இசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 1

6

இசைக்கவி ரமணன்

சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தின. அதில் 2011 ஜனவரி 31 அன்று, ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு ஆற்றினார். ஒன்றரை மணி நேரம் நீண்ட அவரது உரையின் எழுத்து வடிவத்தைப் பகுதி பகுதியாக  வல்லமையில் வாசிக்கலாம். இதோ முதல் பகுதி.
===========================================

Ramanan

சினத்தால் கெடுவதே சிந்தை; மருந்து
தனைத்தான் அறியும் தவம்

முன்னுரை

உலகில் நாம் யாருமே தனியே இல்லை. தனிமை என்பது சாத்தியமான மனநிலையே அன்றி யாரும் இங்கே தனியாக இருக்க முடியாது; இருக்கவும் இல்லை. `எனக்கு யார் தயவும் தேவையில்லை, நான் என் சொந்தக் காலில் நின்றுகொள்வேன்` என்கின்ற வசனங்கள் எல்லாம் ஆற்றாமையின் கூக்குரலே! பரஸ்பர சார்பு என்பது படைப்பின் சேதி. நாம் எல்லோரும் ஒருவரையொருவர் எப்போதும் சார்ந்துதான் வாழ்கிறோம்.

நாம் வரும்போது தனியேதான் வருகிறோம், போகும்போது தனியேதான் போகப் போகிறோம் என்பதன் பொருள் வேறு. யாரும் கூட வரவில்லை; கூட வரப் போவதுமில்லை; ஆனால், இங்கே வந்த கணத்திலிருந்து நாம் தனியாக இல்லவே இல்லை! உலகக் காற்று உச்சந் தலையைத் தொட்ட கணத்திலிருந்து நமக்கு, பொருள்கள், மனிதர்கள், சூழ்நிலைகள் இவற்றோடு இடைவிடாத தொடர்புகள் ஏற்படுகின்றன; தொடர்புகள் உறவுகளாகின்றன; உறவுகள் `இது எனக்கே சொந்தம்` என்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றன. சொந்தம், இழந்துவிடுவோமோ என்னும் அச்சத்தை ஏற்படுத்துகிறது; அச்சம், ஆத்திரமாய் வெளிப்படுகிறது. இதுதான் சினம் என்னும் நெடுங்கதையின் அல்லது முடிவற்ற தொடர் கதையின் சுருக்கம்.

பொல்லாத சினத்தைப் பற்றித்தான் எத்தனை பொன்மொழிகள்!

’ஒருவன் எந்தெந்த விஷயங்களுக்காகக் கோபப்படுகிறானோ, அவையே அவன் அளவையும் தரத்தையும் தீர்மானிக்கின்றன.’

’நீங்கள் கோபம் கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி ஆனந்தத்தை இழக்கிறீர்கள்.’

’காரணம் இல்லாமல் கோபம் வராது; ஆனால் எந்தக் கோபத்துக்கும் நல்ல காரணம் கிடையாது.’

’நம்மைக் கோபப்படச் செய்பவன், நம்மை வெற்றி கொண்டவனாகிறான்.’

‘கோபத்தில் துவங்குவது வெட்கத்தில்தான் முடியும்.’

கோபமே வரக்கூடாதா?

வீட்டில் குழந்தைகள், அலுவலக்த்தில் ஊழியர்கள் இவர்கள் தவறு செய்தால் ‘ஐயா! தாங்கள் அப்படிச் செய்திருக்கக்கூடாது’ என்று சொல்லி அன்பு வணக்கம் தெரிவிக்க வேண்டுமா? தெருவில் பெண்களிடம் வம்பு செய்பவர்களை ‘தயவுசெய்து அப்படிச் செய்யாதீங்க சாமி’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டுமா? என்று சரமாரியாகக் கேள்விகள் எழுகின்றன.

படைப்பு என்பதே சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களின் பரிமாணமே. அவை இல்லையேல் படைப்பே இல்லையே! அதில் கோபம், ரஜோ குணத்தின் வெளிப்பாடு. பிரபஞ்சத்தின் இன்றியமையாத ஓர் அம்சம் என்னிலும் இருப்பதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் என்று தத்துவ ரீதியாகவும் இந்தக் கேள்வி எழுகிறது!

எல்லா உணர்ச்சிகளைப் போலவே கோபம் என்பதும் ஓர் உணர்ச்சியே. எந்த உணர்ச்சியையும் அழிக்க வேண்டியதில்லை.  ’எல்லா உணர்ச்சிகளும் இயங்கட்டும்; ஆனால், அவையாவும் நம் கட்டுக்குள், நமது ஆளுமைக்குள் இருக்கட்டும்,’ என்பதே உபதேசம். ஓர் உணர்ச்சியைத் தனிப்படுத்தி நசிப்பிக்கச் செய்ய மேற்கொள்கிற முயற்சிகள் ஆபத்தில்தான் முடியும்.

சினம் என்னும் உணர்ச்சியை ஆளத் தெரியாமல், அதற்கு வடிகால் தேடும் வியர்த்தமான முயற்சிகளைக் காட்டிலும், அது ஓர் ஆற்றல் என்று கருதி அதைச் சரியான திசையில் செலுத்த வேண்டும். இதை என் நெடுநாள் நண்பன், தமிழறிஞன், அற்புதக் கவிஞன் ஹரிகிருஷ்ணன் தனது ‘கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும்’ நூலில் அழகாக விவரிக்கிறான்:

சினத்தின் கேடு பற்றி நமக்குச் சொன்ன பாரதிதான் ’ரெளத்திரம் பழகு’ என்றான்.

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று என்கிறார் வள்ளுவர். கனியைப் பயன்படுத்த வேண்டிய தருணங்களில் காயை எடுக்காதே என்பதே குறிப்பு. ஊறுகாய்க்கு மாம்பழம் உதவாது. பச்சை வாழைக்காயைப் பந்தியில் போட முடியாது.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர் (562) ஒரெயடியாய் ஓங்கி மெல்ல அடி என்கிறார்.

ஈர்ங்கை விதிரார் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு (1077) என்கிறார். என்ன பொருள்? எச்சில் கையைக்கூட உதறாத கஞ்சன் யாருக்கு மசிவானாம்? கொடிறு உடைக்கும் கூன்கையர்க்கு, அதாவது முகரையைப் பெயர்க்க விரல்களை மடக்கி முஷ்டியை உயர்த்துபவருக்கு.

வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும் (புறம் 2) என்கிறது புறநானூறு. அதாவது தண்டிப்பதில் தீயைப் போலவும் அருளுவதில் நீரைப் போலவும் இருப்பவனே அரசன் என்கிறது. இவை ஒரே மனிதனில் இருந்தாலும் முரண்பாடு இல்லையே! அந்த நேரத்தில் அது!

ஆக, சினம் என்பது ஒரு கருவி. எந்தக் கருவியையும் போல, சரியாக, முறையாகப் பயன்படுத்தினால் நற்பயன் விளையும். அன்றேல், நம்மையே காயப்படுத்தும். மருத்துவன் கைக் கத்தியடா உந்தன் புத்தி மடையன் கைக்கத்தியடா எந்தன் புத்தி என்று துரியோதனன், கண்ணனைப் பார்த்து அங்கலாய்ப்பதாக நம் சுகி சிவம் பாடுவார்கள்.

சினம் என்பது நெருப்பைப் போன்றதே. நெருப்போடு விளையாடக் கூடாது. ஆனால் நெருப்பின்றி வாழ முடியாது. எனவே கோபப்படாதே என்றார்களேயொழிய, கோபமே படாதே எனக் கூறவில்லை! சீறாத நாகத்திற்கு நேர்ந்த கதிதான் நாம் அறிவோமே!

சினத்தின் பொருள்:

கோபப்படுவதே ஒரு கொள்கை போலவும் சாதனை போலக் கருதுவோரும் உள்ளார்கள்! அவர்கள், சினம் என்னும் சொல்லுக்கு அகராதி தரும் விளக்கத்தைக் கண்டால் என்னாவார்களோ பாருங்களேன்!

சினம் = கோபம், நெருப்பு, போர்
சினத்தல் = புண் வீங்கிச் சிவத்தல்
சினப்பு = புண் போன்ற வீக்கம், tumour, வேனற்கட்டி – rash
சினப்புண் = அழல்விரணம்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினாற் சுட்ட வடு என்கிறாரே திருவள்ளுவர்! ஒன்று உள்ளாறும் புண். இன்னொன்று காயம் ஆறினாலும் ஆறாத வடு! காணுந்தோறும் மீண்டும் பிளந்து சிவக்கும் காயம்!

சினவரன், சினந்தவிர்ந்தோன் = புத்தன்!

சினத்தின் விதங்கள்

மனங்களில் எத்தனை வகையுண்டோ, மனப்பான்மைகளில் எத்தனை விதங்கள் உண்டோ, அதேபோல் சினத்திலும் பலவகையுண்டு:

•    உணவு உண்ண மறுக்கும் குழந்தையிடம் தாய் காட்டும் கோபம் – பாசம்
•    சரியாகப் படிக்காத பிள்ளையிடம் தந்தைக்கு வரும் கோபம் –- அக்கறை
•    வகுப்பில் இடையூறு செய்யும் மாணவனிடம் ஆசிரியருக்கு வரும் கோபம் – கண்டிப்பு
•    கால்கடுக்க நாம் நின்றுகொண்டிருக்கும்போது அத்துமீறி வரிசையில் நுழைவோர் மீது நமக்கு வரும் கோபம் – உரிமைப் பிரச்சினை
•    மேடையேறிப் பொய்சொல்வோர் மீது விஷயம் தெரிந்தவர்களுக்கு வரும் கோபம் – நபும்சக வெறி
•    சோறில்லாதவனுக்குக் காரில் செல்பவனைக் கண்டால் வரும் கோபம் – போதாமை
•    போலீசுக்குத் திருடன் மீது வரும் கோபம் – பொறாமை அல்லது அரசியல்
•    அரசியல்வாதிகளுக்குப் பத்திரிகையாளர்கள் மீது வரும் கோபம் – நேர்மையின்மை
•    ’நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்று அப்பர் திமிறி எழுவது – ஆவேசம்
•    ’தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை யழித்திடுவோம்’ என்ற பாரதியின் வாக்குக்கும் ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்ற வள்ளுவரின் வாசகத்திற்கும் காரணம் – அறச்சீற்றம்

ஆக, எல்லாக் கோபங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. எல்லா விதமான கோபங்களும் நியாயமற்றவைகளும் அல்ல! ஆனால், சேதம் விளைவிக்காத சினம் கிடையவே கிடையாது. அதன் அளவும் விகிதமும் தன்மையும்தான் மாறுபடும்.

Ramanan_RM.Veerappan

விதவிதமான வெளிப்பாடு:

கோபம் வெளிப்படும் முறையிலும்தான் எத்தனை எத்தனை வகைகள்!

கத்திப் பேசுதல், இதுவரை ஆட்டாத அளவுக்கு உடம்பை ஆட்டி ஆட்டிக் கூச்சல் போடுதல், பொருளை `ணங்`கென்று வைத்தல், கதவை அறந்து சாத்துதல், வாயை இறுக்க மூடிக்கொண்டு முகத்தையும் இறுக்கமாக வைத்துக்கொண்டு, யார் எது கேட்டாலும் பேசாதிருத்தல், சட்டையை மாட்டிக்கொண்டு விறுவிறுவென்று நடையைக் கட்டுதல், தட்டை வைத்துக்கொண்டு ஒரேயடியாய்ச் சோற்றைக் கொட்டிக்கொள்ளுதல், பொருட்களை விட்டெறிதல், சம்பந்தமே இல்லாமல் குழந்தையை அடித்தல், எங்கோ வாங்கிய வசவை ஏதுமறியாத மனைவி மீது காட்டுதல், அடித்தல், தலையில் அடித்துக்கொள்ளுதல், பழிக்குப் பழி என்பது போல் கோபத்திற்குக் கோபம் என்று பகையை வளர்த்துக் கொள்ளுதல், பக்கவாட்டிலிருந்து நம்மை அரிவாள் மாதிரிப் பார்த்தல்  —  நான் இங்கே குறிப்பிட்டிருப்பது கோபத்தின் ஒரு சில பரிமாணங்களே!

திருமாலின் அவதாரமான நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் தேவர்களும் நடுங்கினர் என்கிறது புராணம். பிரகலாதன் துதிசெய்து சாந்தப்படுத்த வேண்டியதாயிற்று. கோபக்காரர்களை ‘சரியான நரசிம்மாவதாரம்யா அவன்’ என்று சும்மாவா சொல்கிறார்கள்!

கோபம் ரஜோகுணம் என்றாலும் கொல்வதற்குத் தமோகுணம் வேண்டும் என்பார்கள். ராமனுக்கோ கோபமே வரவில்லை. இதை யார் சொல்கிறார்கள் தெரியுமா? ராவணன்!

‘எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி, சினம் உண்மை தெரிந்தது இல்லை

போரில் எதிர்த்த அரக்கர்களின் வெள்ளம் என்னும் பெரிய எண்ணிக்கைகளின் திரட்சி கணக்கில் அடங்காத என் பெரிய சேனை ஒன்றுகூட எஞ்சாமல் உயிரை இழக்குமாறு அம்பு தொடுத்தபோது, என் மார்பில் தைத்த இரண்டு அம்புகளின் முனை முதுகுவரையில் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டு நிற்குமாறு அழுந்த அடித்தபோது–இப்படியெல்லாம் செய்தபோதுகூட, முற்காலத்தில் கூனியின் கூன் நிமிருமாறு களிமண் உருண்டைகளை அந்தக் கூனில் எய்து விளையாடிய சமயத்தில் இருந்த புன்னகைதான் ராமன் முகத்தில் தெரிந்தது. சினம் என்பதன் ரேகை கூட தெரியவில்லை.

ராவணனைக் கொல்ல மனமின்றி நின்ற ராமன், தமோகுணத்தை வரவழைத்துக்கொண்டு அலையலையாய் அம்புகளை எறிய, அவை அவனைச் சல்லடையாகத் துளைத்தனவாம். அவனில், சீதை மீது கொண்டிருந்த தகாத காதல் இன்னும் எங்கேனும் ஒளிந்திருக்கிறதா என்று கண்டுபிடித்து அதைக் கண்டித்துக் களைந்தெறிய!

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உட்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?

என்று புலம்புகிறாள் மண்டோதரி.

இன்னோர் அவதாரமான பரசுராமர், அநீதி என்பதன் வித்தின் சாயல் கூட அரசாள்பவர்களிடம் இருக்கக் கூடாதென்று 21 அரச தலைமுறைகளைக் கொன்று போட்டுப் பணிமுடிந்த பிறகும் சினமடங்காமல் அதையடக்க இமய மலையில் அமர்ந்து பார்த்து, அதுவும் பயன்தராமல் மகேந்திரகிரியில் தவம் செய்தே தணிந்தார் என்று பெரியோர் கூறக் கேட்டிருக்கிறோம்.

இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டுவா
கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்

என்றும்

..தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையுமாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன் அங்கு
கள்ளென ஊறுமி ரத்தங் குடிப்பேன்..

என்றும் ‘கரை பீறி எழுந்த வெஞ்சின’த்தோடு வீமன், பாஞ்சாலி சபதத்தில் கர்ச்சிக்கக் கேட்டு நடுங்குகிறோம்.

மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்
ஒட்டேன் அரசரோடு ஒழிப்பேன் மதுரையும்! என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ!

என்று கணவனின் கால்வணங்கி இருந்த கண்ணகி ஊரை எரிக்கத் துணிகிறாள்.

ஆறுவது சினம்

அப்படிப்பட்ட சினத்தை, அடங்காத கனலை, அறச் சீற்றமாகவே எழுந்தாலும் பின்பு அடங்க முடியாமல் கனலும் ஆத்திரத்தை, அவதாரங்களாலும் பெருந்திறல் வீரராலும் பத்தினிப் பெண்டிராலும் கூட அடக்க முடியாத கோபத்தை, ‘ஆறுவது சினம்’ என்கிறாளே ஒளவைப் பாட்டி! அடக்க வேண்டியது சினம், அகற்ற வேண்டியது சினம் என்று சொல்லியிருக்கலாமே! அதென்னமோ தானாகவே தணிந்துவிடுவதைப் போல, சூடான பாலைச் சும்மா வைத்தால் அது ஆறிவிடுவதைப் போல, ஆறுவது சினம் என்கிறாளே! கூழுக்குப் பாடிய ஏழைப் பாட்டிதான்; ஆனால் குமரனை நேருக்கு நேர் பார்த்தவளாயிற்றே! எளிதில் வசப்படாத கணபதியின் துணையுடன் திருக்கயிலை சேர்ந்தவளாயிற்றே! சும்மா சொல்வாளா?

பாலைச் சூடேற்ற முயற்சி தேவை; ஆறவைக்க? பொறுமைதானே தேவை?

‘சமைத்துப் பார்’ புத்தகங்கள் வந்திருக்காத காலத்தில் பெண்கள் எப்படிச் சமையல் கற்றுக்கொண்டார்கள்? காதில் கேட்டபடி, கண் சொன்னபடி, கை போட்டபடி, அப்படித்தானே!  இதைச் செய்தால் அதுவாகும், இதைப் போட்டால் அது விளையும், அதைக் களைந்தால் இது பிழைக்கும் என்றபடிதானே சமையல், மருத்துவம், வேளாண்மை எல்லாம்? அதுபோலத்தான் ஆறுவது சினம் என்றாள் ஒளவை.

புரியவில்லையா? ஆறுவது சினம் என்று கூறுவதற்கு முன்னால் என்ன கூறினாள் பாட்டி? ’அறம் செய விரும்பு’ தானே?

(உரை தொடரும்….

======================
படங்கள்: அண்ணாகண்ணன்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 1

  1. எத்தனை அருமையான செய்திகளை எத்தனை அழகாகக் கோத்து
    இனிக்கப் படைத்துள்ளீர்கள் கவிமழை இரமணன்! மீண்டும் மீண்டும் படித்து நினைவில் கொள்ள வேண்டிய நல்லுரை.

    அன்புடன்
    செல்வா
    வாட்டர்லூ, கனடா

  2. புஷ்ப மாலையாக, அருமையான கருத்துகளைத் தொகுத்து அளித்திருக்கிறார், இசைக்கவி ரமணன் அவர்கள். வல்லமை படிக்கத் தொடங்கிவிட்டேன். அதற்கு அண்ணாகண்ணனிடம் நன்றி சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *