குறளின் கதிர்களாய்…(385)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(385)
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு.
– திருக்குறள் – 436 (குற்றங்கடிதல்)
புதுக் கவிதையில்…
தன் குற்றத்தை முதலில்
கண்டறிந்து அதைத்
தானே நீக்கியபின்,
மற்றவர் குற்றத்தைக் காணும்
ஆற்றல் மிக்க
அரசனுக்கு
எந்தக் குற்றமும்
ஏற்படாதே…!
குறும்பாவில்…
தன்குற்றம் கண்டறிந்து நீக்கியபின்
மற்றவர் குற்றம் காணும் மன்னனுக்கு
எக்குற்றமும் வர வாய்ப்பிலையே…!
மரபுக் கவிதையில்…
மண்ணை யாளும் மன்னவனும்
மற்றோர் குறையைக் காணுமுன்னே,
எண்ணிப் பார்த்தே தன்குற்றம்
ஏற்ற வகையி லதைநீக்கி
அண்டை அயலார் குற்றமெலாம்
அலசிப் பார்க்கும் அருமையான
பண்பு தன்னைக் கொண்டிருந்தால்
பழியாம் குற்றம் வாராதே…!
லிமரைக்கூ…
பிறர்குற்றம் கண்டிடும் முன்னால்
தன்குற்ற மறிந்ததனை நீக்கும் மன்னனுக்கு
எக்குற்றமும் வராதவன் பின்னால்…!
கிராமிய பாணியில்…
காணாத காணாத
குத்தம் காணாத,
தங்கிட்ட குத்தம் வச்சிக்கிட்டு
அடுத்தவங்கிட்ட
குத்தம் காணாத..
தங்கிட்ட இருக்கிற
குத்தங் கொறயளக்
கண்டறிஞ்சி மொதலுல
அதயெல்லாம் நீக்கிப்புட்டு
அடுத்தவங்கக் கொறய
ஆராயிற ராசாவ
அண்டாதே
எந்தக் குத்தமும்..
அதால
காணாத காணாத
குத்தம் காணாத,
தங்கிட்ட குத்தம் வச்சிக்கிட்டு
அடுத்தவங்கிட்ட
குத்தம் காணாத…!