இசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 2

1

இசைக்கவி ரமணன்

Ramanan_RM.Veerappan

சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தின. அதில் 2011 ஜனவரி 31 அன்று, ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு ஆற்றினார். ஒன்றரை மணி நேரம் நீண்ட அவரது உரையின் எழுத்து வடிவத்தைப் பகுதி பகுதியாக வல்லமையில் வாசிக்கலாம். முதல் பகுதியைத் தொடர்ந்து, இதோ இரண்டாம் பகுதி:

===========================================

அறம் என்பது என்ன?

1. எண்ணம், செயல், மனப்பான்மை இவை எந்தச் சூழ்நிலைக்கும் கச்சிதமாக, பொருத்தமாக இருத்தல்

2. நாமிருக்கும் சூழ்நிலை நமக்கு வழங்கும் பொறுப்புக்கு ஏற்ப நாம் செய்யவேண்டிய பணி

அறாத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை (37)

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை. அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49).

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)

அறத்தால் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (39)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (30).

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்
போய்ப் பெறுவ தெவன் (46)

ஆற்றி னொழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பனின் நோன்மை உடைத்து (48)

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலி னூங்கில்லை கேடு (32)

அறவினை யாதெனில் கொல்லாமை; கோறல்
பிறவினை யெல்லாந் தரும் (321)

3. ’முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி’ என்பார் பாரதியார். ’செய்வன திருந்தச் செய்’ என்கிறாள் ஒளவை. ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்கிறார் கண்ணபிரான்.

4. செய்ய விரும்பு; விரும்பிச் செய். கொடுக்க விரும்பு; விரும்பிக் கொடு. செய்கையில் பற்று வைக்காதிருந்தால், விளைவுகள் நம்மைப் பாதிக்காது. கொடுத்ததைக் கவனியாது கொடுத்தால், கொடுத்தோம் என்ற இறுமாப்பு நேராது.

5. ’செய்பவன் நானில்லை; செயல் என் மூலம் நிகழ்கிறது’ என்னும் நினைப்பும் கொடுப்பவனே பெறுபவன் என்ற கொள்கையும் கடமைகளில் நம்மைக் காயப்படாமல் காக்கும்.

6. அஹிம்சையே அறத்தின் உச்சம். (அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்)

இவை யாவுமே தனி மனிதனுக்கான அறம். இதை சமூகத்தின் மீது பொருத்தக் கூடாது.

’அறம் செய்’ என்று சொல்லாமல் ‘அறம் செய விரும்பு’ என்றுதானே சொன்னாள்? எனவேதான் ‘ஆற்றுக சினத்தை’ என்னாமல் ‘ஆறுவது சினம்’ என்றாள்! விருந்தோம்பல், எதையும் வீணாக்காத எளிமை, இன்சொல், பயன் கருதாமல் உழைக்கச் சொன்னாள் பக்திசெய்து பிழைக்கச் சொன்னாள்` என்று வாழ்தல், பண்புடன் வாழ்வதை ஒரு தவமாகக் கருதி வாழ்தல் அறவழியில் வாழ்தல். உணர்வோடு மனிதப் பண்புகளை வளர்த்துக்கொண்டு, தனது அந்தரங்கத்தை மேன்மை செய்துகொண்டு அதை ஆலயமாக்கிக் காத்திருத்தலே அறவழியில் வாழ்தல். அப்படி அற வழியில் வாழ்ந்தால் ஆறுவது சினம்!

சினத்தால் விளையும் கேடு:

மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றி
சினமெனும் சரக்கை ஏற்றிச் செறுகடல் ஓடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும் போது அறியவொண்ணாது
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே

என்கிறார் திருநாவுக்கரசர். இந்தப் பாடலில் வரும் மனமாகிய தோணி நமது; மதியாகிய புத்தி நமது; சரக்கு நமது. பாறை? நாம்! அதாவது நம் ஆணவம். நமக்கு வழங்கப்பட்ட கருவிகளை முறையின்றிப் பயன்படுத்தி நாம் நாசமடைகிறோம்! சினம் என்னும் ஒவ்வாத சரக்குதான் படகை ஆட்டுகிறது; கோல் போதாது என்பதாகச் செய்துவிடுகிறது. ஆக, சினத்தால் கேடுதான் விளையும். குளுமையான நெருப்பு, இதமான முள், அன்பான பேய் என்பதெல்லாம் கிடையாதல்லவா?

இந்தச் சினத்தின் கேட்டைப் பாரதி சித்திரிக்கும் விதமே அலாதியானது. வள்ளுவரையும் கம்பரையும் இளங்கோவையும் கரைத்துக் குடித்த சாரம் இங்கே புதிய வடிவெடுத்து வருகிறது:

சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்.

இந்த வரிகள் நமக்கு பஸ்மாசுரன், துரோணர், ஹிட்லர், மற்றும் நம் போன்ற பலரையும் நினைவுபடுத்துகின்றன. சினம் என்பது கொலைவெறியில் கொண்டுசேர்க்கும் ஒரு தற்கொலை மனப்பான்மை என்பது தெளிவாகிறது.

சினம் என்பது உடல், உள்ளம், உறவு இவற்றை எப்படி பாதிக்கின்றது என்பதைக் காண்போம்.

1. உடல்

நரம்பு மண்டலம், ரத்த அழுத்தம், விரைவில் வயதேறுதல், மூளை, இதயம், இவற்றில் பாதிப்பு, சக்தி விரயம்

2. உள்ளம்

உள்ளுக்குள் ஒலிக்கின்ற ஓயாத பிரளயத்தில்
கள்ளச் சிரிப்புகளா காதில் விழப்போகிறது?

Ramanan_shawl

மென்மை கடினமாகும்:

கடவுளை, காரணமற்ற கருணையுள்ளவன் என்போம். அவனது கருணை நம் ஒவ்வொருவரிலும் இரக்கம் என்னும் அற்புத குணமாக அமைந்திருக்கிறது. சினம் என்பது, நெகிழும் தன்மையுள்ள இந்த இரக்கத்தை இறுக்கமாக்கி விடுகிறது. இதயம் இறுகிப்போன மனிதன் யாரிடமும் மரியாதை காட்டுவதில்லை; எதையும் மதிப்பதில்லை; எதனிடத்தும் இரக்கம் காட்டுவதில்லை. பூமி காய்ந்தால் வெடிப்பு உண்டாவதைப் போல, அடுத்த கட்டமாக, இறுக்கம் பெருகி விரிசல் ஏற்படுகிறது. அங்கே தோன்றுகிற பள்ளத்தில் இரக்கம் என்பது தொலைந்தே போய்விடுகிறது. இரக்கமில்லா மனிதனே அரக்கனாவான்.

இரக்கம் என்றொருபொருள் இலாத நெஞ்சினர்
அரக்கர் என்றுளர் சிலர் அறத்தின் நீங்கினார்

என்கிறார் கம்பர்.

மந்தரைக்கு, உடம்பு மட்டும் கூனல் அல்ல உள்ளமும் கோணல்தான் என்று பொருள்பட, ‘உள்ளமும் கோடிய கொடியாள்’ என்கிறார் கம்பர். ஏன்? இரக்கம் அவளை விட்டு நீங்கிவிட்டது. ஏன்? ஆறாத சினம்! இரக்கமில்லா அரக்க நெஞ்சம் எதையும் கரைக்க வல்லது; திரிக்க வல்லது. ராமனைத் தன் சொந்த மகனாகவே கருதிய கைகேயியின் மனம் மாறியது, மந்தரையின் சூழ்ச்சியினால்தானே? ’தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி தூய சிந்தையும் திரிந்தது,’ என்று விளக்குகிறார் கம்பர். ஆக, தானும் கெட்டு, தன்னைச் சார்ந்தவருக்கும் கேடு விளைவிப்பது சினம்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும் (31:306)

என்று, சினம் வீடு பேறு அடையும் வழிகளையும் அடைத்துவிடும் என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

3. உறவு

நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்
பகையும் உளவோ பிற? (31:வெகுளாமை:304)

முகத்தில் புன்னகை இல்லாதவன், அகத்தில் மகிழ்ச்சி இல்லாதவன் எப்படி மனிதனாவான்? மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே உள்ள முக்கியமான வேற்றுமை இதுதானே!  விலங்கு என்பது தாழ்ந்ததில்லை. ஆனால் மனித வடிவில் விலங்கு என்பது அவமானம்; அசிங்கம்; ஆபத்தும் கூட. விலங்குகள் இயல்பாக மனிதர்களை `அவாய்ட்` செய்யும். மனித வடிவில் இருக்கும் விலங்கை மனிதர்கள் `அவாய்ட்` செய்வார்கள்.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்? (31:301)

செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்
இலததனின் தீய பிற (31:302)

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (31:305)

சினத்தை வெல்லும் வழி:

உடல், உள்ளம், உறவு எல்லாவற்றுக்கும் கேடு விளைவித்து, சூழ்நிலைகளைக் கசப்பாக்கி, இறுதியில் தன்னையும் அழித்துவிடும் சினத்தை எப்படி வெல்வதாம்?

எந்தக் கோபத்தை வெல்ல வேண்டும்?

1. நமக்கு நம் மீது வரும் கோபம்
2. நமக்குப் பிறர் மீது வரும் கோபம்
3. பிறர் நம் மீது காட்டும் கோபம்
4. நமக்கு உலக வாழ்க்கை மீது ஏற்படும் கோபம்

முதலில், கோபம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடே என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நோயை ஒத்துக்கொள்ளாமல் நிவாரணம் பெற முடியாது. கோபத்தின் ஆபத்தை பாரதி, அறிவியல் பார்வையுடன் அன்புடன் வெளிப்படுத்துவதைக் கேளுங்கள்!

ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய மரணமெய்தல் கொடுமை யன்றொ?
தேனான உயிரைவிட்டுச் சாக லாமோ?
செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்;
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்;
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)
”நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்”என்றான்.

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்!
கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம், அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட்டேனே!

சரி, பாரதி சொல்லும் வழிதான் என்ன?

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;
மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;
துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே.
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பதுநம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ, படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேதுவந்தால் எமக்கென் னென்றே.

(உரை தொடரும்….

======================
படங்கள்: அண்ணாகண்ணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *