படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 21

முனைவர் ச. சுப்பிரமணியன்

துரை. வசந்தராசனின் ‘கறுப்பு வெளிச்சம்’ – ஓர் ஒளிப்பதிவு

முன்னுரை

கவிதை மாதிரி எழுதிக்கொண்டு கவிஞர் என்று அட்டகாசம், செய்பவரிடையே கவிஞராக இருந்து கவிதை எழுதுகிறவர் சிலர். அந்தச் சிலருள் தம்பி வசந்தராசனும் ஒருவர். அவருடைய முகநூல் கவிதைகளை நான் படித்தபோது ஒளிவீச வேண்டிய வைரம் ஒளிந்து கிடப்பது இலக்கிய உலகத்திற்குச் செய்யும் இரண்டகம் என்றே நினைத்தேன். வாழ்வின் அந்திம வேளையில் ஒரு கவிஞனைக் கண்ட திருப்தி எனக்கு. வேதியல் பட்டதாரியான அவர் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். பட்டங்களைப் போட்டுக் கொண்டு பசப்புகிற இயல்பு அவருக்கில்லை. எளிமை, இனிமை அவர்க்கு இயல்பு. குறிப்பிட்ட யாப்புக்களைப் போகிற போக்கில் கையாளும் வன்மை அவருக்குக் கைவந்த கலை. தொடர்ந்து அவருடைய நூல்களை மதிப்பீடு செய்து வருகிறேன். இந்த முறை அவருடைய முப்பதாவது வயதில் எழுதிய ‘கறுப்பு வெளிச்சம்’ என்ற நூல் இடம் பெறுகிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். தம்பி வசந்தராசனின் விஸ்வரூபம் இன்னும் வெளிப்படவில்லையாயினும் அதற்கான விதை இந்த நூலில் இருக்கிறதா என்பதை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

நூல் மதிப்பீடு ஏன்?

யாரோ எழுதுகிறார்கள். எவரோ அச்சடிக்கிறார்கள். வேறு யாரோ வெளியிடுகிறார்கள். இந்தப் பின்புலத்தில் ஒரு  நூலுக்கு இத்தகைய மதிப்பீடு தேவையா எனச் சிலவர் வினவக் கூடும்.  தமிழ்நாட்டில் ‘’கைகாட்டி’’ என்னும் சொல் பெருவழக்கு. பிறப்பைப் பெருமைப்படுத்துவது அறிவே. அந்த அறிவுக்கு நூலறிவு தலையாயது. வாழ்நாள் குறைவு. வரும் நூல்களோ அதிகம். எந்த நூலைப் படிப்பது? நம்பிக்கையூட்டும் கவிதைகள், நடப்பியல் காட்டி வழிநடத்தும் நாவல்கள், சிறுகதைகள், உண்மை வரலாறு காட்டும் உயர்தரக் கட்டுரைகள், முதலியவற்றைக் கண்டறிவது எப்படி? நல்ல நூல்களை இனங்கண்டு பாராட்டுவதும் அதனைப் படிக்க வேண்டும் என்று வழிகாட்டுவதும் எதிர்காலச் சமுதாயததிற்கானதொரு பணியே! அந்தப் பணியைத்தான் இது போன்ற கட்டுரைகள் செய்து வருகின்றன.

சமுதாயமும் கவிஞனும்

எல்லாரையும் போலக் கவிஞனும் மனிதனே! நாம் உயிரோடு இருக்கிறோம்.  அவன் உணர்ச்சியோடும் வாழ்கிறான். நமக்கும் தெரியாமல் நம்மைப் பாதிக்கின்றவைபற்றி அவன் பாடுகிறான். உண்மையில் அவனுக்கு இது வேண்டாத வேலை. நாடு விடுதலையடைந்தால் என்ன? அடையாவிட்டால் என்ன? என்று பாரதி போயிருக்கலாம். பகுத்தறிவு வளர்ந்தால் என்ன? தீய்ந்தால் என்ன என்று பாவேந்தர் கடந்திருக்கலாம். சாதாரண மனிதனாயிருந்தால் கடந்து போயிருப்பான். அவன் கவிஞனல்லவா? சமுதாயத்தைப் பாதிக்கின்ற விஷயங்கள் அவனைப் பாதிக்கின்றன. யாரோ ஒரு விதவையின் வேதனைக் குரலைப் பாவேந்தர் பாட வேண்டிய தேவை என்ன? பாப்பாவுக்கு விளையாட்டு ஆசிரியராகப் பாரதி மாற வேண்டிய அவசியம் என்ன? கூட்டுறவுத் துறைபற்றிப் பாரதிதாசன் பாடுவது எதற்காக? “கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால் இந்நாட்டில் மூடிய தொழிற்சாலை முக்கோடி தோழர்களே!” என்று பாடிய பாவேந்தர் எந்தக் கூட்டுறவுப் பண்டகசாலையில் பணியாற்றினார்? இதுதான் கவிஞனுக்கும் சாதாரண மனிதனுக்குமான அடிப்படை வேறுபாடு. மொழிப்புலமை இல்லாதவன் குமுறிச் சாகிறான்.  உள்ளவன் கவிதைகளால்  கனன்று கொதிக்கிறான் .எந்த நேரத்தில் எந்த உணர்ச்சி அவனை ஆட்கொள்ளும் என்பதை யாரும் வரையறுக்க முடியாது. ‘எரிமலை எப்படிப் பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’ என்றும் எழுதுவான். “நனைந்த மலர்களுக்குக் குளிரடிக்காதோ? வண்டுகள் பறந்துவந்து தலை துவட்டதோ” என்றும் எழுதுவான். கவிதையின் ஆழம் பாதிப்பின் பங்களிப்பைப் பொருத்தது.  தம்பி வசந்தராசன்  ஒரு கவிஞன்

தன்னை வெளிப்படுத்தும் தமிழ்க்கவிஞன்

குறிக்கோளோடு வாழ்ந்தவர்கள் எல்லாம் குறிக்கோள் இல்லாது கெட்டேன் என்றுதான் பாடியிருக்கிறார்கள். கவிஞர்கள் மட்டும் குறிக்கோள் இல்லாது எழுத முடியுமா என்ன? குறிக்கோள் இல்லாமல் எழுதும் கவிதை என்னாகும்? குப்பையாகும். கூலமாகும்.  இன்னுஞ் சில மேதைகள் தமிழகத்தில் உண்டு. ‘நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்’? என்று வினவினால் ‘நான் எனக்காக எழுதுகிறேன்’ என்று சொல்வார்கள் ஒருவன் தனக்காக எழுதினால் அதனை எதற்காக வெளியிட வேண்டும்? தனது படுக்கையறையிலோ கழிப்பறையிலோ வைத்துப் படித்துக் கொள்ளலாமே? இப்படிச் சொல்வது ஒரு நாகரிகமாகப் போய்விட்டது. தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பெரும்பாலோர் எதற்காக வருகிறோம்? என்ன எழுதப்போகிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் வருகிறார்கள். எழுதுகிறார்கள். நமக்குத் தொழில் கவிதை நாடடிற்குழைத்தல் இமைப்போதும் சோராதிருத்தல்’ என்பார் பாரதி. அவருக்குப் பின்னாலே தோன்றிய கவிஞர் அனைவரும் தங்கள் குறிக்கோளைத் தாம் எழுதும் கவிதை நூலின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவது ஒரு மரபாக பின்பற்றப்படுகிறது.

“வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே”

என்பார் பாரதி. அவருடைய நண்பரும் புரடசிக் கவிஞருமான பாரதிதாசனோ

“ஆன என் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் நான் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன் “

என்று தன் வருகை நோக்கத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறார். தன் கவிதைகளைப் பற்றிச் சொல்லவந்த  மேத்தா

“எங்கெல்லாம் மானுடம்
காயப்படுகிறதோ
அங்கெல்லாம் பூக்கும்
சகோதர சோகங்களின்
சர்வதேசியப் பூக்கள்“

என்பார். அழகிய கற்பனைகளாலும் சொற்சேர்க்கைகளினாலும் தன் படைப்புக்களைச் சிறப்பாக்கும் வடுகப்பட்டி வைரமுத்து

“ஆகாயத்தில் வானவில்லுக்கு
அடித்த வர்ணம் காய்ந்துவிட்டதா
என்று தொட்டுப் பார்க்க
என் விரல்கள் நீள்வதில்லை!
ஏழையின் கண்ணீரைத்
துடைத்துக் காயவைக்கத்தான்
பத்துவிரல்களும் படபடக்கின்றன

என்று எழுதுகிறார்  ஐம்பது வயதிலேயே வாழ்ந்தது போதும் என்று மறைந்துபோன கவிஞர் தாராபாரதி

பூமிப்பந்து என்ன விலை? உன்
புகழைத் தந்து வாங்கும் விலை!
நாமிப்பொழுதே புறப்படுவோம்! – வா
நல்லதை எண்ணிச் செயல்படுவோம்

என்று தன் கவிப் பயணத்தைத் தொடங்குவார்.. எல்லாரையும் சொல்வதற்கு இடமில்லை. தம்பி வசந்தராசன் எழுதுகிறார்

“வயல்தாகம் தீர்க்கின்ற நதியாய் பூமி
வசந்தத்தால் பூப்பெய்ய மூலக் கூறாய்
அயல்சேர்க்கை நடந்தாலும் நிலையில் மாறா
அருந்தமிழே! அமிழ்திற்கும் மூலத்தாயே!
இயல்கின்ற வரையுனக்குச் செய்யும் தொண்டால்
இருந்ததனைப் பதிவு செய்ய முயலும் இந்தச்
சுயவிளக்கு வசந்தன்”

முடிந்தவரை தமிழுக்குத் தொண்டு செய்வதுதான் தன் கவிதைப்பணி என்பதைத் தெளிவு செய்து கொள்கிறார். பார்த்து நடக்கிறார். அதனால் பாதை தெரிகிறது. பாதை தெரிகிறது. அதனால் அவரது பயணம் தொடர்கிறது.

நம்பிக்கையூட்டும் வரிகள்

‘இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ இரணடாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்பிக்கையூட்டிய கவிஞர்கள் வாழ்ந்த நாடு தமிழ்நாடு!. ‘மலை சாய்ந்து போனால் சிலையாகலாம். இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?” என்று ஒப்பாரி பாடும் கவிஞர் பலர் நிரம்பி வழிகிற காலக்கட்டம் இது. பாரதியும் பாரதிதாசனும் பட்டுக்கோட்டையும் எவ்வளவோ நம்பிக்கை வரிகளை எழுதியிருந்தாலும் அவலச்சுவை அனாதையாகிவிக்கூடாதே என்பதற்காக எழுதுபவர்களே இங்கு ஏராளம். அவலத்தை அனாதையாக்கி நம்பிக்கைப் பயிரை நாற்றுநடும் தமிழ்க் கவிஞர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். வசந்தராசனும் இருக்கிறார்.

“இந்தச சமுதாயம் ஒரு நாளும்
சகாராவாயப் பிறப்பெடுக்கவில்லை!
நண்பனே நீ
நம்பிக்கை நைல்நதியை
நடத்திக் கெர்ணடு வா
எந்த ஒரு சபிக்கப்பட்ட நந்தவனத்தின்
சருகும் அல்ல நீ!
காலத்தோடு கைகுலுக்க வரும்
கற்பக விருட்சத்தின்
கவிதைக கனி  நீ!
ஒரு பெரிய ஒளி வட்டததையே
போர்த்திக கொண்டிருக்கும் நீ
கண்களை மூடிக்கொண்டு காணப்போவது ஏன்ன?
விழிகளைக் கொஞ்சம் திற!
வெளிச்சத்தின விலாசம் உன் முகத்தில் அடிக்கும்!”

சமுதாயம் கவிஞனுக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் கவிஞன்தான் சமுதாயத்திற்குக் கடன் பட்டிருக்கிறான். காரணம் அவனை அங்கீகரிப்பது இந்தச் சமுதாயமே. எனவேதான் சமுதாயச் சிக்கல்களைப் பாடாத ஒருவனைக் கவியுலகம் நாடுகடத்திவிடுகிறது. சிக்கலிலிருந்து தப்பிக்கும் போக்கு அரசியல் வாதிகளுக்கு உரியதே அன்றிக் கவிஞனுக்கு உரியதன்று, அதே நேரத்தில் கோழைகளுக்கு நம்பிக்கையூட்டிப் பயனில்லை. கீழே விழுந்தவனைத் தான் தூக்கிவிட முடியும். வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பவனை சென்றுபோய் எழுப்ப முடியாது.

“கூவத்தில் கூட நீ
வானைத்தைப் பார்!
குப்பையைப் பாரத்துக்
குள்ளமாகிவிடாதே
நம்பிக்கைக் காண்டீபத்தை நழுவவிட்டு
இந்தக் குருஷேத்திரத்தில்
குதித்துவிடாதே!”

வேர்வைத் துளிகளை மறந்துவிடாதீர்கள்!
விசுவாமித்திரர்களே!
ஏனென்றால்
வயிற்றைக் கீறிடும் வறுமை நகங்களை
வெட்டி எறிந்திட உன்
வேர்வைக்கு மட்டுமே
வீரியம் அதிகம்

துரோகமும் நம்பிக்கை வறட்சியும் கைகோத்து நடைபோடுகிற ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழுகிறோம். திசை தெரியாமலேயே பயணம் நீளுகிறது. அவனுக்குத் திசையைக் காட்ட வேண்டிய கடமை கவிஞர்களுக்குரியது. வசந்தராசன் காட்டுகிறார்.

கவிஞர்கள் ஒரே மாதிரிதான் சிநதிக்கிறார்கள். வெளிப்பாடுதான் வேறுபடுகிறது. வெளிப்பாட்டின் வேறுபாடுதானே கவித்துவம்?

“வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள பத்தும் மூலதனம்”

என்று கவிஞர் தாராபாரதி  இருபத்தோறாம் நூற்றாண்டில் பாடியதைத் தம்பி வசந்தராசன் இருபதாம் நூற்றாண்டிலேயே பாடியிருக்கிறார்.

“கைகள் நமக்கு மூலதனம் வெறுங்
கனவுகள் எல்லாம் மூடத்தனம்”

அரசியல் வாதிகள் கூட்டணி அமைத்துக் கொண்டால் அவர்களுக்கு நன்மை. கவிஞர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டால் கவிதைக்குக் கொண்டாட்டம். வசந்தராசனைப் பார்த்துத் தாராபாரதி எழுதவில்லை. ஆனால் இருவரது சிந்தனையும் நம்பிக்கை என்னும் நேர்கோட்டில் சந்திக்கிறது.

பெண்மை பாடிய கவிஞன்

இருபதாம் நூற்றாண்டுக் கவிதைப் பாடுபொருளில் பெண்மை இடம்பெறாத கவிதைத் தொகுப்புக்களே கிடையாது. நிலவுக்கும் மலருக்கும் அடுத்தபடியாகப் பாடப்பெற்றது பெண்மையே!. இதனை அழகாகவும் பாடியிருக்கிறார்கள். அசிங்கமாகவும் பாடியிருக்கிறார்கள்.

அன்னை தெரசா இந்திரா காந்தி
ஔவை பாடடிவழி நீளுதடி!
இன்னும் இருக்கிற பெண்மை சொல்லி நாம்
இமய மலைகளை இடம் பெயர்ப்போம்!

என ஆற்றலோடு பாடியிருக்கிறார் வசந்தராசன். கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பார் பாவேந்தர். ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் காதல் பெண்களின் கடைக்கண் பார்வையில்’ என்பார் ;மகாகவி. வசந்தன் பாடுகிறார் ‘இமய மலைகளை இடம் பெயர்ப்போம்’ என்று!

நடப்பியல் சிக்கல்கள்

இந்தியாவின் முக்கியமான ஆறுகள் பதின்மூன்றில் சிந்து, தபதி, நர்மதை என்னும் ஆறுகளே அரபிக்கடலில் கலக்கின்றன. ஏனைய வங்கக் கடலில் கலக்கின்றன. ஆறுகளால் கடல் நிரம்புகிறது. மக்களுடைய குடங்கள் நிரம்பவில்லை. விடுதலை இந்தியாவில் இன்னும் குடிநீர்ப்பஞ்சம் என்பது நிர்வாகக் கோளாறா? நினைப்பில் கோளாறா என்பதைத தீர்மானிக்க இயலவில்லை. கவிஞர்கள் என்ன செய்வார்கள பாவம்? எழுதி மடிகிறார்கள். நோய்க்கு மருந்துச் சீட்டைத்தான் அவர்கள் தருவார்கள். மருந்தையும் அவர்களா தரமுடியும்? ஆறுகளும் நீர் நிலைகளும் பட்டா நிலங்களாக மாறினால் கங்கை ஓடினால் என்ன? காவிரி பாய்ந்தால் என்ன?

“காவிரி கங்கை இணைந்திடுமா? நம்
கைக்குடம் நிரம்பி தளும்பிடுமா?
காவி நிற்த்தினில் காய்ந்திருக்கும் – பூமி
தண்ணீருக்காய் தவங்கிடந்தால்  நம்
தலைமுறை சரித்திரம் தழைத்திடுமா?
கண்ணீர் உகுத்துப’ பயனில்லை சேரும்
கைகளில் வானம் தொடும் எல்லை”

அலை எப்போது ஓய்வது கடல் எப்போது ஆடுவது? அதனைப் போல கங்கையும் காவிரியும் இணைப்பது எப்போது. குடத்தில் தண்ணீர் நிரம்பித் தளும்பது எப்போது? ஆதங்கம் அழகு கவிதையாகிறது. சர்.சி.பி. இராமசாமி அய்யரின் கனவுத் திட்டம் அது.  விடுதலைக்குப் பின்  நாடு பல போர்களைக் கண்டிருக்கிறது. பல ஊழல்களைச் சந்தித்திருக்கிறது. பல பிரதமர்களைக் கண்டிருக்கிறது. பல விபத்துக்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் கங்கையும் காவிரியும் யாருக்கும் பயன்படாமல் தம் வழியில் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. நாட்டின் வடபகுதியில் வெள்ளம். தென்பகுதியில் வறட்சி. ஓரே நாடு என்று சொல்லில் வடிப்பதால் காணும் சுகந்தான் என்ன?

“மங்கை சுமந்த தங்க மண்குடம்
மண்ணில் சிதறித் தெறிக்கிறது!
கங்கை காவிரி இணைப்புத் திட்டம்
கையெழுத்தில்தான் இருக்கிறது”

என்னும் வைரமுத்தின் வரிகள் எழுதப்படுவதற்கு முன்பாகவே வசந்தராசன் எழுதியிருக்கிறார். மக்கள் வாழ்வியல் சிக்கல்களைச் சந்திக்கிறபோது அவர்களுக்கு ஏற்படும் வேதனையையும் இழப்பையும் கூட நகைச்சுவை கலந்த வேதனையோடு பதிவு செய்திருக்கிறார் வசந்தராசன்.

“கோழிக்கு ஆடு பலியா?

சுண்டக்காய் கால் பணம் சொமக்கூலி முக்காப் பணம்’ என்பது டெல்டா மாவட்டங்களில் வழங்கப்படும் சொலவடைகளில் ஒன்று. காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்ற ஏழைமக்கள் (படித்தவர்களும் கூட) தங்கள் அறியாமையாலும் அவசரத்தாலும் படுகின்ற இன்னல்கள் அந்தத் தெய்வத்துக்கே அடுக்காது. தன்னைத் தேடி வந்திருப்பவன் தன்னுடைய உதவியை நாடுகிறான் என்பது காவல் துறையால் மறந்துபோன உண்மை. கறவை மாட்டை இழந்தவன் ‘மாடு காணோம்’ என்று புகார் கொடுக்கவந்தால் மாட்டை இழந்தவன், மாட்டிடம் கறந்ததைவிட மாட்டை இழந்தவனிடம் கறக்கப்பட்டதுதான் அதிகம்.

“கோழி காணவில்லை!
குற்றவாளி தெரியவில்லை
காவல் நிலையத்தில்
குப்பன்
கைகட்டி வழக்குரைத்தான்!
அருகிருந்த காவலர்
அவன் காதில் கிசுகிசுத்தார்!

“ஆடு ஒன்று பலிகொடுத்தால்
அந்தக் கோழி கிடைத்துவிடும்”

இதுதான் இன்றைய நடப்பியல். வழக்குத் தொடுப்பவனின் மாடிவீடு குடிலாவதும் குடிலில் குடியிருக்கின்ற வழக்கறிஞர் பல அடுக்குமாடி குடியிருப்புக்களுக்குச் சொந்தமாவதும் இன்றைய நடப்பியல். இந்த நிலை மருத்துவ மனைகளிலும் நீள்கிறது என்பதுதான் மாளாத சோகம். அடிக்காலில் முள் குத்தினால் கூட ‘ஆஞ்சியோ சேவை அவசரத் தேவை’ என்கிறார்களே!

கலைதவழ் கற்பனை

பொதுவாகத் திராவிட இயக்கக் கவிஞர்களுக்கு வண்ணனை வராது.  பாவேந்தர் முதலிய ஒரு சிலர் விதிவிலக்கு. செய்திகளின் தொகுப்பை யாப்புக்குள் திணித்துவிட்டால் கவிதையாகிவிடும் என்னும் மயக்கம் இன்னும 95 விழுக்காடு கவிஞர்களிடத்தில் (?) நிலைகொண்டிருப்பது வேதனைக்குரியது. அவர்கள் நடப்பியலில் செலுத்துகிற கவனத்தை இயற்கையை ரசிப்பதிலும் தங்களையே இழப்பதிலும் தொடர்ந்து படிப்பதிலும் செலுத்துவதில்லை.  ‘

“மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.”

என்னும் பாரதியின் நிலையை எத்தனைத் திராவிட இயக்கக் கவிஞர்கள் உணர்ந்து அனுபவித்திருக்கிறார்கள் என்பது சிநதனைக்குரியது. கவிஞர்களுக்கு மூன்று பண்புகள் இன்றியமையாதன. ஒன்று தனிமையில் இருத்தல். இரண்டு இயற்கையோடு இயைதல் மூன்று பிறர் கவிதைகளைப் படித்தல். இவை மூன்றும் ஒருவனிடம் குறைவின்றி இருக்குமானால் அவன் முதலில் எழுதத் தயங்குவான். காரணம் அவனுடைய பலவீனம் அவனுக்குத் தெரிந்துவிடும். .ஒரே பாடுபொருளைப் பற்’றிய முந்தைய கவிஞன் வென்றிருக்கும் பாங்கினை எந்தச் சொல்லால் தான் வெல்ல முடியும் என்னும் சிந்தனை அவனை அலைக்கழிக்கும். தம்பி வசந்தராசன் அத்தகைய சிநதனை உடையவர். நிலவைப் பற்றிய ஒரு கற்பனை இந்த நூலில் வருகிறது. மிகவும் எளிய கற்பனைதான். ஆனால் இதயத்தை நனைத்துவிடுகிறது.

“ஆயிரம் மீன்கள வான் வாழும் அங்கு
அதையொரு நிலவே அரசாளும்!
ஞாயிறு போலோரு புறப்பாடு! – கொண்டு
ஞாலம் உய்ய நீ பண்பாடு!“

என்று அந்தப் பாட்டு அமைகிறது.  அடுத்த பாட்டில் அந்தக் கற்பனையை அதாவது  வானத்தை ஆண்ட நிலவரசி  பகைநாட்டின் மீது படையெடுக்கிறாளாம்.

“கோடி விண்மீன் படைவீரர் – வானில்
கூடியழைத்து வணங்கியதால்
போருக்குப் புறப்பட்ட தளபதியோ? – இராப்
பொழுதுக்கும் இருளுக்குத் தலைவலியோ?”

மேலே உள்ள பாட்டில் வாழுவதாகக் கற்பனை செய்த விண்மீன்களை இந்தப் பாட்;டில் ‘படைவீரர்களாகக் கற்பனை செய்கிறார். அரசியே தளபதியாகிறாளாம். கற்பனைச் சுகம் என்பது இதுதான்.

“பொன்னந்தி மாலையிலும்
பூமலரும் வேளையிலும்
விண்மீனைக் காவல் வைத்து
வெண்ணிலவு தூங்கையிலும்
கவிதை என்னும் பேய்பிடித்து ஆட்டுதடி என்னை!“

என்னும் வரிகளில் இந்தக் கற்பனையை வடுகப்பட்டி வைரமுத்து பின்னாளில் தமது ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்னும் நூலில் எழுதியிருக்கிறார். வசந்தன் நிலவை அரசனாகக் காண்கிறார். அதனால்  தளபதியாகிறான். வைரமுத்து அரசியாகக் காண்கிறார். அதனால் அந்தப்புரம் செல்கிறாள்.

அருகிய காதலும் அம்பேத்கர் பாடலும்

தம்பி வசந்தராசன் தன்னுடைய இளமைக் காலத்தில் எழுதித் தொகுத்த இந்த நூலில் காதற்கவிதைகள் அருகிப்போனது என் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதுவரை எழுதப்பட்டிருக்கும் காதல் வரிகளையே தமிழர்களும் தமிழ்க்கவிஞர்களும் இன்னும் படிக்க முன்வராத போது மேலும் மேலும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது ஒருவகையான அரைவேக்காட்டுத்தனம் என்பது என் கருத்து. கருத்துக்கள் மாறுபடலாம். கடலையும் மலையையும் பாடுவதுபோலக் காதலையும் சிலர் பாடுபொருளாக நினைத்துக் கொள்ளும்போதுதான் ‘அழுகையே பரவாயில்லை’ என்று நான் தனிமையைத் தேர்ந்தெடுக்கிறேன். . காதல் பாடுபொருள் அன்று. அது ஓர் உன்னதமான உணர்வு. அதனைப் பொதுக்கட்டுரையாக்கிவிடக் கூடாது.

“உனக்காக ஒரு மாளிகை கட்ட
மனக்கணக்குப் போட்டிருந்தேன்
நிலவிலிருந்து கல்லெடுத்துத்
தங்கத்தால் தகடடித்து
வைரத்தால் வழி வைத்துப்
பிளாட்டினத்தால் பெயரெழுதி
உனக்காக ஒரு மாளிகை கட்ட
மனக்கணக்குப் போட்டிருந்தேன்
உனக்கு முன்னால்
அதுகூட
ஒரு மண்குடிசைதான் என்பதறியாமல்!”

என மென்மையான காதலை மலரினும் மெல்லிய சொற்களால் பதிவு செய்திருக்கும் வசந்தராசன் பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய பாடலில் தன் நெஞ்சத்தை நேரலையில் ஒளிபரப்பு செய்திருக்கிறார்.

“போர்ப்பாட்டுப் பரணியினைப் பாட வந்த
புதுப்பாட்டுக் காரனிவன்! மக்கட் கூட்டம்
கூறுபட்டு விற்பனைக்காய் ஆன போது
கொதித்தெழுந்த பண்பாட்டுக் கோளின் மையம்!
தேர்ப்பாகக் கூடடத்தைத் தேரில் ஏற்றித்
தேரேறி வந்தவனைப பாக னாக்கத்
தீர்ப்பெழுத துணிந்து வந்த செயலின் அச்சு!
திருந்திவரும் சமுதாயம் இவரின் சொதது!

வரைபடத்து விடுதலைப்போர் நடுவே மக்கள்
வாழ்வுக்குச சமுதாய விடுத லையை
விரைவாக்கி விளையவைத்த கிரியா ஊக்கி!
விழுமழையைச் சிறைப்பிடித்த சிப்பி! கல்வி
கரையுடைத்த காட்டாறு! பசிக்கா லத்தே
கையணைத்தே கனிச்சாறு! மேல் சாதிக்கே
இரையான இனக்கூட்ட இதய வேரில்
எரிமலையைக் குடிவைத்த ரத்த நாளம்!”

உள்ளத்துக்கு இசைந்த ஒருவனைப் பாடுகிறபோது தமிழ் எப்படித் துள்ளிவருகிறது என்பதற்கு இந்தப் பாடல் ஓர் எடுத்துக்காட்டு. ‘

“………………………….இனக்கூட்ட இதய வேரில்
எரிமலையைக் குடிவைத்த ரத்த நாளம்!”

என்ற வரிகளில் அமைந்திருக்கும் உருவக அழகு உண்மையில் அழகு.

நெஞ்சுக்கு மராமத்தா?

தொடர்பில்லாத சொற்களின் சேர்க்கை கவிதையின் பரிமாணத்தைக் கூடுதலாக்கும். இந்தக் கவிதை மரபு பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தே தொடங்கிவிடுகிறது. மரபு சார்ந்த இந்தக் கொள்கையைத் தற்காலப் புதுக்கவிதைக்காரர்கள் தங்களுடைய் கண்டுபிடிப்பு என்பது போலக் காட்டிக் கொள்வது பச்சைப் பாசாங்கு. ‘தீப்பாயல்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு. தீ தெரியும். படுக்கின்ற பாய் தெரியும். தீயினுக்கும் பாயினுக்கும் என்ன தொடர்பு. புலவன் எழுதியிருக்கிறான் ‘தீப்பாயல்’ என்று. இதனைத் ‘தீப்படுக்கை’ எனச் சொலலிப் பாருங்கள் பொருளின் ஆழம் தெரியும். அடர்த்தி தெரியும். கவை என்ற சொல் இரட்டையைக் குறிக்கும். மகவு என்பது குழந்தையைக் குறிக்கும். இரட்டைக் குழந்தை என்பது உலக வழக்கு. இதற்கான இலக்கிய வழக்கு என்ன தெரியுமோ? “கவை மகவு”. ‘கவை’ மரத்தில் இருப்பது ‘மகவு’ தாயின் வயிற்றில் பிறப்பது. இரண்டு சொற்களையும் இயற்பியலால் சேர்த்துப் புதுவகையான வேதியல் மாற்றத்தைக் கொண்டு வருகிறான் புலவன். ‘செவி நுகர் கனிகள்’ என்று ஒரு சொல் கம்பராமாயணத்தில் வரும். செவிக்கும் கனிகளுக்கும் என்ன தொடர்பு? கவிதைகள் சொல்லிக் கேட்கப்படுவன. செவி கேட்டற்குரியது. எனவே கவிதைகளைக் ‘கவிதைகள்’ என்னாமல் கனிகள் என்றான். செவி நுகர் கனிகள் என்கிறான் கம்பன். கவிதையில் சொல்லினிமை மிகவும் இன்றியமையாதது என்பது கருத்து. மரபு சார்ந்த இந்தப் போக்கினை ‘நெஞ்சுக்கு மராமத்து’ என்னுந் தொடரால் தம்பி வசந்தராசன் பதிவிடுகிறார். மராமத்து வாய்க்காலுக்கு உண்டு. பழைய கட்டடங்களின் பராமரிப்புக்கு உரியது. நெஞ்சுக்கு எப்படி மராமத்து செய்வது? அபப்டி மராமத்துப் பணியைச் செய்தவர் யார்?

“திராவிடத்து உணர்வுகளை எழுப்பு தற்குத்
தீப்பந்தம் ஏந்தியதார்? தமிழர் நெஞ்சை
மராமத்துச் செய்வதற்கு வந்த தாரோ?
மாத்தமிழன் அண்ணாவின் பேச்சா? இல்லை
மரத்துவிட்ட இல்லறதுச் செக்கு மாடா?

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது பொதுஒதுக்கீட்டிற்கு விண்ணப்பம் செய்ய உரிமை பெற்ற 10 விழுக்காடு பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, பட்;டியலின மக்களுக்குத் திட்டமிட்டு மறுக்கப்பட்ட அநீதி என்பதை பாதிக்கப்பட்டவர்களே இன்னும் புரிந்து கொள்ளவில்லையே! தங்களுக்கான ஒதுக்கீட்டிற்கு ஆபத்து இல்லை என்று உணர்கிறார்களே தவிர, அடுத்த ஊரில் இருக்கின்ற தமது சொத்து பறிபோனதை இந்த மக்கள் உணரவில்லையே! ‘நெஞசை மராமத்து செய்வது’ என்பது இதனைத்தான். மரபில் புதுக்கவிதை கூறு என்பதும் இதுதான்!

அரசியல் வாதியும் அங்கதமும்

புதுக்கவிதையின் இலக்கிய தர மதிப்பீட்டிற்குரிய பரிமாணங்களுள் இன்றியமையா இடத்தைப் பெறுவது அங்கதம்.  பலபேர் அதனை விடுகதையாக்கி வீணடிப்பதைக் காணமுடிகிறது. மேளத்திலேயே நையாண்டி பாரத்தவர்கள் நாம்.  கவிதையில் பார்க்க மாட்டோமா என்ன? நோய் வந்த முன்னாள் அமைச்சர் . மருத்துவரிடம் செல்கிறார். அமைச்சரின் தற்காலச் ‘சந்தை மதிப்பு’ குறைவாகப் போனதால் வரவேற்பு அவ்வளவாக இல்லை. அவரை நன்கு சோதித்த மருத்துவர் குறிப்புச் சீட்டில் எழுதுகிறார். ‘மாலை! மாலை! மாலை!’ என்று. முன்னாள் அமைச்சருக்கு வந்திருப்பது ‘மாலை’நோய்! வைரமுத்து காட்டும் அங்கதம் இது. தம்பி வசந்தராசன் அருமையாக அறிவியல் சார்ந்து அங்கதத்தை அரசியல் வாதிக்கே அர்ப்பணிக்கிறார்.

“எங்கள் நாட்டு எம்.எல்.ஏக்களோ
டார்வின் தத்துவத்தைத்
தலைகீழாகப் படித்தவரகள்
இல்லையென்றால்
குரங்கிலிருந்து வந்த
மனிதனே மீண்டும் குரங்காகிக்
கொடி மரம் தாவுவார்களா?”

‘தலைகீழ்’ என்னும் ஒரு சொல்லை வைத்துக் கொண்டு செய்து காடடியிருக்கும் அங்கதம் அறிவியல் உண்மை ஒன்றினைத் தற்கால வேடதாரிகளைத் தோலுரித்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தியிருக்கும் சாதுரியம் போற்றத்தக்கதல்லவா? அரசியல்வாதி பற்றிய அங்கதம் அப்படி அமைந்திருக்கிறது என்றால் மருத்துவத்துறை பற்றிய அங்கதம் இப்படி அமைந்திருக்கிறது.

பிடுங்கியது சொத்தைப்பல்லையா? சொத்தையா?

ஒரு பல்லில் சொத்தை விழுந்தால் அது தொடரும் என்று கருதி ஒருவர் பல் மருத்துவமனைக்குச் செல்கிறார். முப்பத்திரண்டு பற்களையும் தங்கத்தால் கட்டினால் எவ்வளவு செலவாகுமோ அந்த அளவுக்குச் செலவானதாம்

“சொத்தைப் பல்பிடுங்கச் சுந்தரானர்
அருகிருக்கும்
நத்தை மருத்துவமனையில்  நடந்திருந்தார்
………………………………………………………………………………………………………..
“பிடுங்கியாயிற்றா” எனக்கேட்டேன்!
‘ஆயிற்று’ என்றார்!
அதிசயமாய் நான் பார்க்கச்
“சொத்தைப் பிடுங்கியாயிற்று”
பல் மட்டும் அப்ப்டியே!
எனச்  சொன்னார் சுந்தரனார்
எழுகின்ற வலியோடு!

கொஞ்சம் மிகையாக இருக்கலாம். ஆனால் காலில் குத்திய முள்ளுக்கு இதயத்தில் எக்ஸ்ரே எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிற மருத்துவ உலகின் ‘மனிதநேயச் செயலை’ அங்கதச் சுவையோடு எழுதியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

நிறைவுரை

“கவிதை எல்லா மனிதர்களுக்காகவும் படைக்கப்படுகிறது  ஆனால்  அது எல்லா மனிதர்களாலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பதே அதன் கவலையாக இருக்கிறது.” நோக்கமும் ரசனையும் இல்லாத எழுதப்படுகிற கவிதைகளை எப்படி ரசிப்பது? எழுதுகிறவனீன் அறிவின் உயரத்தைவிட அவனுடைய அனுபவப் பகிர்மானத்தையே நல்ல கவிதைகள் எதிர்பார்க்கின்றன. இயற்கையை ரசிக்கவும் அதற்கு வாழ்க்கைப்படவும், வாழவும், ,வாழ்க்கையின் வலியைத் தாங்கவும் புன்னகை புரியவும் புயல்களை எதிர்கொள்ளவும் சகமனிதனை நேசிக்கவுமான திசைநோக்கிக்  கைகாட்ட வேண்டியது கவிதையின் கடமை. அந்தக் கடமையை இந்த நூல் கொஞ்சமாவது செய்ய முயல்கிறதா? என்பதைப் படித்தவர்கள் சொல்ல வேண்டும். சொல்வார்கள் என்றே நான் நம்புகிறேன். .

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *