செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(382)

எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

– திருக்குறள் – 494 (இடனறிதல்)

புதுக் கவிதையில்

தான் வினையாற்றத்
தக்க இடத்தினை ஆய்ந்தறிந்து
அங்கே
தகுந்த பாதுகாப்புடன் செயலை
மன்னர் செய்வாராயின்,
அவரை வெல்ல
எண்ணிவரும் பகைவரும்
எண்ணமதை இழப்பரே…!

குறும்பாவில்

தகுமிட மறிந்தே யதற்குத்
தக்கவாறு பொருந்திச் செயல்படின், பகையுடன்
தாக்கவரும் வயவரும் செயலழிவர்…!

மரபுக் கவிதையில்

தம்செயல் தன்னைச் செயல்படுத்தத்
தக்க இடமதை நன்கறிந்தே
செம்மையாய்த் தேர்ந்தே யெடுத்திடுவர்
செயலின் திறனறி மன்னரெலாம்,
நம்பியே தேர்ந்த இடத்தினையே
நாடும் திறனுடை மன்னவனை
வம்பிலே வெல்ல வரும்பகைவர்
வாடித் திரும்புவர் கருத்தழிந்தே…!

லிமரைக்கூ

நன்கறிந்தே செயலுக்கேற்ற இடத்தை,
பாதுகாப்புடன் செயல்படின், பகைவரையும் எண்ணமழியச்
செய்துவிடும் மன்னரின் நடத்தை…!

கிராமிய பாணியில்

எடமறியணும் எடமறியணும்
தகுந்த எடமறியணும்,
எதிரி வந்தாலும்
தாக்க முடியாத
எடமறிஞ்சி செயல்படணும்..

தான் செயல்பட
தகுந்த எடத்த நல்லாத்
தெரிஞ்சிவச்சிக்கிட்டு
தக்க பாதுகாப்போட
ராசா செயல்பட்டா,
அவரச் செயிச்சிரலாமுண்ண
எண்ணத்தில வாற
எதிராளி கூட
எண்ணமழிஞ்சி போவானே..

அதால,
எடமறியணும் எடமறியணும்
தகுந்த எடமறியணும்,
எதிரி வந்தாலும்
தாக்க முடியாத
எடமறிஞ்சி செயல்படணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *