-மேகலா இராமமூர்த்தி

இலக்குவனையும் ஏனைய வானரப் படையினரையும் பிணித்திருந்த இந்திரசித்தனின் நாகக் கணையானது அப்போது போர்க்களத்துக்கு வருகை புரிந்த கலுழனால் (கருடன்) சின்னபின்னம் ஆகிவிட, அவர்கள் அனைவரும் ஆர்த்தெழுந்தனர் முன்னிலும் அதிக வலிமையோடு!

போர்க்களத்திலிருந்து எழுந்த ஆர்ப்பொலி அரண்மனையில், சீதையின் நினைவால், துயிலாது கிடந்த இராவணனின் செவிகளில் விழவே, அவன் இந்திரசித்தனை அரண்மனையில் சந்தித்து வானரப் படையினர் நாகக் கணையிலிருந்து விடுபட்ட செய்தியை உரைத்து மீண்டும் போர்க்களத்துக்குச் சென்று அவர்கள் அனைவரையும் வீழ்த்துமாறு பணித்தான்; ஏற்கனவே கடும்போர் புரிந்து புண்களோடு வருந்திக்கொண்டிருந்த இந்திரசித்தன் நாளை மீண்டும் போருக்குச் செல்வதாய் உரைக்க, அதனை ஏற்றுக்கொண்டான் இராவணன்.

அவ்வேளையில் இராவணனின் படைத்தலைவர்களான மாபெரும்பக்கனும் (மகாபார்சுவன்), புகைநிறக்கண்ணனும் (தூம்ராட்சன்), ”தம்மைப் போருக்கு அனுப்புக” என இராவணனிடம் வேண்டினர். அதுகண்ட தூதர்கள், ”இந்திரசித்தனை அடுகளத்தில் தனியேவிட்டு ஓடிப்போன இவர்கள் இப்போது திரும்பி வந்திருக்கின்றனர் போலிருக்கின்றது” என இராவணனிடம் சொல்லவே, அதுகேட்டுக் கடுஞ்சினத்தனாகிய இராவணன் அவர்களைத் தண்டிக்கவேண்டிக் கிங்கரர்களை அழைத்தான். அவ்விருவரின் மூக்கையும் அரிந்திடக் கருவிகளோடு கிங்கரர்கள் வரவே, அதனைத் தடுத்த மாலி எனும் படைத்தலைவன், ”போரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்; அதற்காகக் கோபிப்பதா? நமது நாற்பது வெள்ளம் சேனையையும் இலக்குவனும் வானரப் படையினரும் அழித்தொழித்தனர். எஞ்சியிருப்போர் இந்திரசித்தனும் மாபெரும்பக்கனும் புகைநிறக்கண்ணனுமே. எனவே, இவர்களின் வீரத்தைக் குறைத்து மதிப்பிடலாகாது” என்றான் இராவணனிடம்.

மாலியின் சொற்களால் இராவணனின் சினம் சற்றுத் தணிந்தது. அதுதான் சமயம் என்று மாபெரும்பக்கனும் புகைநிறக்கண்ணனும் இராவணனைப் பார்த்து, ”எமக்குத் தந்தை போன்றவனே! எங்கள் இருவரையும் போருக்கு அனுப்புக! நாங்கள் கொடிய போர்செய்து இறந்தோம் என்ற செய்தியையோ, பகைவர்கள் முடிந்தனர் என்ற செய்தியையோ அன்றிப் போரில் தோற்றுவிட்டோம் எனும் சொல்லைக் கேட்கமாட்டாய் இனி” என்றுரைத்து உயிரைக் கொடுக்க மகிழ்ச்சி கொண்டவர்களாய்ச் சபதம் செய்தனர்.

விட்டனை எம்மை விடுத்து இனி வெம்போர்
பட்டனர் ஒன்று படுத்தனர் ஒன்றோ
கெட்டனர் என்பது கேளலை என்னா
ஒட்டினர் ஆவி முடிக்க உவந்தார்
. (கம்ப: படைத்தலைவர் வதைப் படலம் – 8320)

இராவணன் அதற்குச் சம்மதிக்கவே, சூரியன் பகைஞன் (சூரியசத்ரு), வேள்வியின் பகைஞன் (யக்ஞசத்ரு), மாலி, பிசாசன், வச்சிர எயிற்றன் எனும் படைத்தலைவர்களோடு மாபெரும்பக்கனும், புகைநிறக்கண்ணனும் இணைந்து பெரும்படையுடன் போர்க்களம் புக்கனர்.

அரக்கர்படையைக் கண்ட இராமன் அதனைத் தலைமை வகித்து நடாத்திவருவது இந்திரசித்தனா என்று வீடணனிடம் வினவினான். வருபவர்கள் ஒவ்வொருவரையும் இராமனுக்கு அறியத்தந்தான் வீடணன்.

தொடங்கிற்று போர்! அனுமனோடு பொருது புகைநிறக்கண்ணனும் அங்கதனோடு பொருது மாபெரும்பக்கனும் மாண்டனர்; மாலியின் தோளை இலக்குவன் துணித்து, கையற்றவனோடு பொருதல் தகாது என்று அவனைக் கொல்லாது விடுத்தான்; வேள்வியின் பகைஞனின் மார்பில் அம்பைத் தொடுத்து அவன் கதையை முடித்தான். சூரியன் பகைஞனைச் சூரியன் மகனான சுக்கிரீவன் கொன்றான்; வச்சிர எயிற்றனை அனுமன் விண்ணுலகுக்கு அனுப்பினான். பிசாசனைத் தன் வலிமிகு வாளிக்கு இரையாக்கினான் இலக்குவன்.

அரக்கர்படையின் அழிவைத் தூதர்கள் அறிவித்தனர் அரக்கர்கோன் இராவணனுக்கு; துயருற்ற அவனைத் தேற்றும் விதமாக மகரக்கண்ணன் எனும் அரக்கன், ”ஐயனே! என் தந்தையை (மகரக்கண்ணனின் தந்தை கரன் – பஞ்சவடியில் சூர்ப்பனகை பொருட்டு இராமனோடு பொருது மாண்டவன் இவன்.) கொன்றவனான இராமனைக் கொல்ல என்னை ஏன் ஏவாமல் விடுத்தாய்? தேவையில்லாமல் மற்றையோரைப் பலி கொடுத்தாய்!

என்னுடைய தாய் அழுத கண்களை உடையவளாய்க் கடத்தற்கரிய துயர்க்கடலுள் ஆழ்ந்திருக்கின்றாள்; பெருமைக்குரிய மங்கலநாணை இன்னும் கழித்திட ஆற்றாளாய், தன் கணவனைக் கொன்ற இராமனின் கரிய தலையென்னும் ஓடாகிய பாத்திரத்தில் அல்லாது தன் கணவனுக்குச் செய்யவேண்டிய கடனைச் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டாள். பருந்துகளுக்கு விருந்தளிக்கும் இனிய வேற்படையை உடையவனே! என் தாயின் வஞ்சினத்தை முடிக்கும் வகையில் இன்று போருக்குச் செல்ல என்னைப் பணித்திடுக!” என்றான்.

அருந்துயர்க் கடலுளாள் என்அம்மனை அழுத கண்ணள்
பெருந்திருக் கழித்தல் ஆற்றாள் கணவனைக் கொன்று பேர்ந்தோன்
கருந்தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்
பருந்தினுக்கு இனிய வேலாய் இன்அருள் பணித்தி என்றான்.
(மகரக்கண்ணன் வதைப் படலம் – 8407)

கணவனைக் கொன்றவனைப் பழிவாங்கும் வரை மங்கலநாணைக் கழற்றாமலும் மரணச் சடங்குகள் செய்யாமலும் இருப்பதாய் வஞ்சினம் கூறுதல் மறக்குல மகளிர் மரபு. அதனை நிறைவேற்றிக் கொடுப்பது அவர்தம் மைந்தரின் கடன். எனவே, அரச சேவையில் தன் கடமையும் சேர்ந்திருப்பதால் ”இன்னருளோடு என்னைப் போரிடப் பணித்திடு” என இராவணனை இரக்கின்றான் மகரக்கண்ணன்.

இராவணன் இசையவே வேறுசில வீரநண்பர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு பெருஞ்சேனையோடு இராமனை எதிர்க்கச் சென்றான் மகரக்கண்ணன்.

கமலக்கண்ணனாம் இராமனொடு பொருதபோது இராமன்விட்ட ஒரு கணை மார்பிலே பாய்ந்து குருதிசோர அதனைப் பொருட்படுத்தாது ஓர் இமைப்போதில் விண்ணில் ஏறிய மகரக்கண்ணன், தான்பெற்ற வரத்தின் பலனாய், அங்கிருந்து இடி காற்று மழை நெருப்பு ஆகியவற்றை மிகுதியாய் உண்டாக்கினான். அவன் உண்டாக்கிய இடியும் கடுங்காற்றும் கல்மழையும் நெருப்பும் போர்க்களத்தைத் தாக்கவே வானரர்கள் கணக்கற்ற எண்ணிக்கையில் மடிந்தனர்.

”மகரக்கண்ணனின் இவ் ஆற்றலுக்குக் காரணம் அவன் கற்ற மாயங்களா? பெற்ற வரங்களா?” என வீடணனைக் கேட்டான் இராமன். ”மகரக்கண்ணனின் கடுந்தவத்தை மெச்சி வாயுதேவனும் வருணதேவனும் தந்த வரங்களின் விளைவுகள் இவை” என்றான் வீடணன்.

இராமன் அவற்றுக்கு மாற்றுக் கணைகள் விடவே, மழையும் காற்றும் நெருப்பும் மறைந்தன; தன் மாயச்செயல் இடையிலேயே அழிந்தமை கண்ட மகரக்கண்ணன் மாயத்தால் வான்வெளியெங்கும் தன் உருவங்களை உருவாக்கி நிரப்பினான். தன் காயத்தை (உடம்பு) மறைக்க அவன் செய்துவரும் மாயங்கள் கண்டு வியந்த இராமன், அவ்வுருவங்களில் ஒன்றில் மட்டும் மார்பிலிருந்து குருதிவழிவது கண்டு இவனே உண்மையான மகரக்கண்ணன் எனத் தெளிந்து அவ்விடம் நோக்கித் தன் அம்பைச் செலுத்தத் தலை அறுபட்டுத் தரையில் வீழ்ந்தான் மகரக்கண்ணன்.

மகரக்கண்ணனோடு சென்ற மற்றையோரும் போரிலே பட்டனர். இச்செய்தியைத் தூதர்கள் இராவணனிடம் செப்ப, இந்திரசித்தனை மீண்டும் போருக்கு அனுப்பச் சித்தமானான் அவன். தகப்பனின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் போருக்குப் புறப்பட்டான் இந்திரசித்தன். போர்முனை வந்த அவனை இராமனும் இலக்குவனும் முறையே அனுமன் அங்கதன் ஆகியோரின் திண்தோள் மீதமர்ந்து எதிர்த்தனர்.

அப்போது இலக்குவன் இராமனை நோக்கி, ”அனைவரையும் வாழ்விக்க வல்லவனே! இந்திரனுக்குப் பகைவனாகிய இந்த இந்திரசித்தனின் சிரத்தை என் சரம் விசும்பிடையே அறுத்துத் தள்ளாது போகுமாயின் கொலைத்தொழிலைத் தன் செய்கையாய்க் கொண்ட கூற்றுவனுக்கு நான் விருந்தாகி, இவ்வுலகின் பெருமைமிகு வீரர்களில் கடையானவன் எனும் பழிப்புரைக்கு ஆளாவேன்!” என்று வெஞ்சினத்தோடு வஞ்சினமுரைத்தான்,

இந்திரன்பகை எனும் இவனை என்சரம்
அந்தரத்து அருந்தலை அறுக்கலாது எனின்
வெந்தொழிற் செய்கையன் விருந்தும் ஆய்நெடு
மைந்தரில் கடைஎனப் படுவன் வாழியாய்.
(கம்ப: பிரமாத்திரப் படலம் – 8481)

இந்திரசித்தன் இராம இலக்குவரைப் பார்த்து, ”நீங்கள் இருவரும் ஒருங்கே என்னுடன் போர் புரிய வருகிறீர்களா? ஒருவர் ஒருவராய் வருகிறீர்களா?” என வினவ, ”உன்னை முடிப்பதாய் நான் சபதம் செய்திருக்கின்றேன்; ஆகையால் நானே முதலில் வருகின்றேன்” என்றான் இராமனின் இளவல். அதுகேட்ட இந்திரசித்தன், ”உன் அண்ணனுக்குப் பின் பிறந்த உன்னை அவனுக்கு முன் இறந்தவனாக்குவேன்; இல்லையேல் நான் இராவணனுக்கு மகனாய்ப் பிறந்து என்ன பயன்? உம்மிருவரையும் கொன்று உம் குருதியால் என் தம்பிமார்களுக்கும் சிற்றப்பன் கும்பகருணனுக்கும் இறுதிக்கடன் ஆற்றுவேன்!” எனச் சினத்தோடு சாற்றினான்.

அதனை மறுத்த இலக்குவன், ”உம்மினத்தார் அனைவர்க்கும் ஈமக்கடன் ஆற்றுதற்கே எமை அடைந்துள்ளான் உன் சிற்றப்பன் வீடணன்!” என்றுரைக்க, வெகுண்ட இந்திரசித்தன் கடும்போரைத் தொடங்கினான். மாற்றி மாற்றி இலக்குவனும் இந்திரசித்தனும் சரங்களைத் தொடுத்துக்கொண்டிருக்க, குறுக்கே தான் சரங்களை விடுவது முறையன்று என எண்ணிய இராமன் இலக்குவனுக்குப் பின்னே வாளா நின்றிருந்தான்.

இலக்குவன் இந்திரசித்தனின் வீரக் கங்கணத்தையும் கவசத்தையும் தன் அம்பால் உடைக்க, விண்ணில் சென்று மறைந்தான் இந்திரசித்தன். ”இவனை நான் பிரமாத்திரம் (அயன்படை) எய்து கொல்வேன்” என இலக்குவன் இராமனிடம் கூற, “அறநெறி வழுவாதவனே! நீ பிரமாத்திரம் எய்தால் அஃது இந்திரசித்தனை மட்டுமல்லாது மூவுலகங்களையும் சேர்த்து அழித்துவிடும்! ஆகையால், அதனை எய்யாதே!” என்றான் இராமன்; இலக்குவனும் அச்செயல் தவிர்ந்தான்.

ஆனால், இராம இலக்குவரின் உரையாடலை மறைந்திருந்து கேட்ட இந்திரசித்தன் அவர்கள் தவிர்த்த அந்தத் தெய்வ அத்திரத்தைத் தான் எய்வது என முடிவுசெய்துகொண்டு, யாருக்கும் தெரியாமல், இலங்கைக்குத் திரும்பினான். அவனைக் காணாததால் இராம இலக்குவரும் ஏனைய வானர வீரர்களும் போர்க்கோலம் களைந்தனர். களைத்திருக்கும் படைவீரர்களுக்கு உணவு கொண்டுவரும்படி வீடணனைப் பணித்துவிட்டுச் சேனைகளைக் காக்கும் பொறுப்பை இலக்குவனிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் தெய்வப் படைக்கலங்களுக்குப் பூசனை செய்யும்பொருட்டு அங்கிருந்து அகன்றான் இராமன்.

இலங்கைக்குச் சென்ற இந்திரசித்தன், பிரமாத்திரம் எய்யவிருக்கும் தன் திட்டத்தை இராவணனிடம் தெரிவித்து அதற்கு அனுமதிபெற்றான். அவன் பிரமாத்திரம் எய்வதற்கு முற்பட்ட வேளையில் மாயப்போர் புரிய மகோதரன் எனும் அரக்கனை அனுப்பினான் இலங்கையர்கோன். வானரப் படையும் அரக்கர் படையும் மீண்டும் கைகலந்தன. அரக்கர் படை நடுவில் போரிட்டுக்கொண்டிருந்த வானரர்கள் மகோதரன் செய்த மாயத்தால் ஒருவரை ஒருவர் காணமுடியாது தவித்தனர்.

அவ்வேளையில் இலக்குவனின் நாணொலி கேட்டு மகிழ்ந்த அனுமன் இலக்குவனை வந்தடைந்தான். அரக்கர்செய்த மாயத்தால் வானர வீரர்கள் ஒருவரை ஒருவர் காணவியலாது இருளில் தவித்துவருவதையும் இலக்குவன் தெய்வப் படைக்கலத்தை ஏவி அவ்விருளை ஒழித்தாலன்றி வானரர்கள் இலக்குவனை அடைய இயலாது என்பதையும் தெரிவித்தான் அவன். அதனையேற்று, இராமனை மனத்தில் தியானித்து, சிவனாரின் பாசுபத அத்திரத்தை அம்பிலே பொருத்தி அரக்கர்மேல் இலக்குவன் ஏவ, அரக்கர்படை அழிந்தது; இருள் ஒழிந்தது; மாயப்போர் புரிந்துகொண்டிருந்த மகோதரனும் அவ்விடத்தினின்று மறைந்தான்.

அரக்கர் செயல்களைத் தூதர்வாயிலாய் அறிந்த இந்திரசித்தன், தான் பிரமாத்திரம் எய்தற்கு ஏற்ற காலம் இதுவென உணர்ந்து பெரிய ஆலமரமொன்றை அடைந்து பிரமாத்திரத்திற்கு முறையாக வேள்விகள் செய்துவிட்டு அப்படைக்கலத்தோடு வானில் மறைந்திருந்தான்.

வானரப் படையினரை திசைதிருப்பும் வகையில் அப்போது மகோதரன் இந்திரன்போல் தோற்றங்கொண்டு ஐராவதமெனும் வெள்ளையானையில் ஏறி தேவர்கள் சூழப் போர்க்களத்துக்கு வந்தான். ”இந்திரனும் வானவரும் நம்மோடு போர்புரிய இங்கேவரக் காரணமென்ன?” என்று இலக்குவன் குழப்பத்தோடு அனுமனை வினவ, அச்சூழலைத் தன் வேலைக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொண்ட இந்திரசித்தன், காலத்தால் முன்னவனாகிய பிரமனின் படைக்கலத்தை வானில் மறைந்திருந்தபடி இலக்குவன் உடல்மீது செலுத்தினான்; பொன்மயமான மலையைக் குருவிக்கூட்டங்கள் மொய்ப்பதுபோல் சொல்லற்கரிய ஒளிமிகு அம்புகள் இலக்குவனின் உடலைத் தைத்தன!

இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்
முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம்
பொன்னின் மால்வரைச் குரீஇஇனம் மொய்ப்பது போலப்
பன்னல்ஆம் தரம் அல்லன சுடர்க்கணை பாய்ந்த.
(கம்ப: பிரமாத்திரப் படலம் – 8610)

கோடிக்கணக்கான அம்புகள் ஒரே நேரத்தில் உடலில் பாயவே, அதனைச் சற்றும் எதிர்பாராத இலக்குவன் நாடிதளர்ந்து வலிமிகு யானை துயில்கொண்டதுபோல் தரையில் வீழ்ந்தான்; இலக்குவனைத் தொடர்ந்து அனுமன் அங்கதன் சுக்கிரீவன் என மற்றுள்ள வானரரும் உணர்வொடுங்கி மண்ணில் சாய்ந்தனர்.

போர்க்களத்துளோரை அழித்துவிட்ட நிறைவில் வெற்றிச் சங்கம் முழங்கியபடி இலங்கையை அடைந்தான் இந்திரசித்தன். செய்தியறிந்த இராவணன் ”இராமன் இறக்கவில்லையா?” என்றான் அவனிடம். ”நான் அத்திரம் எய்தவேளையில் அவன் போர்க்களத்தில் இல்லை; அதனால் உயிர்பிழைத்தான்; இல்லையேல் அவனையும் ஒழித்திருக்கும் அயன்படை” என்று பதிலிறுத்துவிட்டுத் தன்மனை புகுந்தான் இந்திரசித்தன்.

படைக்கல பூசை முடித்துவிட்டு அடுகளம் புகுந்த இராமன், அங்கிருந்த இருளை விரட்ட அக்கினிதேவனின் அம்பைக் கொளுத்தினான். அவ்வெளிச்சத்தில் அவன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிடவைத்தது. சுக்கிரீவனும் அனுமனும் அங்கதனும் இளவல் இலக்குவனும் உயிரற்றவர்களாய் குருதிவெள்ளத்தில் கிடப்பதைக் கண்டவன் இடியால் தாக்குண்ட மராமரம்போல் மண்ணில் சாய்ந்தான்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *