இரா.கலையரசி

முன்னுரை

பழங்காலம் தொட்டு எழுந்த இலக்கியங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் அறவுரையை வலியுறுத்தும் நோக்கில் படைக்கப்பட்டு வருகின்றன. இவ்வறவுரையைக் கற்ற சான்றோர்கள் அறவுரையோடு தம் அறிவுரையையும் பகர்வது வழக்கம். இவ்வகையில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் தமது படைப்புகளில் எடுத்துரைத்துள்ள அறவுரையை பற்றி ஆய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறவுரை

பண்டைத்தமிழர் வாழ்வில் அறக்கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தனர். அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்வியல் கொள்கைகளை வகுக்கும் பொழுதும் அறத்திற்கே முதன்மை கொடுத்தனர். வாழ்விலிருந்து முகிழ்கின்ற இலக்கியங்கட்கும்,
“அறம் பொருள் இன்பம் வீட்டைதல் நூற்பயனே”1
என்று அறத்தையே முதன்மைப்படுத்தினர். மனித சமுதாயத்தில் அன்றாட வாழ்வில் நடைமுறைக்கு ஏற்ற வகையில் நலம் விளையக்கூடிய செயல் எதைச் செய்தாலும் அது அறச்செயலாகும். அறம் என்றால் தொண்டு, தூய்மை என்பது பொருளாகும். இத்தொண்டை எக்காரணம் கொண்டும் சுயநலம் கருதாமல், பொதுநலம் கருதியே செயல்பட வேண்டும். என்பதை வலியுறுத்தும் விதமாக,
‘அறம் செய விரும்பு’
என்று ஔவையாரும்,
‘அன்றறிவோம் எண்ணாது அறஞ்செய்க’
என்று வள்ளுவரும் கூறியுள்ளனர்.

தமிழறிஞர்கள் அறத்தைப் பெரிதும் போற்றினர். கடவுளையே அறத்தின் வடிவில் கண்டனர். வாழ்வின் எல்லாக் கூறுகளிலும் அறம் இழையோட வேண்டும் என்று விரும்பினர். வள்ளுவரும் மனத்தூய்மையே மிகச் சிறந்த அறம் என்கிறார்.

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்’ என்பது குறள். மக்கள் அறத்தின் வழியில் இன்பம் துய்க்க விரும்பினர். பிறரோடு செய்யும் போரிலும் அறம் பிறழக்கூடாது என விரும்பினர். இதனைப் புறநானூறு,

“ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வப் பெறாஅ தீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை” 2
என்று கூறுவது தமிழரின் பேரறமாகும்.

நாட்டை ஆட்சி செய்பவர்கள் அறநெறி தவறாதவர்களாக இருக்க வேண்டும்.
‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’
என்று புறநானூறும்

‘அரசியல் பிழையாது அறநெறி காட்டி
பெரியோர் சொன்ன அடிவழிப் பிழையாது’
என்று மதுரைக்காஞ்சியும் கூறுகின்றது. தனிமனிதன் ஒவ்வொருவரும் தம் வாழ்வுக்கென அறங்களை வகுத்துக் கொண்டு செயல்பட்டால், அரசனும் அறத்தின் வழி ஆட்சி புரிவான். அரசறம் முறையாகப் பின்பற்றப்பட்டால் அந்த நாட்டில் தனிமனித அறம் மேம்படும்.

தென்கச்சியார் கூறும் அறம்.

மன்னனாக இருந்தாலும் சாதாரணக் குடிமக்களாக இருந்தாலும் நீதி தவறாதவர்களாகவும், நீதி சிந்தனை உடையவர்களாகவும் இருக்க வேண்டும். தன்னிடம் வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாது அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து உதவும் ஈகைப்பண்பு நிறைந்திருக்க வேண்டும். கடமை உணர்வு தவறாதவர்களாக விளங்க வேண்டும். சிறந்த நற்பண்பு உடையவர்களாக வாழ வேண்டும் என்ற அறத்தின் அடிப்படையில் கருத்துக்களைத் தென்கச்சியார் பதித்துள்ளார்.

நீதி சிந்தனை

முன்னோர்கள் நீதி அளிப்பதில் சிறந்து விளங்கியுள்ளனர். எல்லா உயிர்களுக்கும் சமமான நீதி வழங்கப்பட்டுள்ளது. அரசன் தன்னலமற்றவனாகவும், பிறர் நலம் பேணுபவனாகவும் இருந்துள்ளான். அதனால்தான், ‘அவனவனுக்கு உரித்தானதை அவனவனுக்கு வழங்குவதுதான் நீதி’ என்று அரிஸ்டாட்டிலும், ‘தாமதமாக அளிக்கும் நீதி மறுக்கப்பெற்ற நீதியாகும்’ என்று கிளாட்ஸ்டன் என்பவரும் கூறியுள்ளனர்.3

ஈகை உணர்வு

மனித குலத்தின் சிறப்புகளில் ஈகையும் ஒன்று. அது பிறர் படும் துன்பத்தைக் கண்டு இரங்கலும், அத்துன்பத்தைப் போக்க முயல்வதும் ஆகும். அந்த வகையில் எழுந்த செயலே ஈகையாக மலர்ந்துள்ளது. வாழ முடியாதவர்களையும், வாழத் தெரியாதவர்களையும், வாழ்வை இழந்தவர்களையும் ஏற்றுக் காப்பது சமுதாய நலத்தைக் காக்கும் நற்செயலாகும். எல்லோரும் ஈகையை மேற்கொள்ள வேண்டும். அவரவர் தங்கள் உழைப்பின் பலனில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து, மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்.4 அவ்வாறு உதவும் போது மனமும் எளிதாகும், ஏற்பவரின் வாழ்வும் வளமாகும் என்பதை,

“ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்”5
என்று ஈகையின் சிறப்பை குறள் மெய்ப்பிக்கின்றது

கடமை உணர்வு

மனிதன் ஒவ்வொருவரும் உடலாலும், அறிவாலும் சமுதாயத்திற்குக் கடன்பட்டு உள்ளான். உலகில் உள்ள பொருட்கள் எல்லாம் பலரின் கூட்டு முயற்சியால் உருவானதே தவிர தனி ஒருவனால் உருவானது இல்லை.6

“ஒரு பிடி உணவில் உலக ஒற்றுமை கண்டிடு
உழைப்பினால் பதில் உலகிற்கு தந்திடு”7
என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுள்ள கருத்து இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். அதனால் சமுதாயத்திற்கு தாம் பெற்ற கடனைத் திருப்பித்தருவதே கடமையாக அமைகிறது. ஒவ்வொருவரும் அவரவர்க்கு முடிந்த வகையில் கடமை உணர்வோடு செயல்பட்டால் வீடும், நாடும் வளம் பெறும்.

நற்பண்பு

மனிதன் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வாழ வேண்டும். பிறருடைய பொருளுக்கு ஆசைப்படாமலும், தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்காமலும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதுதான் அவனுடைய நற்பண்பு வெளிப்படுகிறது. தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவரிடம் நற்பண்பு சிறந்தோங்கும் அதன் மூலம் அறம் வெளிப்படும்.

முடிவுரை

மேற்கண்ட கருத்துக்களின் மூலம் தென்கச்சியார் சிறந்த அறச்சிந்தனை உள்ளவர் என்பதும், மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதும் அறியப்படுகின்றன. மேலும் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள பற்றாலும், மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அறவுரைகளைக் கூறியுள்ளதாலும் இவர் பரந்துப்பட்ட சமுதாய நோக்குடையவர் என்பது புலப்படுகின்றது.

அடிக்குறிப்புகள்
1.நன்னூல், எழுத்ததிகாரம், நூ. 10
2.புறநானூறு, பா. 9
3.பெ.வேலுச்சாமி, அறிஞர்களின் அறிவுரைகள், ப.31
4.தென்கச்சி கோ.சுவாமிநாதன், வானொலியில் இன்று ஒரு தகவல், பாகம் – 8, பக். 106-108
5.திருக்குறள் – 228
6.தென்கச்சி கோ. சுவாமிநாதன், தென்கச்சி வழங்கும் நீதிக்கதைகள் தொகுதி – I, ப. 118
7.வேதாத்திரி மகரிஷி ஆன்மீக மற்றும் உள்ளுணர்வுக் கல்வி நிலையம், மதிப்புக் கல்வி, ப-11

 

படத்திற்கு நன்றி:http://chennaitv.wordpress.com/2008/02/18/motivation-gurus-of-tamil-television-part-i

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *