நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-8
பெருவை பார்த்தசாரதி
“கல்வியின் மிக்கதாம் செல்வமொன்றில்லையே
கண்மணீ கேளடா நீயென்றன் சொல்லையே”
என்று கல்வியின் சிறப்பை மாணவர்களுக்கும் அதைப் போதிக்கின்ற குருவுக்கும், புத்துணர்ச்சி தரும் கவிதை வரிகளின் மூலம் உணர்த்துகின்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
ஆசிரியப் பணி என்பது, வகுப்பறையில் பாடம் நடத்துவதோடு முடிவடைந்து விடுவதில்லை. ஒரு மாணவனின் கல்வித்திறனை மற்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில் எவ்வாறு வேறுபடுகிறது, கல்வி தவிர இதரத் துறைகளில் மானவனுக்கு ஈடுபாடு இருக்கிறதா, அவனுடைய ஒழுக்கம், பண்பு மற்றும் உடல்நலம் கூட ஆசிரியர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப் படுகிறது.
பெற்றோர்களை விட அதிக நேரம் மாணவர்களிடம் உரையாடுவது ஆசிரியர்களே என்பதால், ஒரு திறமையான மாணவனை, ஆசிரியரால் மட்டுமே சுலபமாக அடையாளம் காண முடியும். இதனால்தான் ஆசிரியர்களை “இரண்டாவது அன்னை” என்று பெருமையுடன் குறிப்பிடுவார்கள்.
ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது இடை இடையே மேற்கோள்களைக் காட்டிப் பாடங்களை மாணவர்களின் நினைவில் பதிய வைப்பார். வகுப்பறையில், மாணவனோடு மாணவனாக ஒன்றிக் கலந்து, மாணவனின் மனதில் பாடத்தால் இடம் பிடித்து, மாணவனின் மனதுக்குள்ளே ஊடுருவிச் செல்பவரே திறமையான ஆசிரியராகச் செயல்பட முடியும்.
“நான் எல்லாவற்றையும் நடத்தி விட்டேன், ஆனால் மாணவனுக்குத்தான் புரியவில்லை” என்று ஒரு ஆசிரியர் அங்கலாய்த்துக் கொண்டால், அவர் ஆசிரியப் பணிக்குத் தகுதியில்லாதவர் என்றே சொல்லலாம். வகுப்பறை விஷயங்களைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்ளும்போது, தயவு செய்து ஆசிரியர்களைக் குறை கூறுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
என்றாவது ஒரு நாள் உங்கள் குழந்தைகளிடம், பள்ளி ஆசிரியரைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள், ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறையில் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள் என்பதைத் துல்லியமாக எடை போட்டுச் சொல்வார்கள்.
ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சியில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி பெற்று விடுகிறது என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து, இப்பருவத்தைத்தான் அதிக அளவில் பள்ளியில் கழிக்க நேரிடுகிறது. இந்தப் பருவத்தில்தான் ஆசிரியர்கள், மாணவர்களின் மனதில் கல்வியோடு சேர்த்து இதர நற்பண்புகளையும் விதைக்கும் பருவம். ஆசிரியர் என்ற நிலை ஒரு நாளும் மாறுவதில்லை, அவரிடம் பயிலும் மாணாக்கர்கள் படிப்படியாக முன்னேறி மழலைப் பருவத்தில் இருந்த குழந்தை, பின்பு மாணவனாகி, பள்ளிப் பருவத்தை முடித்து, கல்லூரிக்குச் சென்று, பின்பு ஆசிரியராக, கலெக்டராக, ஆளுனராக, அறிஞராக, ஆன்ரோராகவும், சான்றோராகவும் உயர, ஆசிரியப் பணி என்பது தொடர்ந்து வழிகாட்டும் பணியாக உலகம் உள்ளளவும் விளங்கும்.
ஆசிரியர்கள் மாணவர்களை மதிக்கும் போது, மாணவர்களும் ஆசிரியர்களை மதிப்பார்கள். எதிர்மறை எண்ணங்களை (Negative thoughts) மாணவர்களின் மனதில் விதைக்காமல், நேர்மறை எண்ணங்களுக்கு (Positive thoughts) முக்கியத்துவம் கொடுக்கும்போது, மாணவனின் எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை ஆசிரியர்கள் நன்றாக அறிவர்.
ஒரு மாணவனின் பின்வாங்கிச் செல்லும் செயல்திறனைக் (dropout syndrome), கருத்தில் கொள்ளாமல், வேறுவகையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி அவனைத் திறம்படச் செயல்பட வைக்க முடியும். எதிர்மறை எண்ணங்களை உள்ளே நுழைய விடாமல், வளர்ச்சிக்குத் தடையில்லாத நேர்மறை எண்ணங்களை விதைத்து மிகச் சிறந்த மாணாக்கர்களை உருவாக்கிய தலைசிறந்த ஆசிரியர்களைப் பற்றி நாம் படித்திருக்கிறோம்.
கற்பதில் ஆர்வம் உள்ள மாணாக்கருக்கு ஆசிரியரின் வழிகாட்டுதல் அவசியம் ஆனாலும், கற்றுக் கொடுக்க மறுத்த ஆசிரியரையே தனது ஆசானாக ஏற்று ஒருவன் தலைசிறந்த மாணவனாக விளங்கினான் என்கிறது ஒரு மகாபாரதம்.
வில்வித்தை ஒன்றை மட்டுமே கற்க வேண்டும் என்ற தனது வாழ்நாள் ஆசையை, அந்த வித்தையில் சிறந்து விளங்கிய ஒரு ஆசானை அணுகி தனது விருப்பத்தைத் தெரிவித்தான் ஒரு மாணவன். ஒரு சில காரணங்களால் அவனை மாணவனாக ஏற்க முடியாது என்று ஆசிரியர் மறுத்து விட்டார்.
ஆனால் அந்த வித்தையை எப்படியாவது கற்க வேண்டும் என்ற அவனது தணியாத தாகம் மட்டும் அடங்கவில்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு, ஒரு முடிவுக்கு வருகிறான். வில்வித்தையில் தன்னைத் தவிர வேறொருவர் சிறந்தவர் என்ற பெயரை உலகம் அறியக்கூடாது, அதை அந்த ஆசிரியரும், உலகமும் அறிய வேண்டும் என்பதே அவனது தீர்க்கமான முடிவு. ‘ஆசான் இல்லாமல் எந்தக் கலையையும் கற்க முடியாது’ என்பது அவனது சிந்தனையில் சிக்கலாக உருவெடுத்தது. இதற்கும் ஒரு முடிவு உண்டு என்று தீர்மானித்து, ஆசிரியரின் உருவச்சிலை ஒன்றைச் செய்து, நாள்தோறும் ஆசிரியரை வணங்கி, அந்த உருவச்சிலைக்கு முன்னால் தினந்தோறும் வில் வித்தைக்கான பயிற்சியில் அயராது ஈடுபட்டு, தனது குறிக்கோளையும் எட்டி விடுகிறான் அந்த மாணவன்.
ஆசிரியரின் உருவத்தை மனதிலே வடித்து, அதை அப்படியே சிலையாக்கி, அந்த ஜடப்பொருளுக்கு முன்னால் தனது கற்கும் ஆற்றலை வளர்த்து அதை உலகறியச் செய்து மாணாக்கர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அந்த மாணவனின் பெயர் ஏகலைவன். தன்னைப் போலவே ஒரு சிலையை உருவாக்கி, அந்தச் சிலையையே குருவாக ஏற்றுக்கொண்டு, தனது வாழ்நாள் ஆசையைப் பூர்த்தி செய்துகொண்ட அந்த மாணவனின் மானசீக ஆசான் துரோணர்.
என்னுடைய ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், இந்த மாதிரிக் கதையை மேற்கோள் காட்டுவார். கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு, இம்மாதிரி உவமைகள், படிப்பதற்கு ஒருவித உந்துதலை கண்டிப்பாக ஏற்படுத்தும். பாடம் நடத்தும்போது இடைஇடையே சிறந்த நீதிக்கதைகளை சொல்லும் போது, மாணவர்களின் மனதில் ஒரு தாக்கத்தையும் உண்டு பண்ணும். வீடு கட்டும்போது ‘சாரம்’ என்று சொல்லக்கூடிய மரக்கம்புகள் மிக மிக அவசியமாகிறது. வீடு கட்டி முடித்த பிறகு அந்தச் சாரத்தை மறுபடி யாரும் தேடுவதில்லை. அதைப் போல, ஒரு மாணவன் கல்வி பயிலும்போது உபயோகமான பயனுள்ள விஷயங்களை மனதில் சேமித்து வைக்க ஆசிரியர்கள் பாடுபட்டாலும், உபயோகமற்ற, தேவையற்ற விஷயங்களையும் மாணவனின் மனதில் இருந்து சீர்திருத்தி வைத்துக் கொள்ளவும் பழக்க வேண்டும்.
ஆசிரியர் வகுப்பறையில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் சேர்த்துதான் பாடம் நடத்துகிறார். சொல்லிக் கொடுக்கின்ற பாடங்களின் சாரம் பொதுவாக எல்லா மாணவர்களிடத்திலும் ஒரே நேரத்தில் சென்றடைகின்ற போதிலும், முதல் மதிப்பெண் பெற்று ஒரு மாணவன் தேர்ச்சி பெறுகிறான், மற்றொரு மாணவன் கடைசி மதிப்பெண் பெறக் காரணமாகிறான். எந்த ஒரு ஆசிரியருக்கும், இம்மாதிரிக் கேள்விகள் மனதில் எழுந்தாலும், வகுப்பறையில் மாணவர்களின் ஈடுபாடு எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு அவனது வெற்றியும் உறுதி செய்யப்படும். ஆக மாணவர்களின் கல்வித் திறன் ஒவ்வொரு மாணவருக்கும் வேறுபடும். ஒரு மாணவனைப் போல மற்ற மாணவர்களின் திறமையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஒவ்வொரு மாணவனும் தனிப்பட்ட திறமையைத் தன்னுள் கொண்டுள்ளான் என்பதை ஆசிரியர் நன்கு அறிவர்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கையாள வேண்டிய திறமையைப் பெற்றிருந்தால் மட்டுமே ஆசிரியர்களால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையமுடியும்.
(தொடரும்)
படத்திற்கு நன்றி:http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/bce_299_200/mahabharata/ekalavya/ekalavya.html
Hello Athimber,
Good article. This is what everybody expects from a teacher but it is not a reality. If the school administration is greedy enough to have 80+ students in a class how can a teacher be able to concentrate on each and every students. To have things as you said in the article only possible if the ratio between Teacher & Student is reduced to 1:30
Regards
Dhilip
I AGREE WITH SARATHY. BUT GURU SHOULD BE LIKE GURU
அன்பு நண்பா!
அருமையாக எழுதியிருக்கிறாய். அடியேனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறேன்.
பெருகவாழ்ந்தான் பட்டாபிராமர் அனுக்ரஹம் உனக்கு நிறைய இருக்கு என்பது எழுத்தில் தெரிகிறது. வாழ்த்துக்கள் .
தொடர்ந்து படித்து கருத்துகளை எழுதுகிறேன்.
அன்புடன் ரவி.
இன்றைய மாணாக்கருக்கு பயனுள்ள பதிவு. அதே நேரத்தில் ஆசிரியர் ஆ’சிரியர்’ என்றில்லாதிருந்தால் மிக்க பயனுள்ளதாக மாணவனின் எதிர்காலம் அமையும்.
Maanavargalin yedhikalathuku indha nool migavum udhaviyandhu!
Anaithu maanavargalum indha noolai padika vendiyadhu avasiyamana onru!!!