குறளின் கதிர்களாய்…(416)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(416)
உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ்.
-திருக்குறள் – 232 (புகழ்)
புதுக் கவிதையில்…
பாரில் பலரும்
பேசும் பேச்செல்லாம்
பாடும் பாட்டெல்லாம்
இல்லையென வந்து
இரப்பவர்க் கெல்லாம்
இல்லையெனாது
வேண்டியதை
ஈவதால் ஈட்டும் புகழேயாகும்…!
குறும்பாவில்…
பேச்சிலும் பாட்டிலும் சொல்வதெல்லாம்,
இல்லையென வந்தே இரப்போர்க்கு வேண்டியதை
ஈவதால் பெற்றிடும் புகழேயாகும்…!
மரபுக் கவிதையில்…
சொல்லும் சொல்லா லுரைப்பதுவும்
சோராப் பாட்டில் படிப்பதுவும்
எல்லாம் பிறரைப் புகழ்ந்துரைக்கும்
ஏற்ற உண்மைச் செய்திகளே,
இல்லை யென்றே வறுமையுடன்
இரப்போர்க் கெல்லாம் ஈவதிலே
வெல்லும் புகழே உலகோர்கள்
வேண்டிப் புகழும் சேதியாமே…!
லிமரைக்கூ…
பேச்சு பாட்டிலெல்லாம் சொல்வதே,
இல்லையென இரப்பவர்க்கு இல்லை யெனாது
ஈவதனால் புகழை வெல்வதே…!
கிராமிய பாணியில்…
பேர்வாங்கணும் பேர்வாங்கணும்
ஒலகோர் புகழப் பேர்வாங்கணும்..
ஒலகத்தில உள்ளவங்க
ஒசத்திப் பேசுறதும்
பாட்டுல பாடுறதும் எல்லாமே
இல்லண்ணு வந்து எரக்கிறவங்களுக்கு
இல்லண்ணு சொல்லாம
வேண்டுமட்டும் குடுக்கதுனால
வருற புகழோட சேதிதானே..
அதால
பேர்வாங்கணும் பேர்வாங்கணும்
ஒலகோர் புகழப் பேர்வாங்கணும்…!