அரிய செயலின் பெருமை
நயத்தை நன்றா யாராய்ந் தறிந்தே,
நாட்டை யாளும் மன்னர்க் குதவிச்
செயல தாற்ற வல்லா னவனே
சிறந்த அமைச்சன் என்போம் நாமே…!

லிமரைக்கூ

இவையெலா மறிந்தே செய்வான்,
காலம் கருவி செயல்வகை அருஞ்செயல்
காண்பவன் நல்லமைச்சனாய் உய்வான்…!

கிராமிய பாணியில்

மந்திரி மந்திரி
தெறமயான மந்திரி,
மகாராசாவுக்கேத்த மந்திரி..

எதயும் செய்யுமுன்னே
அதுக்கேத்த கருவி,
செய்யிறதுக்கேத்த காலம்,
எப்புடிச் செய்யிறதுங்கிற மொறயோட
செயலோட அரும பெரும
எல்லாத்தயும் நல்லா
அறிஞ்சி செயல்படுறவந்தான்
செறப்பான மந்திரி..

தெரிஞ்சிக்கோ,
மந்திரி மந்திரி
தெறமயான மந்திரி,
மகாராசாவுக்கேத்த மந்திரி…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.