தமிழ்த்தேனீ

Tamil_thenee“டேய் ரிஷி, எழுந்திருடா. மணியாச்சு இன்னிக்கு தீபாவளி, எழுந்து சீக்கிரமா குளிச்சிட்டு புதுத் துணியெல்லாம் போட்டுக்கணும், பூஜை பண்ணனும், பட்டாசெல்லாம் வெடிக்கணும், ஸ்வீட் சாப்பிடணும். இப்பிடித் தூங்கினா என்ன செய்யறது? இதுக்குதான் நேத்திக்கு சீக்கிரமா படுத்துக்கோடா; அப்போதான் காத்தாலே சீக்கிரமா எழுந்துக்க முடியும்னு சொன்னேன். கேட்டாதானே?” என்றாள் மங்களம்.

கண்விழித்துப் பார்த்தான் ரிஷி. “எல்லாம் மங்கலா தெரியறது. இன்னும் பொழுது விடியலை போல இருக்கு” என்று அப்படியே கவிழ்ந்து படுத்துக்கொண்டு ரிஷி தூங்க ஆரம்பித்தான். யாரோ உலுப்பி உலுப்பி எழுப்பினர். “அட என்னம்மா இது? தூங்கவிடாம தொந்தரவு பண்றியே!” என்று சலிப்புடன் எழுந்து உட்கார்ந்தான் ரிஷி. “சரி சரி போயி சீக்கிரமா பல்லு தேச்சுட்டு வா” என்றாள் மங்களம்,

ரிஷி முதல் காரியமாக, நேற்று வைத்திருந்த பட்டாசு பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் எடுத்து வெளியில் அடுக்கி வைத்தான், அங்கே வந்த மங்களம், “என்னடா இது? அப்புறமா பட்டாசெல்லாம் எடுக்கலாம். இப்போ வாடா நலங்கு இடணும்” என்றாள். “இரும்மா, இதோ ஒரே ஒரு பட்டாசு வெடிச்சிட்டு வரேன்” என்றபடியே ரிஷி ஓடினான்.

மணையில் கோலம் போட்டு, வரிசையாக எல்லோரையும் உட்காரவைத்து, எதிரே தட்டில் இருந்த நலங்குச் சாந்தை எடுத்து “காலை நீட்டுங்கோ” என்றபடி மங்களம் எல்லோருக்கும் நலங்கிட்டாள். “மாப்பிள்ளைக்கு நம்ம பொண்ணு காயத்ரியை நலங்கு வைக்கச் சொல்லு” என்றார் கல்யாணராமன். அதேபோல் மாப்பிள்ளைக்குக் காயத்ரி நலங்கிட்டாள். “மாப்பிள்ளை இப்போ  நீங்க காயத்ரிக்கு நலங்கிடுங்கோ” என்றார் கல்யாணராமன். மாப்பிள்ளையும் சிரித்தபடி காயத்ரியின் காலைப் பிடித்து நலங்கிட்டார். வெற்றிலையில் சற்றே சுண்ணாம்பு தடவி, பாக்கு வைத்து, மங்களம் எல்லோருக்கும் கொடுத்தாள். “சீக்கிரம் எல்லாரும் குளிச்சிட்டு வாங்கோ” என்றாள். “சார்  நீங்க  மாமிக்கு நலங்கிட்டு விடுங்கோளேன்” என்றார் மாப்பிள்ளை. மங்களம் வெட்கப்பட்டாள். ரிஷி மனத்தில் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

நலங்கு இட்டு முடித்ததும் எல்லோருக்கும் தலையில் ஒரு கை நல்ல எண்ணெயை வைத்துவிட்டு, “சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ” என்றாள் மங்களம். அனைவரும் குளித்துவிட்டு வந்தவுடன் புதுத் துணிகளை  ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்து, எல்லோருக்கும் மங்களமும் கல்யாணராமனும் ஜோடியாக நின்று அளித்தனர். அனைவரும் அவர்களை நமஸ்கரித்து துணிகளை வாங்கிக்கொண்டு புதிய துணிகளை அணிந்துகொண்டு பட்டாசுகள் வெடிக்க கிளம்பினர்.

“கொஞ்சம் இருங்கோ. சமையல் ஆயிடுத்து. பூஜை அறையிலே அலங்காரம் பண்ணி வெச்சிருக்கேன். எல்லாரும் வந்து சேவிங்கோ. பூஜையை முடிச்சிட்டு அப்புறமா பட்டாசுக் கதையைப் பாருங்கோ” என்றாள். கற்பூர ஹாரத்தி எடுத்து முடித்து பூஜை முடிந்தவுடன் எல்லோரும் பட்டாசு வெடிக்கக் கிளம்பினர். ரிஷி, “அத்திம்பேர், நான் ஏரோப்ளேன் வெடி வெடிக்கப் போறேன்” என்றபடி மத்தாப்பு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஓடினான். “இந்த புடவையிலே நீ ரொம்ப அழகா இருக்கே” அப்பிடீன்னு சொல்லிண்டே காயத்ரியிடம் நெருங்கினான் மாப்பிள்ளை. யதேச்சையாகத் அங்கே  வந்த கல்யாணராமன், காப்பியைக் கையில் வைத்தபடி திரும்பினார். மாப்பிள்ளை திடுக்கிட்டு அசடு வழிந்தார்.

கல்யாணராமன், “ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆ” என்று சிரித்தபடியே நகர்ந்து போனார்.

ரிஷி, “அத்திம்பேர் சீக்கிரம் வாங்கோ”ன்னு கையைப் பிடித்துக்கொண்டான். “இதோ வருவார்றா. நீ பட்டாசு வெடிச்சிண்டே இரு. இதோ வந்துண்டே இருக்கார் மாப்பிள்ளை”  என்றார் கல்யாணராமன். “டேய் ரிஷி, இந்தாடா உனக்குன்னு அமெரிக்காவிலேருந்து வாங்கிண்டு வந்தேன். ஸ்பெஷல் சாக்லேட்” என்றார் மாப்பிள்ளை. “தேங்க்ஸ்” சொல்லி அதை வாங்கிக்கொண்டு ரிஷி ஓடினான்.

===========================

“ஏங்க, எழுந்து வாங்கோ” என்று யாரோ எழுப்பினர். கண் விழித்தார் ரிஷி. எழுந்து மெதுவாக நடந்து வந்து, ஈசிசேரில் சாய்ந்துகொண்டு கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு, காதில் காது கேட்கும் கருவியையும் மாட்டிக்கொண்டார். தீபாவளி கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது.  அத்தனையும் அவரின் மனத்துக்குள்ளே அழியாத மரபு வேர்களாய் ஆழப் பதிந்திருக்கும் இனிய நினைவுகள் என்று.

அவருடைய மனைவி சௌந்தரம் எழுந்து, “வாங்கோ, அப்பிடியே லேசா குளிச்சிட்டு வந்தீங்கன்னா, பூஜைக்கு எல்லாம் தயாரா வெச்சிருக்கேன். பூஜை பண்ணிட்டு  சாப்பிடலாம்” என்றாள். தலையை ஆட்டினார் ரிஷி. எவ்வளவோ முறை அவளைப் பார்த்தவர்தானே. ஆனால் இன்றும் அவருக்கு அவர் மனைவி சௌந்தரத்தைப் பார்த்தால், அம்மா மங்களத்தின் நினைவே வந்தது. பாரம்பரிய மரபு வேர்களின் ஆழம், நமக்கெல்லாம் இன்னும் சரியாகப் புரியவில்லையோ என்று, ‘ஓ இதுதான் ஜென்ம ஜென்மாந்திரத் தொடர்போ’ என்று தோன்றியது அவருக்கு.

எழுந்து போய், “பூஜை பண்ணலாமா சௌந்தரம் அம்மா” என்றார்!

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “ரிஷி மூலம்

 1. நினைவுகள் மறைவதில்லை. இனிய நினைவுகள் அழிவதில்லை. அவை ‘ஸெளந்தரம் அம்மாவை’ போல் மறு அவதாரம் எடுத்தவண்ணம். பெரிசு ரிஷியைப்போல்: என் பாட்டி தலக்கோசரம் கட்டை வச்சுண்டு படுத்திருக்க, தாத்தா அங்கே வர, அவள் அடித்துப்பிடித்துகொண்டு எழ, விழ, தாத்தா ஆதுரத்துடன் அவளை அணைத்துக்கொண்டார். இதை மறக்க இயலுமோ?

 2. அன்பு சகோதரர். பழைய சம்பிரதாயங்கள் எப்போதும் வயதானவர்களுக்கு இனிக்கிறது ஒல்ட் இஸ் கோல்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் அந்தக்கூட்டுக்குடும்பம்
  பாசப்பிணைப்பு எல்லாம் தற்போது காணாமல் போய்வருகிறது,
  இதைப்படிக்க பலருக்கு பழையகால நினைவு நிச்சியமாக வரும்
  அன்புடன் விசாலம்

 3. அய்யா……..உண்மையிலேயே நெஞ்சைத் தொட்ட யதார்த்தம்…….
  கண்கள் கலங்கியது ஏன் என்றுதான் தெரியவில்லை……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *