நாகேஸ்வரி அண்ணாமலை

 

 

 

இன்னும் அமெரிக்காவில் இனத்துவேஷம் இருக்கிறது என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துக்கொண்டே 

இருக்கின்றன. ஜனாதிபதி ஒபாமா கருப்பர் என்பதற்காகவே அவர் இரண்டாவது தடவையும் ஜெயித்து ஜனாதிபதி ஆகிவிடக் கூடாதென்று குடியரசுக் கட்சியில் பலர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். ஒபாமாவின் பொருளாதாரக் கொள்கைகள் சரி இல்லையாதலால் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை, அதனால் அவர் இன்னொரு முறை தேர்ந்தெடுக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வெளியில் கூறினாலும் குடியரசுக் கட்சியில் உள்ள பல தலைவர்களும் ஒபாமா கருப்பர் என்பதாலேயே அவர் இன்னொரு தடவை ஜனாதிபதியாக வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

கருப்பர்கள் விலையுயர்ந்த காரில் சென்றால் அது திருட்டுக் காராக இருக்குமோ என்று சந்தேகப்படுவது, அவர்கள் கொஞ்சம் சந்தேகப்படும்படியாக நடந்துகொண்டாலும் உடனே அவர்களை கைதுசெய்வது போன்ற செயல்களை இன்னும் காவல்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தன் வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டதால் வீட்டின் பின்புறம் சென்று கதவைத் திறக்க முயன்றபோது அவரைத் திருடர் என்று சந்தேகித்துக் கைது செய்தனர். ஜனாதிபதி ஒபாமாவே அந்தக் காவல்துறையினரை முட்டாள்கள் என்று சொல்லும் அளவுக்கு அது பெரிய விஷயமாகியது.

இப்போது ஃப்ளாரிடா மாநிலத்தில் பதினேழு வயதே ஆன ஒரு கருப்புப் பையன் தானும் தன்னுடைய தந்தையும் தங்கியிருந்த உறவினர் வீட்டிலிருந்து பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குப் போய் ஸ்கிட்டில்ஸ் என்னும் மிட்டாயும் ஐஸ் போட்ட ஒரு பானமும் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். இவன் பெயர் ட்ரேவான் மார்டின். அந்த ஏரியாவில் இருந்த ஒரு அபார்ட்மெண்ட் கட்டிடத்தைச் சேர்ந்த ஜார்ஜ் சிம்மெர்மேன் என்பவன் தங்கள் கட்டடப் பாதுகாப்பிற்காக தன்னுடைய காரில் ரோந்து வந்து கொண்டிருந்தான். ட்ரேவானை சந்தேகத்தின்பேரில் தொடர்ந்தான். அதோடு 911 என்ற எண்ணையும் போனில் கூப்பிட்டிருக்கிறான். ஏதாவது ஆபத்தான நிலையில் இருக்கும்போது அவசரத் தேவைக்கு இந்த எண்களைச் சுழற்றினால் போன் வந்த இடத்தை அறிந்து கொண்டு உடனே போலீஸ் உதவிக்கு வரும். யாருக்காவது அவசர வைத்திய உதவி தேவைப்பட்டாலும் இந்த எண்ணைக் கூப்பிடலாம்.

சிம்மெர்மேன் இப்படிக் கூப்பிட்டதும் அடுத்த பக்கம் இருந்த போலீஸார் சிம்மெர்மேனைக் காரிலிருந்து இறங்க வேண்டாமென்றும் ட்ரேவானைத் தொடர வேண்டாமென்றும் அறிவுரை கூறியிருக்கிறார்கள். மேலும் தாங்கள் வந்துகொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அதற்குள் என்ன ஆயிற்று என்று சரியாகத் தெரியவில்லை. ட்ரேவான் சிம்மெர்மேனால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கிறான். ஸ்தலத்திற்கு வந்த போலீஸார் சிம்மெர்மேனைக் கைதுசெய்யவில்லை. தன்னுடைய தற்காப்பிற்காக ட்ரேவானைச் சுட்டதாக சிம்மெர்மேன் கூறியதை போலீஸ் ஒப்புக் கொண்டு, ட்ரேவானிடம் தவறு காண்பதற்காக அவன் உடம்பில் போதை மருந்துகளோ மதுபானமோ சாப்பிட்ட தடயம் இருக்கிறதா என்று பார்ப்பதற்காகப் பிரேதப் பரிசோதனை செய்திருக்கிறார்கள். ஃப்ளாரிடா மாநிலத்தில் ‘உன்னை நீயே காத்துக்கொள்’ (Stand your Ground) என்ற சட்டம் இருப்பதால் தன் உயிருக்கு ஆபத்து என்று யாரும் உணர்ந்தால் மற்ற யாரும் தன்னைத் தாக்க வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டால் கூட அவர்களைத் தாக்க உரிமை உண்டாம். இந்தச் சட்டம் இருப்பதால்தான் தன்னைத் தாக்க வந்த ட்ரேவானைத் தான் சுட்டதாக சிம்மெர்மேன் கூறுகிறான். ட்ரேவான் அப்போது தலையை மூடக் கூடிய ‘ஹுட்’ (hood) உள்ள ஒரு ‘டீ சர்ட்’ அணிந்திருந்ததால் அவனை சந்தேகப் பேர்வழி என்று அவன் நினைத்துவிட்டானாம். மேலும் ட்ரேவான் தன்னைத் தாக்க முற்பட்டதாகவும் அதனால் தான் அவனைச் சுட்டதாகவும் கூறியிருக்கிறான். 150 பவுண்டு எடையுள்ள 17 வயதுப் பையன் 250 பவுண்டு எடையுள்ள ஒரு மனிதனை எப்படித் தாக்க முற்பட்டிருக்க முடியும் என்று விளங்கவில்லை.

இந்தச் சம்பவம் நடந்து மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் இது வெளிச்சத்திற்கு வந்தது. ட்ரேவானின் பெற்றோர்கள் சிம்மெர்மேனைக் கைது செய்யும்படி காவல்துறையினரை வற்புறுத்தி வருகின்றனர். இன்னும் அவன் கைது செய்யப்படவில்லை. இப்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கருப்பர்களின் ஆதரவு ட்ரேவானின் பெற்றோர்களுக்கு இருக்கிறது. இல்லினாய் மாநில கீழவை அங்கத்தினர் ஒருவர் தான் அணிந்திருந்த சூட்டிற்குக் கீழே ட்ரேவான் அணிந்திருந்தது போன்ற ‘டீ சர்ட்டை’ அணிந்துகொண்டு அவைக்கு வந்து அவையில் கோட்டைக் கழற்றிவிட்டு ட்ரேவானுக்கு நடந்த கொடுமையை எல்லோரும் கண்டிக்க வேண்டும், சிம்மெர்மேனைக் கைதுசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் ’டீ சர்ட்டில்’ இருந்ததால் அவைக்குத் தகுந்தவாறு உடை அணியவில்லை என்று அவரை அவையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள்.

பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒரு கருப்பர் ‘எனக்கு இரண்டு பதின்ம வயதுப் பையன்கள் இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பு பற்றி எனக்குப் பயமாக இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார். ஜனாதிபதி ஒபாமாவே கூட ‘எனக்கு ஒரு பையன் இருந்திருந்தால் அவன் ட்ரேவான் மாதிரி இருந்திருப்பான்’ என்று கூறியிருக்கிறார்.

ட்ரேவானைச் சுட்ட சிம்மெர்மேன் இப்போது தனக்கு வந்த மிரட்டல் கடிதங்களால் பயந்துபோய் தலைமறைவாக இருக்கிறான். ‘டீ சர்ட்டில்’ உள்ள ஹூடும் ஸ்கிட்டில்ஸும் கருப்பர்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் சின்னங்களாகி விட்டன. ஸ்கிட்டில்ஸ் விற்பனை அதிகமாகியிருக்கிறதாம். அந்த லாபத்தில் ஒரு பகுதியை ட்ரேவானின் பெற்றோர்களுக்கு வழக்கை நடத்தக் கொடுக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள்.

சமீபத்தில் நியுயார்க்கின் மத்திய நீதிமன்றத்தில் நியுயார்க் காவல்துறையின் மீது பதிமூன்று வாதிகளின் சார்பில் நியுயார்க் குடிமையுரிமைக் கழகம் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான அபார்ட்மெண்ட் கட்டடங்களிலும் அரசு கட்டி விட்டிருக்கும் அபார்ட்மெண்ட் கட்டடங்களிலும் வசிக்கும் ஏழைக் கருப்பர்களை தேவையில்லாமல் சந்தேகித்துக் கைது செய்வதாகவும், அவர்கள் வசிக்கும் கட்டடங்களின் சொந்தக்கார்கள் அந்தக் கட்டடங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி கொடுத்திருப்பதால் உள்ளே நுழைந்து அங்கு வசிப்பவர்களை அவர்களுடைய அடையாள அட்டையைக் காட்டச் சொல்லி வற்புறுத்துவதாகவும், இப்படிச் செய்வது அவர்களின் உரிமையில் தலையிடுவதாகும் என்றும் மனித உரிமைவாதிகள் கூறியிருக்கிறார்கள். அங்கு குடியிருப்பவர்களின் உறவினர்களோ நண்பர்களோ அவர்களைப் பார்க்க வந்தால் காவல்துறையினர் அவர்களையும் சந்தேகத்தின் பேரில் கேள்விகள் கேட்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் முறையிட்டிருக்கின்றனர். இப்படிக் காவல்துறையினர் அச்சுறுத்துவதால் உறவினர்களையும் நண்பர்களையும் தங்களைப் பார்க்க வர வேண்டாம் என்று அவர்கள் கூறியிருப்பதாகவும் அதனால் தங்களால் அவர்களோடு உறவாட முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

சுமார் நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கருப்பர்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கப்பட்ட போது வெள்ளையர்கள் அவர்களை எளிதில் அந்த உரிமைகளை உபயோகிக்க விடவில்லை. ஓட்டுச் சாவடிகளில் வேட்பாளர்களின் பெயர்களை மாற்றி மாற்றி வைப்பார்களாம்; கருப்பர்களிடம் அடையாள அட்டைகளைக் கேட்பார்களாம்; அவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து மிக அதிக தூரத்தில் ஓட்டுச் சாவடிகளை அமைப்பார்களாம். அரசு கருப்பர்களுக்கு ஓட்டுரிமை வழங்கியும் அந்த உரிமையை அவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக் கொண்டார்கள் வெள்ளையினவாதிகள்.

இப்போது கருப்பர்களின் நிலை மிகவும் மாறிவிட்டது. அவர்களில் நிறையப் பேர் படித்திருக்கிறார்கள். அவர்களின் உரிமைகளுக்காகப் போராடப் பலர் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களைச் சமூகத்தின் சமமான பிரிவினராகக் கருத இன்னும் சில வெள்ளையர்களுக்கு மனம் வரவில்லை. அமெரிக்கா தொழில்நுட்பத்திலும் மற்ற பல துறைகளிலும் முன்னேறியிருந்தாலும் தன் மக்களில் ஒரு பகுதியினரை இன்னும் மாற்றாந்தாய் போல் நடத்துவது அமெரிக்காவிற்கே இழுக்கல்லவா? தன் மீதுள்ள இந்தக் களங்கத்தை அமெரிக்கா எப்போது துடைத்துக்கொள்ளப் போகிறது? ஒபாமா தன்னுடைய 2008 தேர்தல் பிரச்சாரத்தில் ‘வெள்ளை அமெரிக்கா, கருப்பு அமெரிக்கா என்று இரண்டு அமெரிக்காக்கள் இல்லை. ஒரே ஐக்கிய அமெரிக்காதான்’ என்று கூறினார். அந்த ஐக்கிய அமெரிக்கா எப்போது வரும்? அல்லது எப்போதுமே வரவே வராதா?

படத்திற்கு நன்றி:

http://www.kyrene.org/schools/brisas/sunda/bhistory/bios.htm

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இன்னும் எல்லோரும் ஓரினம் இல்லை

 1. அமெரிக்காவில் உள்ள இனத் துவேஷம் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
  T – ஷர்ட் போட்டுள்ளார் என்பதாலேயே அவர் கூறும் கருத்தை நிராகரித்தது
  அறிவுடைய செயலா? வள்ளுவப்பேராசான் 2000 வருடங்களுக்கு முன்னரே
  தம்முடைய குறளில் சொன்ன கருத்து இங்கு சிந்திக்கத்தக்கது.
  ” எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு”
  இவ்வாறு சிந்தித்து செயல்படாவிட்டால் அது அறிவுக்குப் பொருந்தாது
  என்று சொல்லிவிட்டார்.
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *