நந்தன வாழ்த்து – அந்தாதியில்!
அந்தாதி யிட்டே அறிவிப்போம் ஆழ்பொருளைப்
பந்தனைதீர் பல்லாண் டெனப்புகன்று – சந்ததமும்
சிந்தாமல் எச்சிறப்பும் சீர்வளமும் உந்தமக்கே
நந்துகவே நந்தனத்தி லின்று.
இன்றும் இனியும் இனியென்று மீநயத்தே
நன்றே இணைந்து நயம்பெருக்கி வாழ்ந்திடுவீர்
பொன்றும் உலகத்தே பொன்றாப் பொருளடைவீர்
என்றென்றும் நந்தன மவன்.
அவமகல ஆன்ற மறைதுலங்க பூன்ற
தவமுயரத் தாங்கும் திடமாகிப் போந்த
புவிக்கே அரசானார் ஆற்றும் விரசம்
அவிக்க வருநந் தனம்.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
தனமே வருமே தனித்துவமே இந்தத்
தினமே பெறுமே திருமுகமே – ஆமே!
இனிமேல் வளமே எழில்மிகுமே. நல்ல
கனிமேல் நமக்குமே கண்.
அந்தாதி தொடர்கிறது…..
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.
காலக் கனிவு
ஆண்டொன்று பூத்ததென்று
ஆர்வத்தில்அகங்களித்தால்
நான் போவதில் மகிழ்வோ என
போன ஆண்டு முகம் வாடும்.
போன ஆண்டின் புகழ்பாடின்
போந்தபல எமை வேட்கும்
ஆனவரை பின்சென்றால்
அவ்வழியோ வட்டத்தில்
வருகின்ற புத்தாண்டாய்ப்
பூங்குறும்பு செய்துவரும்.
ஆண்டென்ற கோபியர்கள்
ஆர்வலித்த காலம்தான்
நீண்டபுகழ் அச்சுதனாய்
நிர்மலமாய்ப் புன்சிரிக்கும்.
புன்சிரிப்போ பொறாமைகளோ
வன்நெஞ்சோ வாட்டங்களோ
தன்னெஞ்சு பொய்க்காமல்
தரமிக்க வார்த்தைகளும்
திறமான செயல்யாவும்
உரமாக்கிப் போட்டுவைப்போம்
ஊன்றுவிதை நட்டுவைப்போம்
பூர்ணகுணப் பொன்னரங்கில்
போந்துதுயில் தான்வளரும்
காரணனார் கடைக்கணிக்கக்
காலமும் கனிந்துவரும்
ஞாலத்தே என்றுரைக்க
வந்தனையோ வருக நந்தனமே !
ஆமென்றீர் யாமென்றோம் நோமென்றீர் நாம்நலிந்தோம்
தீந்தமிழில் பாடும் திறம்பெற்றோம் திண்ணியதாய்ப்
பாந்தமுறப் பக்கத்தில் பைந்தமிழாள் பாசத்தில்
ஏந்துவெழில் நந்தன மே.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்.