செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(415)

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

-திருக்குறள் – 204 (தீவினையச்சம்)

புதுக் கவிதையில்…

மறந்தும் ஒருவன்
பிறர்க்குத் தீமை செய்ய
நினைக்கக் கூடாது,
நினைத்தால்
அவனுக்குக் கேடு வருமாறு
அறக்கடவுளே எண்ணும்…!

குறும்பாவில்…

பிறர்க்குக் கேடுசெய்ய ஒருவன்
மறந்தும் நினைத்தால், அவனுக்கும் கேடுவர
அறக்கடவுள் நினைத்துவிடும்…!

மரபுக் கவிதையில்…

அடுத்தவ னொருவன் அல்லலுற
ஆங்கொரு மனிதன் மறந்தேனும்
கெடுதலை நினைத்தல் கூடாதே,
கேடதை யொருவன் நினைத்துவிட்டால்
அடுத்ததாய் வருமே அழிவதுதான்,
அறதமதன் கடவுன் தன்மனதில்
எடுத்திடும் எண்ண மவனுக்கே
ஏகமாய்த் தீமை வந்திடவே…!

லிமரைக்கூ…

நினைக்காதே மறந்தும் கூட,
அடுத்தவர்க்குக் கேடு, அறக்கடவுளே கேடுதரும்
அங்ஙனம் நினைப்பவன் வாட…!

கிராமிய பாணியில்…

பயப்படணும் பயப்படணும்
உண்மயிலே பயப்படணும்,
பெறருக்குக் கெடுதல்செய்ய
பயப்படணும் பயப்படணும்..

நெனைக்காத நெனைக்காத
மறந்துகூட நெனைக்காத,
அத்தவங்களுக்குக் கேடுசெய்ய
அணுவளவும் நெனைக்காத,
அப்புடி நெனைக்கவனுக்கு
அதிகமாக் கெடுதல்வர
அந்ந
அறக்கடவுளே நெனச்சிடுமே..

அதால
பயப்படணும் பயப்படணும்
உண்மயிலே பயப்படணும்,
பெறருக்குக் கெடுதல்செய்ய
பயப்படணும் பயப்படணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.