குறளின் கதிர்களாய்…(423)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(423)
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
-திருக்குறள் – 446 (பெரியாரைத் துணைக்கோடல்)
புதுக் கவிதையில்…
தகுதி வாய்ந்த
பெரியோரின்
துணையாம் கூட்டத்தில்
தானிருந்து ஒழுகும்
வல்லமையுள்ள அரசனுக்குத்
தொல்லைதரும் பகைவரால் வரும்
தீங்கு எதுவுமில்லை…!
குறும்பாவில்…
தக்க பெரியோரின் பக்கதுணைக்
கூட்டமாயிருந்து ஒழுகவல்ல அரசனுக்குப் பகைவர்
தந்திடும் தீங்கெதுவும் இல்லையே…!
மரபுக் கவிதையில்…
தகுதி மிக்கப் பெரியோரைத்
தக்க துணையாய்க் கொண்டேதான்
மிகுதி யுள்ள கூட்டமதாய்
மிஞ்சும் வகையில் ஒழுகவல்ல
தகுதி யுள்ள மன்னனுக்குத்
தாக்கும் பகைவர் தன்னாலே
வெகுவாய் தாக்கும் தீங்காக
வேறே யெதுவும் வாராதே…!
லிமரைக்கூ…
தக்க பெரியோர்துணைக் கூட்டம்
கொள்ள வல்ல மன்னவனுக்கு வராதே
பகைவர் தீங்கினால் வாட்டம்…!
கிராமிய பாணியில்…
தொணவேணும் தொணவேணும்
பெரியவங்க தொணவேணும்,
வெவரம் தெரிஞ்ச
பெரியவங்க தொணவேணும்..
தகுதியுள்ள பெரியவங்களத்
தனக்குத் தொணயான
கூட்டமா வச்சிக்கிற
தெறமயுள்ள ராசாவுக்கு,
எதிராளிகளால
எந்தத் தீமயும்
எப்பவுமே வராதே..
அதால
தொணவேணும் தொணவேணும்
பெரியவங்க தொணவேணும்,
வெவரம் தெரிஞ்ச
பெரியவங்க தொணவேணும்…!