Featuredஇலக்கியம்கட்டுரைகள்

கொஞ்சநேரம் என்னை மறந்து

சக்தி சக்திதாசன்

சங்க கால இலக்கியம் என்பது தேனைப் போன்றது. மலருக்கு மலர் தாவித் திரியும் வண்டு ஒரு தேன் குடத்தினில் விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அது தேடி வந்த தேன் அதைச்சுற்றிலும் இருக்கும். ஆனாலும் அதைப் பருக முடியாதபடி அந்தத் தேனினுள் வண்டு அமிழ்ந்து விடுகிறது.

அதே போலத்தான் சில வேளைகளில் இலக்கிய நீராட வேண்டும் எனும் வேட்கையில் சுனைகளைத் தேடித்திரியும் நான் கடலினுள்ளே அமிழ்ந்து விடுவது போல குறுந்தொகை எனும் அந்த இலக்கியத் தேன்குடத்தினுள் விழுந்து விடுகிறேன்.

அப்பப்பா அதன் சுவைதான் என்னே !

சங்ககாலப் புலவர்கள் கண்டெடுத்த உவமான, உவமேயங்கள் எவ்வகைப்பட்டவை என எண்ணும் போது நெஞ்சம் வியப்பால் விரிய இடமின்றித் தவிக்கிறது.

அப்படியாக நான் சில வேளைகளில் அவ்விலக்கியத் தேனைக் குடித்த இன்பத்தினால் அதை இவ்வெளியேனின் வார்த்தைகளால் புதுக்கவிதைப் பாணியில் வடித்துப் பார்க்க ஆசைப்படுவதுண்டு.

அறிஞனின் கவிதையைப் பாமரன் பார்க்கும் பார்வை எப்படி இருக்கும் என்றொரு அவா. இதோ அந்த வரிசையில் கொஞ்ச நேரம் என்னை மறந்து,

குறுங்கீரனார் என்னும் புலவர் முல்லைத்திணைப் பாடல் பகுதியில் பாடிய பாடல்,

தண் துளிக்கு ஏற்ற பைங் கொடி முல்லை
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின்,
வாராரோ, நம் காதலோரே.

காதலில் தோய்ந்த தலைவியிடம் “பயப்படாதே கார்காலத்தில் நான் வந்து விடுவேன்” என்று கூறி விட்டுத் தலைவன் சென்று விட்டானாம். பாவம் தலைவியோ காதல் மிகுதியால் வேதனையில் வாடுகிறாள். எப்போ கார்காலம் வரும், எப்போ கார்காலம் வரும் எனக் காத்துக் கிடக்கிறாள். இருக்காதா ஏக்கம்? இளமைக் காதலல்லவா? ஒன்றாக இருந்த காலங்களில் பூங்காவில் இனிய மாலைப்பொழுதுகளில் காதோரம் கவி சொன்ன அத்தலைவனின் அன்பு முகம் அவள் நெஞ்சை வாட்டாதா என்ன?

கார்காலம் வந்து விட்டது! அதை எப்படி நம் குறுங்கீரனார் விளக்குகிறார் பாருங்கள்,

பச்சைப்பசேல் எனும் பைங்கொடியில் முல்லை அரும்புகிறதாம்! அது மட்டுமா அரும்பும் முல்லையின் வாசம் அங்கிருக்கும் மற்றைய பூக்களில் சொரியும் தேன் வாசனையோடு சேர்ந்து ஒரு வித மாலை நேர வாசனையைத் தருகிறதாம். அது மட்டுமா மயக்கும் அந்த மாலைப் பொழுதைக் கார்காலம் என நிரூபிக்க மழைச்சூழல் வேறு என்று சொல்கிறார் நமது குறுங்கீரனார்.

பாடலில் வரும் தலைவியின் மனநிலையைப் பார்ப்போமா?

இயற்கையதுவோ கொஞ்சமும் இரக்கமின்றிக் கார்காலம் வந்து விட்டது என்று அறிவிக்கிறதாம். பதைத்து விட்டாள் அப்பைங்கிளி.

“சீ போடி, இது எப்படி கார்காலமாகும்? கார்காலமாயிருந்தால்தான் என் தலைவன் எனைக் காண ஓடோடி வந்திருப்பானே! போடி பைத்தியக்காரி இது ஒன்றும் கார்காலமுமில்லை இம்மழை உண்மை மழையுமில்லை, இது ஒரு பொய்மழை” என்று விட்டாள் போங்கள்.

காதலின் வேகத்தையும், அக்காதல் கொடுக்கும் விரக தாபத்தையும் எத்தகைய அழகிய சொற்கள் கொண்டு சிக்கனமாய் விவரிக்கும் ஆற்றல் கொண்டிருந்தார்கள் எம் சங்ககாலப் புலவர்கள் என்று எண்ணும் போது, அடடா! இவர்களைத் தனது தனயர்களாகக் கொண்ட எம் தமிழன்னை எத்தனை பெருமிதமடைந்திருப்பாள்?

சரி, இனி இந்த அற்புதப் பாடலை இப்பாமரனின் வார்த்தைகளில் பார்ப்போமா?

பசுமையான தோட்டமிந்தத் தோட்டம்
படர்ந்திருக்கும் பைங்கொடியின் நீட்டம்
மலர்ந்திருக்கும் முல்லை அரும்புகளின் நோட்டம்
மணம் பரப்பும் தேன்மலர்கள் கூட்டம்
மழைமேகம் கொண்டதொரு வாட்டம்
மண்மீது அது கீதம் மீட்டும்
கார்காலம் எமை நோக்கி ஓட்டம்
கன்னி நீ அறிவாயோ காட்டம்
காலமிது கார்காலம் என்பதெல்லாம் மூட்டம்
கரையுமிந்த மேகமொரு பொய் ஈட்டம்
வரவில்லை தலைவன் இங்கு இல்லை சேட்டம்
வந்தது கார்காலம் என்றால் எனக்குள்ளே வாட்டம்

(நீட்டம் : நீட்சி , மூட்டம்:மூட்டல், ஈட்டம்: சேர்க்கை, சேட்டம்: செழிப்பு)

கொஞ்ச நேரம் என்னை மறந்ததால் நெஞ்சில் துளிர்த்த ஆசைத் துளிகள் மழையாய் உங்கள் முற்றத்தில்.

மீண்டும் வருவேன்..

 

படத்திற்கு நன்றி:http://www.shutterstock.com/pic-14490610/stock-photo-flowers-of-jasmin-after-fresh-rain.html

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க