பேரா. தெய்வசுந்தரம் தன்னிலை விளக்கம்

4

deivasundaramசென்னைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுப் பிரிவின் இயக்குநராகவும் தமிழ் மொழித் துறையின் தலைவராகவும் பணியாற்றி, ஓய்வுபெற்றவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இவர், சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலையின் 21ஆவது பதிலைத் தொடர்ந்து, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவரின் மடல் இங்கே:

==============================================
அன்புள்ள ‘வல்லமை’ ஆசிரியர் அவர்களுக்கு,

பேரா. இ. அண்ணாமலை அவர்களின் மடல் கண்டேன். எனது கட்டுரையில் தகவல் பிழை பற்றிக் கூறியுள்ளார். நன்றி. ஆனால் நான் தவறான தகவல்களைத் தரவில்லை. ஐந்து ஒலியன்களுக்கான (Phonemes) ஏழு வரி வடிவங்கள் என்றுதான் கூறியுள்ளேன். எ, ஒ, ன, ற, ழ ஆகிய ஐந்து ஒலியன்களுக்கான வரி வடிவங்களையும் (Graphemes)  எ, ஒ ஆகிய இரண்டு உயிர்களுக்கான துணை வரி வடிவங்களையும் (allographs) சேர்த்து ஏழு வரி வடிவங்கள் என்று கூறியுள்ளேன். நெடில் உயிர்களான ஏ, ஓ ஆகியவற்றிற்கும் அவற்றின் துணையெழுத்துகளுக்கும் வரி வடிவங்கள் கிரந்தத்தில் இருந்தன. நான் மறுக்கவில்லை. இன்று இந்திய நடுவண் அரசானது, ஒருங்குறி சேர்த்தியத்திற்கு அளித்துள்ள பரிந்துரையில் புதிதாகக் கிரந்தத்தில் மேற்கூறிய ஐந்து ஒலியன்களுக்கும் ஐந்து + இரண்டு வரி வடிவங்களைச் சேர்க்கச் சொல்லியிருப்பது அனைவரும் அறிந்ததே.

ஏகாதிபத்தியம் என்று பேசுவது சரியல்ல என்று பேராசிரியர் கருதலாம். அது அவருடைய கருத்து. மொழிப் பிரச்சினையானது சமூக, பொருளாதார, அரசியல் தளங்களைச் சார்ந்துதான் இருக்கிறது என்பது எனது கருத்து. அதுபற்றி இந்த மடலில் நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.

பேராசிரியர் புனல் முருகையன் எழுதியுள்ள பன்னிரு திருமுறைகள் பற்றிய நூலின் நோக்கம், தமிழ்த் தொடர்களில் பயின்று வருகிற அனைத்து பேச்சொலிகளையும் (Phones)  ஒலிபெயர்க்க (Phonetic Transcription) உலக ஒலியியல் கழகத்தின் குறியீடுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதே ஆகும். பேச்சு ஒலியியல் ஆய்வில் ஈடுபடும் அறிஞர்களுக்காக (academic community) உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள பேச்சொலிகளைக் குறிக்க உருவாக்கப்பட்ட குறியீடுகளே அக்குறியீடுகள். தமிழில் உள்ள பன்னிரு திருமுறைகளை ஒலி பிறழாமல் பிற மொழியினர் உச்சரிக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் பேரா. முருகையன் அந்நூலை எழுதினார். அவ்வாறு பன்னிரு திருமுறைகளை அளித்தால், பிற மொழியினர் தங்கள் தங்கள் மொழிகளில் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குத் தங்கள் மொழிகளில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே அந்நூலின் நோக்கம். ஏறத்தாழ 96 பேச்சொலிகளைப் பேரா. முருகையன் இனங்கண்டுள்ளார். இந்நூலுக்குச் சிறப்புரையை நான்தான் எழுதியுள்ளேன்.

அதுபோன்று – உலக ஒலியியல் கழகத்தின் குறியீடு போன்று – தமிழின் பேச்சொலிகளைக் கிரந்தத்தில் எழுதுவதற்காக, புதிய எழுத்துகளைச் சேர்க்க சிலர் விரும்புவதில் என்ன தவறு என்று கேட்பது போல் பேராசிரியர் அண்ணாமலை அவர்களின் கருத்து அமைந்துள்ளது.

ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழியின் ஒலியன்கள், அசைகள் போன்றவற்றின் அடிப்படையில்தான் எழுத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த மொழியின் சொற்களை எழுதுவதற்குத்தான் எழுத்துகள் உருவாக்கப்படுகின்றன. பிற மொழிகளின் ஒலிகளை எல்லாம் எழுதுவதற்காக ஒரு மொழியில் எழுத்துகள் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் சில மொழிகள் பிற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தும்போது, தங்களது சொற்களையும் அம்மொழியில் நுழைத்து, அதனது ஒலியன் அமைப்புக்கு எதிராகத் தங்கள் ஒலியன்களைத் திணித்து, அதற்குரிய தங்கள் எழுத்து வடிவங்களையும் நுழைத்துவிடுகின்றன. அவ்வாறு சமசுகிருதத்தால் தமிழில் திணிக்கப்பட்டதே ஸ, ஷ, ஜ , ஹ , க்ஷ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துகள்.

பொதுவாக, எந்த ஒரு மொழிச் சமுதாயமும் பிறமொழி ஒலியன்களையோ அல்லது எழுத்துகளையோ அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு சமசுகிருத மொழிச் சமுதாயமும் விலக்கு அல்ல.

சமசுகிருதத்தை ஒரு நவீன மொழியாக வளப்படுத்த விரும்புகிறவர்கள், பிற மொழிச் சொற்களையும் சமசுகிருதத்தில் உள்வாங்க விரும்புவர்கள், அதற்காகக் கிரந்தத்தில் இல்லாத எழுத்துகளை- தமிழ் போன்ற மொழிகளில் உள்ள எழுத்துகளை – சேர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதையே இந்திய நடுவண் அரசின் மடல் வெளிக்காட்டுகிறது என்று பேராசிரியர் அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளார்கள்.

சமசுகிருத அறிஞர்கள் அந்த மொழியின் ஒலியனமைப்பில் தமிழின் மேற்குறிப்பிட்ட ஐந்து ஒலியன்களையும் ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழில் ஜ,ஸ போன்ற ஒலியன்களும் நுழைந்து, அதற்குரிய எழுத்துகளும் நுழைந்திருப்பது போல, சமசுகிருதத்தில் மேற்குறிப்பிட்ட ஐந்து ஒலியன்களையும் கடன் வாங்கட்டும். அதன் பிறகு அந்த ஒலியன்களை எழுதுவதற்காகத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தத்தில் சேர்ப்பது பற்றி முடிவு எடுக்கலாம்.

சமசுகிருதத்தை எழுதுவதற்காகக் கிரந்தத்திற்கு ஒருங்குறியில் இடம் வேண்டும் என்று பரிந்துரையை அளித்துவிட்டு, பின்னர் சமசுகிருதத்தில் இல்லாத ஒலியன்களுக்குத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தத்தில் சேர்க்க வேண்டும் என்று சொல்வதன் உண்மையான நோக்கம் என்ன? கிரந்த எழுத்து முறையைப் பிற மொழிகளின் எழுத்து முறைகளின் மீது திணிப்பதுதானே?

ஒருங்குறி சேர்த்தியத்தின் நோக்கம், உலகில் உள்ள எழுத்து மொழிகள் ஒவ்வொன்றிற்கும் அவற்றின் எழுத்துகளுக்கு இடம் ஒதுக்குவதுதான். அந்த அடிப்படையில் சமசுகிருத மொழியை எழுதப் பயன்படுகிற கிரந்த எழுத்துகளுக்கு இடம் அளிப்பதை யாரும் எதிர்க்கவில்லை. சமசுகிருதத்திற்குத் தேவையில்லாத எழுத்துகளை, அதில்  இல்லாத ஒலியன்களுக்கான எழுத்துகளை – தமிழ் எழுத்துகளை – கிரந்தத்தில் சேர்ப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இது எந்த வகையிலும் மொழி வெறி இல்லை. பிற மொழியினரின் உரிமைகளைப் பறிப்பதும் இல்லை.

சமசுகிருதத்தை எழுதுவதற்கான கிரந்தத்தில் தமிழின் ஐந்து ஒலியன்களுக்கான எழுத்துகளைச் சேர்க்க விரும்புவர்கள், முதலில் தமிழின் ஐந்து ஒலியன்களைச் சமசுகிருதத்தில் சேர்த்துக்கொள்ள சமசுகிருத அறிஞர்கள் விரும்புகிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தட்டும்.

அது போன்று, இந்திய மொழிகளுக்குப் பொது எழுத்து முறையாகக் கிரந்தத்தைக் கொண்டுவர விரும்புவர்கள், இந்தியாவில் உள்ள பிற மொழிகளைச் சேர்ந்த அறிஞர்களை அழைத்து, கிரந்தத்தைப் பொது எழுத்து முறையாகக் கொள்ளலாமா என்பதை விவாதிக்கட்டும்.

அவ்வாறு எல்லாம் செய்யாமல், தமிழின் ஐந்து ஒலியன்களுக்கு உரிய எழுத்துகளைக் கிரந்தத்தில் சேர்க்க வேண்டும் என்று சொல்வதில் எந்தவொரு நியாயமும் இல்லை.

மேலும் பிராமி எழுத்துகளுக்கு மரபுசார் எழுத்து முறை (heritage scripts)  என்ற அடிப்படையில் ஒருங்குறியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அது போன்று, வழக்கிறந்த கிரந்த எழுத்துகளுக்கும் இடம் அளிப்பதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

எனவே, ஒருங்குறியில் கிரந்தம் பற்றிய பிரச்சினையில் என்னைப் போன்றவர்களின் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன்.

1. சமசுகிருதத்தை எழுதுவதற்காகக் கிரந்தத்திற்கு ஒருங்குறியில் இடம் என்று கேட்டுவிட்டு, சமுசுகிருதத்தில் இல்லாத ஒலியன்களுக்குத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தத்தில் சேர்க்க வேண்டும் என்பது சரியல்ல.

2. சமசுகிருதத்திற்கான கிரந்தத்திற்கு ஒருங்குறியில் இடம் அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.

3.பிராமிக்கு மரபுசார் எழுத்து முறை என்ற அடிப்படையில் ஒருங்குறியில் இடம் அளித்துள்ளது போல, கிரந்தத்திற்கும் இடம் அளிக்கலாம். இது ஒருங்குறி சேர்த்தியத்தின் முடிவையும் சமசுகிருத அறிஞர்களின் கருத்தையும் சார்ந்த ஒன்றாகும்.

அன்புடன்
ந. தெய்வசுந்தரம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பேரா. தெய்வசுந்தரம் தன்னிலை விளக்கம்

 1. கிரந்தத்திற்கு ஒருங்குறியில் இடம் அளிப்பது பற்றிக் கருத்து வேறுபாடு இல்லை என்பது தெளிவு.

  சமஸ்கிருதத்தில் தமிழின் ஒலியன்கள் வந்த பின்னரே அவற்றுக்கு எழுத்துத் தேட வேண்டும் என்ற கருத்து சாதாரணமாக மொழிகளில் நிகழும் வரலாற்றைச் சொல்கிறது. அதாவது, ஒரு மொழி அதிகப்படியான சொற்களைக் கடன்வாங்கலாம்; அவற்றைத் தன் ஒலியன் அமைப்பு முறைக்கு மாற்றாத நிலை இருந்தால், புது ஒலியன்கள் தோன்றும்; அப்போது புதிய எழுத்து தேவைப்படும். இது மொழி வரலாற்று உண்மை.

  நவீன சமஸ்கிருதவாதிகள், சமஸ்கிருத்தை நவீனப்படுத்தும் போது புதிய பெயர்களை (names) எழுத வேண்டி வரும்; அதற்குப் புதிய எழுத்துகளைக் கடன்வாங்குவோம் என்கிறார்கள். இது மொழியின் இயல்பான வரலாற்றில் அல்ல, மொழித் திட்டமிடுவதில் அடங்கும். இந்தத் திட்டமிடுதல் ஒரு அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக என்று சொல்ல எனக்கு எந்தச் சான்றும் புலப்படவில்லை.

  தமிழை ரோமன் எழுத்துகளின் அடிப்படையில் அமைந்த ஒலியியல் குறிகளால் எழுதும்போது தமிழ் அறியாதவர்கள் தமிழைப் படிக்க உதவும். பன்னிரு திருமுறையை இந்தக் குறிகளில் எழுதியது இந்தப் பயனுக்காகவே. பிற மொழியினர் தங்கள் மொழியில் தமிழ்ச் சொற்களை எழுதும்போது எழுதுவதற்காக அல்ல. இப்படி எழுதும் வழக்கம் இல்லை. தமிழில் இல்லாத ஒலிகளைக் கொண்ட ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது இந்தக் குறிகளால் எழுதும் வழக்கம் இல்லை; அந்த வழக்கம் வராது.

  பேச்சுத் தமிழில் வந்துவிட்ட சில புதிய ஒலியன்களை எழுதத் தமிழுக்குச் சில புதிய எழுத்துகள் தேவை என்பது என் நிலைப்பாடு. இந்த எழுத்துகள் ஒலியன் குறிகளாக (IPA symbols) இருக்காது. ஒருங்குறிக் கிரந்ததிலிருந்தும் வராது. புது எழுத்துகளைத் திட்டமிட்டு அவை என்ன வடிவில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது தமிழ்ச் சமூகம். அதற்குத் தமிழ்ச் சமூகத்தைத் தயார்ப்படுத்துவதே நான் செய்ய விரும்புவது.

  இந்திய அரசின் கிரந்தப் பரிந்துரை ழ, ற, ன என்ற மூன்று அகரமேறிய மெய்யெழுத்துகளையும், எ, ஒ என்ற உயிரெழுத்துகளின் உயிர்க்குறிகளான இரண்டு கொம்புகளையுமே -மொத்தம் ஐந்து- சேர்த்திருக்கிறது. எ. ஒ என்ற உயிர்களை, ஏ, ஓ என்ற உயிர்களுக்கு இணையான கிரந்த உயிரெழுத்துகளில் புள்ளியிட்டு எழுதலாம் என்றே பரிந்துரைத்திருக்கிறது.

 2. பேராசிரியர் அண்ணாமலை

  “பேச்சுத் தமிழில் வந்துவிட்ட சில புதிய ஒலியன்களை எழுதத் தமிழுக்குச் சில புதிய எழுத்துகள் தேவை என்பது என் நிலைப்பாடு” .

  இதைப் பற்றி நீங்கள் விரிவாக எழுதுங்கள் , பயனுள்ளதாக இருக்கும்

  விஜயராகவன்

 3. பேரா. தெய்வசுந்தரம் : “அவ்வாறு சமசுகிருதத்தால் தமிழில் திணிக்கப்பட்டதே ஸ, ஷ, ஜ , ஹ , க்ஷ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துகள்.”

  பேராசிரியரின் “திணித்தல்” என்ற சொல் சரித்திர உண்மைகளுக்கு புறம்பாக உள்ளது. “திணித்தல்” என்றால் Impose என அர்த்தம் ஆகும். தமிழர்கள் காலப் போக்கில் சுய ஆர்வத்திலேயே ஷ, ஹ போன்ற எழுத்துகளைப் பிரயோகிக்கின்றனரே தவிர, வன்முறையால் அல்ல. உதாரணமாக அருணகிரிநாதர் கிரந்த எழுத்துகளைப் பிரயோகித்த்தார். யாராவது கிரந்த எழுத்துகளை அவர்மேல் திணித்தனர் எனத் தெய்வசுந்தரம் கூற முடியுமா? நிச்சயம் முடியாது. மேலும் தமிழர்கள் பேச்சில் ஹ, ஜ போன்ற சப்தங்கள் இல்லை எனச் சொல்ல முடியுமா? அதற்கு ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது.

  அதனால் “என்றைக்கும் மாறாத கன்னித் தமிழ்” என்பது பேராசிரியரின் கற்பனை உலகத்தில் உள்ளதே அன்றி, நடைமுறையில் அல்ல.

  ஏன் தமிழர்கள் ஷ, ஜ, போன்ற கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்தில் கலந்தனர் என்றால், அது அவர்கள் பேச்சில் உள்ளது. அது ஒரு சர்வாதிகாரி, கத்தி முனையில் திணித்ததால் அல்ல.

  விஜயராகவன்

 4. பேரா.தெய்வசுந்தரம் அவர்களுக்கு

  ஒரு பக்கம் எப்படி கிரந்தத்தின் `தூய்மையை` காப்பாற்றலாம் என வாதம் செய்துகொண்டு, மற்றொரு பக்கம் எப்படி தமிழின் திறமையை 5 எழுத்துகளை தமிழ் எழுத்துகளிடமிருந்து களைந்து குறைக்கலாம் என யோசிக்கின்றீர்கள்.
  https://groups.google.com/group/tamilmanram/browse_frm/thread/aa953326be5e0604?hl=en

  மொழியியலாலர் என்பது புழங்கும் மொழிகளை ஆய்வு செய்வதா? அல்லது பிற்போக்கு கருத்தாக்கங்களை திணிப்பதா? உங்கள் வார்த்தைகளிலேயே

  “ தமிழுக்கு அவை (கிரந்த எழுத்துகள்) தேவையா ? தேவையில்லை என்றால், அவற்றை எவ்வாறு நீக்குவது ? உடனடியாக ஒரு சட்டத்தின்மூலம் அதைச் செய்யமுடியுமா? அல்லது படிப்படியாக அகற்றமுடியுமா?

  என்னைப் பொறுத்தமட்டில், தமிழுக்கு அவை தேவையில்லை. அவற்றை நீக்கலாமா? நீக்கலாம். உடனடியாக நீக்கமுடியுமா? மொழி உணர்வுகொண்ட தனிநபர்கள் தங்களது மொழிநடையில் உடனடியாக நீக்கிவிடலாம் ( நினைத்தால்). ஆனால் பொதுமக்களிடையே அவ்வாறு நீக்க வைக்கமுடியுமா? சிரமம்தான். அவர்களுக்குத் தமிழ், கிரந்தம் என்று வேறுபடுத்திப் பார்க்கும் திறன் இருக்காது. அவர்கள் குழந்தைப் பருவத்தில் தமிழ்ப்பேச்சு வழக்கைத் தாய்மொழியாகப் பெற்றுக்கொள்ளும்போதே, அவை ஐந்தும் நுழைந்துவிடுகின்றன. பள்ளிக்குச் செல்லும்போதும், பாடப்புத்தகங்களில் அவை பயின்றுவரும் சொற்கள் இடம் பெறுகின்றன. எனவே அவர்களுடைய பேச்சுவழக்கு, எழுத்துவழக்கு இரண்டிலும் அவை நிலவுகின்றன “

  உங்களுக்கே பொதுமக்கள் மொழி கிரந்தம் கலந்தது என நன்றாக தெரியும், அப்படி இருந்தும் ஏன் இந்த விபரீத சிந்தனைகள்.

  உங்கள் ஆசை நிறைவேறினால் தமிழ் இரண்டாக பிளவும் – ஒன்று தனித்தமிழ் (உங்களுடையது) , மற்றொன்ரு பொதுவாக புழங்கும் தமிழ் . உங்கள் தமிழை 5% தமிழர்கள் தான் ஏற்றுக் கொள்வர் . அதுவும் முஸ்லிம்கள், கிருஸ்துவர் போன்ற மதச் சிறுபான்மையினர் நிச்சயமாகத் தனித் தமிழைப் புறக்கணிப்பர். தமிழால் பிளவு படுவோம் என்பது உங்கள் ஆசையா? உங்கள் ஆசைகள் நிறைவேறினால் தமிழ் இரண்டாகப் பிளவுபடும், தமிழினம் இரண்டாகப் பிளவுபடும்.

  தனித் தமிழர்கள் இலக்கியம், விஞ்ஞானம், உயர் ஆராய்ச்சி முதலியவற்றில் ஒன்றும் சாதிக்காவிட்டாலும், தமிழ்ப் பிளவுக்கும் தமிழர் பிளவுக்கும் அஸ்திவாரம் போடுகின்றனர் என நினைக்கிறேன்.

  தமிழ்நாட்டின் ஒரு பேராசிரியர் இப்படி திட்டம் போடுவது , நல்ல ஹேஷ்யம் அல்ல. ஏற்கெனவே ஆங்கிலம் தமிழை விழுங்கிவிடும் போலுள்ளது, நீங்கள் அதைத் துரிதப்படுத்துகின்றீர்கள்

  விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *