” புத்தாண்டுப் பிறப்பு “
தமிழ்த்தேனீ
அன்புள்ள நண்பர்களே ,சகோதர சகோதரிகளே,
காலம் ஒரு அருமையான ஆசிரியன், அந்த ஆசிரியன் கற்றுக்கொடுக்கும் பாடங்களை உலகத்தில் வேறு யாராலும் கற்பிக்க முடியாது என்பது திண்ணம் . காலம் ஆட்டிவைக்கிறது, நம்மைத் தூங்க வைக்கிறது,விழிக்க வைக்கிறது, விழ வைக்கிறது , எழ வைக்கிறது. எல்லாச் செயல்களையும் செய்ய வைக்கிறது, நம்மைப் பண்படுத்துகிறது.
கால ஓட்டம் ,காலச் சுழற்சி கனவேகமாய் சுழன்று கொண்டிருக்கிறது. நிறுத்த முடியாத, மீண்டும் பெறமுடியாத காலங்கள்.அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது, மறந்து விடாதீர்கள் இப்போதும்,எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கணமாய்,
இந்த நிமிடத்திலிருந்தாவது ஏற்கனவே செய்த தவறுகளைக் களைந்து இனி செய்யப்போகும் செயல்களை இன்னும் சிறப்பாய் செய்யப் பழகுவோம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இனி வருங்காலம் இனிதே அமையட்டும். இனிய புத்தாண்டுக் காலம் தொடங்கிவிட்டது இனிமையானதாக நம் வாழ்வை மாற்றிக்கொள்ள நாமும் அதனுடன் ஓடுவோம்.
பிறந்து வளர்ந்து நினைவு தெரிந்த நாள் முதலாய் புத்தாண்டு வாழ்த்து சொல்ல முன்னோர் கற்றுக் கொடுத்த முத்தான நல்வழிகள் -வகுத்திட்ட
முன்னேற்ற புதுவழிகள் முறையாய்க் கடைப்பிடிப்போம் முன்னேற நாமும். வருடப் பிறப்பு வழி வழியாய் வந்த வகை மாற்ற முடியவில்லை.
மாற்றங்கள் தேவைதான் மாற்றங்களை ஏற்கும் மனம் நிச்சயமாய் வேண்டும் ஆனாலும் மாற்றமுடியாதவை .பெற்றதாயை ,பெற்ற தகப்பனை ,பிறந்த பொன்னாட்டை, தாய் மொழியை மறக்கவும் மாற்றவும் முடியாது , மாற்றவும் கூடாது, அதேபோல முன்னோர்கள் கணித்த தீர்க்க தரிசனங்களை, மாற்றவும் மனமில்லை, ஆகவே புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்வோடு பகிர்ந்து கொள்வோம்.
இந்த 2012 ம் ஆண்டு உத்திரட்டாதி நக்க்ஷத்திரத்தில் வளர்பிறையில் மீன ராசியில் அஷ்டமி திதியில், வரீயான் நாம யோகத்தில், பத்திரை நாமகரணத்தில் ஜீவன நேத்திரம் கூடிய சுபயோக சுபதினமாகிய நன்னாளில் சூரிய உதய அடிப்படையில் நள்ளிரவு 12.34 க்குப் பிறக்கிறது
இந்த ஆண்டு நமக்கெல்லாம் நல்ல ஆண்டாய் அமையட்டும்
நல்விளைவு தனை அளித்து தீவினைதனை தடுக்கும்
நல் வருடப் பிறப்பாய் இவ்வருடம் இருக்கட்டும் எல்லா நலன்களையும், எல்லா வளங்களையும் வித்யாசமின்றி எல்லோருக்கும் அளிக்கும்
புத்தாண்டாய் 2012ம் ஆண்டு அமையட்டும் என்று வேண்டி , புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
எத்துணையோ பெரியோர்கள் ஆசிகள், சிறியவர்களின் வாழ்த்து மடல்கள்அத்துணை வாழ்த்துகளும் ஆசிகளும் பொய்யாமோ? நம்பிக்கைதான் வாழ்க்கை
ஆனந்தம்.. ஆனந்தம்.. ஆனந்தமே ”
தாழ்வும் உயர்ச்சியும் கலந்ததுதான் வாழ்க்கை, முயற்சியும் ஊக்கமும் நிறைந்ததுதான் வாழ்க்கை.தன் முயற்சியில் தளராத விக்ரமாதித்யன் போல் தளராமல் செய்கின்றோம் முயற்சியும் சுழற்ச்சியுமாய் முடிவென்ன கண்டோமென யோசித்துப் பார்க்கிறேன். வாழ்வும் தாழ்வும் தராசுத் தட்டுகள் போல் உயர்ந்தும் தாழ்ந்தும் மாறி மாறி மேலும் கீழுமாய் போய் போய் வருகிறது.
முயற்சிகள் மட்டும் தளராமல் மீண்டும் மீண்டும் தலையெடுத்து தன் சுழற்சிப் பாதையிலே ஓடுமிந்த வாழ்க்கை ஓட்டத்தில் நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால்? இத்துணை நாட்கள் தாக்குப் பிடித்திருக்குமா..? கை தூக்கிவிட நிச்சயமாய் ஒருவனுண்டு என்கிற நம்பிக்கை உள்ளத்தில் அகலாமல் ஒட்டிக் கொண்டிருப்பதால் ஆனந்தமாய் ஓடுகிறது வாழ்க்கை ,
” ஆனந்தம் ” என்கிற சொல்லைக் கேட்டாலே நமக்கெல்லாம் எவ்வளவு ஆனந்தம் . வருகிறது? ஆனந்தம் பரமானந்தம்,என்னும் இரு வார்த்தைகளுக்கிடையே எவ்வளவு பொருள் மாறுபாடு இருக்கிறது தெரியுமா..? முதலில் ஆனந்தம் என்னும் சொல்லுக்கு பொருள் என்ன என்பதைச் சற்றே ஆராய்வோம்,
அடுத்தவர்களை ஆனந்தமாக வைத்திருப்பதே நமக்கு உண்மையான ஆனந்தத்தை அளிக்கறது என்று முற்றும் அறிந்தவர்கள் சொல்லுவார்கள், ஆனால் இந்தப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்களை, அன்பை, சாத்வீகத்தை, இறைமையை, மனிதத்தை , சிறிதளவாவது அறிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வமுடைய நம்மைப் போன்றவர்கள். நினைக்கிறோம்.
அடுத்தவர்களுக்குத் துன்பம் அளித்து அவர்களுடைய நிம்மதியை, ஆனந்தத்தை கெடுக்காமலிருப்பதே ஆனந்தம் தான் என்று எண்ணுவோம், உண்மைதான், அது முதல் நிலைதான் , பள்ளியில் பால பாடம் படிப்பதைப் போல, உண்மையான ஆனந்தம் அடுத்தவருக்கு உதவி செய்வதிலும், அடுத்தவர் துன்பம் போக்குதலிலும், அடுத்தவரிடம் இதமாக, பணிவாக, ஆத்மார்த்தமாகப் பேசி அவர்களை நெகிழச் செய்வதிலும்தான் இருக்கிறது.
அவர்களின் மனதின் உள்ளே அன்பெனும் பாதை அமைத்து உள்ளே சென்று அவர்களின் ஆத்மாவோடு நம் ஆத்மாவைக் கலக்கச் செய்வது, அதனால் வரும் சமத்துவத்தினால் ஏற்பட்ட பரிசுத்தமான உள்ளத்தோடு உறவாடி அவர்களின் இதயத்தில் இருக்கும் இறைவனோடு நம் உள்ளத்தில் இருக்கும் இறைவனை கலந்துரையாட விடுவது , மனிதம் தூண்டி, நாமும் அவர்களும் ஒருமித்த நிலையில் இருப்பது இவைதான் ஆனந்தம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து,
நமக்கு எப்போதெல்லாம் உண்மையான ஆனந்தம் வருகிறது என்று பார்த்தால் நம் வாழ்வில் சில நல்ல குறிக்கோளுடன் செயல் படும்போதும், அதேபோல், உலக நலன் கருதும் ஒரு நல்ல ஆன்மீக வாதியை, நாட்டின் மேல் உண்மையான அக்கறை செலுத்தி, அதற்காகப் பாடு படுபவரை, அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு செயல்படுபவரை, பொதுமக்களின் நலன் கருதி செயல் படும் தலைவர்களை, மனித நேயத்தை மதித்து பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ளும் மனிதாபிமான ஆர்வலர்களை, அனைத்து உயிர்களையும் மதிக்கும் பெரியோர்களை, தன்னைப்போல பிறரையும் எண்ணி அவர்களின் துன்பத்தைப் போக்க தன்னாலான செயல்களைச் செய்யும் பலரை,எல்லா மக்களையும் தம் மக்கள் போல் நேசிக்கும் மனிதர்களை இவர்களையெல்லாம் கண்டால் உணமையான ஆனந்தம் வருகிறது,
சாதாரணமாக உதவி செய்யாவிட்டாலும் ,அடுத்தவருக்கு துன்பம் விளைவிக்காமல் இயல்பு வாழ்க்கையிலிருந்து வாழும் பலரைக் கண்டாலும் உண்மையான ஆனந்தம் வருகிறது, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்,
ஆனால் உண்மையாகவே நாமும் ஆனந்தமாய் இருந்துகொண்டு அடுத்தவர்களையும் ஆனந்தமாக வைத்திருக்க இந்தப் புதுவருடம் நமக்கெல்லாம் சக்தியை அளிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அன்புடன்
தமிழ்த்தேனீ