ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 2)
வெங்கட் நாகராஜ்
சென்ற பகுதியில் தில்லி – ஜபல்பூர் பயண முடிவில் ஒரு விஷயம் நடந்தது என்றும் அது என்ன என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன் எனவும் சொல்லி முடித்திருந்தேன். அது என்னவாக இருக்கும் என்று ஊகித்தீர்களா?
ரயில் பயணங்களில் நிறையப் பேர் அவர்களின் பெட்டி மற்றும் பொருட்களைத் தொலைப்பதை – தூங்கிக்கொண்டிருக்கும் போது வழியில் வரும் ரயில் நிலையங்களில் உடைமைகள் களவு போவதைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த வரிசையில் நான் இரண்டாவது விஷயத்தில் அனுபவம் பெற்றேன்.
வண்டியில் ஏறியவுடனே ஷூவினைக் கழற்றி விட்டு சாதாரண காலணிகளை அணிந்து கொண்டேன். பயண முடிவில் பார்த்தால் ஷூக்களைக் காணவில்லை. தொலைந்ததைத் தேடினால் எங்கே கிடைக்கும்? 20 மணி நேரப் பயணத்தில் பல ஊர்களில் நின்று சென்றது வண்டி. எங்கே யார் எடுத்தார்களோ? சே! இதைக்கூடவா திருடுவார்கள் என்று நினைத்தேன். பெட்டிகளுக்குச் சங்கிலி போட்டுப் பூட்டி விடுவதைப் போல இதற்கும் போட்டிருக்க வேண்டும் போல!
இரவு ஏழு மணிக்குத்தான் ஜபல்பூர் போய் சேர்ந்தோம். நிலையத்திற்கு மிக அருகிலேயே மத்தியப் பிரதேசச் சுற்றுலாத்துறையின் ”கல்சூரி ரெசிடென்சி” என்ற இடத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இங்கு மொத்தம் 30 அறைகள் இருக்கின்றன. AC Deluxe அறைக்கு ரூபாய் 2590/-, AC அறைக்கு ரூபாய் 2290/- என்றும் கட்டணம் வசூலிக்கிறார்கள். வரிகள் தனி என்பதை நினைவில் கொள்க.
தங்கும் விடுதியில் உணவகம், அருந்தகம் [இது என்னன்னு கேட்பவர்களுக்கு ஒரு கோப்பை இலவசம்!], கூட்டம் நடத்த வசதி என எல்லாம் இருக்கிறது. இதன் தொலைபேசி எண்: (0761) 2678491 / 92, 3269000. மின்னஞ்சல் முகவரி : kalchuri@mptourism.com.
மொத்த பயணத்தில் ஒரு நாள் வீணானதால் நாங்கள் ஜபல்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் குறைந்து விட்டது. இரவாகி விட்டதால் உணவு உண்டு அடுத்த நாள் காலையில் சீக்கிரம் கிளம்ப உத்தேசித்து ஓய்வெடுக்கச் சென்றோம்.
காலையில் எழுந்து உணவு முடித்துக் கிளம்ப வேண்டும். காலை உணவாக பால்-சோள ஓடுகள் [அட அதாம்பா Corn Flakes], இட்லி-வடை, சட்னி-சாம்பார், பராட்டா-ஊறுகாய், பிரட்-ஆம்லெட், காபி/தேநீர் எல்லாம் வைத்திருந்தார்கள். யாருக்கு எது வேண்டுமோ அதைச் சாப்பிடலாம். தேவையான அளவு சாப்பிட்டு விட்டு எட்டரை மணிக்குத் தங்கும் விடுதியில் இருந்து கிளம்பினோம். நாங்கள் முதலில் சென்ற இடம் எது எனக் கேட்பவர்களுக்கு…
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சுமார் இருபத்தி இரண்டு வருடங்கள் வரை ராணுவத்திற்குத் தேவையான வாகனங்களை வெளிநாடுகளிலிருந்தே வாங்கிக் கொண்டிருந்தனர். இந்தியாவின் வாகனத்தேவைகளை இங்கேயே பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைத்து 1969-ஆம் வருடம் தொடங்கப்பட்டது தான் ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை.
இந்தத் தொழிற்சாலை ஜபல்பூர் நகரிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் நகரத்தின் வெளியே இருக்கிறது. தொழிற்சாலை வாயிலிலேயே ஒரு வட்ட வடிவ மேடையில் ஒரு பழைய ஜீப் நின்று நம்மை வரவேற்கிறது. இந்தத் தொழிற்சாலைக்கு உள்ளே சென்று பார்ப்பது கடினம் – நிறைய வழிமுறைகள் – அதனால் பொதுமக்களால் பார்க்க முடிவதில்லை. இந்தத் தொழிற்சாலையில் தயாராகும் வாகனங்கள் என்னென்ன, என்பதைப் பார்த்து வந்த நான் பகிர்ந்து கொள்ள ரெடி.
தெரிந்து கொள்ள நீங்க ரெடியா? அதுக்கு அடுத்த பகுதி வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.
(தொடரும்)