பாஸ்கர பாரதி

என்ன படித்து என்ன பயன்? ‘உழைத்தால் உயரலாம். உழை.. உழை. மேலும் மேலும் உழை.’ என்று சொல்பவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள். அவர்களை நொந்து கொள்வதில் நியாயமில்லைதான்.

ஆனால் ‘உழைப்பதற்கு’ ஒரு வாய்ப்பு? மோட்டு வளையை வெறித்தபடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடப்பதில் சுகம் உண்டு என்றா எண்னுகிறீர்கள்? ‘தண்டச்சோறு’ உண்பதில் பசி ஆறலாம். படுகிற அவமானங்கள்..?

வசவு வார்த்தைகளும் சுடு சொற்களும் கண்ணீரில் கரைந்து விடுவதில்லை. மாறாகக் கனன்று கொண்டுதான் இருக்கும். தகுதி வேண்டுமா? திறமை வேண்டுமா? உடல் வலு வேண்டுமா? தரத் தயார்.

‘அந்தஸ்து’ கேட்கவில்லை; அவமானங்களில் இருந்து விடுதலை கிடைத்தால் போதும். சோற்றுப் பஞ்சம் தீர வேண்டுமே என்பதில்லை கவலை, ‘உருப்படியாய்’ எதுவும் செய்யத் தெரியாது’ என்கிற ஊசி முனைத் தாக்குதலை நிர்மூலமாக்குவதே முதற்கடமை. என்ன செய்ய வேண்டும்?

விளம்பரங்களைப் பார்த்து வர வேண்டும்? செய்தாயிற்று. விடாமல் விண்ணப்பிக்க வேண்டும்? அதுவும் செய்தாயிற்று. பிறகு..? ஊம்.. பிறகு..? பிறகு என்ன..காத்திருப்புதான்! காத்திருப்பில் கல்வியின் பங்கு என்ன? உழைப்புக்கு அதிலே என்ன பங்கு?

பொறுமை, மனோதிடம்.. இன்னும் என்ன வேண்டும்? காத்திருக்கலாம்தான். எத்தனை நாட்களும், வாரங்களும், மாதங்களும்! எத்தனை ஆண்டுகளும்..?? காத்திருப்பில் காலம் நின்று விடுவதில்லையே..? ‘உபயோகமான’ நாட்கள் உதிர்ந்து போகின்றனவே. திரும்பவா போகின்றன? காத்திருப்பில் சங்கடம் இது ஒன்றுதானா?

காத்திருப்பில், இரும்பு இதயமும் உளுத்துப் போகிறதே.. அது ஏன்? மலையாய் உயர்ந்து நின்ற இலட்சிய வேட்கை சரிந்து சரிந்து மண்மேடாய்க் குறுகி நாளடைவில் மண்ணோடு மண்ணாகிப் போகிறதே. அது எதனால்?

அசைக்க முடியாத ஆலமரம், ஊதினால் பறந்து போகும் உமியாய் உருமாறி விடுகிறதே.. எங்ஙனம்?

காத்திருக்கிற வேளையில், கடந்து செல்கிற கணங்கள், கரையான்களாய் உள்ளிருந்து கடித்துத் தின்று விடுகின்றன. ஓடுவதற்குத் தயார். ஓடுகிற தளம், ஓடுபாதை தான் தேவை. இதோ, கால்கள் அற்றவனுக்குக் கட்டைகள் கொடுத்து ஓட வைத்திருக்கிற ஓடு களம்! ஆஹா.. அவனது முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி, பெருமிதம்! ஓடு தோழா ஓடு.

நீ யாருக்கும் இளைத்தவனல்லன். இதோ.. கால் முட்டிகளால் தவழ்ந்த படியும் ஓடுகிற ஒருவன். ஓடு நண்பா ஓடு.

நீ எவருக்கும் சளைத்தவனல்லன். இதோ.. ஐயகோ.. இது எப்படி சாத்தியம்? ஓடுகளத்தில் ஓட்டைகள் போட்டபடிச் செல்கிறானே.. யார் இவனை அனுமதித்தது? ஐயகோ! அதோ ஒருவன் மற்றவனின் காலை இடறி விடுகிறானே. அவனை நுழைய விட்டது யார்?

உயிர் வாழவே தகுதியற்றவர்களை உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து, உயர்ந்த உள்ளங்கள் வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிற வேளையில், நெஞ்சம் கலங்கத்தானே செய்யும்?

கசடுகள் காட்டாட்சி நடத்த, ‘காலம் வரும்’ என்று கால பைரவர்கள் காத்திருக்க வேண்டுமா? மகாகவியின் கவிதை வரிகளில் ஆதங்கம் தெரிகிற அளவுக்கு ஆற்றலின் மீதான ஆழமான நம்பிக்கையும் தெறிப்பதை உணர முடிகிறது. அதனால்தான் அவர் மகாகவி.

மகாகவியின் மறக்க முடியாத பாடல் இதோ..

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவ சக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவ சக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

விசையுறு பந்தினைப் போல்-உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறுண் மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்

தசையினைத் தீச்சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ.

 

படத்திற்கு நன்றி:http://pixelsindia.blogspot.in/2011/12/subramania-bharathiar-rare-photos.html

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க