குறளின் கதிர்களாய்…(404)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(404)
மக்கள்மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு.
-திருக்குறள் – 65 (புதல்வரைப் பெறுதல்)
புதுக் கவிதையில்…
இனிய இல்லற வாழ்வில்
இவ்வுலகில்
இன்பம் தருவது பெற்ற பிள்ளைகளே..
தமது
மக்கட்செல்வங்களின்
உடலைத் தொடுவது
உடலுக்கு இன்பம்,
அவர்கள்
மழலைமொழி கேட்பது
மனதுடன் காதுகளுக்குப்
பேரின்பமே…!
குறும்பாவில்…
தாம்பெற்ற பிள்ளைகள் உடலைத்
தொடுவது உடலுக்கு இன்பமும் அவர்தம்
மழலைப்பேச்சு காதுக்கின்பமும் தருமே…!
மரபுக் கவிதையில்…
இன்பம் தருவ தில்வாழ்வில்
இவர்கள் பெற்ற பிள்ளைகளே,
அன்போ டவரைத் தொடுவதிலே
அதிக யின்பம் உடலுக்கே,
மென்மை யாகப் பிள்ளைகளும்
மெல்லப் பேசும் மழலைமொழி
இன்ப மதனைத் தந்திடுமே
இனிதா யிரண்டு காதுகட்கே…!
லிமரைக்கூ…
இல்லறத்தில் இன்பமதிகம் தருமே
தம்மக்கள் உடலைத் தொட்டால் உடலுக்கே,
மழலைமொழியால் காதுக்கின்பம் வருமே…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
புள்ளைகள் வேணும்
இல்லற வாழ்க்கையில
புள்ளைகள் வேணும்..
பெத்த புள்ளயளோட
ஒடம்பத் தொடுறது
நம்ம ஒடம்புக்கு இன்பம்,
அதுகளோட பேச்சக் கேக்கிறது
நம்ம காதுகளுக்கு இன்பம்..
அதால
வேணும் வேணும்
புள்ளைகள் வேணும்
இல்லற வாழ்க்கையில
புள்ளைகள் வேணும்…!