பாரதி யார்? – வரலாற்று நாடகம்
அன்பு உள்ளங்களே!
அரசு தந்த அரங்கிலே
அமர கவியின் வாழ்வினை
முரச றைந்து சொல்கிறோம்
முத்தமிழும் ஓங்கவே!
தேசம் தனது தெய்வமாய்
சேரி தனது கோயிலாய்
நேசமுடன் வாழ்ந்ததோர்
நெருப்பின் கதையைச் சொல்கிறோம்!
செந்தமிழின் விதியினைச்
சிந்துபாடி மாற்றினான்
அந்தணரில் மறவனாம்
அவன்கதையைச் சொல்கிறோம்!
பெண்களுக்குக் கண்களாய்
பேரழகிப் பிள்ளையாய்
மண்ணில் விண்ணைக் கறந்தவன்
மாண்பை மன்றில் சொல்கிறோம்!
செல்லம்மாவின் காதலன்
செந்தமிழின் நாயகன்
சொல்முழுதும் சத்தியம்
சொன்னகதை சொல்கிறோம்!
அரசெடுக்கும் திருவிழா
அமரகவியின் பெருவிழா
அரங்கு முழுதும் நிறையவே
அனைவருமே வருகவே!
அன்புடன்,
ரமணன்