-மேகலா இராமமூர்த்தி

“கல்லெடுத்துப் போர்புரியும் நீங்களா வில்லெடுத்துப் போர்புரியும் எம்மை வெல்ல முடியும்?” என்று அனுமனைப் பார்த்து ஏளனமாய்க் கேட்ட இந்திரசித்தனை நோக்கி, “வில்லெடுத்துப் போர்புரியும் வீரர் எம்முளும் உளர்; அதனால் வெற்றுரை விடுத்து, நீ யாரோடு போர்புரிய விரும்புகின்றாய்…என்னுடனா? என் தலைவனாகிய இலக்குவனுடனா? உந்தையின் தலைகளை அறுத்துத் தள்ளுவதற்காகவே வந்துள்ள இராமபிரானுடனா என விளம்புவாய்!” என்றான், பொன்மலையைத் தவிர வேறெதனொடும் ஒப்பிடவியலாத் தோள்களையுடைய, அஞ்சனை மைந்தன்.

என்னொடே பொருதியோ அது அன்று எனின்
    இலக்குவப் பெயரின் எம்பிரான்
தன்னொடே பொருதியோ உன் உந்தை தலை
    தள்ள நின்ற தனி வள்ளலாம்
மன்னொடே பொருதியோ உரைத்தது
    மறுக்கிலோம் என வழங்கினான்
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு
    பொருப் படா உயர் புயத்தினான். (கம்ப: நாகபாசப் படலம் – 8076)

“சிங்கம் போன்றவனான என் தம்பி அதிகாயனைக் கொன்ற இலக்குவன் எனும் பெயர்கொண்ட அந்த அறிவிலி எங்கிருக்கின்றான்? தன்னுயிரை நான் கொல்வதற்காகவே வைத்திருக்கும் அவனை அவனிருக்கும் இடத்திலேயே போரிட்டுக் கொன்று சினந்தணியவே வந்திருக்கின்றேன்” என்று முழங்கிய இந்திரசித்தன், “என் படைவீரர்களின் துணையின்றியே நான் மட்டுமே தனியனாய் உங்கள் அனைவரையும் இன்று பகலுக்குள்ளாகவே பொருதழித்து எமனுலகு அனுப்புவேன்; யாரை வேண்டுமானாலும் நீங்கள் துணைக்கழைத்துக்கொண்டு  என்னோடு போரிட வாருங்கள்!” என்று அறைகூவல் விடுத்தான்.

அதுகேட்ட அனுமன் இந்திரசித்தனோடு போரைத் தொடங்கினான். அனுமன் வீசிய குன்று இந்திரசித்தன் மார்பில் பட்டுப் பொடிப்பொடியாய் நொறுங்கிற்று. பதிலுக்கு இந்திரசித்தன் ஓராயிரம் கணைகளை ஒன்றுசேர்த்து அனுமன்மேல் செலுத்தவே அனுமன் தளர்ச்சியுற்றான்.

அடுத்து நீலன் அங்கதன் என ஒவ்வொருவராய் வந்து இந்திரசித்தனோடு போரிட்டுத் தளரவே, அதனையறிந்து அங்கு விரைந்துவந்த இலக்குவன், நான் இவனோடு போரிடாமல் மற்றைய வானரத் தலைவர்களைப் போரிட வைத்தது பெரும் பிழையாகிவிட்டது என்று வீடணனிடம் வருந்திக்கூறவே, அதனை ஆமோதித்த வீடணன், ”ஆம்! உன்னொருவனால்தான் இந்திரசித்தனை வீழ்த்தமுடியும்; மற்றவரால் இயலாது!” என்றான்.

தன்னை எதிர்த்துவந்த அரக்கர் படையை மறலிக்கு விருந்தாக்கிய இலக்குவன், அனுமன் தோளில் ஏறிக்கொண்டு தேரில் நின்ற இந்திரசித்தனை எதிர்த்துப் போரிட்டான். அவ்விருவரும் நிகழ்த்திய வெம்போரில் அம்புகள் திக்கை மறைத்தன. இலக்குவன் விட்ட வாளியொன்று இந்திரசித்தனின் கவசத்தை அறுத்து உள்ளே புகுந்ததால் அவன் உடலினின்று குருதி கொட்டியது.

இலக்குவனின் விரைந்த வில்லாற்றலை வியந்த இந்திரசித்தன், வேறொரு தேரிலேறிப் போரைத் தொடர்ந்தான். நெடுநேரம் போர் நீடித்தது. பகலவன் விடைபெற்றுப் போகவே, அறிவற்றோரின் மனம்போல் காரிருள் சூழ்ந்தது பாரெங்கும்.

அப்போது வீடணன், ”யானைபோல் பலம்பொருந்திய இலக்குவனே! இன்னும் கால் நாழிகை நேரத்துக்குள் கொன்றாயாகில் இந்திரசித்தன் இறப்பான்; அல்லாக்கால் அரக்கர்கள் மாயங்கள் புரிவதற்கேற்ற இராக்காலம் வந்துவிடும்; வஞ்சனை செய்வதில் வல்லவனான இந்திரசித்தன் மாயைகள் செய்ய ஆகாயம் செல்வானாகில் உனை வெல்வான்” என்றான்.

நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு
பாகமே காலம்ஆகப் படுத்தியேல் பட்டான் அன்றேல்
வேகவாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன்
ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான். (கம்ப: நாகபாசப் படலம் – 8181)

அதுகேட்ட இலக்குவன் சித்திர வேலைப்பாடமைந்த இந்திரசித்தனின் தேரை இலக்குவைத்து அம்பெய்து அழித்தான்; அவ்வேளையில் வானர சேனையை நாக பாசத்தால் பிணித்துவிட எண்ணிய இந்திரசித்தன், போர்க்களத்திலுள்ளோர் கண்மூடித் திறப்பதற்குள் தன் வில்லோடு விசும்பில் ஏறினான்.

மேக மண்டலத்திற்கு அப்பால் சென்ற இராவணனின் புதல்வனான இந்திரசித்தன், தன் தவத்தினாலும், பிரமனிடம் பெற்ற வரத்தினாலும், ஓதிய மந்திரங்களின் பலத்தினாலும் யாருக்கும் புலப்படாவண்ணம் அணுவையொத்த நுண்ணுடம்பை எடுத்துக்கொண்டு, சிறந்த ஒளியுடைய பாம்பின் பெயருடைய ஒப்பற்ற கணையைச் சிந்தித்து அதற்குரிய மந்திரம் சொல்லிக் கையிலெடுத்தான்.

களத்தில் நின்றிருந்த இந்திரசித்தன் திடீரென்று மாயமாய் மறைந்த காரணத்தை ’விளைவினை அறியும் வென்றி‘ வீடணன்கூடத் தெரிந்துகொள்ளவில்லை. தம்மோடு போர்புரிய அஞ்சி இந்திரசித்தன் களத்தைவிட்டுப் போய்விட்டான் என்றெண்ணி வானரர்களும் இலக்குவனும் சிரித்து ஆரவாரித்துவிட்டு ஓய்வுகொள்ளத் தொடங்கினர்.

அவ்வேளை பார்த்து, ”அரக்கன் இந்திரசித்தன் கொடிய நாகப் படையைச் செலுத்தினான் விண்ணிலிருந்து; அதை அவன் செலுத்திய அளவில் பத்துத் திசைகளிலும் இருள் நிலைகெட்டு ஓட, காகுத்தனுக்கு (இராமன்) இளைய காளையான இலக்குவனின் வயிரத் திண்தோள் மலைகளை அக்கணை கட்டியது என்று சொல்வார்கள்” என்கிறார் கம்பர். இதனை நேர்க்கூற்றாகச் சொல்லாமல் அயற்கூற்றாக அவர் கூறியமை, இலக்குவனை நாகப்படை கட்டியது என்று நேரடியாய்க் கூற அவருக்கு விருப்பமில்லை என்பதைக் காட்டுகின்றது.

விட்டனன் அரக்கன் வெய்ய படையினை விடுத்தலோடும்
எட்டினோடு இரண்டுதிக்கும் இருள்திரிந்து இரியஓடி
கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை
வட்டவான் வயிரத் திண்தோள் மலைகளை உளைய வாங்கி. (கம்ப: நாகபாசப் படலம் – 8190)

தன்னை இறுக்கிக் கட்டியிருப்பது நாகக் கணை என்றும், அஃது இந்திரசித்தனின் மாயச் செயலென்றும் உணராது ஒடுங்கினான் இலக்குவன். இந்திரசித்தனைப் பிடித்துவிட வேண்டுமென எழுந்த அனுமனையும் ஏனைய வானர சேனையையும் சேர்த்துக் கட்டியது அந்நாகக் கணை.

அனைவரும் மண்ணில் மயங்கிச் சாய்ந்திருக்கும் நிலைகண்ட இந்திரசித்தன் நெடுநேரம் செய்த போராலும் பட்ட புண்களாலும் நைந்த உடலோடு அரண்மனைக்குத் திரும்பினான்.

இராவணனிடம் போர்க்களத்து நிகழ்வுகளையெல்லாம் விவரித்து ”எந்தையே நீ துன்பம் நீங்குக! யான் இப்போது உடல் வருத்தத்தோடு இருக்கின்றேன்; மேற்செய்ய வேண்டியவற்றை நாளை சொல்கின்றேன்” எனக் கூறிவிட்டுத் தன் இருப்பிடம் சேர்ந்தான்.

வானர சேனையும் இலக்குவனும் கட்டுண்டு கிடப்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்த வீடணன், ”நான் அவ்விடத்தில் இராவணனுக்குப் பகையானேன்; நான் சேர்ந்தவரைக் காக்கத் தவறியதால் இவ்விடத்துள்ளோர்க்கும் இப்போது வேண்டாதவனானேன்” என்று அரற்றினான்.

அதுகண்ட வீடணனின் துணைவனான அனலன், ”வருந்தாதே!” என்று அவனைத் தேற்றிவிட்டு இராமனிடம் சென்று நிகழ்ந்தவற்றை உரைத்தான். பெருவருத்தமுற்ற இராமன் போர்க்களம் வந்துசேர்ந்தான். இருள்சூழ்ந்த அவ்விடத்துக்கு அனல் அம்பினால் வெளிச்சமூட்டினான்.

அங்கே கணையால் கட்டுண்டு கிடக்கும் இலக்குவன் உடல்மீது வீழ்ந்து கண்ணீர்பெருக்கிய இராமன், ”இலக்குவா! இலக்குவா!” எனப் பன்முறை அழைத்தான்; அவன் மூக்கின்மீது கைவைத்து மூச்சிருக்கின்றதா எனப் பார்த்து, ”ஐயா! நீ பிழைப்பாயா?” என்று கேட்டு மெய்சோர்ந்தான்.

வீரத் தம்பியை இழந்த வருத்தத்தோடு வீடணனை நோக்கிய இராமன், ”இலங்கை வேந்தன் மகனாகிய இந்திரசித்தனோடு இளைய கோவான இலக்குவனுக்குப் பெரும்போர் ஏற்பட்டது என்றுகூறி என்னை நீ விரைவாக அழைக்காமல் போனாய்; அதனால் நாகக் கணை தொடுத்த இந்திரசித்தனின் கைகளையும் தலையையும் கொய்து உயிர்குடிக்க இயலாமல் என்னைக் கெடுத்துவிட்டாய் வீடணா!” என்றான் சினத்தோடு.

எடுத்தபோர் இலங்கைவேந்தன் மைந்தனோடு இளையகோவுக்கு
அடுத்தது என்றுஎன்னை வல்லை அழித்திலை அரவின்பாசம்
தொடுத்தகை தலையினோடும் துணித்து உயிர்குடிக்க என்னைக்
கெடுத்தனை வீடணா என்றான் கேடுஇலாதான்.
(கம்ப: நாகபாசப் படலம் – 8227)

இந்நிகழ்வில் இராமன் வீடணனைக் குறைகூறுதற்குத் தக்க காரணம் ஏதுமில்லை. நாகக் கணையை இந்திரசித்தன் பயன்படுத்துவான் என்று வீடணன் எதிர்பார்த்திருக்கமாட்டான்; அத்தோடு பேராற்றல் படைத்தவனான இராமனின் இளவல் இலக்குவனை அக்கணை ஏதும் செய்யாது என்றுகூட அவன் எண்ணியிருக்கலாம். அதன்பொருட்டே அவன் இராமனைக் களத்துக்கு அழைக்கவில்லை என்று நாம் கருதினால் அதில் பிழையில்லை.

பின்பு ஏன் இராமன் வீடணனைத் தேவையில்லாமல் குறைகூற வேண்டும்?

தம்பிக்கு நேர்ந்த அவலத்தால் மனம் பேதலித்த நிலையில் அவன் பேசிய பேச்சுக்கள் இவை என்றுதான் நாம் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

களத்தில் இலக்குவனின் இணையற்ற போர்த்திறத்தை இராமனுக்கு விளக்கிய வீடணன், “இந்திரசித்தனின் மாயச் செயலால் இத்தீங்கு நிகழ்ந்துவிட்டது; ஆனால், இவர்கள் யாரும் உயிர்துறக்கவில்லை; இந்த நாகக் கணை நீங்கினால் இவர்கள் அனைவரும் எழுந்துவிடுவர்; அறத்தினைப் பாவம் ஒருநாளும் வெல்லாது; கலங்காதே ஐய!” என்றான் நீர்நிறைந்த கண்களோடு.

”இந்திரசித்தனுக்கு இந்த நாகக் கணையைக் கொடுத்த தேவன் யார்? இதன் தன்மை என்ன? இதிலிருந்து விடுபடும் வழியென்ன? இவை குறித்து நீ அறிந்தவற்றை எனக்குச் சொல்வாயாக!” என்று அண்ணல் இராமன் வீடணனிடம் வினவ,

”ஐய! பிரமனால் படைக்கப்பட்ட இக்கணையை அவனிடமிருந்து சிவன் பெற்றான். இந்திரசித்தனின் தவத்தினை மெச்சிச் சிவன் அவனுக்கு இக்கணையை அளித்தான். வலிமைமிகு இக்கணை ஆயிரம் கண்ணுடையவனான இந்திரனின் திண்தோள்களைப் பிணித்தது. தேவியைத் தேடிச்சென்ற அனுமனை இறுகக் கட்டியதும் இக்கணையே!

இந் நாகக் கணை தானே விட்டால்தான் விடும்; விண்ணவராலும் மண்ணவராலும் ஏதும் செய்ய இயலாது; உடலழிந்து உயிர்போன பின்புதான் விட்டு நீங்கும்; பிழைக்க வேறு வழியில்லை!” என்றான் வீடணன் வேதனையோடு.

இலக்குவனையும் அவனைப் பிணித்திருந்த நாகக் கணையையும் உற்றுநோக்கிய இராமன், ”இக்கணையால் இலக்குவன் இறந்துபடின் யானும் உடனே இறப்பேன்” என்று எண்ணியவாறு கலங்கிநின்றான்.

”அப்போது இராமன் உற்ற துயரைத் தீர்ப்பதற்காக வானில் கலுழன் (கருடன்) பறந்து வந்தான். இராமனைத் துதித்தபடி சிறகுகளை விரித்து அவன் தாழப் பறந்துவரவும், அவன் நிழல்பட்ட அளவில், பாதகனாகிய இந்திரசித்தன் இலக்குவன்மீதும் வானரப்படை மீதும் செலுத்தியிருந்த நாகக் கணை, மேகங்கள் ஐயங்கொள்ளுதற்கு இடமாக உரிய, கொடையளிப்பதில் வலிமை மிக்க பெரியோனாகிய சடையப்ப வள்ளலுக்குரிய திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த, ஒளிபொருந்திய அந்தணர்களும் செஞ்சொல் புலவர்களும் என்றிவர்களைச் சுற்றமாய்க் கொண்டோரை அடைந்த பசிபோல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது; அவ்வாறு அழிந்து மறைந்த நாகங்களை, மணம்பொருந்திய தாமரை மலரின் தண்டினுள்ளே உள்ள மெல்லிய நூலின் தன்மையை அடைந்துவிட்டது என்று சொல்வதில் என்ன சிறப்புளது?” என்கிறார் கம்பநாடர்.

வாசம் கலந்த மரைநாள நூலின்
    வகை என்பது என்னை மழை என்று
ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல்
    சரராமன் வெண்ணெய் அணுகும்
தேசம் கலந்த மறைவாணர் செஞ்சொல்
    அறிவாளர் என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசிபோல் அகன்ற
    பதகன் துரந்த உரகம். (கம்ப: நாகபாசப் படலம் – 8264)

[சரராமன் – சடையப்ப வள்ளல்; உரகம் – பாம்பு]

இராமனின் கதை நடுவே தம்மைப் புரந்த சடையப்ப வள்ளலின் சிறப்பைப் பாடிய கம்பரின் செய்ந்நன்றி மறவாச் செம்மை நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது.

நாகக் கணை விடுபடவே, உறக்கத்தினின்று நீங்கியவர்போல் வானரப் படையினரும் இலக்குவனும் எழுந்தனர்.

கலுழனின் கைம்மாறிலாப் பேருதவிக்கு அளவிலா நன்றி பாராட்டினான் இராமன். அவனிடம் விடைகொண்டு அவ்விடம் விட்டகன்றான் கலுழன். அப்போது அனுமன் இராமனைப் பார்த்து, ”ஐயனே! இலக்குவன் இறந்துவிட்டான் என்றெண்ணிச் சீதை வருந்துவாள்; அவளைத் தெளிவிக்கும் பொருட்டும், அரக்கர் படையை மீண்டும் மருட்டும் வகையிலும் நாம் ஆரவார முழக்கமிடுவோம்” என்றான். ”ஆகட்டும்” என்றான் இராமன். உடனே திக்கெட்டும் கேட்கும் வகையில் ஆரவாரித்தனர் வானரர்.

சீதையின் நினைவால் துயிலின்றிக் கிடந்த இராவணனின் காதில் வானர முழக்கம் கேட்டது. உடனே இந்திரசித்தனின் ஆடகப் பொன்னால் ஆன அரண்மனை நோக்கிச் சென்ற அவன், அங்கே இலக்குவனின் அம்புகள் தைத்து உண்டான புண்களில் குருதிபொங்க வருந்திச் சாய்ந்திருந்த இந்திரசித்தனைக் கண்டான். நாகக் கணையால் கட்டுண்ட வானரப் படையும் இலக்குவனும் விடுபட்டமையை உரைத்தான். ”இவ்வாறு நிகழவும் கூடுமோ?” என வியந்தான் இந்திரசித்தன்.

அப்போது அங்குவந்த இராவணனின் தூதர்கள், திடீரென்று போர்க்களத்திற்கு வருகை புரிந்த கலுழனால் நாகக் கணைகள் சின்னபின்னங்கள் ஆயின; முன்னினும் அதிக வலிமை பெற்றனர் அப்படையினர் என்றுரைக்கவே, சினங்கொண்ட இராவணன், ”கலுழன் நாணுமாறு அப்படையினரை மீண்டும் அழித்தொழிக்கப் போருக்குப் புறப்படுக!” என்றான் தன் வீரமகன் இந்திரசித்தனிடம்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *