குறளின் கதிர்களாய்…(411)

செண்பக ஜெகதீசன்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை விழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
-திருக்குறள் -137 (ஒழுக்கமுடைமை)

புதுக்கவிதையில்…

ஒழுக்கத்தில் நல்லதாய்
ஒழுகுவோர் பெறுவர்
ஒப்பிலா மேன்மை
உலக வாழ்வினிலே,
ஒழுக்கம் தவறுவோர்
பெறுதற்குத் தகாத
பெரும்பழியே பெறுவர்…!

குறும்பாவில்…

ஒழுக்கமுடையோன் பெறுவான் வாழ்வில்
ஒப்பிலா மேன்மை, இல்லாதான் எய்துவான்
ஒன்றுமிலாப் பொல்லாப் பழியே…!

மரபுக் கவிதையில்…

நிலத்தில் மனித வாழ்வினிலே
நித்தம் தேவை நல்லொழுக்கம்,
நலமே பெறுவர் அதனாலே
நன்மை யோடு மேன்மைசேரும்,
பலமாம் இதனைப் பேணாதார்
பயனே இல்லா மாந்தராகிப்
பலனே இல்லா அழிவுதரும்
பழியை மட்டும் பெறுவரே…!

லிமரைக்கூ…

மேன்மைதரும் நல்லொழுக்க வழியே,
மேதினி வாழ்வில் இதைப்பேணார் பெற்றிடுவர்
மிகவும் அழிவுதரும் பழியே…!

கிராமிய பாணியில்…

வேணும் வேணும்
ஒழுக்கம் வேணும்,
வாழ்க்கயில நல்ல
ஒழுக்கம் வேணும்..

ஒழுக்கத்தோட வாழுறவுங்களுக்கு
வாழ்க்கயில நல்ல
மேன்ம கெடைக்கும்,
ஒழுக்கமில்லாதவங்களுக்கு
ஒரு பயனுமில்லாத
பழிதான் வருமே..

அதால
வேணும் வேணும்
ஒழுக்கம் வேணும்,
வாழ்க்கயில நல்ல
ஒழுக்கம் வேணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.