புறவார் பனங்காட்டூர் – தேவார பாடல் பெற்ற தலம்

 

நூ த லோகசுந்தர முதலி மயிலை

 

இரண்டொரு வாரமாக சென்னையிலிருந்து திண்டிவனம் விழுப்புரம் வழி செல்லும் பெருவழிச்சாலையில் விக்கிரவண்டி எனும் இடத்தே பிரிந்து தஞ்சைக்குச் செல்லும் பெருஞ்சாலையிலேயே திருக்கனூர் சாலை சந்திப்பில் தன் மேற்கு மதிலமைந்த பனையபுரம் என இக்காலத்து வழங்கப்படும் புறவார் பனங்காட்டூர் எனும் தேவார பாடல் பெற்றத் தலம் பொதுமக்கள் எண்ணத்திற்கு பேச்சிற்கு ஊடே வந்துள்ளது. அங்கு வரவுள்ள தஞ்சை சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் திட்டத்தில் இடர்படும் போல் திட்டங்கள் தீட்ட முனையப்படுதலால் அதனை தடுக்க பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி எழுப்பவே காளம் ஊதும் செய்திகளாகும் இவை. (வரைபடங்கள் காண்க)

இத்தலம் நடு நாட்டுத்தலங்கள் என சைவத் திருமுறை தலமுறைப் பதிப்பினில் பகுக்கப்பட்டுள்ள 22 ல் 20 ஆக வருவது. திருஞானசம்பந்தரின் பதிகம் பெற்றது. இராஜராஜன் ஆட்சி காலத்தில் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பியின் எண்ணபபடி பெண்ணாகடம் அருகுள்ள இராஜேந்திரப் பட்டினம் என இந்நாளில் வழங்கப்படும் அந்நாள் எருக்கத்தம் புலியூரில் பிறந்து திருஞானசம்பந்தருடன் பண்ணுடன் பாடல்களை இசைத்தவரான திருநீலகண்ட யாழ்பாணர் குடும்ப வழிவழிவந்தவரின் துணைகொண்டு தேவார பதிகங்களுக்கு இசை அமைத்த (Chorography) திட்டத்தில் சீகாமரப் பண்ணில் பொருத்தப்பட்ட ஏனைய 17 சம்பந்தர்தம் பதிகங்களுடன் இரண்டாம் திருமுறையில் திகழ்வது இத்தலப் பதிகம்.

திருஞான சம்பந்தர் தன் தலயாத்திரையில் தொண்டைநாட்டு வடகோடியில் அமைந்த காளத்தியை வணங்கி சோழநாடு திரும்புகையில் திருவேற்காடு, வலிதாயம்பாடி, மயிலை, திருவான்மியூர், இடைச்சுரம், கழுக்குன்றம், அச்சரப்பாக்கம், முதலிய பதிகளை தொழுது அரசிலி (ஒழிந்தியாப்பட்டு) அருகுள்ள புறவார் பனங்காட்டூர் பனையபுரம்) வணங்கி பின்பு தில்லை சென்றார் என சேக்கிழார் பதிவு செய்கிறார்.

இதற்கு அருகு ஏறக்குறைய 15 கீமீ சுற்றளவில் உள்ள நடுநாட்டு / தொண்டைநாட்டு தோவர பாடல் பெற்றத் தலங்கள் ஆவன திருவக்கரை, இரும்பை மாகாளம் வடுகூர் திருஆமாத்தூர். சம்பந்தர் இப்பதிகளை கோவிலூர் அண்ணாமலை காஞ்சி என வடதிசை ஏகுமுன் வழிபட்டதாக திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. திண்டிவனம் என்பதும் தேவார வைப்புத் தலமே. இதனை திண்டீச்சரம் எனும் அப்பர் அடிகளின் க்ஷேத்திரக்கோவையும் காப்புத் திருத்தாண்டகமும். இவை யாவும் தற்கால புதுச்சேரி மாநிலத்திற்கு மிக அருகு அதன் எல்லையில் உள்ளவையே.

வரலாற்றில் 1300 ஆண்டுகள் பழமையான பாடல் பெற்ற தலங்கள் பொது நலனுக்காக வேறு ஒரு இடத்திற்கு மாற்றி வைத்தல் என்பது முன்பும் ஓர் முறை நடந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் கொணரும் திட்டத்தில் திருவள்ளூர் அருகு பூண்டி எனும் இடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தில் (பின்பு அது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் எனப் பெயரிடப் பெற்றது) மூழ்கிப்போன ஓர் தலம் திரு வெண்பாக்கம் எனும் தொண்டைநாட்டு 32 ல் 17 என வருவது. இதற்கும் சீகாமரப்பண் அமையப்பெற்ற வன்தொண்டராம் சுந்தரரின் ஏழாம் திருமுறைப் பதிகம் ஓன்று உளது. சுந்தரரின் வரலாற்றில் தொடர்பு உடையது இத்தலம்.

திருஒற்றியூருக்கு அருகுள்ள ஞாயிறு என்னும் ஊரினளான சங்கிலியாரை சிவபெருமானின் முன்பு கோயில் மகிழமரத்தின் அடியில் நின்று சத்தியம் செய்து மணம்கொண்டு பின் திருவாரூர் பரவை நாச்சியார் வசந்த கால நினைவு வரவே நீங்கினமையால் ஊர் எல்லை தாண்டும் போதே தன் இருகண் பார்வையையும் இழந்தவரான சுந்ரமூர்த்தி நாயனார் காஞ்சிக்கு செல்லும் வழியில் திருவெண்பாக்கத்து பிரானை ஓர் பதிகத்தால்இசைத்து வணங்கியபோது “சரி சரி யான் இருக்கின்றேன் நீங்கள் போகலாம்” என சிவபெருமான் கூறியதாக பதிகப்பாடல்கள் காட்டுகின்றன. (“உளோம் போகீர் என்றானே”) ஆனால் சிவபிரான் சிறிது இரக்கம் கொண்டு அங்கு ஓர் ஊன்றுகோல் கொடுக்க பின்பு காஞ்சி ஏகம்பத்தில் இடது கண்பார்வையும் பெற்று திருவாரூரில் வலதுகண் பார்வையும் மீட்டார் என்பது சேக்கிழார் பெருந்தகை கூறும் வரலாறு.

உளோம் போகீர் என்றானே என்னும் வாக்கின் வழியே திருஉளம்புதூர் என திரிந்த பழமையான தலமானது நீர்த்தேக்கத்தில் முழ்கியதால் மாற்றாக சிறுகுன்று போன்ற மேடான ஓர் இடத்தில் புதிய கோயில் ஒன்று கட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளது. மூழ்கிய கோயிலில் கண்ட கல்வெட்டுகளை படிஎடுத்து புதிய கோயில் சுவரில் வர்ணத்தில் எழுதினர். நீர் வற்றினால் முழ்கிய கோயிலைக் காணலாமாம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க