குறளின் கதிர்களாய்…(456)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(456)
ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி
னாறென்ப ராய்ந்தவர் கோள்.
-திருக்குறள் – 662 (வினைத் திட்பம்)
புதுக் கவிதையில்…
தடைபடும் செயல்களைத்
தவிர்த்துச் செய்யாமலிருப்பதும்,
தடைபட்டுவிட்டால் மனம்
தளர்ந்துவிடாமல்
தாங்கிக்கொள்வதும் ஆகிய
இரண்டின் வழியே கடமையாற்றுதல்,
என்பது
நீதிநூல் ஆராய்ந்தறிந்த
நல்லமைச்சரின் கொள்கையாகும்…!
குறும்பாவில்…
தடைபடும் செயல்களைத் தவிர்த்தல்,
தடைபடின் தளராதிருத்தல் எனுமிருவழி செயலாற்றல்
நீதிநூலறிந்த அமைச்சரின் கொள்கையே…!
மரபுக் கவிதையில்…
செய்யும் செயல்கள் தடைபட்டால்
செயாம லவற்றைத் தவிர்த்திடுதல்,
தெய்வச் செயலால் தடைவரினும்
தேங்கி நின்றே தளர்வுறாமல்
உய்யும் வகையில் மனதினிலே
உறுதி யுடனே தாங்கலென
மெய்யா மிரண்டை ஆய்ந்தறிந்த
மேலாம் அமைச்சர் கொள்கையாமே…!
லிமரைக்கூ…
தடைபடும் செயல்களைக் கண்டே
தவிர்த்து, தடைவரின் தளர்வுறார் அமைச்சர்
இவற்றைக் கொள்கையாய்க் கொண்டே…!
கிராமிய பாணியில்…
செய்யாத செய்யாத
தடங்கலு வருற
செயலுகளச் செய்யாத,
தளராத தளராத
தடங்கலு வந்தாத் தளராத..
தடபடுற செயலுகள
செய்யாம உடுறது,
தடங்கலு வந்தா
தளந்து போவாம
தைரியமா இருக்கிறது,
இந்த ரெண்டுந்தான்
வௌரந் தெரிஞ்ச
மந்திரியோட கொள்க..
அதால
செய்யாத செய்யாத
தடங்கலு வருற
செயலுகளச் செய்யாத,
தளராத தளராத
தடங்கலு வந்தாத் தளராத…!