குறளின் கதிர்களாய்…(425)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(425)
குணனாடிக் குற்றமு நாடி யவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
-திருக்குறள் – 504 (தெரிந்து தெளிதல் )
புதுக் கவிதையில்…
ஒருவனுடைய குணங்களை
ஆராய்ந்தறிவதுடன்
அவனது குற்றங்களையும்
ஆராய்ந்தறிந்து
அவற்றில் மிகுதியானது எதுவெனக்
கண்டறிந்து
அதன் அடிப்படையில்
குணத்தால் உயர்தவனுக்கே
அரசில்
பொறுப்புகள் வழங்கவேண்டும்…!
குறும்பாவில்…
குணநலன்களை அறிவதுடன் ஒருவனது
குற்றங்களையும் ஆராய்ந்தறிந்தே அவற்றில் மிகுதிகொண்டு
அவனைத் தேர்வு செய்யவேண்டும்…!
மரபுக் கவிதையில்…
ஒருவன் குணத்தை ஆராய்ந்தே
உதவாத் தீய குற்றங்கள்
இருப்பை ஆராய்ந் தறிந்தேதான்
இவற்றில் மிகுதி எதிலென்றே
கருத்தில் கொண்டே உயர்வினையே
கண்டே யதனால் அன்னவன்தான்
பொருந்தும் தகுதி யுடையோனாய்ப்
புரிந்தே தேர்வு செய்வாரே…!
லிமரைக்கூ…
குணத்தை அறிவதுடன் சேர்த்து
ஒருவனின் குற்றங்களையும் ஆராய்ந்து தேர்ந்திடு
அவற்றில் உயர்வைப் பார்த்து…!
கிராமிய பாணியில்…
தெரிஞ்செடுக்கணும் தெரிஞ்செடுக்கணும்
நல்லது கெட்டத
நல்லமொறயில
தெளிவா ஆராஞ்சி
தெரிஞ்செடுக்கணும் தெரிஞ்செடுக்கணும்..
ஒருத்தனோட கொணத்த
நல்லா அறிஞ்சி அதோட
அவனோட குத்தங்களயும்
ஆராஞ்சறிஞ்சி
அதுல ஒசத்தி
எதுங்கிறத கண்டறிஞ்சி
ஒசந்த கொணத்தவச்சி
ராசாங்க பதவிக்கெல்லாம்
தெளிவோட அவனத்
தெரிஞ்செடுக்கணும்..
தெரிஞ்சிக்கோ,
தெரிஞ்செடுக்கணும் தெரிஞ்செடுக்கணும்
நல்லது கெட்டத
நல்லமொறயில
தெளிவா ஆராஞ்சி
தெரிஞ்செடுக்கணும் தெரிஞ்செடுக்கணும்…!