குறளின் கதிர்களாய்…(454)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(454)
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ் சொலின்மை யறிந்து.
– திருக்குறள் – 6435 (சொல்வன்மை)
புதுக் கவிதையில்…
நாடாளும் மன்னனுக்கு
நலமுரைக்கும் அமைச்சன்
கேடு வரா வகையில்
நற்சொல் பேசிடவேண்டும்..
பேசும் சொல்லை மிஞ்சும்
பெருஞ்சிறப்பு உள்ள
பிறசொல் இல்லையெனும்
பெருமையறிந்து பேசுவோன்தான்
சொல்வன்மை மிக்க அமைச்சனே…!
குறும்பாவில்…
சொல்லும் சொல்லை மிஞ்சிடச்
சொல்வேறு இல்லை என்பதறிந்ததை அரசனிடம்
சொல்பவனே சொல்வல்லமையுள அமைச்சன்…!
மரபுக் கவிதையில்…
நாட்டை யாளும் மன்னனுக்கு
நலம துரைக்கும் நல்லமைச்சன்
கேட்டைத் தாரா வகையினிலே
கிட்டும் நற்சொல் லுரைக்கையிலே,
காட்டும் சொல்லை மிஞ்சிடவே
கணக்காய்ப் பிறசொல் இல்லையெனும்
கோட்பா டறிந்த சொல்வலனைக்
கொள்வாய் நல்ல அமைச்சனென்றே…!
லிமரைக்கூ…
கேட்டைத் தராத சொல்லை
மிஞ்சிடச் சொல்வேறிலை என்றறிந்து மன்னனிடம்
சொல்வதே அமைச்சனின் எல்லை…!
கிராமிய பாணியில்…
மந்திரி மந்திரி
நல்ல மந்திரி,
நல்லசொல்ல ராசாவுக்குச்
சொல்றவனே நல்ல மந்திரி..
நாட்டுக்கு நல்லது செய்ய
ராசாவுக்கு
நல்லதாச் சொல்லுற மந்திரி,
சொல்லுற சொல்லவெட
ஒசந்த சொல்லு
வேற இல்லங்கிறத நல்லா
அறிஞ்சி சொன்னா
அவந்தான் பேச்சித்தெறமவுள்ள
நல்ல மந்திரி..
தெரிஞ்சிக்கோ,
மந்திரி மந்திரி
நல்ல மந்திரி,
நல்லசொல்ல ராசாவுக்குச்
சொல்றவனே நல்ல மந்திரி…!