எனது இறுதிப் பயணம்

சி. ஜெயபாரதன், கனடா
அடுக்கப்பட்டுள்ளன
எரிக்கட்டைகள்
சுடு காட்டில்,
படுக்கும் கட்டில் !
மீளாத் தூக்கம்.
தீ மூட்டக் காத்திருந்தார்.
உயிர் நீத்த உடல்
விழித்திருக்கும் இமை மூடாது.
முடியவில்லை
இன்னும் என் பணி !
ஆத்மா
சுற்றிச் சுற்றி வருகுது
உடலை
துணைக்கோள் போல் !
கர்ணனைக் கொல்ல முடியவில்லை.
போர்க் களத்தில் !
தர்மம் காக்கும் கர்ணனை.
தங்கிச் செழிக்கும்
கருணைக் கனடாவுக்கு
அங்க தானம்
அளிக்க வேண்டும்.
கண்ணோ, கணையமோ,
காற்றுப் பையோ,
கிட்னியோ
எடுத்துக்கொள்வீர்.
படுத்துக்கொள்கிறேன்
பக்குவமாக.
கடேசிக் கொடை.
செத்தும் கொடுப்பான்
சிங்கார வேல்
மைந்தன்.
********
இறப்பில்லை எனக்கு
இப்பிறப்பு தொடுவானில்
அத்தமனம் ஆச்சு!
எனக்கினி இறப்பில்லை
எனக்கினி பிறப்பில்லை.
எந்தன்
செந்தமிழ் நூல் படைப்புகள்
நூறாண்டு வாழும்.
பாரதி சீடன் பாரதன்
பேர் மீளும்.