நிலவொளியில் ஒரு குளியல் – 15

8

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshஉற்றார் உறவினருக்குக் கடிதம் எழுதும் பழக்கம் அநேகமாக இப்போது வழக்கொழிந்து வருகிறது. இப்போதெல்லாம் எல்லாக் கிராமங்களிலும் அலைபேசி கோபுரங்களை நிறுவி, அதிலிருந்து வரும் அதிர்வலைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத சிட்டுக் குருவியினத்தை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட நமக்கு நேரமோ, மனமோ இருக்கவா செய்கிறது? மானும் மயிலும் ஆபாசமாக ஆடும் நிகழ்ச்சிகளும் ஒருவருக்கொருவர் கொலை செய்துகொள்ளும் தொடர்களையும் பார்க்கவே நேரம் போதாது நமக்கு. இதில் கேவலம், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவது பற்றியும் அதனால் மெல்ல அழிந்து வரும் மற்ற உயிரினங்கள் பற்றியும் கவலைகொள்ள முடியுமா என்ன? எல்லாம் நெருக்கடி என்று வந்தால் அப்போது கவலைப்பட்டால் போதாது? இந்த லட்சணத்தில் நாமாவது கடிதம் எழுதவாவது?

நாஞ்சில் நாடன் சொல்வதைப் போல, இப்போது அலைபேசி வழி குறுஞ்செய்திகள் அனுப்புவது நம் நாட்டின் பண்பும் பயனுமாக இருக்கிறது. முன்னெல்லாம் காதல் சொல்லவாவது கடிதம் என்ற ஊடகம் பயன்பட்டது. இப்போது அந்தக் கவலையெல்லாம் இல்லை. ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டால் தீர்ந்தது. இப்படிக் கடிதப் போக்குவரத்துகள் மிகவும் குறைந்த நிலையில், தபால் அலுவலகங்கள் தங்கம் விற்க முன் வருவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இப்போதெல்லாம் தபால் அலுவலகங்கள் சேமிக்கும் வங்கியாகவே மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தபால்காரர்கள் பெரும்பாலும் ஏதேனும் அலுவலகக் கவரையோ , இல்லை முதிர்வு பெற இருக்கும் வைப்பு நிதி பற்றிய அறிக்கையையோ தான் பட்டுவாடா செய்ய வேண்டியிருக்கிறது. எப்போதாவது அழைப்பிதழ்கள் ஒன்றிரண்டு. ஆனால் 25 வருடங்களுக்கு முன்னால் இருந்த நிலையே வேறு.

அப்போதெல்லாம் சந்தோஷ சமாசாரமாக இருந்தாலும் சரி, வருத்தம் தரக்கூடிய செய்தியாயினும் சரி கடிதத்தில் தான் எழுதுவார்கள். ஏதேனும் அவசரச் செய்தி என்றால், தந்தி கொடுப்பார்கள். ஒருவரைத் தன் குடும்பத்தாரோடு இணைக்கும் பாலமாக தபால்காரர் செயல்பட்டு வந்தார் என்றால் மிகையாகாது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் தபால்காரரின் வரவுக்குக் காத்திருப்பது என்பது அன்றாட நிகழ்வு. தபால்காரர்கள் பலரும் பலவிதமானவர்கள். அதில் என் பாட்டி ஊரான கடையத்தில் வேலை பார்த்த தபால்காரர் ரொம்பவே வித்தியாசமானவர். அவரைப் பற்றிய நினைவுகளே இந்தப் பத்தி.

ஏதேனும் விடுமுறை விட்டால் நான் உடனே என் பாட்டி வீடு இருக்கும் கிராமமான கடையத்திற்கு ஓடிவிடுவேன். ஆழ்வார்குறிச்சிக்கும் கடையத்திற்கும் ஐந்தே கி.மீ. தான் தொலைவு. பேருந்து பிடித்தால் 15 நிமிடப் பயணம். அதுவும் நடுவில் சில ஊர்கள் வரும் என்பதால் தான். அப்படிப் போகும் போதெல்லாம் அந்தத் தபால்காரரைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் தபால்காரர்களுக்கு காக்கி வண்ணத்தில்தான் சீருடை இருக்கும். அவரிடம் சைக்கிள் கூடக் கிடையாது. அவர் முஸ்லிம் என்பதால் தலையில் தொப்பி அணிந்திருப்பார். எல்லோரும் அவரை “பாய்” என்று அழைக்கவே, நானும் அப்படியேதான் அழைப்பேன். குழந்தைகளிடம் அவருக்கு விசேஷ ஈடுபாடு ஒன்றும் கிடையாது.

indian-postmanஅவரிடம் சிறப்பான அம்சம் என்னவென்றால், எங்கள் தெருவில் யார் வீட்டுக்குக் கடிதம் வந்தாலும் சரி, அதைப் பிரித்து படித்துப் பார்த்து விட்டுதான் எங்களிடம் தருவார். எனக்கு முதலில் கொஞ்சம் கோபம் வந்தது. நம் வீட்டுக்கு வரும் கடிதங்களைப் படிக்க இவர் யார் என நினைத்தேன். அதை என் பாட்டியிடம் சொல்லவும் செய்தேன். அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள அவள் தயாராகவே இல்லை. “படிச்சா படிக்கட்டுமே, இதுல என்ன இருக்கு? பெரிய ராணுவ ரகசியமா எழுதப் போறோம்” என்று கூறிவிட்டாள். அநேகமாக எல்லாருமே அவர் தங்கள் கடிதங்களைப் படிப்பதைச் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டனர் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் பாய் மீது யாரும் புகாரோ, குற்றமோ சொன்னதில்லை.

காலையில் பத்தரை மணி வாக்கில் ஆடி அசைந்தபடி மெதுவாக நடந்து வருவார் (அவர் சற்று பெருத்த உருவம் உடையவர்). எங்கள் தெருவில் நடுவில் இருக்கும் வீடுகளின் ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, வந்திருக்கும் கடிதங்களை ஒவ்வொன்றாகப் படிப்பார். படித்து முடிக்க எப்படியும் 11:30 ஆகி விடும். பின்னர் மெதுவாக எழுந்து தொப்பியைச் சரி செய்துகொண்டு கடிதத்தின் செய்திகளின் அவசரத்திற்கேற்ப அல்லது முக்கியத்துவத்திற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட வீடுகளில் சென்று கொடுப்பார். வரிசைக்கிரமாகக் கொடுப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து போக வேண்டியதுதான். அப்படிக் கொடுத்த பிறகு, பருவ நிலைக்கேற்ப காப்பியோ, இல்லை மோரோ கேட்டு வாங்கிக் குடிப்பார். மற்றபடி டிப்ஸ் என்ற பேச்சே கிடையாது அவரிடம். மணியார்டர் கொடுத்தால் கூட டிப்ஸ் வாங்க மாட்டார்.

கடிதம் கொடுக்கும் போதே யாரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, என்ன விஷயம் எழுதியிருக்கிறார்கள் என்பதைச் சுருக்கமாக அவரே சொல்லி விடுவார். யாராவது ஒரு குறிப்பிட்ட நபர் சற்று கால தாமதமாகக் கடிதம் எழுதினால் “என்ன இவங்கிட்டயிருந்து லெட்டர் இவ்ளோ லேட்டா வருது? அதை என்னன்னு கவனிங்க முதல்ல” என்பார். யார் யார் வீட்டுக்கு யார் யார் என்ன உறவு, அவர்கள் எந்த ஊரிலிருக்கிறார்கள், எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கடிதம் வரும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி. அவருடைய ஞாபக சக்தி பிரமிக்கத் தக்கதாய் இருந்தது. எந்தக் குழப்பமும் இல்லாது எல்லார் வீடுகளோடும் அவரால் ஒட்டி உறவாட முடிந்தது. ஒரு முறை ஒரு அண்ணன் வேலைக்கான ஆர்டர் வந்ததைச் சொன்னபோது, தபால்காரரை அப்படியே தூக்கிச் சுற்றியது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

என் பெரியம்மா அதாவது என் தாயின் அக்கா அப்போது பம்பாயில் (அப்போது பம்பாய் தான், மும்பை இல்லை) இருந்தார்கள். அதுவும் தவிர என் பாட்டியின் உடன் பிறந்தவர்கள், தாத்தா வழி உறவினர்கள் என என் பாட்டிக்கு ஒரு பட்டாளமே இருந்தது, கடிதம் எழுத. என் பாட்டிக்கு நன்றாகத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். தேவாரம், திவாசகம் எல்லாம் படிப்பாள். அதனால் கடிதப் போக்குவரத்து சரளமாக இருந்தது. தபால்கார பாய்க்கு என் பெரியம்மா பம்பாயில் எங்கே இருக்கிறார்கள், அவர்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என எல்லா விவரமும் தெரியும். எனக்கு ஒரு முறையாவது அவர் படிக்காத கடிதத்தை என் பாட்டியிடம் கொடுக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை என்னை வெறி கொள்ளச் செய்தது என்று கூடச் சொல்லலாம்.

அதற்காகவே அவர் வரும் வழி பார்த்து, தெருவிலேயே நின்றிருப்பேன். அவர் வந்து நடு வீட்டுத் திண்ணையில் அமர்ந்ததும் ஓடோடிப் போய் “எங்க வீட்டு லெட்டரை எங்க பாட்டி அவசரமா கேட்டு வாங்கிட்டு வரச் சொன்னாங்க. எங்களுக்கு .லெட்டர் வந்திருந்தா குடுங்க” என்பேன் . அவரும் சளைக்காமல் “எங்க வீடுன்னு மொட்டையா சொன்ன எப்படி? வீட்டுக்கு நம்பர் இல்லையா” என்பார். வீட்டு எண் சொன்னதும் தெருப் பெயரைக் கேட்பார். அந்த வீட்டில் இருப்பவருக்கும் எனக்கும் என்ன உறவு என்பார். எல்லாம் திருப்திகரமாக சொல்லிவிட்டோம் இனி கடிதம் கைக்கு வந்து விடும் என்று நினைக்கும் போது “இன்னிக்கு உங்க வீட்டுக்கு லெட்டர் எதுவும் வரலையே?” என்று கூறி விட்டு, கடிதங்களில் ஆழ்ந்து விடுவார். மேற்கொண்டு நாம் என்ன பேசினாலும் நம்மை லட்சியமே செய்ய மாட்டார். எனக்கானால் எரிச்சல் பற்றிக்கொண்டு வரும்.

என்னிடம் லெட்டர் இல்லையென்று சொல்லிவிட்டதால் அதை நம்பி என் பாட்டியிடம் சென்று சொல்லி விட்டு, நான் விளையாடப் போய் விடுவேன். பிறகு நான் வீட்டிற்கு வருபோது அவர் கடிதத்தைக் கொடுத்து விட்டு, என் பாட்டியோடு சாவதானமாகப் பேசிக்கொண்டிருப்பார். “ஏன் என்னிடம் பொய் சொன்னீர்கள்?” என்று ஆவேசத்தோடு கேட்டால், “ஆமா! இவ பெரிய மனுஷி, பொய் சொல்லிட்டாங்க! போ! போ! போய் விளையாடு” என்று என் பாட்டி முன்னாலேயே கடிந்துகொள்வார். என் பாட்டியும் பார்த்துக்கொண்டு நிற்பாளே ஒழிய, எனக்குப் பரிந்து பேச மாட்டாள். அது வேறு என் ஆத்திரத்தைக் கிளப்பி விடும்.

தபால்கார பாய்க்குத்தான் எங்கள் தெருவில் ஒருவர் வீட்டுச் சமாசாரங்களும் தெரியுமே தவிர, அவர் பற்றிய ஒன்றுமே எங்களுக்குத் தெரியாது. அவர் வீடு எங்கே? அவருக்கு எத்தனை குழந்தைகள்? வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்ற எந்த அடிப்படை விவரமுமே எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை எனக்குத்தான் அப்படியோ என நினைத்து என் பாட்டியிடம் கேட்டேன் அவளுக்கும் தெரியவில்லை. (ஒரு வேளை சொல்ல விரும்பவில்லையோ). நான் ஆறாவது படிக்கும் போது அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் அவருக்குப் பதிலாக, ஒல்லியாக ஒருவர் சைக்கிளில் வந்து கடிதங்களைப் பட்டுவாடா செய்துவிட்டுப் போனார்.

பாய் தான் ஓய்வு பெறப் போவதைப் பற்றியோ, இல்லை தன்னுடைய மாற்றல் குறித்தோ ஒருவரிடமும் தெரிவித்ததாகத் தகவல் இல்லை. அதன் பிறகு அந்த ஒல்லி தபால்காரர் வர ஆரம்பித்தார். அவர் பாய் மாதிரி கடிதங்களைப் படிப்பது இல்லை. வரிசையாக வந்து கடிதம் இருந்தால் விட்டெறிந்து விட்டுப் போய்விடுவார். வாசலில் நாம் நின்றிருந்தாலும் நம் கையில் கொடுக்காமல் தூக்கித்தான் எறிவார். நான் மெல்ல மெல்ல தபால்காரர் மேல் சுவாரசியம் இழக்கலானேன். மற்றவர்களுக்கும் தபால்காரரின் வரவு, ஒரு சடங்காகப் போய்விட்டது. முன்னாலிருந்த இணக்கம், இல்லாமல் போய்விட்டது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்த நினைவுகளை அசை போடும் போது, பதில் தெரியாத பல கேள்விகள் மனத்தில் தோன்றுகின்றன. அவர் மேலிருந்த எரிச்கல் மாறி, மரியாதை தோன்றுகிறது. அவர் மற்றவர் விஷயங்களில் இவ்வளவு ஈடுபாடு காட்டக் காரணம் என்ன? அதை அந்த நாளைய மக்களால் அவ்வளவு சுலபமாக எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது? இன்று நம்மால் அதை ஒப்புக்கொள்ள முடியுமா? எங்கள் தெருவுக்கு மட்டும்தான் அவர் அப்படிச் செய்தாரா? இல்லை அவர் தபால் கொண்டு செல்லும் எல்லா இடங்களிலும் செய்தாரா? அவர் ஏன் தன்னைப் பற்றிய செய்திகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளவில்லை? இப்படி பல கேள்விகள் தோன்றுகின்றன. அவற்றுக்குப் பதில் சொல்லத்தான் யாருமில்லை.

அவர் செய்தது சரியா? தவறா? என்பதல்ல கேள்வி. மனிதர்களிடையே நிலவிய நல்லிணக்கத்தின் குறியீடாகத்தான் நான் அவர் செய்கையைக் காண்கிறேன். நம்மால் ஒரு போதும் அது போல ஆக முடியாது. எனவே ஒளிவு மறைவில்லாத அந்த நாளைய மனிதர்களை நினைத்துக்கொண்டே நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்…

===================================

படத்திற்கு நன்றி – http://www.imagesofasia.com

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 15

  1. ஒரு காலத்தில் postman நம் வீட்டு குடும்ப நபர் போல பழகிய நாட்கள் ஞாபகத்திற்கு வருகிறது. இப்பொழுது அந்த பழக்க வழக்கங்கள் இல்லை. தபாலுக்காக வழிமேல் விழிவைத்து காத்திருந்த காலங்கள் உண்டு. இப்பொழுது கொரியர் சர்வீஸ் மற்றும் ஈமெயில் சேவைகள் அதிகரித்து உள்ளதால் அந்த நட்புரிமை missing .

  2. This is really very good. i re-collect my golden(old days) period when I read this.Really superb!

    Old days as well as Golden periods will not come again.

  3. 20 ஆண்டுக்கு பின் நோக்கி, என் வாழ்கை பயணித்தது.

    மிக்க நன்றி.

  4. Now also i can see elderly people using the post office for postal services. Though corporates and youngsters prefer courier services and Electronic data exchanges for communications. All developments have pros and cons and we have to move on in life..

  5. Today nobody uses letters. Nowadays everybody likes to recieve letters. But nobody likes to write it. Good work madam. Keep it up.

  6. very nice.Two things are specified here:
    1. The environment is getting spoiled due to the new inventions like cellphone.But no one has time to worry for that.
    2. Count of People who live and work for others is very less today.
    we have to think about this….

  7. Nowadays everything is personal ,personal,personal,…..Even within the family members the word has become essential.If we got that postman again ,he will also change.Nice narration.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.