தமிழ்த்தேனீ

காற்றினும் வேகமாக கடுகி விரைந்து கொண்டிருந்தது அம்சவேணி .ஆம் இளவரசன் மணிமாறன் மனோவேகம் அவனுடைய செல்லக் குதிரையை செலுத்திக் கொண்டிருந்தது. லகானை அவன் சுண்டும் லாவகத்துக்கு ஏற்ப வளைந்து நெளிந்து துள்ளிக் குதித்து, முன்கால்களை உயரத் தூக்கிப்பிளிறி, பின்னங்கால்களை தரையுதைத்து .மணிமாறனின் கால்கள் தன்னுடைய வயிற்றில் நுணுக்கமான மர்மஸ்தானங்களின் மூலத்தை கட்டை விரலால் சுழற்றும் போதெல்லாம் கடுகி விரைந்து முன்னேறிக்கொண்டிருந்தது அம்சவேணி.

கன்னங்கரேலென்ற அதன் உருவம் அன்று காலையில் பணியாளர்களின் கவனிப்பால் மெருகேறி அந்த உச்சி வெய்யில் வேளையிலும் சூரியனை தன்னுள் வாங்கி ப்ரதிபலித்து மின்னியது. மணிமாறன் ஒரு குறிக்கோளுடன் குதிரையை அனாயாசமாக ஓட்டிக்கொண்டிருந்தான், சுற்றிலும் இருக்கும் தடைகள், காற்றின் வேகம், நடு நடுவே பள்ளங்கள், மேடுகள், குறுக்கே ஓடும் ஓநாய்கள், நிதானமாக நடந்து போகும் ஒட்டகச்சிவிங்கிகள், காட்டு யானைகள், நரிகள், நடுவே குறுக்கிட்ட ஆறு ,அதில் சுழித்து ஓடும் கருமையான நீர், அதன் நாற்றம், மூங்கிலின் ஓட்டைகளில் நுழைந்த காற்றின் விளைவால் எங்கிருந்தோ கேட்கும் பீப் ஒலிகள்.

எதைப் பற்றியும் சிந்தனை செய்யாமல் விரைந்து கொண்டிருந்தான் மணிமாறன். குறிப்பிட்ட நேரத்துக்குள் இலக்கை அடையவில்லையானால் ஏற்படும் விபரீதங்களை எண்ணி இன்னமும் அதிக வேகமாக அம்சவேணியை செலுத்தினான் மணிமாரன்.

அட இந்த இடத்தில் இப்படி ஒரு தேவதை எதிர்ப்படுகிறாளே! அவளைச் சுமந்து வரும் குதிரை அல்ல அல்ல மான்போல் இருக்கிறதே ,அடடா என்ன லாவகமாக ஓட்டுகிறாள். இவள் முன்னால் நம் குதிரையின் சாகசத்தை சற்றே காட்டினால் இவள் மிரளுவாள், ஆனால் இவள் மிரண்டாலும் அழகாய்த்தான் இருப்பாள். இவள் அழகுக்காகவே எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராய் விட்டான் மணிமாறன். இவளை எப்படியாவது கவரவேண்டும் என்னும் வெறி மணிமாறனை ஆட்டிவைத்தது.

லகானை ஒரு முறுக்கு முறுக்கி இழுத்து வளைத்து அம்சவேணியின் வயிற்றில் ஒரு உதைவிட்டான். அம்சவேணி கதறிக்கொண்டே சுழன்றது, தாவியது, துள்ளிக் குதித்து ஓடி ஒரு பள்ளத்தில் தலைகீழாக விழுந்து சுருண்டு கரணம் அடித்து தேய்த்துக்கொண்டே போய் கழுத்து தரையில் மோத கழுத்தெலும்பு உடைந்து பரிதாபமாக உயிரைவிட்டது தன் எஜமானனுக்காக

மணிமாறன் தூக்கியெறியப்பட்டு காற்றில் அல்லாடித் தலைகுப்புற வீழ்ந்து உடம்பெல்லாம் சிராய்த்து குருதி வழிய அப்படியே மயங்க ஆரம்பித்தான்

அப்படியும் ஆர்வத்தினால் தலையை மிகவும் கஷ்டப்பட்டு தூக்கி பார்த்தாயா உன்னைக்கவர எவ்வளவு செய்கிறேன் என்பது போல் அவளைப் பார்த்தான்.

அவள் தன்னுடைய ஸ்கூட்டியை அவன் பக்கமாக ஓட்டிவந்து ஹெல்மெட்டைக் கழற்றி ஒரு பரிதாபப் பார்வையைப் பார்த்துவிட்டு . ஆம்புலன்சுக்குப் போன் செய்து நிகழ்வைச் சொல்லிவிட்டு ,” பெரிய ஹீரோன்னு நெனைப்பு லூசு என்று திட்டிவிட்டு ஸ்கூட்டியை ஓட்டிப்போனாள்.

மணிமாறனின் செல்போனிலிருந்து

“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிட உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
காதலைக் காப்பது கடமையடா”

என்று ரிமிக்ஸ் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது

அந்தச் சத்தத்தையும் மீறி பிய்ங்பிய்ங் பிய்ங் பிய்ங் என்று ஆம்புலன்சின் சத்தம் கேட்டது மணிமாறன் மயங்கினான்.

 

சுபம்

படத்திற்கு நன்றி :

http://www.myspace.com/blackhorsesaloon/photos/33294091#%7B%22ImageId%22%3A33294091%7D

http://www.animalpicturesarchive.com/view.php?tid=1&did=161

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *