காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்குச் செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள், எதிர்பார்த்த தேர்வின் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமைய, ஆசிரியரின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்கவும். பொது வாழ்வில் இருப்பவர்கள், வெளித்தோற்றத்திற்கு நல்லவராக இருப்பவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். பொருளாதார நிலை மேன்மை அடைய, வியாபாரிகள், வரவு செலவுகளின் மீது, கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம். காரணமற்ற மனச் சஞ்சலங்கள் தலை காட்டும் வாய்ப்பிருப்பதால், கலைஞர்கள் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். சுய தொழில் புரிபவர்கள், புதிய கடன் வாங்கிப் பழைய கடன்கள் அடைப்பதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். வேற்று மதத்தவர்களால் எதிர்பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைப்பதால், பணியில் இருப்பவர்களுக்கு இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

ரிஷபம்: விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் பரிசு மற்றும் பாராட்டுதல்களோடு அரசு ஆதரவுகளையும் பெறுவார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சிகளில் பெண்கள் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வரக்கூடிய காலமாகும். முதியோர் இல்லங்களை நடத்துபவர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். ஜவுளி, நூல் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் தங்கள் இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்வது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள், செலவுகளில் அலட்சியமாக இருந்தால், வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாக வரும் செலவுகளைச் சமாளிக்கப் பாடுபட வேண்டி இருக்கும். படித்து முடித்த மாணவர்களுக்கு, நல்ல வேலை வாய்ப்புகள் தானே வந்து சேரும். கலைஞர்கள், ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்ட விஷயங்களில் பணம் வந்து சேரும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம்.

மிதுனம்: குடும்ப உறவுகளில் இருந்து வந்துள்ள பிரச்னைகள் குறைந்து ஒற்றுமை மலர, பெண்களின் புத்திசாலித்தனம் கை கொடுக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வந்து சேரும் வாரமாகும். நண்பர்களால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால், பணியில் இருப்பவர்கள், எந்தச் சூழலிலும், கவனமுடன் பேசிப் பழகுதல் அவசியம். எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்க மாணவர்களுக்குப் பெற்றோர்களின் வழிகாட்டுதல் தக்க சமயத்தில் கிட்டும். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த இடையூறுகள் மறைந்து, புதிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வங்கிகளில் இருந்து எதிர்பார்த்து வந்த பண உதவித் தொகைகள் தகுந்த சமயத்தில், கிடைப்பதால், சுய தொழில் புரிபவர்கள் சுறுசுறுப்புடன் விளங்குவார்கள். விவசாயப் பொருட்களுக்குச் சில தடைகள் வரலாம். எனவே விவசாயிகள் புதிய ரக விதைகளைப் பயன்படுத்தும் முன் யோசித்து செயல்படவும்.

கடகம்: பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, அரசு அதிகாரிகளுடன் மனக் கசப்புகள் ஏற்படும் சூழலிருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பணி ஆற்றுதல் நல்லது. பெண்களுக்குத் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வீட்டுச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் தூரப் பயணங்களை மேற் கொண்டு மகிழ்வார்கள். கலைஞர்களுக்குச் சில எதிர்பாராத செலவுகள் வந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவு இருக்காது. இந்த ராசிக்காரர்களுக்குத் தொழில் சம்பந்தமான பயணம் நன்மையாக அமையும். வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், நண்பர்களைத் திருப்தி செய்வதற்காகவும், பணியில் இருப்பவர்கள், கை மாற்றாய்ப் பணம் பெறும் சூழலுக்குத் தள்ளப்படுவர். பொறுப்பில் உள்ளவர்களுக்குத் தினந்தோறும் ஏதாவது பணி சம்பந்தமாக ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆரோக்கியத்தைக் காக்க முதியவர்கள், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவு வகைகளைத் தேர்வு செய்யவும்.

சிம்மம்: கல்வியில் சில தடைகள் ஏற்பட்டாலும், மாணவர்கள் அதனை உங்களின் முயற்சிகளால் கடந்து வெற்றி பெறுவீர்கள். பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால், பொது வாழ்வில் இருப்பவர்கள், தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வரவும்.. இந்த வாரம், பணியில் உள்ளவர்களின் வேலைப்பளு அதிகரிப்பதால், தூக்கமின்மை, அலைச்சல் போன்றவை அவ்வப்போது தலை காட்டும். கணக்கு வழக்குகளைக் கவனிப்பவர்கள், கவனமாக வேலை செய்தால், கடைசி நேர நெருக்கடிகளைத் தவிர்த்து விடலாம். வாடகை வீட்டில் உள்ளவர்கள் வேறு இடம் குடி புக நேரிடும். பொருள்களை இடமாற்றுவதால், சிறு தொழில் புரிபவர்களுக்குச் சில பொருட்கள் பழுது அடையும் வாய்ப்பிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். எனவே தேக நலனை நல்ல முறையில் பராமரித்து வரவும். கலைஞர்கள் இல்லத்தில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க நிதானத்தைக் கடைப்பிடித்து வந்தால் உறவுகள் சீராக இருக்கும்.

கன்னி: இந்த ராசிக் காரர்கள், தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தால், மன அமைதி கெடாமலிருக்கும். பணி நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். மாணவர்கள், மாதாந்திரத் தேர்வுகளை அலட்சியப்படுத்த வேண்டாம். பணியில் இருப்பவர்கள் ஏதோ ஒரு பிரச்னையில் மூழ்கி வெளி வருவீர்கள். பெண்களுக்குச் செலவுகளின் சுமை சற்றே கூடும். பொது வாழ்வில் உள்ளவர்கள், பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பணிகள் தடங்கலின்றி நடைபெற முடியும். கலைஞர்களுக்குக் கடின முயற்சிக்குப் பின், உண்மையான உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சனி 9-ல் உள்ளதால், பொறுப்பில் உள்ளவர்கள், வியாபாரிகள், கடனுக்காகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற முழு முயற்சியில் இறங்க வேண்டியிருக்கும். சிறு தொழில் புரிபவர்கள், கவனமாக வேலை செய்தால், உதவித்தொகை பெறுவதில் இருந்த சுணக்கம் தீரும்.

துலாம்: குடும்ப உறவுகளில், உண்மையாக உதவி செய்பவர்களிடம் பெண்கள், இணக்கமாக நடப்பது அவசியம். இந்த ராசிக் காரர்கள், புதிய வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும். பொருளாதாரத்தில் வியாபாரிகளின் முயற்சிக்குத் தகுந்த பலன் கிட்டும். மாணவர்கள், நினைத்தபடி செயலாற்றுவதில் சில தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். பண விஷயங்களில், நம்பிக்கை கொடுத்தவர்கள், ஓசைப்படாமல் நழுவிச் செல்லும் சூழலிருப்பதால், வியாபாரிகள், பொருளாதாரத்தில், அகலக் கால் வைக்க வேண்டாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, பணியில் இறங்கினால், உயர்ந்த இடத்தை அடைய இயலும். கலைஞர்கள், தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வரும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திப் பலனடைவார்கள்.

விருச்சிகம்: நெருங்கிய பங்குதாரர்களிடையே நெருடல்கள் ஏற்படும். வாய்ப்பிருப்பதால், வியாபாரிகள் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. கலைஞர்களுக்கு, உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைத்தாலும், உள்ளம் மகிழும் நிகழ்வுகள் நடக்கும் வரைப் பொறுமையாய் இருங்கள். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் சுமூகமாக நடந்து கொண்டால், குற்றங்குறை என்பது தேய்பிறையாகக் கரைந்து விடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவி வந்தாலும், உறவினர் வருகையால், சலசலப்பு தோன்றி மறையும். சுய தொழில் புரிபவர்கள், கொடுக்கல் வாங்கலில் முரண்பாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வளத்தில் தொய்வேதும் இராது. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு வலிய வரும் சண்டையால், தலைவலி கூடும். சுப காரியங்கள் தடை தாமதத்தோடு செயல்பட்டாலும், முடிவு சாதகமாகவே அமையும். மாணவர்களின் பேச்சில் உள்ள வேகம் செயலிலும் பிரதிபலிக்கும்.

தனுசு: பொது வாழ்வில் இருப்பவர்களுக்குச் சில விரும்பத் தகாத சம்பவங்கள் மன இறுக்கத்தை ஏற்படுத்தி விடும் வாய்ப்பிருப்பதால், எந்தச் சூழலிலும், சொற்சிக்கனத்தைக் கையாளவும். வியாபாரிகள், புதிய திட்டங்களில் இறங்கும் முன், கடன் பற்றிய நிலவரத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டால், பொருளாதாரச் சரிவுகளை ஓரளவு சரிக்கட்டமுடியும். இந்த ராசிக் காரர்களுக்கு, ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு உபாதைகள் ஏற்பட்டு விலகும். மாணவர்கள் தயங்கித் தயங்கிச் செய்த நல்ல காரியங்களைத் துணிச்சலுடனும், துடிப்புடனும் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்குத் தொல்லை தந்தவர்கள், தோள் கொடுக்கும் அளவிற்கு நட்பு பாராட்டி வருவார்கள். பொறுப்பில் உள்ளவர்கள், ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டிருக்கும் நிலை இருக்கும். கலைஞர்களுக்குத் தொழில் வகையில் செய்யும் மாற்றங்கள் ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். பணமுடையைத் தீர்க்க, பெண்கள் சேமிப்பை உடைக்க வேண்டியிருக்கும்.

மகரம்: வியாபாரிகள், சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு சரக்குகளை வாங்குதல் நலம். சுய தொழில் புரிபவர்கள் தொழிலாள்ர்களின் ஆதரவால், விரும்பிய இலக்கை ஓரளவு எட்டிவிட முடியும். பொது வாழ்வில் உள்ளவர்கள், செயல்படுத்தும் திட்டங்களில், அடுத்து வரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால், தவறுகளைக் களைந்து, முன்னேற முடியும். பெண்களுக்கு, உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர்பாராத பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவுகளும் ஏற்படலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, வட திசையில் இருந்து நற் செய்திகள் வந்து சேரும். தொழிற் சாலை மற்றும் வீடுகளை மாற்றம் செய்ய எண்ணுபவர்கள், தகுந்த முறையில் திட்டமிட்டு வேலை செய்யவும். மாணவர்கள் விபரீதமான எண்ணங்களைக் கை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருப்பது நல்லது. கலைஞர்களுக்குப் பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும்.

கும்பம்: பொது வாழ்வில் உள்ளவர்கள் ஆடம்பரச் செலவுகளைச் செய்ய எண்ணிப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். வியாபாரிகள், பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். மாணவர்கள், வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். சிறு தொழில் புரிபவர்கள், பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவதற்காக எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும். பெண்கள் விலையுயர்ந்த புதிய மின் சாதனங்களைத் தக்கப்படி பராமரித்து வைத்துக் கொண்டால், பண நஷ்டம் ஏற்படாமலிருக்கும். கலைஞர்கள் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற பாதைக்கு மாறாமலிருந்தால், எந்த பாதிப்பும் வராது. பணியில் உள்ளவர்கள், சுற்றியிருப்பவரின் எண்ண ஓட்டத்தை அறிந்து செயலாற்றினால், உங்கள் நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்: உங்களுக்கு உதவுவதாகச் சொன்னவர்கள் பின் வாங்கும் நிலை இருக்கும். எனவே இந்த ராசிக்காரர்கள், பண விஷயங்களில், பிறருக்கு வாக்குறுதி கொடுக்கும் முன் யோசித்துச் செயல்படவும். பொது வாழ்வில் உள்ளவர்கள், அபிவிருத்திப் பணிகளில் தாமதம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்கள், உபத்திரவம் செய்பவர்களின் சகவாசத்தைத் துண்டித்து விடுதல் அவசியம். பணியில் உள்ளவர்கள், கடை நிலை ஊழியர்களிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்டாமலிருந்தால் அவர்கள் உங்களைக் கண்டு ஒதுங்கும் நிலை இராது. கலைஞர்கள் விழா, விருந்து, கொண்டாட்டம், எல்லாவற்றிலும் மிதமாக இருப்பது நல்லது. பெண்கள், மனத் தடுமாற்றங்களுக்கு இடம் கொட வேண்டாம். சுய தொழில் புரிபவர்கள், அறிமுகம் இல்லாதவருடன் கூட்டு முயற்சியில் இறங்குவதைத் தவிர்ப்பது நல்லது. பொறுப்பில் உள்ளவர்கள், எதிலும் வெற்றி பெற மனம், உடல் இரண்டும் சீராக வைத்துக் கொள்ளுங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *