விழித்துக் கொள் பூமியே

வருணன்

யாமறிந்த பேரண்டத்தின்
ஒற்றை உயிர்த் துளியே!

நின் இல்லமெங்கும் அலங்கரிக்கிறாய்
இயற்கை வரைந்த சுவரொட்டிகளால்,
மாண்பு தெரியாது
கிழித்தெறிகின்றன மானுட மாடுகள்.

மூங்கில் புகுந்து இசை ஈனுமுன்
நற்காற்றை வன்புணர்கிறதெங்கள்
ஆலைகளுமிழும் கரிப் புகை.

ஆர்டிக்கின் உறைகுளிரும்
சகாராவின் உருக்கும் வெம்மையும்
அமேசானின் அடர் ரகசியங்களும்
அத்தனையும் நலமிங்கே
அதனதனிடத்தில் உறைகையிலே.

அழகிய பாடலிதை
அபசுரத்தில் பாடிடும்
மாசு பாட்டு மகவுகளை
வளர்த்தெடுக்கும்
மனுக்குல மங்கையவளை
உக்கிரமாய் எச்சரிக்கிறாய்
அவ்வப்போது
பருவநிலைப் பகடைகளை
எக்குத்தப்பாய் உருட்டி விட்டு

கண்ணிழந்து காதலிலுருகும்
பருவப் பேதையவள்
தாய் சொல் தட்டுவது போல்-நின்
எச்சரிக்கைப் பிரசுரங்களை
கிழித்தெறிகிறாளவள் வாசிக்காமலேயே.

எமதூரின் மரங்களின் வேர்களனைத்தும்
தமது அடிமரப்பதிகளின் உயிர் குடிக்கக்
காத்திருக்கும் கோடரிகளிடம்
தாலிப் பிச்சை வேண்டி நிற்கின்றன

என்னை வாழவிடுவென
நீயெழுப்பும் ஓலமிங்கே
கரைகின்றது கற்பிழந்த காற்றினிலே.
புவியே! புரிகின்ற மொழிகளில் பொறிகளை வை
இல்லையேல் நரப்பூனைகளின்
வாயில் நீயே எலியாவாய்.

 

படத்திற்கு நன்றி:http://therubicon.org/2009/10/i-was-a-teenage-fundamentalist-part-two

Leave a Reply

Your email address will not be published.