சாந்தி மாரியப்பன்

வீடெங்கும்
ஒழுங்கற்றிருப்பதாக நினைத்து
அடுக்கிட முனையும் போதுதான்
பரபரக்க ஆரம்பிக்கிறது அதுவும்.
‘நானும்..நானும்..’ என்றபடிப் பாய்ந்தோடி வந்து
ஒழுங்குபடுத்திடுவதாய் எண்ணிக்
கலைத்து விடுகிறது
பிஞ்சு விரல்களால்..

குழந்தையின் இடுப்பிலேறிக்கொண்ட
குழந்தைப்பொம்மையை நோக்கியபடி
ஒவ்வொரு பொம்மையும்
விடை பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றன
சற்றே பொறாமையுடனும்,
மறுபடியும் விளையாட வருவதாய்
வாக்குறுதிகளுடனும்..

குதிரைச்சவாரி செய்ய நேர்ந்த யானையும்
வண்டியிலேறிய ஓடமும்
முன்வினைத்தவத்தால்
தெய்வஸ்பரிசம் பெற்றுப்
புனிதம் பெற்ற சமர்க்களத்தை
ஒழுங்குபடுத்தியதாய் நினைத்து
ஒதுக்கி நிமிர்ந்த பின்னர்
அழகாகவே இருக்கின்றன,
மறுபடியும் இறைந்து கிடக்கும் பொம்மைகளும்
களைத்துறங்கும் குழந்தையும்.

 

படத்திற்கு நன்றி:http://stockfresh.com/image/1035495/sleeping-child

2 thoughts on “சமர்க்களம்

  1. கமர்க்கட்டு போல், சமர்க்களம் மனதில் கரைகிறது. குழந்தை தூங்கி எழுந்தவுடன் கவிதாயினிக்கு சொல்லி அனுப்பு வேண்டும். மீண்டும் ஒரு முத்தான கவிதை மலரும்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க