தேவை நம்பிக்கை; தேவையில்லை அழுகை
அண்ணாகண்ணன்
(யுகநிதியின் ‘மனிதனைத் தேடி..’ என்ற குறு நாடக நூல் குறித்த விமர்சனம்)
சமூகச் சீர்கேடுகள், அவலங்கள் ஆகியவற்றைக் கண்டு எழுந்த ஆற்றாமையின் வெளிப்பாடே, இந்த நாடகம். கிரேக்க நாட்டில் பட்டப் பகலில் கையில் விளக்கினை ஏந்தியபடி, சாக்ரடீஸ் ஏற்கெனவே தேடித் தோற்றார். இப்போது தமிழ்நாட்டில் அதே போல் பாண்டித் தாத்தா என்பவர், சத்தியத்தைத் தேடுகிறார். அவரது பார்வையில், தொழிலாளர்களை முதலாளிகளை ஏமாற்றுகிறார்கள். 100 ரூபாய் திருடியவனைச் சிறையில் அடைக்கும் காவலர்கள், பல இலட்சம் திருடியவனை வேண்டுமென்றே தப்ப விடுகிறார்கள். இத்தகைய காட்சிகள், நமக்கு மிகவும் பழையவை. அன்றாடம் நாம் காண்பவை.
சமூகம் இப்படி இருக்கிறதே எனக் குமுறுவதன் மூலம், எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. தகுந்த தீர்வுகளை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். எதிர்காலத்தில் இவை தொடராத வண்ணம், விரிவாகவும் தொடர்ச்சியாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமான, நம்பிக்கையூட்டும், வெற்றிகரமான முன்மாதிரிகளே நமக்கு உடனடித் தேவை. சத்தியத்தைத் தேடி, சாலையில் விழுந்து கிடக்கும் பாண்டித் தாத்தாக்கள் இல்லை.
இக்காலக் கவிஞர்களிடம் பாரதி, பாரதிதாசன், அண்ணா, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் எழுதுகோல்களைத் தருவதைச் சற்று ஆக்கப்பூர்வமான காட்சியாகக் கருதுகிறேன். ஆனால், ‘நீ எவரைப் போலவும் இராதே; நீ நீயாக இரு’ என்ற தத்துவத்திற்கு இதுவும் எதிரானது. முன்னோரிடமிருந்து தக்க வழிகாட்டுதலைப் பெறலாம். ஆனால், நமக்கென்று தனி வழி அமைக்க நாம் முயல வேண்டும்.
‘சத்தியம் எங்கே?’ என்ற கேள்விக்கு அது, ‘உத்தமர்களின் கல்லறைகளில் உறங்கிக்கொண்டிருக்கிறது’ என்ற பதிலை யுகநிதி அளித்துள்ளார். இந்தப் பதிலும் எனக்கு ஏமாற்றமே அளித்தது. இதைச் சொன்ன பாண்டித் தாத்தாவிடமுமா சத்தியம் இல்லை? அவர் உரையாடும் குழந்தைகளிடமுமா அது இல்லை? உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகளிடமும் சத்தியம் இருக்குமே. வளர வளரத்தானே பொய் கலக்கிறது? வளர்ந்த பிறகும் சத்தியத்தைப் பின்பற்றுவோர் இருக்கத்தானே செய்கிறார்கள். இப்படி ஆயிரம் ஆயிரம் பேர்களை நாம் கண்டெடுக்க முடியும்தானே! அந்த நம்பிக்கையை அடுத்தடுத்த ஆக்கங்களில் யுகநிதி விதைப்பார் என நம்புகிறேன்.
I fully agree with you Mr.Anna Kannan. We should always have positive attitude and approach so that we can overcome all difficulties. We should never be afraid of the defeats rather take them as stepping stones and march towards challenges.
Very nice article about positive attitude. Good work. Keep it up.