குறளின் கதிர்களாய்…(401)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(401)
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
-திருக்குறள் – 102 (செய்ந்நன்றியறிதல்)
புதுக் கவிதையில்…
உற்ற காலத்தில்
ஒருவன் செய்த உதவி
உருவில் சிறிதெனிலும்,
உண்மையில் அது
உலகைக் காட்டிலும்
உருவில்
பெரிதாக மதிக்கத்தக்க
பெருமையுடையதே…!
குறும்பாவில்…
உரிய காலத்தில் செய்த
உதவி சிறிதெனிலும், உலகைவிடப் பெரிதாயது
மதிக்கத்தக்கத் தகுதியுடையதே…!
மரபுக் கவிதையில்…
உதவி செய்யும் ஒருவனதை
உரிய கால மதில்செய்தால்,
அதனி னளவு சிறிதெனிலும்
அதனைச் செய்த தருணமதால்
அதனின் மதிப்பே உயர்ந்திடுமே,
அகில அளவில் பெரிதாக
உதவி யதுவும் பெற்றிடுமே
உயர்ந்த நிலையைத் தன்னாலே…!
லிமரைக்கூ…
செய்தது சின்ன உதவியே,
செய்யப்பட்ட காலத்தால் பெறுமது உலகைவிட
மதிப்பில் பெரிய பதவியே…!
கிராமிய பாணியில்…
நன்றியிருக்கணும் நன்றியிருக்கணும்
செய்த ஒதவிய மறந்திடாத
நல்லகொணமான நன்றியிருக்கணும்..
ஒருத்தன் செய்த
ஒதவி சின்னதாயிருந்தாலும்,
அதச்செய்த காலத்தக் கருதி
அதோட மதிப்பு
ஒலகத்தவிடப் பெருசா
ஒயர்ந்து போகுமே..
அதால
நன்றியிருக்கணும் நன்றியிருக்கணும்
செய்த ஒதவிய மறந்திடாத
நல்லகொணமான நன்றியிருக்கணும்…!