குறளின் கதிர்களாய்…(391)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(391)
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
– திருக்குறள் – 319 (இன்னா செய்யாமை)
புதுக் கவிதையில்…
மற்றவர்களுக்குத் துன்பம்
முற்பகலில் செய்தால்
முடிவல்ல அது,
பிற்பகலில் அவனைத் தேடி
தாமே வந்திடும்
பலவாய்த் துன்பங்களே…!
குறும்பாவில்…
அடுத்தவர்க்குத் தீமைசெய்தால் காலையில்,
அன்று மாலையே அவனைத்தேடி தாமேவரும்
அளவே யில்லாத் தீமைகளே…!
மரபுக் கவிதையில்…
அடுத்தவர் அல்லல் பட்டிடவே
அளவிலாத் துன்பம் அளித்திட்டால்,
கொடுத்தவர் தமக்கே வாழ்வினிலே
கூடவே கிடைக்கா திருப்பதில்லை,
கெடுதலைக் காலை செய்தாலே
கேடது பலவாய் அவனிடமே
அடுத்திடும் அன்றே மாலையிலே
அதிகமாய் இடரைக் கொடுத்திடவே…!
லிமரைக்கூ…
பிறர்க்குத் தீமைசெய்தால் காலையிலே,
தீங்கதுதான் செய்தவனைத் தாமே தேடிவந்தே
தாக்கிடும் அன்றே மாலையிலே…!
கிராமிய பாணியில்…
செய்யாத செய்யாத
கெடுதல் செய்யாத,
அடுத்தவருக்கு ஒருநாளும்
கெடுதல் செய்யாத..
காலையில
அடுத்தவனுக்கு நீயும்
கெடுதல் செய்தா,
அந்தக் கெடுதல் ஒன்னச்
சும்மா உடாது,
அதுவே தானாத்
தேடிவந்து ஒனக்குத்
தந்திடுமே பெருந்துன்பம்
அண்ணைக்கி மாலையிலயே..
அதால
செய்யாத செய்யாத
கெடுதல் செய்யாத,
அடுத்தவருக்கு ஒருநாளும்
கெடுதல் செய்யாத…!