குறளின் கதிர்களாய்…(433)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(433)
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்து தூய்மை யவர்.
-திருக்குறள் -721 (அவை அஞ்சாமை)
புதுக் கவிதையில்…
பேசும் மொழியில்
புலமை மிக்கவராய்ச்
சொற்களின் வகைகளை
நன்கறிந்த நன்மனத்தார்,
கற்றார் கல்லாதார்
அவையறிந்து பேசும்போது
அச்சத்தால் வாய்சோர்ந்து
பிழை சொல்லமாட்டார்…!
குறும்பாவில்…
சொல்வகை நன்கறிந்த தூயோர்
அவையின் தரத்தை அறிந்து பேசுகையில்
அவையஞ்சிச் சோர்ந்து பிழைசொல்லார்…!
மரபுக் கவிதையில்…
பெருமை மிக்க மொழியதனில்
பேசும் சொற்கள் வகையறிந்தே
அருமை யான மனதுடையோர்,
அவையின் தரத்தில் கல்லாதோர்
கருத்தாய்க் கற்றோர் அவையதனைக்
கண்டே யதிலே பேசுகையில்
வருவ தில்லை யவர்தமக்கே
வழுவாய்ச் சொற்கள் பயத்தாலே…!
லிமரைக்கூ…
வகையதை யறிந்தே சொல்லை
அவையறிந்து தூயோர் சொல்கையில் அச்சத்தால்
சொற்குற்றம் வருவதே யில்லை…!
கிராமிய பாணியில்…
கூடாது கூடாது
பயப்படக் கூடர்து,
சபயில பேச
பயப்படவே கூடாது..
சொல்லுற சொல்லோட
வகய அறிஞ்ச
நல்ல மனசுள்ளவங்க,
படிச்சவங்க படிக்காதவங்க
நெறஞ்ச சபய
நல்லாத் தெரிஞ்சி அதுல
பேசுற பேச்சில
பயத்தில வருற
குத்தங்கொற இருக்காதே..
அதால,
கூடாது கூடாது
பயப்படக் கூடர்து,
சபயில பேச
பயப்படவே கூடாது…!