கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் 2)
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. ஆஸ்திரேலியா
“படையை வெல்லும் பனை” என்று எங்கள் இலக்கியங்கள் வியந்து நிற்கின்றன. என்ன! …. படையை வெல்லும் பனையா அப்படி இந்த பனையில் என்னதான் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? பனையை புசித்தோர் படையை வெல்லும் ஆற்றல் பெற்றவராவார் என்று சங்கப்பாடல் காட்டி நிற்கிறது. பழம்பெரும் காவியங்கள் பனைதான் கற்பகதரு என்கிறது. அதாவது அமிர்தம். அமிர்தத்தை உண்டவர்களுக்கு இறப்பே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்பூவுலகில் இறப்பே இல்லை என்பதன் பொருள் மரணத்தை காலம் தாழ்த்தி தருவிப்பதையே குறிக்கும். பனையின் அணைப்பில் வாழ்ந்த காரணத்தால் மரணம் கூட சற்று தள்ளியே நிற்கும். இதனால் படையினையே வெல்லும் நிலை வரும் என்பதைக் குறியீடாக உணர்த்தவே “படையை வெல்லும் பனை” என்னும் மொழி உரு வாகியது எனலாம். பனைக்கு அணை (அணைமரம்) என்ற பெயரும் உண்டு. பல கன எடையுள்ள தண்ணீரை அணை தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றது. அதே போல் பனையை தன் வாழ்வில் துணையாக கொண்டு வாழும் மனிதனும் உறுதியானவனாக திகழ்வான் என்பதுதான் பனையால் படை வெல்லும் என்பதற்கு சான்றாய் தெரிகிறது எனலாம்.
பனைக்கு பெண்ணை, கூந்தல், காமம், உபதாகம், ஐந்தார், ஐந்தாலம், கரும்புரம், கரும்புல், பகற்பலி, புற்றாலி புற்பதி, போந்து, திருணராசன், துராரோகம், திருவிராசன், குவீரம், தாளம், தருவிராசன், புல்லூதிகம், புற்பதி, என பல பெயர்கள் இருக்கின்றன. பனைக்கு இவ்வாறு பல பெயர்கள் இருப்பதுபோல் – பனையில்; ஆண் பனை, பெண்பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப் பனை சீமைப்பனை, ஆதம்பனை திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம் பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலிய ப்பனை வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை – எனப்பல வகைகள் இருக்கின்றன என்பதையும் கருத்திருத்தல் அவசியமாகும்.
பூமியிலே கற்பகதரு என்று வியந்து நிற்கும் பனைபற்றி எண்ணுகின்ற வேளை பனையுடன் எங்களின் இலக்கியங்கள், புராணங்கள், திருமுறைகள், தொடர்புபட்டிருப்பதும் அவைகளினால் குறிப்பிடப்படுவதும் கருத்திருத்த வேண்டியதே. பஞ்சத்தைத் தாங்கக் கூடியதான மரமாகவே பனையினைச் சிவன் படைத்தார் என்று தலபுராணங்கள் வியந்து நிற்பதும் நோக்கத்தக்கதே. ஞானிகளாலும் அறிஞர்களாலும் போற்றப்படும் வகையில் எங்களின் கற்பகதருவான பனை விளங்கியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தியாக இருக்கிறது அல்லவா!
சூரபதுமன் பனைக்கொடியினைத் தாங்கி வந்தான் என்று கந்தபுராணம் காட்டுகிறது. கம்பனது இராமாயணமும் பனையினைப் பற்றி பாலகாண்டப் பகுதியில் காட்டுகிறது. பலராமர், வீஷ்மர் ஆகியோர் பனைக் கொடியினை வைத்திருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது. திருமுருகாற்றுப்படையும் பனையினைக் காட்டுகிறது. நற்றிணையில் பனையினைப் பரதவர் தெய்வமாக வழிபட்டார்கள் என்று காட்டுவதும் கருத்திருத்த வேண்டியதே! “தேம்படு பனையின் திரள் பழத் தொரு விதை” என்று ஒளவையாரும் பனையினைக் காட்டிநிற்கிறார். திருஞானசம்பந்தப் பெருமான் ஆண் பனைகளைப் பெண்பனை ஆக்கினார் என்பதை திருமுறைகள் வாயிலாக அறிகின்றோம். சம்பந்தப் பெருமானது காலத்தில் பனந்தோப்புகள் தனித் தோட்டங்களாக இருந்திருக்கின்றன. சிவன் அடியார்கள் பனைவளம் பெருக்குவதிலும் பெருதும் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது. தத்துவத்தையும் உலகியலையும் ஞானத்தால் பார்த்தவர் திருமூலர் என்னும் ஞானி. அவரும் பனையினைக் குறிப்பிட்டு தத்துவம் உரைப்பதும் கருத்திருத்த வேண்டியதே !
“ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியிற்
சாறு படுவன நான்கு பனையுள
ஏறற் கரியதோர் ஏணியிட் டப்பனை
ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே”
இப்பாடலில் பனையின் பெயர் இடம் பெறுகிறது. ஆனால் அதனைத் தத்துவம் உரைப்பதற்கு திருமூலர் என்னும் ஞானி கையாழுவதுதான் குறிப்பிடத்தக்க தாகும். பாடலின் கருத்தை அறிய ஆவலுடன் இருப்பீர்கள்! கருத்தையும் காண்போம் பனையையும் காண்போம்! ‘ஆறு ஆதாரங்களாகிய தெருவின் கீழுள்ள மூலாதாரமாகிய சந்தியில், பக்குவமடையாதபோது இருள் முகமாகத் தொழிற்படுவன ஆகிய நான்கு இதழ்களாகிய பனைகள் உள்ளன. ஏறுவதற்கு அருமையான சுழு முனையாகிய ஏணியை வைத்து அப் பனை மரத்தின் மேலேறி சகஸ்ரதளஞ் சென்றேன். ஆதாரமாகிய ஏழுகடலும் ஒன்றாகி ஒளிமயமாகக் பொங்குவதைக் கண்டேன். (பனை – பனைமரம் போன்ற முதுகத் தண்டு).
காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே இருபத்தெட்டு கிலோ மீற்றர் தொலைவில் வந்தவாசி செல்லுகின்ற வழியில் திருவோத்தூர் என்னும் தலம் இருக்கிறது. இத்தலத்தின் தலவிருட்சமாய் இருப்பது கற்பகதரு வான பனையாகும். சம்பந்தப் பெருமானால் பாடப்பட்ட தலமாகும். இத்தலத்தைவிட – திருப்பனந்தாள், திருப்ப னையூர், திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு), புறவர் பனங்காட்டூர் ஆகியவையும் பனையினைத் தலவிருட் சமாய் கொண்டிருக்கின்றன என்று அறியக்கிடக்கிறது.
திருவோத்தூர் தலத்தை வலம் வருகின்ற வேளை வடக்குப் பகுதியில் தலமாரமாகிய பனை ஓங்கி வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்தத் திருவோத்தூரில் இருந்த சிவன் அடியார் ஒருவர் – சிவனுக்காகவே பனைகளை வளர்த்து வந்தார். அப்பனைகளோ ஆண்பனைகளாகி காய்க்காது இருந்தன. இந்த அன்பர் காலம் சமணம் சைவத்தை எதிர்த்து நின்ற காலப் பகுதியாகும். சைவரான சிவனடியாரைச் “உமது ஆண் பனை யினை உங்கள் சிவன் பெண் பனை ஆக்குவாரா” என்று சமணர்கள் கேலி செய்தபடியே இருந்தனர். அடியாரும் கவலையில் மூழ்கியே இருந்தார். சம்பந்தப் பெருமான் இத்தலத்துக்கு வருகைதந்த வேளை அடியார் தமது மனக்கவலையினை வெளியிடுகிறார். சம்பந்தப் பெருமான் இறைவனைப் பிரார்த்தித்து
“பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி – நிறைவில்
“குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளை
பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்
விரும்பு வார்வினை வீடே”
என்று பாடியவுடன் “நெருங்கும் ஏற்றப் பனையெல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை அரும்பு பெண்ணை ஆகின” என்று சேக்கிழார் வாக்கால் அறியக் கிடக்கின்றது. “அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்” என்னும் சேக்கிழார் வார்த்தை மனமிருத்த வேண்டியதே !
மணிவாசகப் பெருமானும் பனையின் அழகினை “கண்ணார்ந்த பெண்ணை” என்று திருக்கோவையாரில் தொட்டுக் காட்டுகிறார்.
“தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையழகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா”
என்னும் பாடலில் திருக்குறள் பனைபற்றிக் கூறும் செய்தி காட்டப்படுகிறது.
“பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று எண்ணிய நாமம் பனையென இசைப்பர்” என்று திவாகரம் காட்டுவதும் நோக்கத்தக்கது.
சைவநாயன்மார் பனைபற்றிப் பாடியதுபோல் வைணவ அடியார்களான ஆழ்வார்களும் பாடியிருக்கும் செய்தியையும் காணக்கூடியதாய் இருக்கிறது.
திருமழிசைப் பிரான் திருச்சந்த விருத்தமாய்
“கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்ட தோள் இரணியன் சினங்கொளாகம் ஒன்றையும் இரண்டு கூறு
செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே”
இப்பாடல் அமைகிறது.இப்பாடலில் பனைபற்றிய செய்தியும் இடம் பெறுவது நோக்கத்தக்கதே. ‘நீர்க் காக் கைகள் உலாவும் பொய்கையில் கரிய பனம் பழங்கள் விழவும், வாளைமீன்கள் அவற்றை நீர்க்காக்கை யாகக் கருதி விழுங்கப் பாயும் – திருக்குறுங்கடியில் எழுந்த பெரியோனே! ஆளரியாய்த் தோன்றி இர ணியனை இரு கூறாக்கியதும் நீ தானே! என்று இப்பாடல் கருத்து அமைகிறது. இங்கு பனையின் பழம் காட்டப்படுவது பனையினை உட்புகுத்தி நிற்கிறது அல்லவா!
நம்மாழ்வார் திருமொழியில் பனைமரம் பற்றி “பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ” என்கின்றார். திருமங்கை ஆழ்வார் – “ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலைவேல் எங்கள் இராவணனார் ஓடிப் போனார்” என்று குறிப்பிடுகிறார்.
பனைபற்றி பல செய்திகளை இலக்கிய வழியில் பயணப்பட்டால் காணக் கூடியதாக இருக்கிறது. தோடு என்றால் அது பெண்கள் காதில் அணிவதுதான். சிவனின் ஒரு காதில் தோடு இருக்கிறது. இதனைச் சம்பந்தர் “தோடு டைய செவியன்” என்று காட்டுகிறார். சிவனின் இடது செவியில் தோடு இருக்கிறது. வெண்தோடானது பனம்பூவின் புறவிதழ் போலிருக்கிறதாம்
“பெருமடற் பெண்ணைப் பிணர்ந்தோட்டுப் பைங்குரும்பை” என்று கலித் தொகையும், “இனமடற் பெண்ணை ஈர்ந்தோடு திருத்தி” என்று பெருங்கதையும் , “இரும்பனை வெண்தோடு மலைந்தோன்” என்று புறநாநாறும் ,
“தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்தான பிறவும்” என்று தொல்காப்பியம் தொட்டுக் காட்டுவதும் கற்பகதருவாம் பனை பற்றியதே என்பதை கருத்துவது அவசியம் அல்லவா!
தங்கத்தாத்தா என்று வியந்து போற்றப்படும் எங்கள் நவாலியூர் தந்த புலவர் பெருமான் கற்பகதருவாம் பனைபற்றி “தாலவிலாசம்” என்று காவியமே பாடிப் பெருமகிழ்வு அடைகின்றார். அவரின் உள்ளத்திலிருந்து எழுந்த எண்ணங்களை அவரின் தாலவிலாசத்தின் வாயிலாக கண்டு களிப்படையலாம். கற்பகத ருவாம் பனையினை எங்கள் தங்கத்தாத்த அணுவணுவாய் இரசிக்கிறார்! அணுவணுவாய் ஆராய்கிறார்! பனைபற்றி சிறந்த நூலொன்றினை அவரின் அகத்தினின்று எழுந்த அரிய வார்த்தைகளால் கவிதை வடிவில் தந்திருக்கிறார்! அவரின் அந்த வண்ணத்தமிழ் கவிதைகளைப் படிப்பவர்கள் கற்பக தருவாம் பனையினை நிச்சயம் கருத்திருத்தாமல் விடவே மாட்டார்கள். அந்த அளவுக்கு எங்கள் தங்கத்தாத்தாவின் மந்திரச் சொற்கள் கற்பகதருவை காட்டி நிற்கிறது எனலாம்.
“மன்னுயிர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெலாம்
பன்னுகலி வெண்பாவாற் பாடவே – முன்னவர்வரு
போதனே விக்கினங்கள் போக்குகின்ற பூதகண
நாதனே முன்னே நட”
என்று தாலவிலாசத்துக்குக் காப்புச் சொல்லி – பின்னர் நூல் நிலை பற்றி சொல்லி ……
“ஓங்கார மூலத் தொருவனிரு தாடொழுது
பாங்கார் தமிழ்க்கலிவெண்பா பாட்டினால் – வீங்குபுகத்
தால விலாசந் தனையுரைப்பேன் தெண்டிரைசூழ்
ஞால முணர்க நயந்து”
நிறைவாக கற்பகதருவை வியந்து வாழ்த்தி மகிழுகின்றார்.
“பொன்னின் மழைவாழி பூமி நலம்வாழி
மன்னுயிர்கள் வாழி யறம்வாழி – எந்நாளும்
கற்பகம்போ லீயுங் கடவுட் பனைவாழி
நற்றமிழும் வாழி நயந்து”
தங்கத்தாத்தா நினைவுக்கு வருகிறார். கூடவே சின்னத்தம்பிப் புலவரும் வந்து நிற்கிறார். அவரும் கற்பகதருவை விட்டுவிடவில்லை…….
“கோள்நிலைகள் மாறி மாரிமழை வாரி வறண்டாலும்
கொடிய மிடி வந்து மிகவே வருந்தினாலும்
தான் நிழலளிதுயர் கலாநிலையமே போல்
தந்து பல வேறு பொருள் தாங்கு பனையே “
என்று சின்னத்தம்பிப் புலவரும் கற்பகதருவை வியந்து நிற்கிறார் என்பதற்கு இக்கவியே சான்று.
பனை நூறு என்னும் நூலும் கற்பகதருவினை எப்படிச் சொல்லுகிறது பாருங்கள்…….
“நீண்ட வுடலும் நேரிய கோடும் கார்நிறமும்
பூண்டா யன்ன பூவுலகத்தில் நின்னைப்போல்
யாண்டு மிலாதால் வைரமுடைநற் றாருவெனில்
தூண்டும் மன்பே தூயதலாது தோற்றம்மே”
“நீற்றைப்பூசும் வானம் பரவும் நிறையும்நூல்
ஏற்றுக் கொள்ளும் யாண்டு முவக்கு மெவர்க்கும்
சாற்றும் ஞானந் தந்திடு மன்பிற் றலைநிற்கும்
போற்றந் தணர்கள் போலப் பனையும் பொலியுமே”
“வேண்டிய யாவு மீயும் வியன்றரு மியல்புகண்டே
ஆண்டுபல் லாயி ரம்முன் நறிவுடை யெமது முன்னோர்
காண்டரு தாலந் தன்னைக் கற்பகத்தாரு வென்றார்
நீண்டநா ளோம்பி இஃதை நீவிரின் புற்று வாழ்வீர் “
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராய் இருந்தவர் கணபதிப்பிள்ளை அவர்கள். சுவாமி விபுலானந்தரின் நேரடி மாணவராக விளங்கியவர். மொழி ஆராய்ச்சி வல்லுனர். அதே வேளை நாட்டர் வழக்கியலிலும் ஆற்றல் மிக்கவர். இவரின் கவிகள் படிக்கப் படிக்கச் சுவையினை நல்கும். அவரின் எண்ணத்தில் கற்பகதரு வருகிறது பார்ப்போமா ……..
“அழகுறு வன்னம் அமைவுறப் போட்டுத்
தொழிலமை வனிதையர் திறமையாலிழைத்த
பெட்டியாய் குட்டான் பெயர் பெறு கதிர் பாய்
அடுக்குப் பெட்டியும் சுடும்
பிட்டவி நீத்துப் பெட்டியும் சுண்டும்
பனையின் குருத்தை பதனமாய் வார்த்து
பன்னிறம் தீட்டிய பன்னோலை கொண்டு
கைவல் இளையர் கருதி இளைத்த
ஆனைப் பெட்டியும் அழகிய தேரும்
கொட்டைப் பெட்டியும் கிலுக்குப் பெட்டியும்
எனவாங்கு,
இன்னணம் நெருங்கிடு பன்னங் கடைகளும்”
என்று சொல்லியதோடு அமையாமல் , கற்பகதருவில் மனத்தை இருத்தி
“நரைதோல் இயனம் அரையில் கட்டி
அதன் கீழ் முட்டி அசைதர விட்டு
மார்போடணையத் தோளது தூக்கி
உரனுரு தளை நார் காலினை மாட்டிக்
கால் மடித்து உன்னிக் கரு நெடும் பனைமிசை
பாளை தட்டி பார்த்துச் சீவி
ஏர் தரும் ஊசலோடு இயனத்தசையும்
இன் கள் முட்டியொடு இறங்கும் போதில்
அடி மரத்திருந்து நுனி வரை நோக்கி
நாநீர் ஊற உதடு வருடி
பெரு மகிழ்வோடு பிளாவை ஏந்தி
அருவிலை கொடுத்து நறவினை மாந்திக்
களிப்புறு மாக்கள் விளிப்புறு கும்பலும்”
என்று பேராசிரியர் மனமெழுந்த காட்சி இப்படிக் கவியாய் விரிகிறது.
நாட்டார் பாடல்களிலும் பனைபற்றி வருவருகிறது. அப்பாடல்தான் என்ன சொல்லுகிறது எப்படிப் பனையைக் காட்டுகிறது என்று பார்ப்போமா ….
“பட்டாங் கத்தி பள பளென
பாலையன் கோட்டை நறறென
பனையும் கருத்திருக்கும்
பனை வட்டும் சிவந்திருக்கும் – அதிலே
இறக்கிய பதநீரைப் பருகினால்
தலை கிறு கிறுக்கும்”
“தேடுதற்கும் வகையறியேன் – உன்
திருக்கோயில் தவறணையைத் தோடிக்கொண்டு
ஓடுவரும் பக்தர்க்கு குறைவே இல்லை
உன்னுடைய கிருபையினைச் சொல்லி சொல்லிப்
பாடுதற்கு வகையறியேன் – பாளை வேந்தா
பாவிகளை மகிழ்விக்கும் பான தேவா
நீடுலகில் என் போன்ற ஏழைகட்கு
நீயின்றி யாருதவி சொல்லுமையா”
“சண்டையிலே பிறப்பாய் போற்றி
சல்லியைப் பறிப்பாய் போற்றி
மண்டையை உடைப்பாய் போற்றி
மகளிரை அடிப்பாய் போற்றி
பாளையில் பிறப்பாய் போற்றி
பனைதரும் கொடையே போற்றி”
என்று நாட்டுப்பாடலிலும் பனைபற்றி வருவதும் – பனையின் நிலையினை பாமரர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை காட்டி நிற்கிறதல்லவா!
” நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”
இந்தப்பாடல் யாரால் எழுதப்பட்டது என்பது தெரியாத நிலையில் கவிதையில் வருகின்ற (முழுக்கவிதை யைப் பார்க்க) சத்திமுத்த வாவி என்பதை எண்ணி அப்புலவரை சத்திமுத்துப் புலவர் என்று அடையாளப்படுத்தி விட்டார்கள். அப்பெயரே நிலையாகியும் விட்டது, “பழம்படு பனையின் கிழங்கு பிழந்தன்ன பவளக் கூர்வாய்” என்னும் வரிகள் புலவரின் அழகான படிமமாய் இங்கே அமைகிறது. எங்களின் கற்பகதருவாம் பனையினை – பெயர் தெரியா ஒரு புலவரும் தன்னுடைய மனத்தில் இருத்தி நல்லதொரு கவிதையாய் வடித்திருக்கிறார். சிறிய வயதில் படித்துப் பாடமாக்கிய இக்கவிதையும் கற்பகதருவாம் பனையினைக் காட்டியே நிற்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியது அல்லா !
(வளரும்)