குறளின் கதிர்களாய்…(387)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(387)
எனைத்தானும் நல்லவை கேட்க வனைத்தானு
மான்ற பெருமை தரும்.
– திருக்குறள் – 416 (கேள்வி)
புதுக் கவிதையில்…
கேள்வியென்னும் செல்வமது
குறைவாய் இருப்பினும்
நல்லவற்றை நாடிக்
கேட்டறிவாய் எவ்வகையிலும்..
கேட்ட அளவிலது
கேடில்லா நலமே தந்து
வாழ்வில்
குன்றாப் பெருமையெலாம்
கோண்டு சேர்க்குமே…!
குறும்பாவில்…
அளவிற் சிறிதெனிலும்
கேட்டறி நல்லவற்றை, அவ்வளவிற்கவை
நிறைந்த பெருமைதரும்…!
மரபுக் கவிதையில்…
செல்வமாம் கேட்கும் கேள்வியது
சிறிதா யிருப்பினும் கேட்டறிவாய்
நல்லவை பார்த்து நாடியதை,
நலமே தருமவை அதேயளவில்
எல்லையே யில்லா ஏற்றமுடன்
என்றும் வாழ்வினில் நலந்தருமே,
வல்லமை மிக்க பெருமையெலாம்
வந்து சேருமே உன்னிடமே…!
லிமரைக்கூ…
குறைவெனிலும் கேட்டல் அருமை,
நல்லவை நாடிக் கேட்கையில் அவ்வளவில்
நல்கும் வாழ்வில் பெருமை…!
கிராமிய பாணியில்…
வளத்துக்கோ வளத்துக்கோ
நல்லதா வளத்துக்கோ,
கேள்வி அறிவ வளத்துக்கோ
கேடுயில்லாம வாழ்ந்துக்கோ..
எப்புடியாவது தேடிப் புடிச்சி
நல்லதயே கேட்டு
நல்லறிவச் சேத்துக்கோ,
எவ்வளவு கேக்கிறியோ
அந்த அளவுக்கு
அது ஒனக்குப்
பெருமயத் தேடித்தருமே..
அதால
வளத்துக்கோ வளத்துக்கோ
நல்லதா வளத்துக்கோ,
கேள்வி அறிவ வளத்துக்கோ
கேடுயில்லாம வாழ்ந்துக்கோ…!