தீயேறு
ஏறன் சிவா
சருகாய் மண்ணில் புரளாதே — மனச்
சத்தை இழந்து மிரளாதே!
பருந்தாய் நீயும் மாறிவிடு — வான்
பரப்பின் மீதே ஏறிவிடு!
துளியாய் இலைமேல் தூங்காதே — படும்
துயர்கள் கண்டே வீங்காதே!
உளியாய் நீயும் மாறிவிடு — இவ்
உலகம் எனக்கெனக் கூறியெடு!
இருளின் வலையில் சிக்காதே — என்னால்
இயலா தென்றே நிற்காதே! — ஒளிப்
பொருளைக் கையில் ஏந்திவிடு — அட
போடா தடைக்கல் தாண்டிவிடு!
கல்லைப் போலே கிடக்காதே — தக்கைக்
கழிபோல் வீணாய் மிதக்காதே!
எல்லை கிழித்து நீகடப்பாய் — உன்
இலக்கை வென்றும் நீநடப்பாய்!
பனியில் நடுங்கி உறையாதே! — இழிப்
பகைவர்க் கடங்கி மறையாதே!
மனதால் இன்னும் மெருகேறு — இம்
மண்ணை அடக்கும் செருக்கேறு!
எதைக்கேட் டாலும் இருமாதே — உன்னில்
இருக்கும் துணிவை மறவாதே!
பதராய் வாழ்ந்தாய் போதுமது — இடர்ப்
பாதை தகர்க்க மோதிவிடு!
எரியும் நெருப்பில் வெந்தழிந்து — நீ
இங்கே கரியாய் போவதுவோ?
புரியும் புரியும் நீமாறு — இப்
புவியை வெல்லத் தீயேறு!
காற்றைப் போலே நீபரவு — ஆழ்
கடல்போல் கொள்வாய் உள்தெளிவு!
வீற்றி ருப்பாய் உயரத்தில் — ஒரு
வெற்பின் மீதோர் வெற்பெனவே!