குறளின் கதிர்களாய்…(417)

செண்பக ஜெகதீசன்
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்.
– திருக்குறள் – 303 (வெகுளாமை)
புதுக் கவிதையில்…
மண்ணில்
மனிதனுக்கு வரும்
மாறாத தீவினைகளெல்லாம்
அவனது
மாறாத கோபத்தால்தான்..
உண்மை யிதனை
உளத்தில் கொண்டே
யாரிடத்திலும்
கோபம் கொள்ளும்
கொடுஞ் செயலை
மறந்திட வேண்டும்…!
குறும்பாவில்…
யாரிடமும் சினம்கொளாது மறந்திடவேண்டும்,
மனிதனுக்கு வரும் தீவினைகளெல்லாம் அவனது
கோபத்தினால்தான் என்பதை உணர்ந்தே…!
மரபுக் கவிதையில்…
மண்ணில் மனிதன் பெறுகின்ற
மலையைப் போன்ற தீவினைகள்
எண்ணில் பலவாய் வருவதெலாம்
ஏறு மவன்தன் சினத்தாலே,
உண்மை யிதனை உணர்தேதான்
உலகி லுள்ள யெவருடனும்
கண்மண் தெரியாக் கோபத்தைக்
கைவிட் டுடனே மறப்பாயே…!
லிமரைக்கூ…
யாரிடமும் கொளாதே சினமதை,
மனிதனுக்குத் தீவினையெல்லாம் வருவது சினத்தாலே
என்பதுணர்ந்தே அடக்கிவை மனமதை…!
கிராமிய பாணியில்…
கொள்ளாத கொள்ளாத
கோவம் கொள்ளாத,
யாருகிட்டயும் எப்பவுமே
கோவம் கொள்ளாத..
ஒலகத்தில உள்ள
மனுசனுக்கு வாற
கெடுதலெல்லாம் அவனோட
கோவத்தால வாறதுதான்,
அத நல்லா ஒணர்ந்து
யாருமேலயும் கோவப்படுறத
உட்டுப்புட்டு
அத மறந்துடணும்..
அதால
கொள்ளாத கொள்ளாத
கோவம் கொள்ளாத,
யாருகிட்டயும் எப்பவுமே
கோவம் கொள்ளாத…!