குறளின் கதிர்களாய்…(449)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(449)
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
-திருக்குறள் -545(செங்கோன்மை)
புதுக் கவிதையில்…
நீதி முறைப்படி
நிலைத்த செங்கோலாட்சி
செய்யும் மன்னவன்
நாட்டில்
காலந்தவறாமல் பெய்யும்
பருவ மழையும்,
மேனி குறையாத
பயிர் விளைச்சலும்
சேர்ந்தே நிலைத்திருக்கும்…!
குறும்பாவில்…
நீதியுடன் நிலைத்த செங்கோலாட்சி
செய்பவர் திருநாட்டில் தவறாத பருவமழையும்
குறையாத விளைச்சலும் சேர்ந்தேயிருக்கும்;…!
மரபுக் கவிதையில்…
நல்லதாய் ஆட்சியை நடத்தியேதான்
நாட்டிலே மக்களைக் காத்திடவே
சொல்லிடும் நூற்களின் வழியினிலே
சொற்பமும் பிசகிடா ஆட்சிதர
வல்லமை யுடையவர் நாட்டினிலே
வந்திடும் காலமே தவறிடாத
நல்லதாம் மழையுடன் நல்விளைச்சல்
நஞ்சையில் நிறைவுடன் சேர்ந்திடுமே…!
லிமரைக்கூ…
நந்நூல் முறைப்படியே ஆட்சி
நடத்துவோர் நாட்டில் தவறிடாப் பருவமழையும்
நல்விளைச்சலும் செங்கோன்மைக்குச் சாட்சி…!
கிராமிய பாணியில்…
நடக்கணும் நடக்கணும்
நல்லாட்சி நடக்கணும்,
நாட்டுமக்க நல்லாயிருக்க
நல்லாட்சி நடக்கணும்..
நீதி மொறப்படி
நல்லாட்சி
நடத்துற ராசாவோட
நாட்டுல
காலந் தவறாம
நல்ல மழயோட
கொஞ்சமும் கொறயாத
பயிர் விளச்சலும்
சேந்து வருமே..
அதால
நடக்கணும் நடக்கணும்
நல்லாட்சி நடக்கணும்,
நாட்டுமக்க நல்லாயிருக்க
நல்லாட்சி நடக்கணும்…!