ஆனந்தம் அருளும் ஆனந்தவல்லி அம்மன்
இராஜராஜேஸ்வரி
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு குட்டம் கிராமத்தில் குளக்கரையில் கேரளாவில் இருந்து வந்த சில குடும்பத்தினர் குடியேறினர். அன்றைய கேரளாவை ஆட்சி செய்த அரசில் சர்வ அதிகாரங்களும் பெற்றிருந்த இவர்கள் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவதற்காக இவ்வூரைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் பத்மனாபபுரத்தில் வாழ்ந்த போது அங்கே குடி கொண்டிருந்த தங்கள் குல தெய்வமான ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.
அம்மனைப் பிரிந்து வாழும் துயரம் அவர்களின் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. இச்சூழ்நிலையில் அவர்களில் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், “பக்தா! நீ என்னை விட்டு எவ்வளவு தூரம் போனாலும் எனது அருள் உனக்கு என்றும் உண்டு. என் பெயர் உன் நினைவில் இருக்கும் வரை நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன். என்னை வழிபட முடியவில்லையே என்ற குறை இனி உனக்கு வேண்டாம். நாளை, இந்த ஊருக்கு அருகே உள்ள தருவை குளத்தில் எனது விக்ரகம் மிதந்து வரும். அதை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா” என்று வாக்காக ஒலித்தாள். அதன்படியே விக்ரகம் மிதந்து வர, கேரளாவிலிருந்து வந்திருந்த குடும்பத்தினர் அகம் மகிழ்ந்தனர். கேரள பாணியிலேயே அம்மனுக்கு கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.
கோவிலின் அமைப்பு
கோவிலின் முகப்புப் பகுதியில் காவல் தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர். அவர்களைத் தரிசித்து விட்டு முன் மண்டபத்தில் அடியெடுத்து வைக்கிறோம். புகழ் பெற்ற எல்லோராக் குகையில் உள்ள புத்தர் கோவிலை நினைவுபடுத்தும் வகையில் இந்த மண்டபத்தின் மேற்கூரை வளைந்தவாறு அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
அதனைக் கடந்து சென்றால், பிராகார மண்டபத்தை அடையலாம். கோவில் பூஜை நேரங்களில், இந்த மண்டபத்தில், பெண் பக்தர்கள் மட்டுமே நின்று கொண்டு வழிபட வேண்டும் என்கிற நியதி காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில், ஆண்கள் இந்தப் பிராகாரத்தின் வழியாக கோவிலை வலம் வந்து வழிபடலாம். இந்தப் பிராகாரத்திலேயே கால பைரவர் தனி சந்நிதி கொண்டிருக்கிறார். விநாயகருக்கும் தனி சந்நிதி உள்ளது. கோவிலுக்குள் சிறுமி வடிவத்தில் மங்களகரமாக அருள் பாலிக்கிறார் அன்னை ஆனந்தவல்லி அம்மன்.
நோய் தீர்க்கும் மரம்
இக்கோவிலின் சிறப்பு அம்சம் தூங்காப் புளியமரம். ஆனந்தவல்லி அம்மனின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது நடப்பட்ட, 300 வயதை உடைய அதிசய மரம். பிரம்மாண்ட வடிவில், பார்த்த மாத்திரத்திலேயே நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
மனிதன், விலங்குகள், மரங்கள், செடி–கொடிகள் உள்ளிட்ட எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஓய்வு, உறக்கம் உண்டு. இதுதான் இயற்கை.
இந்த இயற்கைக்கு மாறான அதிசயச் சக்தி கொண்டதுதான் தூங்காப் புளியமரம். இந்த மரத்தை இவ்வூர் மக்கள் சஞ்சீவி மரம் என்றே அழைக்கிறார்கள். தீராத நோயையும் போக்கும் வல்லமை இந்தச் சஞ்சீவி மர இலைக்கு உண்டு. அம்மனைத் தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த இலைகளைத் தவறாமல் சேகரித்து எடுத்துச் செல்கிறார்கள்.
ஆனந்தி
அம்மனைப் பிரதிஷ்டை செய்த கேரளக் குடும்பங்களின் வாரிசுகள் இன்றும் குட்டம் கிராமத்தில் நூற்றுக் கணக்கில் வசிக்கிறார்கள். இப்பகுதி மக்கள் உலகின் எந்த மூலையில் குடியேறினாலும் தங்களின் தொழில் நிறுவனங்களுக்கு ஆனந்தி என்று அம்மனின் பெயரையே சூட்டுகின்றனர். பலர் தங்களின் பெண் குழந்தைகளுக்கு அம்மனின் பெயரையே சூட்டியுள்ளனர்.
குழந்தைப் பேறு
ஸ்ரீஆனந்த வல்லி அம்மன் சந்நிதியில் குழந்தைப் பேறுக்காக வேண்டினால் மழலைச் செல்வம் கிடைப்பது கண்கூடு. அவ்வாறு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் குழந்தைக்கு மொட்டையடித்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுகிறார்கள்.
திருவிழாக்கள்
வருடந்தோறும் ஆடி மாதம், கடைசித் திங்கட்கிழமை நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோவிலையும், அருகே உள்ள முத்து மாரியம்மன் சமேத சிவனணைந்த பெருமாள் கோவிலையும் இணைக்கும் பெருவிழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இது தவிர, சித்திரையில் திருமால் பூஜை, வைகாசி விசாகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி மாத சிறப்பு வழிபாடு, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். குதிரையில் கம்பீரமாக வந்தான் ஆங்கிலேய அதிகாரி ஒருவன். ஒரு கிராமத்தில் கோவில் முன்பு திரண்டிருந்த மக்களைக் கண்டதும் குதிரையை நிறுத்தினான். “ஏன் இங்கே கூட்டம்?” என்று விசாரிக்க, “அம்மனைத் தரிசிக்க வந்திருக்கிறோம்” என்றனர் மக்கள். அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்த அதிகாரி, “ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீர்கள்?” என்றான். அம்மனின் அருமை, பெருமைகளை அவனிடம் எடுத்துக் கூறிய மக்கள், “எங்கள் அம்மனுக்குப் பேசும் சக்தி உண்டு” என்றனர். அதைக் கேட்ட ஆங்கிலேய அதிகாரி, குதிரையில் இருந்தபடியே, “ஏய் அம்மனே… இவர்கள் கூறுவதுபோல் நீ சக்தியுள்ள தெய்வம் என்றால் இப்போது என்னிடம் பேசு” என்று கிண்டலாகக் கத்திச் சிரித்தான். அவனது கேலியைக் கண்டு கிராம மக்கள் பதறிப் போய் நிற்க, கோவில் சந்நிதிக்குள் இருந்து வேகமாகப் புறப்பட்டு வந்த பேரொளி அதிகாரியின் கண்களைக் குருடாக்கியது. குதிரையில் இருந்து விழுந்தவன் பார்வை பறி போன அதிர்ச்சியில் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரி அம்மனிடம் முறையிட்டான்.
அன்னையும் மன்னித்து மீண்டும் பார்வை வழங்கினாள். இந்தச் சம்பவத்திற்குப் பின் அந்த அதிகாரி மட்டுமின்றி அந்தக் கிராமத்தின் வழியாகச் சென்ற ஆங்கிலேயர்கள் அனைவரும் கோவிலுக்குள் நுழைந்து அம்மனை வணங்கிச் சென்றனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலம் குட்டம். இங்குதான் அருள்பாலிக்கிறார் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்.
அமைவிடம்
திருச்செந்தூர்-கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருச்செந்தூரில் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 76 கி.மீ. தொலைவிலும், புகழ்பெற்ற உவரி திருத்தலத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் குட்டம் அமைந்துள்ளது. திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து நேரடிப் பேருந்து வசதி உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரை.